;

Sunday 25th of October 2020 10:55:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 23 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 23 (வரலாற்றுத் தொடர்)


'சவப்பெட்டியில் வைக்கப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை'

'இலங்கைத் தேசிய அரசியலில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்ட முறைமையும், சிங்களத் தலைவர்களுடன் கொண்டிருந்த உறவின் பண்பும் இக்காலத்தில் அவர்கள் வைத்த அரசியல் கோரிக்கைகளும் இவ்விடயத்தை அதாவது தமிழர்களின் பெரும்பான்மை மனோபாவத்தை வெளிப்படுத்தின. அவர்கள் மிகுந்த விசுவாசத்துடன் செயற்பட்ட தேசிய அரசியல் என்ற கட்டமைப்புக்குள் எண்ணிக்கையில் ஒரு சிறிய தொகையினராக இருந்த போதிலும் ஒரு பெரும்பான்மை போல் செயற்பட்டமைக்கான அல்லது சிந்தித்தமைக்கான காரணம் அவர்கள் கல்விப் பின்புலமோ அல்லது அவர்கள் தமது 'அதிபுத்திசாலித்தனத்தின்' மீது கொண்டிருந்த நம்பிக்கையாகவோ இருக்கலாம்'

இது 2011ம் ஆண்டு ஜனவரியில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சேர் பொன் இராமநாதன் அவர்களின் நினைவுப் பேருரையில் அரசியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எஸ்.ஐ. கீதபொன்கலன் அவர்கள் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயமாகும்.

எமது முன்னைய தமிழ்த் தலைவர்கள் தமது கல்விப் பெருமை அரசியல் நிர்வாக விடயங்களில் காட்டிய ஆற்றல், ஆளுமை என்பன காரணுமாகப் பிரித்தானிய ஆட்சியாளர்களாலும், சிங்கள அரசியல்வாதிகளாலும் நன்கு மதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தாங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி சிங்கள முஸ்லீம் மக்களுக்கும் தலைமை தாங்குபவர்களாக தம்மைக் கருதிக்கொண்டனர். தாம் இலங்கையின் சிறுபான்மையினமான தமிழர் என்பதை விட இலங்கையர் என்பதற்கே முன்னுரிமை கொடுக்கும் விதமான அரசியலை முன்னெடுத்தனர்.

எவ்வாறு சேர்.பொன். இராமநாதன், சேர்.பொன். அருணாசலம் ஆகியோரை தங்கள் தேவைகள் நிறைவேறும் வரை உயர்ந்த மட்டத்தில் வைத்து போற்றி பின்பு சந்தர்ப்பம் கிடைக்கும் போது தமது நலன்களை மேம்படுத்த சிங்கள அரசியல்வாதிகள் தூக்கி எறிந்தார்களேர் எவ்வாறு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் முழு நாட்டுக்குமான சுதந்திரக் கோரிக்கை அடிப்படையில் தேர்தல் பகிஸ்கரிப்பை முன்னெடுத்தபோது ஆரம்பத்தில் சிங்களத் தலைவர்கள் சிலர் ஆதரவளித்துவிட்டு தேர்தல் காலத்தின் போது காலை வாரினார்களோ அவ்வாறே டீ.எஸ்.சேனாநாயக்கா 1936 இல் ஒரு தந்திரத்தை மேற்கொண்டார்.

1936 இல் உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள அமைச்சரவை என்ற தோற்றத்தை மறைக்க அவர் வைத்திலிங்கம் துரைச்சாமியை மன்றின் சபாநாயகராகவும் ஜி.ஜி.பொன்னம்பலம், மகாதேவா, பாலசிங்கம் ஆகியோரை அதிகாரவர்க்கத் துணை அமைச்சர்களாகவும் நியமித்தார்.

அந்த தமிழ்த் தலைவர்கள் தேசிய அரசியல் அதிகாரத்தில் தாமும் பங்குகொண்டுவிட்டதாக பெருமைப்பட்டிருக்கலாம் ஆனால் தனிச்சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி வாதாடி பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடம் தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை தங்கள் பதவி ஆசைக்கு விற்றுவிட்டார்கள் என்பதே உண்மையாகும். எமது அரசியல் தலைவர்கள் தமது சொந்த அரசியல் மேம்பாட்டுக்காகவும், பதவிக்காகவும் கொழும்பின் கனவான் அரசியலில் நிலைத்து நிற்கவும், தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு செய்த துரோகங்களில் ஒன்றாகவே இதைக் கருத வேண்டும்.

இக்காலப்பகுதியில் கண்டியத் தேசிய சங்கமும், வடக்கின் அகில இலங்கைப் பாரம்பரிய குடிமக்கள் தமிழ் அமைப்பினரும் சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்திய போதும் தமிழர்களின் மரபு வழித்தலைமைகள் சிங்களத் தலைமைகளின் அபிலாசைகளுக்கு ஏற்றவிதத்தில் அவற்றை நிராகரித்தமையானது அவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை நலன்கள் மீது கொண்டிருந்த அக்கறையின்மையை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1936 தொடக்கம் 1944 வரையான, 8 வருட காலப்பகுதியில் சோல்பரிப் பிரபு தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக இலங்கையின் அரசியல் நிலைமைகள் இனங்களின் நலன்கள், அபிலாசைகள் பொருளாதார அடிப்படைகள் என்பன தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இக்காலப்பகுதியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ் அரசியலை இரு நோக்கங்களை முன்வைத்து வழிநடத்தினார். ஒன்று சகல சிறுபான்மையின சக்திகளையும் ஒரே அணியாக திரட்டுவது. சோல்பரி விசாரணைக் குழுவில் கொழும்பு மைய அரசியலை ஐம்பது வீதம் சிஙகளவர்களுக்கும், ஐம்பது வீதம் ஏனைய தமிழ், முஸ்லீம், இந்திய, பறங்கி, ஐரோப்பிய சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது.

இந்த அடிப்படையில் 08.06.1935 அன்று லண்டனில் உள்ள குடியேற்ற செயலாளருக்கு ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை வலியுறுத்தி இருபது சிறுபான்மைப் பிரதிநிதிகளிக் கையெழுத்துகளுடன் ஒரு மகஜர் அனுப்பப்பட்டது. இதில் வடபகுதித் தமிழர்கள் சார்பில் மகாதேவா, நடேசன் ஆகியோர் கிழக்கு தமிழர்களின் பிரதிநிதியாக எம்.என். சுப்பிரமணியமும், தலவாக்கொல்லை பிரதிநிதியாக எஸ்.பி. வைத்திலிங்கமும் முஸ்லீம்கள் சார்பில் டி.பி.ஜயாவும், மாநகரசபை உறுப்பினர் அப்துல் காதரும் இந்தியர்கள் சார்பில் ஐ.எக்ஸ்.பெரேராவும் இந்தியத் தமிழர் சார்பில் ஜி.ஆர்.மேத்தாவும், முஸ்லீம் லீக் சார்பில் எம்.சி.எல். கலீலும் கையெழுத்திட்டனர்.

இவ்வாறு சகல சிறுபான்மையினரின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு ஐக்கியம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையின் அடிப்படையில் கட்டிமைக்கப்பட்டாலும் அது நாளடைவில் பலவீனமடைய ஆரம்பித்தது. 1942 இல் அரசாங்க சபைத் தலைவர் பதவியிலிருந்து பரண் ஜெயதிலக்க விலகிய போது அப்பதவிக்கு டீ.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார். அவர் சிறுபான்மையினரிடத்தில் ஏற்பட்ட ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் வகையில் காய்களை நகர்த்தினார். அவர் அருணாசலம் மகாதேவாவை உள்நாட்டு அமைச்சராக நியமித்தார். அதன் பிறகு மகாதேவா ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறி அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பிரதிநிதியான சேர் ராசிக் பரீத் சிங்களவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனக் கூறி ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறினர். அத்துடன் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியான பெரி. சுந்தரம் முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் செய்த டீ.பி. ஜயா ஆகியோரும் வழங்கிய ஆதரவும் பலவீனப்பட ஆரம்பித்தது.

ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையின் ஜீ.ஜீ.பொன்னம்பலம் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமின்றி பிடிவாதமாக இருந்த போதும் அதில் பல விடயங்கள் தெளிவின்றி இருந்தமையுடன் தமிழ் மக்களுக்கு பாதகமான அம்சங்களையும் கொண்டிருந்தன.

ஏற்கனவே 1931 ஆம் ஆண்டில் டொனமூர் சீர்திருத்தம் மூலம் இனவாரியான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு பிரதேசவாரியான பிரதிநிதித்துவம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது. அப்படியான நிலையில் ஐம்பதுக்கு ஐம்பது மூலம் மீண்டும் இனவாரியான பிரதிநிதித்துவ முறை கொண்டு வரப்படுவதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பபோவதில்லை என்பதை ஜீ.ஜீ. பொன்னம்பலம் தெரிந்தோ தெரியாமலோ கணக்கிலெடுக்கவில்லை.

இரண்டாவது ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் அமுலுக்கு வந்த பின்பு முஸ்லீம்கள் இந்தியர்கள் தரப்புகளில் யாராவது ஒரு தரப்பினர் அல்லது இரு தரப்பினருமே சிங்களவர்கள் பக்கம் சாய்ந்து விட்டால் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் மூன்றாவது சிறுபான்மையினருக்கு ஐம்பது வீதம் எனப்படும் போது அதில் ஒவ்வொரு தரப்பினருக்கும் எவ்வாறு பங்கிடப்படும் என்பது பற்றி தெளிவான முடிவு இருக்கவில்லை. நான்காவது ஐம்பதுக்கு ஐம்பது கொரிக்கை நிராகரிக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றியோ தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அடுத்தகட்டத்தை எவ்வாறு நகர்த்துவது என்பது பற்றியோ எவ்வித திட்டமும் இருக்கவில்லை. சிறந்த கல்விமானாகவும் முதன்மையான சட்டவல்லுனராகவும் அதி புத்திசாலியாகவும் தன்னை இனங்காட்டிய ஜீ.ஜீ. பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட இந்த ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை இவ்வளவு பலவீனங்களை கொண்டிருந்தது என்பது இவரின் ஆற்றல் பற்றி கேள்விகளை எழுப்புவது தவிர்க்கமுடியாததாகும்.

முஸ்லீம் தரப்பு, மலையக இந்திய தரப்பு மகாதேவா குழுவினர் ஆகியோரின் ஆதரவு விலக்கப்பட்ட பின்பும் கூட ஜீ.ஜீ. பொன்னம்பலம் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கவில்லை. அவர் தனது கோரிக்கைகளை ஒரு நிறுவனமயப்பட்ட கோரிக்கையாக பலப்படுத்தி முன்வைக்கும் நோக்குடன் 1945 இல் கொழும்பு சைவ மங்கையர் மண்டபத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியை கோலகலமாக ஆரம்பித்தார்.

ஆனால் 14.08.1934இல் அதாவது காங்கிரஸ் ஆரம்பிப்பதற்கு 14 வருடங்கள் முன்பே சிங்கள தேசியத்தையும், இலங்கையின் சுதந்திரத்தையும் வலிலயுறுத்தும் முகமாக எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் சிங்கள மகாசபை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

கொழும்பு மைய அரசியலில் சம பங்கை ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் கோரினரே ஒழிய தமிழினத்தின் தேசியத்தைப் பாதுகாத்து தமிழ் மக்களின் பொருளாதார கலாச்சார மொழியுரிமை தொடர்பான தனித்துவங்களை பேணி நிலைநாட்டுவது தொடர்பாக அக்கறை காட்டவில்லை. ஆனால் சிங்கள மகாசபை பிளவு பட்டுப் போயுள்ள சிங்கள இனத்தை ஒன்று சேர்த்து தேசாபிமானத்தைக் கட்டியெழுப்பி நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுவது, பிரித்தானியரின் வருகையால் இல்லாது போய்விட்ட இன மத மறுமலர்ச்சிக்கு புத்துயிர் கொடுப்பது, சாதி பேதங்களை இல்லாது ஒழித்து கண்டிய கரையோரச் சிங்களவரிடையே நம்பிக்கையைக் கட்டி வளர்ப்பது, சிங்கள கலை இலக்கியங்களை மெருகுபடுத்தி காலத்திற்கு ஏற்ப வளர்த்தெடுப்பது. போன்ற தேசியத்தின் அடிப்படையிலான விடயங்களை கொள்கையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்ட சிங்கள மகாசபை சிங்கள தேசியத்தைப் பாதுகாத்து நாட்டின் இறைமையை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட வேளையில் தமிழ் காங்கிரஸ் தமிழ் தேசியம் தொடர்பாக எவ்வித அக்கறையுமின்றி கொழும்பு மைய அரசியலில் அதிகாரத்தைப் பகிர்வதையே இலக்காகக் கொண்டு செயற்பட்டது.

அதே வேளையில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தால் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது சிங்கள மகாசபை அதற்குப் பதிலாக அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் ஜீ.ஜீ. பொன்னம்பலம் மகாதேவாவின் அறுபது நாற்பது கோரிக்கையை நிராகரித்தது போன்று சிங்கள மகாசபையின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டார்.

1944 டிசம்பர் முதல் 1945 ஏப்ரல் வரை சோல்பேரி ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெற்றது. அதில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது சமபல கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். அதேவேளையில் மகாதேவா அறுபதுக்கு நாற்பது கோரிக்கையை முன்வைத்தார். சிங்கள மகாசபை சாட்சியம் வழங்கவில்லை. ஆனால் டீ.எஸ். சோனாநாயக்க கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியின் உபவேந்தர் ஐவன் ஜெனிஸ் மூலமாக ஒரு அரசியலமைப்பு நகலைத் தயாரித்து அதை சோல்பேரி ஆணைக்குழுவின் விசாரணையின் போது முன்வைத்தார். அது பிரிட்டிஷ் வெஸ்ற் மினிஸ்றர் பாராளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருந்தது.

நீண்ட வாதப்பிரதி வாதங்களுக்குப் பின்பு டீ.எஸ.சேனாநாயக்காவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சோல்பேரி ஆணைக்குழுவினால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக தன் ஆட்சேபனையை வெளியிடவும், சோல்பேரி முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும்படிக் கோரவும் அவர் லண்டன் புறப்பட்டார்.

அவர் லண்டனில் இருந்தபோதே 08.11.1945 இல் சோல்பேரியின் அறிக்கை அரசாங்க சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் போதுமானதாக இருந்தபோதும் அது 90 வீதமான வாக்குகளைப் பெற்று நிறைவேறியது.

ஏற்கனவே ஐம்பதுக்கு ஐம்பது அறுபதிற்கு நாற்பது பேன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த தமிழ் தரப்பினர் குத்துக்கரணம் அடித்து சோல்பேரியின் அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் பின்னாட்களில் கல்வியமைச்சராகவும் சில மாதங்கள் இலங்கையின் பிரதமராகவும் பதவி வகித்த தென்னிலங்கையைச் சேர்ந்த டபிள்யூ. தகநாயக்கா, இந்தியர்களின் பிரதிநிதியான ஐ.எக்ஸ். பெரேரா ஆகிய இருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். ஜீ.ஜீ. பொன்னம்பலம் நாடு திரும்பிய போது அவருக்கு ஏற்கனவே ஆதரவளித்து வந்த தமிழ்ப் பிரதிநிதிகள் உட்பட தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர், ஐரோப்பியர் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை சவப்பெட்டியில் வைக்கப்பட்டுக் கடைசி ஆணியும் அடிக்கப்பட்டுவிட்டது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை


காணொளி


பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE