Friday 29th of March 2024 07:47:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
தொலைந்த மகனை பதினாறு ஆண்டுகளின் பின்னர் மீட்ட தாயின்  பாசப் போராட்டம்!

தொலைந்த மகனை பதினாறு ஆண்டுகளின் பின்னர் மீட்ட தாயின் பாசப் போராட்டம்!


அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலக நிர்வாத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கில் வசிக்கும் அபுசாலி சித்தி கமாலியா எனும் தாய் தன்னுடைய ஒரே மகனான அக்ரம் ரிஸ்கானை சுனாமி அலையில் தொலைத்துவிட்டு பதினாறு ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மீட்டெடுத்த துயரக் கதையை மனம் திறந்து பேசுகிறார்.

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியரான நான் சுனாமியன்று வைத்தியசாலைக்கு கடமைக்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் திக்கு திசை தெரியாமல் ஐந்து வயதில் சென்ற என்னுடைய மகன் இன்று என்னிடம் வந்தடைந்திருப்பது உச்சகட்ட மகிழ்ச்சியை தருகிறது. என்னுடைய மகன் உயிருடன் இருக்கிறார் என்று சிலரும் மரணித்துவிட்டார் என்று பலரும் என்னிடம் நேரடியாகவே கூறியிருந்த போதிலும் நான் என்னுடைய முயற்சியை தளரவிடாமல் 16 வருடங்களாக ஏக்கத்துடன் போராடினேன். இன்று என்னுடைய போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

சுனாமி தாக்கி மூன்று நாட்களின் பின்னர் என்னுடைய சகோதரியின் கணவரான ஓய்வு பெற்ற பிரதேச செயலாளரிடன் ஒருவர் வந்து எனது மகன் வைத்தியசாலையில் இருப்பதாக கூறினார்கள். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது என்னுடைய மகனை அங்கிருந்து யாரோ அழைத்து சென்றுள்ளார்கள் என்பதை அறிந்தோம்.

அது எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. நான் யாரை சந்தித்தித்தாலும் என்னுடைய மகனின் புகைப்படத்தை காட்டி விளக்கம் சொல்வேன். எங்கு என்னுடைய மகன் இருக்கிறான் என்று கேள்விப்பட்டாலும் அங்கு சென்று தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

என்னுடைய போராட்டத்தில் என்னுடைய உறவுகள் பலரும் பலவகையான உதவிகளையும் செய்தார்கள். ஆனால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயம் எனக்கு எவ்விதமான உதவிகளையும் செய்யவில்லை. பொலிஸாரும் கூட என்னை கடும் தொனியில் மிரட்டினார்கள்.

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் என்னை கடுமையாக மிரட்டி சிறையில் அடைக்கப்போவதாக எச்சரித்த அந்த நாள் இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கு என்னுடைய ஏக்கங்களை வார்த்தைகளில் சொல்லிவிட்டு வந்தேன்.

கொழுப்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் முறையிட்டேன். அதுவும் கைகூடவில்லை. வசந்தம் தொலைக்காட்சி முதல் நிறைய ஊடகங்களில் இது பற்றி பேசியுள்ளேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு என்னுடைய மகன் ஒரு சிங்கள பாடசாலையில் கல்வி கற்பதாக என்னுடைய சிங்கள நண்பி ஒருவர் எனக்கு தெரியப்படுத்தினார். அவரின் உதவியுடன் அந்த பாடசாலைக்கு சென்று என்னுடைய வகையான முயற்சிகளை செய்தேன்.

அந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அவரை எனக்கு காட்ட மறுத்து இன்று பாடசாலைக்கு வரவில்லை என்று மறுத்துவிட்டார்கள்.

மகனை காண பல நாட்களாக சிங்கள பெண்மணிகள் போல ஆடையுடுத்து என்னுடைய வேலைகளையும் விட்டுவிட்டு ஏக்கத்துடன் அந்த வீதிகளில் மகனை காண அலைந்து திரிந்தேன். விற்பனை பிரதிநிதிபோல, தொழில்வழங்குனர்போல, பிச்சைகாரிபோல வேஷங்கள் போட்டு அலைந்திருக்கிறேன்.

எனக்கு நம்பிக்கை இருந்தது என்னுடைய மகன் என்னிடம் வந்து சேரும் நாள் வரும் என்று. பல கஷ்டங்களையும் அவமானங்களையும் இதற்காக நான் சந்தித்துள்ளேன்.

என்னுடைய கணவர் என்னுடன் இல்லை அவர் வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். அதனால் தனியாகவே என்னுடைய தேடும் வீதிகளில் மகனை காண அலைந்து திரிந்தேன். அரசியல்வாதிகள் முதல் ஜனாதிபதி மட்டம் வரை என்னுடைய பிரச்சினைகளை பேசினேன் அவர்கள் யாரும் கணக்கில் எடுக்கவே இல்லை. ஒரு நிறுவனம் ஒன்றின் மூலம் மகனின் இருப்பிடத்தை அறிந்துகொண்ட நான் அங்கு வேறு ஒருவர் போல சென்று என்னுடைய மகனை சந்தித்தேன். அவருடன் தொழில் வழங்குனர் போல பேசி மகனின் தகவல்களை பெற்றுக்கொண்டேன்.மகனும் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.

பின்னர் தொலைபேசியில் நாங்கள் பேசிக்கொண்டோம். எனக்கு தெரிந்த அவருடைய அங்க அடையாளங்களை பற்றி விரிவாக பேசி என்னுடைய மகன் தான் என்பதை உறுதிப்படுத்தி கொண்டேன். பின்னர் அவரை வளர்த்த அந்த சிங்கள சகோதரியிடம் கொழும்புக்கு வேலைக்கு போகப்போவதாக கூறிவிட்டு அவர் என்னை தேடி வந்துள்ளார்.

ஹிந்தி நடிகர் போல அழகான என்னுடைய மகன் எனக்கு திருப்பி கிடைத்துள்ளான்.

மக்காவுக்கு சென்று பிராத்தித்த என்னுடைய பிரார்தனை வீண்போக வில்லை. விரைவில் நான் அவரை இஸ்லாமிய சடங்குகள் செய்து மக்காவுக்கு அழைத்து செல்ல தயாராக உள்ளேன்.

எனது வளர்த்த அந்த தாய்க்கு எதிர்காலத்தில் என்னால் முடியுமான உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

மகனை மகனிடம் பேச எத்தனித்த போது அவர் மிகப்பெரும் சங்கடத்தில் உள்ளதாலும் தமிழை பேச முடியாமல் திணறுவதாலும் ஒழுங்காக பேச முடியாமல் தவித்தார்.

இருந்தாலும் சிங்கள மொழியில் என்னால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாயை வந்தடைந்தது சந்தோசமாளிப்பதாக கூறினார். அவர் அழும் நிலையில் இருப்பதால் அவரிடம் தொடந்து எதுவும் கேட்க முடியவில்லை.

நன்றி : மடவள செய்திகள்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE