Tuesday 23rd of April 2024 09:54:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இலங்கையின் போர்க்குற்றங்களும்! - நா.யோகேந்திரநாதன்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இலங்கையின் போர்க்குற்றங்களும்! - நா.யோகேந்திரநாதன்!


ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1இ 40/1 தீர்மானங்களை அமுல்படுத்த 2017 ஆம் ஆண்டு மேலதிக இரண்டு வருடகால அவகாசம வழங்க்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட கால அவகாசப்பகுதியில் அது நிறைவேற்றப்படாத நிலையில் 2019 இலும் இலங்கை அரசுக்கு அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரு வருட கால அவகாசங்கள் வழங்கப்பட்டது.

எதிர் வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டாவது கால அவகாசமும் முடிவடைகிறது. எனினும் அத்தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட அம்சங்களில் காணாமல் போனோர் சம்பந்தமான அலுவலகம் ஒரு கண்துடைப்பாக நிறுவப்பட்டதைத் தவிர வேறு எதுவும் நிறைவேற்றப்படவுமில்லை நிறைவேற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுமில்லை. எனவே மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் ஒரு புதிய தீர்மானம் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மனித குல விரோத நடவடிக்கைகள் என்பன தொடர்பான 30/1 தீர்மானத்தை நிறைவேற்ற இரு தடவைகள் கால அவகாசம் பெற்றுக்கொண்ட இலங்கை நான்கு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளமை ஒரு கீழ்த்தரமான நடவடிக்கை மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் அதன் உறுப்பு நாடுகளையும் படுமோசமாக அவமதிக்கும் செயல் எனவுமே கருதப்படுகிறது.

எனவே 45வது கூட்டத்தொடரில் இலங்கை நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரலாம் எனவும் அங்கு நிறைவேற்ற எதிர்பார்க்கப்படும் தீர்மானம் இலங்கைக்குச் சர்வதேச அளவில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமெனவும் நம்பப்படுகிறது.

அண்மையில் 44வது மனித உரிமைகள் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அதன் ஆணையாளர் மிச்செட் பச்லெட் அவர்கள் இலங்கை தொடர்பான தன் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கியமை இப்படியான குற்றங்கள் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளாக நியமித்தமை தமிழ் மக்களை கொலை செய்த குற்றச்சாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமை சிவில் அமைப்புகள் ஊடகங்கள் மீதான இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படாமை போன்ற விடயங்கள் தொடர்பாக அவர் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். மேலும் தற்சமயம் நிறைவேற்றப்படவுள்ள 20வது திருத்தச்சட்டத்தின் ஜனநாயக விரோதத் தன்மை பற்றியும் அவர் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரித்ததுடன் 20 வது திருத்தம் தொடர்பாகவும் அவர் வெளியிட்ட கருத்துகள் தேவையற்றவை எனவும் அவை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளது.

எப்படியிருந்த போதிலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் என்ற மட்டத்திலிருந்து சர்வதேச விவகாரமாக விரிவடைந்துவிட்டது. அது இலங்கையரசுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்குமிடையேயான பிரச்சினை என்ற வடிவத்துக்கு வந்துவிட்டபோதிலும் இலங்கை அரசு திமிர்த்தனமான முறையில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பாக இலங்கைக்கு வெளியே உள்ள கட்டமைப்புகள் தலையிடுவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசு தான் அங்கம் வகிக்கும் ஒரு சர்வதேச அமைப்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையை இலங்கைக்கு வெளியே உள்ள அமைப்பெனவும் அது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது எனவும் கூறுவது சர்வதேச நியமங்களை முழுமையாகவே நிராகரிக்கும் ஒரு செயற்பாடாகும். அடிப்படையில் இக்கருத்தானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தான்தோன்றித்தனமான சவாலாகவே கருதவேண்டியுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டியாவது ஒரு கடுமையான தீர்மானத்தை நிறைவேற்றுமென எதிர்பார்க்கலாம்.

இப்படியாக இலங்கை அரசுக்கு ஒருவிதமான அழுத்தம் ஏற்படக்கூடிய ஒரு நிலைமையில் அதை வலுப்படுத்தும் வகையில் சில நாடுகளை ஊக்குவிப்பதற்காக முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் தமிழர் தரப்பில் கனடாவுடனும், ஐரோப்பாவுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளதாக சில செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த அரசு ஆட்சியிலிருந்த காலத்தில் இலங்கை அரசுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற 2017 இலும், 2019 இலும் இரு தடவைகள் கால அவகாசங்கள் வழங்கப்பட்டன. இக்கால அவகாசங்கள் வழங்கப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன் பலத்த ஆதரவை தெரிவித்து வந்தார். அப்படியான ஆதரவு நிலைப்பாட்டை தமிழ்த் தரப்பிலுள்ள பலர் எதிர்த்தபோதிலும் சுமந்திரன் அசைந்து கொடுக்காமல் போர்க்குற்ற விசாரணைகள் முடிந்து விட்டன எனவும் போர்க்குற்றங்கள் தொடர்பாக புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் ஆட்சியாளர்களை நியாயப்படுத்தி பெரும் பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்.

இது கால அவகாசம் வழங்கப்படுவதை தமிழ்த் தரப்பு ஆதரிக்கிறது என்ற கருத்தை சர்வதேச மட்டத்தில் உருவாவதற்கு வழிவகுத்தது. ஆனாலும் அவகாசம் வழங்கப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. வரவு செலவுத்திட்டங்கள், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி போன்றவை இடம்பெற்ற சந்தர்ப்பத்திலிலெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஆதரவுடனேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் காப்பாற்றப்பட்டது.

அப்படியான வாய்ப்புகள் கிட்டியபோதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முக்கியமாக அதன் தலைமை ஐக்கிய தேசிய கட்சியைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தினாரே ஒழிய மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற வைப்பது தொடர்பான எவ்வித அக்கறையும் காட்டவில்லை. தமிழ் மக்கள் தொடர்பான நியாயபூர்வமான அக்கறைகளை மேற்கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவுத்திட்டம் தொடர்பான பிரச்சினையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை விட்டு வெளியெறும் நிலைமை ஏற்பட்டது. அதாவது ஐக்கிய தேசிய முன்னணி அரசை காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்குக் கூட தயங்காத சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்றங்கள் மனித உரிமைகள் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற வைப்பதில் அக்கறை காட்டவில்லை.

இப்படியாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வழிகாட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஐக்கிய தேசிய அரசின் நலன்களையும் நோக்கங்களையும் நிறைவு செய்வதற்காக தமிழ் மக்களின் பிரச்சினையை உதாசீனம் செய்த காரணத்தால் தற்போதைய அரசு 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தமிழ் மக்கள் இலவு காத்த கிளியின் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

எமது மக்களின் நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் சர்வதேச ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நான்கு வருடங்களுக்கு மேலாக இழுத்துப்பறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வலுவான ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி நீர்த்துப்போக வைக்க அடுத்து ஆட்சிக்கு வந்த தற்போதைய பொதுசன முன்னணி அரசு முற்றாகவே நிராகரித்துவிட்டது.

இப்படியான ஒரு நிலையில் போர்க்குற்ற விசாரணைகள் முடிந்து விட்டதெனவும், விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்படவேண்டியவர்கள் எனவும் ஓங்கிக் குரல் எழுப்பி இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும் மனித உரிமைமீறல்களையும் நியாயப்படுத்த முயன்ற சுமந்திரன் உட்பட சிலர் மீண்டும் தமிழ் மக்கள் சார்பில் கனடாவுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பேச்சுகளை நடத்த அனுப்பப்படுவது எவ்வளவு ஆபத்தான விடயம் என்பதை கடந்த கால வரலாற்றிலிருந்து கூடப் புரிந்துகொள்ளவில்லை என்றால் தமிழ் மக்களின் எதிர்காலம் சூனியமாவது தவிர்க்கப்பட முடியாது.

45வது கூட்டத்தொடரில் இலங்கையரசுக்கு நெருக்கடிகள் ஏற்படும்போது இந்தியாவின் ஆதரவை இலங்கை சார்பாக பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை காய்களை நகர்த்தி வருவதை அவதானிக்க முடிகிறது.

எனவே இன்று எம்முன் உள்ள ஒரே வழி எம்மிடையே உள்ள தமிழ்த் தேசிய விரோத சக்திகளை புறமொதுக்கிவிட்டு (அவர்கள் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்திலிருந்தாலும்) தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே குரலில் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நியாயங்களைக் கோரவேண்டும். தற்போதைய இலங்கை அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கை காரணமாக சர்வதேசம் எமது பிரச்சினைகள் தொடர்பாக நியாயமான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படியான தீவிரமான தளம்பலற்ற எமது நடவடிக்கைகள் மூலமே ஐ.நா 45வது கூட்டத்தொடரில் எமக்கான நியாயங்களை நிலைநாட்டும் வகையில் நகர்வுகளை மேற்கொள்ளமுடியும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

06.10.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ம.ஆ.சுமந்திரன், இரா சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE