Friday 19th of April 2024 03:10:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை விவகாரத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாடு எடுக்கவேண்டும்; இராமதாஸ் அறிக்கை!

இலங்கை விவகாரத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாடு எடுக்கவேண்டும்; இராமதாஸ் அறிக்கை!


இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பன்னாட்டு அமைப்புகளில் இது குறித்த விவாதங்களும், விசாரணைகளும் வரும் போது, இலங்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். அதன்பிறகும் இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் தனித்தமிழீழம் அமைக்க உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பாமக கட்சியின் நிறுவுனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை பிரதமர் இராஜபக்சே ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு பேச்சுக்களின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளின் பயனாக தங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று ஈழத்தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை மீது வெந்நீரை ஊற்றி சிதைத்திருக்கிறார் இராஜபக்சே. ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விஷயத்தில் இந்தியாவின் யோசனையை இலங்கை ஏற்க மறுத்திருப்பது திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.

இந்தியா - இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் கடந்த 26-ஆம் தேதி இணையவழியில் பேச்சு நடத்தினார்கள். அப்போது, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், போருக்குப் பிந்தைய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

அதையேற்ற இலங்கை பிரதமர் ராஜபக்சே, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என மோடியிடம் உறுதியளித்திருந்தார். இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

வழக்கமாக இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுக்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நாடுகளின் சார்பில் தனித்தனியாக அறிக்கை வெளியிடப்படும். அந்த அறிக்கையில், இருதரப்பு பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான பேச்சுக்களுக்குப் பிறகு இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தோ, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்தோ எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியப் பிரதமருடனான பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு அதன் அறிக்கையில் தவிர்த்திருப்பதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது திருத்தம் என்பது 1987-ஆம் ஆண்டு இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். அத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தும்படி வலியுறுத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. இந்த விஷயத்தில் இந்தியாவின் வலியுறுத்தல்களை செயல்படுத்த வேண்டிய கடமை இலங்கைக்கு உள்ளது. ஆனால், அக்கடமையையும், ஒப்பந்த விதிகளையும் மதிக்க இலங்கை அரசு மறுத்திருப்பதை விட மோசமான அவமதிப்பை இந்தியாவுக்கு இழைக்க முடியாது.

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சே, அதற்கு எதிராக உலக அரங்கில் எழுந்த கண்டனத்திற்கு பணிந்து, 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதல் அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கத் தயார் என்று அறிவித்தார். ஆனால், இப்போது 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து உறுதி அளிக்க மறுத்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து 13-ஆவது திருத்தம் நீக்கப்படும் என்ற அச்சம் ஈழத்தமிழர்களிடம் எழுந்துள்ள நிலையில், அதை நீக்குவதற்கான உறுதிமொழி கூட அளிக்கப் படவில்லை என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை உணரலாம்.

போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களில் உலக அரங்கில் இலங்கை கடுமையான கண்டனங்களுக்கு உள்ளான போதெல்லாம், அந்த நாட்டை காப்பாற்றியது இந்தியா தான். இப்போதும் கூட இலங்கை கடுமையான கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், இந்தியாவின் கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு உதவிகளுக்கும் இலங்கை செலுத்தியுள்ள நன்றிக்கடன் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருப்பது ஆகும். இத்தகைய தொடர் அவமரியாதைகளை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ளபோகிறது? என்பது தான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பன்னாட்டு அமைப்புகளில் இது குறித்த விவாதங்களும், விசாரணைகளும் வரும் போது, இலங்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும்.

அதன்பிறகும் இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் தனித்தமிழீழம் அமைக்க உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE