Monday 15th of April 2024 11:40:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது: பிரதமர் மஹிந்த நம்பிக்கை!

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது: பிரதமர் மஹிந்த நம்பிக்கை!


20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து என்ன?

பிரதமர்: அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது அல்லவா?

பிரதமர்: அனைத்து கட்சிகளுக்கும் அது தொடர்பில் குழுக்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில் நாம் அனைவருடனும் அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடினோம். எதிர்க்கட்சியும் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிகிறேன்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா?

பிரதமர்: இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது.

ஊடகவியலாளர்: இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின் போது 13ஆவது திருத்தத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து.

பிரதமர்: தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம்.

ஊடகவியலாளர்: புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரவுள்ளீர்களா?

அமைச்சர் உதய கம்மன்பில: புதிய அரசியலமைப்பு வரைவொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும்.

பிரதமர்: அரசியலமைப்பு முழுவதும் மாற்றம் செய்யப்படின் வாக்கெடுப்பிற்கு செல்வது அவசியமாகும். ஆனால், எமக்கு அந்த மக்கள் ஆணை தெளிவாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: 19ஆவது அரசிலமைப்பை நீக்க வேண்டும் என்றே எமக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அது குறுகிய கால தீர்வு. புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவது நீண்ட கால தீர்வாக அமையும்.

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வு பெற போவதில்லை.

ஊடகவியலாளர்: கொவிட்-19 காரணமாக உலகின் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது? வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியுமா?

பிரதமர்: உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் என்ன இடம்பெற்றாலும் உரிய நேரத்திற்கு கடன்களை செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: தேங்காய் குறித்து ஒரு பாரிய பிரச்சினை காணப்படுகிறதே?

பிரதமர்: தேங்காய் தொடர்பில் எப்போதும் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டது. எமக்கு நுகர்வோர் முக்கியம். அதனால் கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான முன்மொழிவு சிறப்பானதாகும். அதனை முறைப்படி அமைச்சரவையில் முன்வைப்போம்.

ஊடகவியலாளர்: அரசாங்கம் வர்த்தமானி வெளியிடுகிறது. பின்னர் மீண்டும் திரும்பப் பெற்று கொள்கிறது என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறதே?

பிரதமர்: அதன் மூலம் வெளிப்படுவது ஜனநாயகமே தவிர வேறொன்றும் இல்லை. தேங்காய் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அது குறித்து அறிவிப்பேன்.

ஊடகவியலாளர்: மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மஞ்சளை இறக்குமதி செய்ய முடியாதா?

பிரதமர்: உள்ளூர் விவசாயிகள் தற்போது மஞ்சளை பயிரிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எம்மால் அதைரியப்படுத்த முடியாது. அதனால் உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை தைரியப்படுத்த வேண்டுமாயின் நாம் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்ல வேண்டும். வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாம் மஞ்சள் இறக்குமதி செய்தால் விவசாயிகள் மஞ்சள் பயிர்செய்கையை கைவிட்டுவிடுவார்கள்.

ஊடகவியலாளர்: வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன.

பிரதமர்: உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யுமாறு கூறியுள்ளோம். உதிரிப் பாகங்களை கொண்டுவருவதில் எவ்வித தடங்கல்களும் இல்லை.

ஊடகவியலாளர்: விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?

பிரதமர்: கொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டே அதனை செயற்படுத்த வேண்டும். நாம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை என்பவற்றை கருத்திற் கொண்டு அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்து கொள்ளும் செயற்பாட்டின் போது வதிவிடம் குறித்த பிரச்சினை காரணமாக பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்படாமல் நியாயமற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமைச்சர் விமல் வீரவன்ச: அமைச்சரவையில் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தேர்தல் பட்டியலில் பெயர் பதியப்பட்டிருப்பது போதுமானது என்று சுற்றறிக்கையில் திருத்தம் செய்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்: சட்டவிரோத இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா?

பிரதமர்: சட்டவிரோத மீனவ பிரச்சினையை இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளோம். நாடு என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் கடற்படையினருக்கு அறிவித்துள்ளோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்திய பிரதமருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட போதிலும், அவரிடமிருந்து தெளிவான பதிலொன்று கிடைக்கவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதன் மூலம் தீர்வு காணலாம் என்ற கோரிக்கைக்கு இந்திய பிரதமரும் சம்மதித்தார்.

ஊடகவியலாளர்: திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா?

பிரதமர்: அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்.

ஊடகவியலாளர்: எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் இரகசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா?

பிரதமர்: எம்.சி.சி. தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவரை அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இடம்பெறாத நிலையில் அப்படியொரு பிரச்சினை குறித்து ஏன் பேச வேண்டும்?

ஊடகவியலாளர்: 20இற்கு ஆதரவாக கைகளை உயர்த்துவதற்கு அரசாங்கத்தில் இணைத்து கொள்வதற்கு உறுப்பினர்களுக்கு பதவிகளை வழங்குவீர்களா?

பிரதமர்: எமக்கு 150 காணப்படுகிறது. பதவிகளுக்காக வரும் உறுப்பினர்கள் தற்போது இல்லை. இதனையும் சொல்ல வேண்டும். நான் என்றால் 19இற்கு வாக்களிக்கவில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச: 20இற்கு எதிர்ப்பு தெரிவிக்க பாராளுமன்ற எதிர்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் யார் என்று தேடிப்பார்த்தால் எமக்கு யார் ஆதரவு வழங்குவார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை?

பிரதமர்: அது எனது கவனத்திற்கானதொன்று. (சிரிப்புடன்)


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE