;

Tuesday 20th of October 2020 11:40:29 PM GMT

LANGUAGE - TAMIL
.
இரு தேசியவாதிகளைப் பலி கொண்ட செப்டெம்பர் – 26! நா.யோகேந்திரநாதன்!

இரு தேசியவாதிகளைப் பலி கொண்ட செப்டெம்பர் – 26! நா.யோகேந்திரநாதன்!


1959 செப்டெம்பர் 26 – அன்றுதான் அப்போது இலங்கையின் பிரதமராகப் பதவிவகித்த உண்மையான சிங்களத் தேசியவாதியான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பணடாரநாயக்கா அவர்கள் ஒரு மஞ்சள் அங்கி அணிந்த பௌத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1987 செப்டெம்பர் 26 – அன்றுதான் விடுதலைப் புலிகள் அமைப்பின் யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரும், தேசிய விடுதலைப் போராட்டத்தில் இதயசுத்தியுடன் களமாடி பல விழுப்புண்கள் பெற்ற உண்மைத் தமிழ்த் தேசியவாதியாகிய தியாகதீபம் திலீபன் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பு நடத்திய போது அக்கோரிக்கைகளை காந்தி தேசம் என்று அழைக்கப்படும் இந்தியா சாதகமான முறையில் பரிசீலிக்கக்கூடத் தயாரற்ற நிலையில் திலீபனின் உயிர் பலிகொள்ளப்பட்டது.

இலங்கையின் சிங்கள தேசியத்தில் அழுத்தமாக நின்று சிங்கள மக்களின் சுயாதிபத்தியத்தையும், இறைமையையும் பாதுகாக்க அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும், அவர்களின் அடிவருடிகளுக்கும் எதிரான புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும், சிங்களப் பேரினவாத சக்திகளினதும் இந்தியப்பிராந்திய வல்லாதிக்கதினது பிரதேச விஸ்தரிப்பு நோக்கங்கங்களுக்கும் எதிராக உறுதியாக தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க போராடிய திலீபனும் செப்டெம்பர் 26 அன்றே சர்வதேச, பெருந்தேசிய இனவாத ஒடுக்குமுறையாளர்களால் பலிகொள்ளப்படனர். இருவரினது உயிர்ப்பலிகளின் பின்னால் இரு ஒப்பந்தங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கொலையின் பின்னால் பண்டா – செல்வா ஒப்பந்தமும், தியாகி திலீபனின் உயிர் பறிப்பின் பின்னால் இலங்கை - இந்திய ஒப்பந்தமும் இருந்தன என்பது முக்கியமான விடயமாகும்.

இருவருமே தமது சொந்த இனங்களினது தேசியத்தைப் பாதுகாக்க ஏகாதிபத்திய சக்திகளுடனும், அவர்களின் அடிவருடிகளான உள்ளூர் மேல்தட்டு கனவான்களுடனும், பேரினவாத சக்திகளுடனும் பிராந்திய வல்லரசுடனும் விட்டுக்கொடுக்காத போராட்டத்தை நடத்தியவர்கள் எனவேதான் இருவருமே தமது எதிரிகளான தேசிய விரோத, மக்கள் விரோத சக்திகளால் உயிர்ப்பலியெடுக்கப்பட்டனர்.

பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்களை எமது தலைவர்களாக தம்மை இனங்காட்டி வந்த மேட்டுக்குடிக் கனவான் அரசியல்வாதிகள் ஒரு இனவாதியாகவும், தமிழ் மக்களின் விரோதியாகவுமே சித்தரித்து வந்தனர். குறிப்பாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழ் அரசுக்கட்சி ஆகிய தரப்பினர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்களைப் பற்றி படுமோசமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர். அதற்குக் காரணமாக அவர்கள் பண்டாரநாயக்காவை ஒரு இனவாதியாக கூறிக்கொண்டாலும் அடிப்படையில் அவர்களின் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொண்டிருந்த நெருக்கமுமே உண்மைக் காரணங்களாகும்.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக 1926 ஆம் ஆண்டில் அவரே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அதையடுத்து கண்டிய தேசிய சங்கமும் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இன்னொருபுறம் வடபகுதியில் உருவாக்கப்பட்ட 'அகில இலங்கை பாரம்பரியக் குடிமக்களின் தமிழ் அமைப்பு' என்ற முற்போக்கு இயக்கமும் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஈ.என். நாகநாதன் உட்பட மேல்தட்டு வர்க்கத் தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிக் கோரிக்கையை நிராகரித்து 50:50 என்ற சமப்பிரதிநிதித்துவ கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் அவர்களால் அதிலும் வெற்றி பெற முடியவில்லை.

24.05.1944 அன்று அரசாங்க சபையில் சிங்களம் அரச கரும மொழியாக ஆக்கவேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டபோது எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா ஆற்றிய உரையில், 'சிங்களத்துடன் தமிழையும் அரச கரும மொழியாக்குவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை. இது பல்வேறு சமூகங்களுக்குமிடையே ஐக்கியம், பரஸ்பர நம்பிக்கை என்பவற்றை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக இருக்க வேண்டுமென்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை', என ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தார்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவை தலைமையாகக் கொண்டிருந்த சிஙகள மகாசபையின் 09.07.1951 அன்று இடம்பெற்ற மாதம்பை மகாநாட்டில், 'உடனடியாகச் சிங்கள மொழி அரச கரும மொழியாக்கப்பட வேண்டும். அவ்வகையில் தமிழர்களிடமிருந்து நிர்ப்பந்தம் வருமானால் தமிழும் அரச கரும மொழியாக்கப்பட வேண்டும்', என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும் 1954 ஆம் ஆண்டு களனியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் இலங்கையில் சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அகற்றி விட்டு சுயாதிபத்தியமும் இறைமையும் கொண்ட ஒரு தேசிய ஆட்சியதிகாரத்தை நிறுவ முனைந்த பண்டாரநாயக்க அவர்கள் வேறு வழியின்றி 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்கப் போவதாக வாக்குறுதியளித்து தேர்தலில் போட்டியிட்டார்.

அதன்படி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்ட பண்டாரநாயக்க அவர்களால் 1956 யூன் 5ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து கோல்பேஸ் திடலில் தமிழ் அரசுக்கட்சியினர் நடத்திய சத்தியாக்கிரகத்தின் மீது ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த காடையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் தொடர்பாக, அதை பண்டாரநாயக்கா தடுத்து நிறுத்தவில்லை எனக் கூறி அவரை தமிழ் அரசுக்கட்சியினர் குற்றஞ்சாட்டினரே ஒழிய தாக்குதல் நடத்திய ஐக்கிய தேசியக்கட்சியை குற்றஞ் சாட்டவில்லை என்பது முக்கிய விடயமாகும். அதிலிருந்து தமிழ் அரசுக்கட்சியினரின் நிலைப்பாட்டை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

எனினும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படும் முகமாக 1957 பிற்பகுதியில் பண்டா - செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. சமஷ்டியை ஒத்த பிரதேச சுயாட்சி முறையை கொண்ட இவ் ஒப்பந்தமே இனப்பிரச்சினைக்கான மிகச்சிறந்த தீர்வென அன்றும் இன்றும் பலதரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

ஆனால் ஒப்பந்தத்தை செய்துவிட்டு வடக்கு வந்த தமிழ் அரசுக்கட்சியினர் சிங்கள 'ஸ்ரீ' எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். அதே நேரத்தில் தெற்கில் ஜே.ஆர். தலைமையில் தமிழ் எழுத்துகளுக்கு தார் பூசப்பட்டு ஒரு இனக்கலவரம் ஏற்படுவதற்கு வித்திடப்பட்டது. இப்படியான நிலையில் பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்துக்கு எதிராக பிரதமரின் இல்லத்துக்கு முன்பு சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினர்.

ஒரே நேரத்தில் சிங்கள தரப்பினாலும் தமிழர் தரப்பினாலும் எதிர்ப்பு எழும்பவே பண்டா – செல்வா ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கிழித்தெறியப்பட்டது. இருந்தபோதிலும் சில நாட்களின் பின்பு அவர் நான்கு அம்சத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நியாயமான தமிழ் உபயோகம் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். ஆனால் அதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு அதை அமுலாக்குவதற்கு முன்பே பண்டாரநாயக்கா பௌத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எனவே பண்டாரநாயக்காவின் அரசியல் வரலாறு முழுவதுமே அவர் என்றுமே ஒரு இனவாதியாகவும், இன ஒடுக்குமுறையாளனாகவோ இருந்ததில்லை. ஆனால் அவர் ஒரு நியாயபூர்வமான சிங்களத் தேசியவாதியாக தன் இனத்தையும், தன் மொழியையும், தனது கலாச்சாரத்தையும், தனது நாட்டையும் நேசித்ததுடன் தனது நாடு தன்னிறைவுப் பொருளாதாரம் கொண்ட இறைமையுள்ள நாடாக விளங்க வேண்டும் என்பதற்காகவும் கடுமையாக உழைத்தார். அதே வேளையில் தமிழ் மக்களின் தேசியத்தை மதித்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் தன்னாலான பல முயற்சிகளையும் மேற்கொண்டார். எனவே அவர் ஒரு சிங்களத் தேசியவாதி என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

1936 தொடக்கம் 1952 வரையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமை ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடமும், 1958 தொட்டு 1977 வரை தமிழ் அரசுக்கட்சியிடமும் இருந்தது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் 50:50 என்ற சமப்பிரதிநிதித்துவ கோரிக்கையை முன்வைத்தாரே ஒழிய தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனையை முன்னெடுக்கவில்லை. ஆனால் 1934 ஆம் ஆண்டிலேயே சிங்கள மகா சபை ஆரம்பிக்கபட்ட போதே சிங்கள தேசியத்துக்கான எண்ணக்கரு உருவாகிவிட்டது. ஆனால் தமிழ் தலைமைகளோ கொழும்பு அரசியலில் தமது அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பிலேயே அக்கறை காட்டினர்.

1952 இல் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை விட்டு வெளியேறிய தமிழ் அரசுக்கட்சியினர் சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்தியதன் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சுயாட்சியதிகாரம் உள்ள நிர்வாக அலகைக் கோரினர். எனினும் இவர்களுடைய போராட்டங்களில் மொழி உரிமையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டனவே ஒழிய தேசியத்தின் ஏனைய அம்சங்களான கலாச்சாரம் பொருளாதாரம் என்பன தொடர்பான தெளிவான பார்வை இருக்கவில்லை. ஏனெனில் தமிழ் அரசுக்கட்சியை வழிநடத்திய முக்கிய தலைவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தவர்களாகவும், மேற்கத்தைய ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளுடன் உடன்படுபவர்களாகவும் இருந்து வந்தனர். அதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் எப்போதுமே நல்லுறவைப் பேணி வந்த அதேவேளையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தமிழ் மக்களின் பரம எதிரியாகச் சித்தரித்து வந்தனர்.

தமிழ் அரசுக்கட்சி சத்தியாக்கிரகம் பாதயாத்திரை ஹர்த்தால் நடவடிக்கைகள், உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தும் மகாநாடுகள் ஆர்ப்பாட்டங்கள் என எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது நடத்துவதில்லை. அதுமட்டுமின்றி 1958 இனவழிப்புக் கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கி நடத்தி தமிழ் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருந்த போதிலும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அதில் பங்கு வகித்ததுடன் அமைச்சுப் பதவியையும் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ் அரசுக்கட்சியனர் அரசுக்கு எதிராக வௌ;வேறுவிதமான போராட்டங்களை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்கா பி.எல். 480 உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கிய கோதுமையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக மா, பாண் போன்றவற்றுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் மரவள்ளி, குரக்கன், ஒடியல் போன்றவற்றை மக்கள் கொள்முதல் செய்து உண்ணக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அதே போன்று மிளகாய், வெங்காய இறக்குமதியை தடைசெய்ததால் அவற்றின் விலையும் அதிகரித்தது. அதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் மேம்பட்டு கல்வீடுகள் கட்டவும் வாகனங்கள் வாங்கவும் கூடிய வசதியான நிலை ஏற்பட்டது. வடபகுதி விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்திய இந்த நடவடிக்கையை பாராட்டவேண்டிய தமிழ் அரசுக்கட்சியினர் பாண் வாங்க வரிசையில் நினறதைச் சொல்லி ஸ்ரீமாவோ அரசாங்கத்தை திட்டித்தீர்த்தனர்.

அது மட்டுமின்றி திருமலைத் துறைமுகத்திலிருந்து பிரித்தானிய கடற்படையினரை வெளியேற்றியது, அந்நிய எண்ணெய் விநியோக நிலையங்களை தேசியமயப்படுத்தியது, தேயிலை இறப்பர் தோட்டங்களை தேசிய மயமாக்கியது போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டியதன் மூலம் தமிழ் அரசுக்கட்சியினர் தமது மேற்குல விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீமாவோ அரசாங்கம் இந்தியத்திரைப்படங்களினதும், சஞ்சிகைகளினதும் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் பல தமிழ்ப் படங்கள் உருவாகும் நிலையும், புதிய சஞ்சிகைகள், இலக்கிய நூல்களும் வெளிவரவுமான நிலை ஏற்பட்டது. ஆனால் இத்தடைகளை எதிர்த்து அமிர்தலிங்கம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பெரும் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதாவது தமிழ் அரசுக்கட்சியினர் எமது மண்ணை இந்தியாவின் கலை இலக்கிய சந்தையாக பயன்படுத்த விரும்பினரே ஒழிய இங்கு தமிழ் தேசிய மணம்கொண்ட கலை இலக்கியப் படைப்புகள் உருவாவதற்கு எதிராகவே செயற்பட்டனர் என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு தமிழ்க் காங்கிரஸ், தமிழ் அரசுக்கட்சி ஆகியன அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலங்களில் இலங்கைத் தேசியத்துக்கு மட்டுமின்றி தமிழ்த் தேசியத்துக்கும் விரோதமாகவே செயற்பட்டு வந்தனர் என்பதனை மறுத்துவிட முடியாது.

ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக ஆயுத வடிவில் முன்னெடுக்கப்பட்ட போதுதான் தமிழ்த் தேசியம் பற்றிய விழிப்புணர்வு மேம்பட ஆரம்பித்தது. அதிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தில் அது எமது பாரம்பரிய தாயக நிலத்தை மீட்கும் போராட்டமாகவும் மலர்ந்ததுடன் எமது மொழி, எமது கலை இலக்கியங்கள் உட்பட எமது கலாச்சாரம், எமது சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரம் என்பவற்றை பேணி வளர்த்து எம்மை ஒரு தேசிய இனமாக நிலைநிறுத்தும் நிலைமையும் ஏற்பட்டது. எனவே உண்மையான தமிழ் தேசியத்தை கையெடுத்து முன்கொண்டு சென்றவர்கள் விடுதலைப்புலிகள் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

அவ்வகையில் ஒரு தேசிய விடுதலை போராட்டத்தின் தலைமைப் போராளிகளில் ஒருவனாகிய தியாகி திலீபன் சிங்களப் பேரினவாத சக்திகளிடமிருந்தும், இந்தியப்பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடமிருந்தும் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க உண்ணா நோன்பை ஆயுதமாகக் கொண்டு களத்தில் இறங்கினான்.

ஏகாதிபத்தியவாதிகளுக்கும், பிராந்திய வல்லாதிக்கவாதிகளுக்கும், அவர்களின் அடிவருடிகளுக்கும் பேரினவாத சக்திகளுக்கும் எதிராகத் தமது இனங்களின் சுயாதிபத்தியத்தையும் இறைமையையும் பாதுகாக்கத் தங்களை அர்ப்பணித்த சிங்களத் தேசியவாதி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும், தமிழ்த் தேசியவாதி தியாகி திலீபனும் செப்டெம்பர் 26 இல் பலிகொள்ளப்பட்டனர் என்பது வியத்தகு ஒற்றுமையாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

29.09.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE