Friday 29th of March 2024 12:30:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆர்மீனியா - அஜர்பைஜான்  மோதல் தீவிரம்;  போரை நிறுத்த விடுத்த அழைப்பும் நிராகரிப்பு!

ஆர்மீனியா - அஜர்பைஜான் மோதல் தீவிரம்; போரை நிறுத்த விடுத்த அழைப்பும் நிராகரிப்பு!


ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே இடம்பெற்றுவரும் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு சா்வதேச நாடுகள் விடுத்த அழைப்பை இரு நாடுகளும் நிராகரித்துள்ளன.

சண்டை தொடரும் என இரு நாடுகளும் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளன.

சர்ச்சைக்குரிய நாகோர்னி கராபாக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று நான்காவது நாளாகவும் தீவிர மோதல்கள் இடம்பெற்றன. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானவா்கள் இறந்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கராபாக்கில் இடம்பெறும் சண்டையை உடனடியான நிறுத்துமாறு நேற்று அழைப்பு விடுத்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைத் தவிர்க்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மொஸ்கோ கூறியுள்ளது.

எனினும் மோதலுடன் தொடர்புடைய இரு நாடுகளும் சர்வதேச அழைப்புக்களை நிராகரித்து மோதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

சர்ச்சைக்குரிய நாகோர்னி கராபாக் பிராந்தியத்துக்கு உரிமை கோரி சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் நாடுகள் இடையே நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வருகிறது.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகோர்னோ - கராபாக் மலைகளால் சூழப்பட்ட பிராந்தியமாகும். இது சுமார் 4,400 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

இந்தப் பிரைாந்தியத்தக்கு உரிமை கோரியே கடந்த 30 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே மோதல் நீடித்து வருகிறது.

சர்வதேச அளவில் இப்பிராந்தியம் அஜர்பைஜானுக்கு சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆர்மீனியாவை சேர்ந்த பூர்வகுடிகளே இந்த பிராந்தியத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

அடிக்கடி இவர்களிடையே மோதல் ஏற்படுவதும் பரஸ்பரம் தாக்கிக் கொள்வதும் வழமையாக இருந்து வருகிறது.

ஆனால் இம்முறை இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

அஜர்பைஜான் இராணுவம் பொதுமக்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஆர்மீனியா குற்றம்சாட்டுகிறது. பதிலுக்கு அஜர்பைஜானுக்கு சொந்தமான ஹெலிகப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ வாகனங்களை அழித்துள்ளதாகவும் ஆர்மீனியா தெரிவித்துள்ளது.

தற்போது தாக்குதல் நடைபெறும் இப்பகுதி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அதிகளவிலான எண்ணெய் மற்றும் இயற்கை வாயு எடுத்து செல்லும் குழாய்கள் இவ்விடத்தில் உள்ளன. எனவே தொடர் மோதல் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்புக்களும் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என ஐ.நா பொது செயலாளர் அன்ரனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இவ்விவகாரத்தில் தற்போது தலையிடத் தொடங்கியுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE