Friday 29th of March 2024 03:22:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 24 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 24 (வரலாற்றுத் தொடர்)


'ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மூன்றாவது துரோகம்'

‘தமிழர் தமது விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளைப் பாதுகாக்கும் அதே சமயம் இலங்கையிலுள்ள ஏனைய இனத்தவருடன் சேர்ந்து பொது நலனுக்கு உழைக்கும் வகையில் ஒரு கொள்கையையும் திட்டத்தையும் அவர்கள் முன்வைப்பது அத்தியாவசியமாகிறது. எனவேதான் இனங்களுக்கிடையேயான ஒரு ‘இளகு நிலை’ ஒத்துழைப்பு நிலவ வேண்டுமென முன்மொழியத் தீர்மானித்திருக்கிறேன். வறிய வெகுசனத் தமிழர்கள் பெரும்பான்மையினருக்கு நலமளிக்கும் இத்திட்டம் ஒரு சமூக நலக் கொள்கையையும் உள்ளடக்கும் என்பதுடன் அது பெரும்பாலான சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

1947ல் சோல்பேரி அரசியலமைப்பின் கீழ் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் தமிழ் காங்கிரஸில் போட்டியிட்ட அவரது 7 சகாக்களும் அமோக வெற்றி பெற்றதையடுத்து அந்த வெற்றியைக்கொண்டாடும் முகமாகப் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் நமக்குக் கிடைத்த வெற்றி தமிழ் மக்களுக்குக் கிடைத்த வெற்றி என முழங்கியதுடன் சிங்கள அரசுடன் தான் ‘இனங்களுக்கிடையேயான இளகுநிலை ஒத்துழைப்பு’ என்ற கோசத்தின் மூலம் ஒத்துழைக்கத் தயார் எனவும் பிரகடனம் செய்தார். இவ்விடயம் தொடர்பாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில் முன்வைத்த கருத்தே இதுவாகும்.

1947 தேர்தலில் வவுனியாவில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட தன்னை அடங்காத் தமிழன் எனப் பெயர் சூட்டிக்கொண்ட திரு.சுந்தரலிங்கம் வெற்றி பெற்றாலும் திரு.டி.எஸ். சேனநாயக்க அரசாங்கத்தில் இணைந்து வர்த்தக அமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிலையில் அதே தேர்தலில் வெற்றி பெற்ற ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் இனங்களுக்கிடையேயான ‘இளகு நிலை நிலை ஒத்துழைப்பு’ என்ற கோஷம் அவர் வெகுவிரைவில் சேனநாயக்க அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெறப்போவதற்கான ஒருவித முன்னறிவித்தலாகவே அமைந்திருந்தது. அவ்வாறே 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் சேனநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கைத்தொழில் அமைச்சராகப் பதவியேற்றார்.

இவ்வாறு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவி பெற்றமை அவர் தமிழ் மக்களுக்கு இழைத்த மூன்றாவது துரோகமெனக் கருதப்படுகின்றது.

அதாவது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தலைமையில் 1931இல் தேர்தலை வடக்குத் தமிழர் பகிஷ்கரித்த போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்து மன்னாரில் போட்டியிட்டார். இது அவரின் முதலாவது துரோகமாக அந்நாட்களில் கூறப்பட்டது. 1936 தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கைத் தேசிய காங்கிரஸ் தனிச் சிங்கள அமைச்சரவை அமைத்தபோது அதற்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வாதாடி நியாயத்தைப் பெற்றுக்கொள்ளாது அதிகாரமற்ற துணையமைச்சர் பதவியை ஏற்று தனிச் சிங்கள அமைச்சரவை என்ற கறையை மறைக்க உதவினார். அவ்வாறே 1948இல் அவர் தான் 15 வருடங்களாக முன்வைத்த கொள்கையிலிருந்து நேரெதிர் வளமாக மாறி அரசில் அமைச்சராக அங்கம் வகித்ததன் மூலம் மூன்றாவது துரோகத்தை மேற்கொண்டார்.

சோல்பேரி ஆணைக்குழுவின் முன்பு ஐம்பதுக்கு ஐம்பது சமச பலக் கோரிக்கையை முன்வைத்தார். அவ்வேளையில் லிபரல் அமைப்பின் ஊடாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் அறுபதுக்கு நாற்பது கோரிக்கையை முன்வைத்தபோது அதை ஜீ.ஜீ. நிராகரித்து விட்டார். அதேநேரத்தில் கண்டிய தேசிய சங்கம் அகில இலங்கை பாரம்பரியக் குடி மக்களின் தமிழர் அமைப்பு ஆகியன சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தபோதும் அவர் அதையும் ஏற்கவில்லை. ஐம்பதுக்கு ஐம்பது என்ற சமபலப் பிரதிநிதித்துவத்தில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் சோல்பேரி ஆணைக்குழுவினால் ஐம்பதுக்கு ஐம்பது நிராகரிக்கப்பட்டு டி.எஸ்.சேனநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு ஆலோசனைகள் சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இடம்பெற்ற தேர்தலில் 68 சிங்களப் பிரதிநிதிகளும் 32 தமிழர் உட்பட்ட சிறுபான்மையினரும் தெரிவு செய்யப்பட்டனர். அதாவது ஐம்பதுக்கு ஐம்பதோரூபவ் அறுபதுக்கு நாற்பதோ இல்லாத நிலையில் அறுபத்தெட்டுக்கு முப்பத்திரெண்டு என்ற விகிதமே கிடைத்தது. இது ஜீ.ஜீ. பொன்னம்பலம் தரப்பினருக்கு விழுந்த தலையடியாகும். ஆனால் பொன்னம்பலம் தான் 15 வருடங்களாக முழங்கி வந்த கொள்கையைத் தூக்கியெறிந்து விட்டு 60:40 ஏற்க மறுத்த அவர் 68:32 என்பதை ஏற்று அரசில் இணைந்து கொண்டார். எனவேதான் இவ்வாறான குத்துக்கரணம் இவரின் மூன்றாவது துரோகமாகவும் படுமோசமான காட்டிக்கொடுப்பாகவும் கூறப்படுகின்றது.

பின்னாட்களில் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது டி.எஸ்.சேனநாயக்கவுக்கு ஆதரவளித்தமைக்காக ஜீ.ஜீ. பொன்னம்பலத்தைத் துரோகி எனத் திட்டித்தீர்த்த தமிழரசுக் கட்சி அந்த முதல் மூன்று துரோகங்களைப் பற்றியும் வாய் திறப்பதில்லை. அதன் காரணம் 2ஆவது 3ஆவது துரோகங்களின் பிற்பாடு தமிழரசுக் கட்சியின் தலைவர்களாக விளங்கிய சிலர் ஏதோ ஒரு விதத்தில் பங்காளிகளாக இருந்தமை காரணமாயுமிருக்கலாம்.

ஏனைய சகல ஆலோசனைகளையும் நிராகரித்து ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையில் உறுதியாக நின்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் டாக்டர் நாகநாதன் உட்பட்ட தமிழ்த் தலைவர்கள் எதிர்பாராதவிதமாக டி.எஸ்.சேனநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசியலலைமப்பு ஆலோசனைகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவு வழங்கினர். அது 90 வீதமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அந்த வாக்கெடுப்பு நடந்தபோது ஜீ.ஜீ. லண்டனில் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை பிரிட்டிஷ் அரச தரப்பிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார்.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஜீ.ஜீ. லண்டன் சென்றதும் திடீரென அவரின் சகாக்கள் மாறி வாக்களித்ததும் டி.எஸ்.சேனநாயக்கவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு இரகசிய உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இடம்பெற்றன என்ற சந்தேகத்தை வடக்கைச் சேர்ந்த கல்விமான்கள் அப்போது எழுப்பியிருந்தனர்.

டி.எஸ்.சேனநாயக்க முதலில் சுதந்திரத்தைப் பெறுவோமெனவும் அதன்பின்பு பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாமெனவும் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியே தமிழ் தலைவர்களின் ஆதரவைப் பெற்றார் எனவும் கூறப்பட்டது.

அதாவது டி.எஸ்.சேனநாயக்கவும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தலைவர்களும் இணைந்து வகுத்த இரகசியச் சதி மூலம் தமிழ் மக்களுக்கு துரோகம் மேற்கொள்ளப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

அடிப்படையில் கொழும்பு மைய அரசியலில் தங்கள் அந்தஸ்தை உயர்த்தி வைத்திருப்பது இலங்கையில் வாழும் சகல இனங்கள் மத்தியிலும் தமக்கென ஒரு நட்சத்திர விம்பத்தைக் கட்டிக்காப்பது கொழும்பின் மேற்கத்தைய நாகரீக நடத்தை ஆடம்பரக் கனவான் வாழ்க்கை என்றுமே மக்கள் மத்தியில் நாம் அவதார புருஷர்களாகக் காட்சியளிக்கும் வேட்கை என்பனவே எமது தலைமைகளைத் துரோகப் பாதைக்கு செல்லவைத்தன என்றே கூறப்படுகின்றது.

எமது மக்களிடமும் நிலவிய கனவான்களை உயரத்தில் வைத்து மதித்தல் கல்விமான்களைப் போற்றுதல் திறமைசாலிகளைத் தெய்வமாக மதித்தல் போன்ற நிலமானிய சமூகத்துக்குரிய நாயக வழிபாட்டுத்தன்மை எமது தமிழ் அரசியல்வாதிகளின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு மேடையமைத்துக் கொடுத்தன.

இவ்வாறாக சேர் பொன். அருணாசலத்தின் பின்பான கொழும்பு மைய தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக ஜீ.ஜீ. பொன்னம்பலமும் அவரது சகாக்களும் தமது நாயக விம்பத்தைக் காட்டித் தமிழ் மக்களை ஏமாற்றிய சுயநல அரசியலின் இன்னுமொரு அழகான வடிவமாகவே ஜீ.ஜீ. பொன்னம்பலத்தால் இனங்களுக்கிடையேயான ‘இளகுநிலை ஒத்துழைப்பு’ என்ற மாயமானாகும். இது வறிய வெகுசனத் தமிழருக்குப் பயனளிக்கும் எனக் கூறப்பட்டபோதும் அது அவர்களுக்கே பதவிகளையும் பலன்களையும் வழங்கியது என்பதே வரலாறு.

அதாவது இனங்களுக்கிடையேயான இளகுநிலை ஒத்துழைப்பு என்பது அடிப்படையில் சிங்கள தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கிடையேயான ஒத்துழைப்பாக அமைந்ததேயொழிய சிங்கள தமிழ் வெகுசனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பாக அமையவில்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுமில்லை.

எப்படியிருப்பினும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இங்கிலாந்தில் இருந்தவேளையில் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று டி.எ.ஸ்.சேனநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகள் 90 வீதமான வாக்குகளைப் பெற்று அரசாங்க சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கைக்கு முழுப்பொறுப்புள்ள அரசாங்கம் என்ற அந்தஸ்து 1946இல் வழங்கப்பட்டது.

1947இல் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்துவிட பிரிட்டன் தனது ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க முடிவு செய்தது. எனினும் இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 1947 ஆகஸ்ட் மாதம் பிரிட்டன் இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கியது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து போராடிய ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்கினர் தமக்கென ஒரு தனிநாட்டைக் கோரி சுதந்திரப் பாகிஸ்தானை பெற்றுக்கொண்டனர். ஆனால் இலங்கையில் தமிழ்த் தலைவர்களோ தனிநாட்டை மட்டுமல்ல சமஷ்டிக் கோரிக்கையைக் கூட நிராகரித்து ஐம்பதுக்கு ஐம்பதுக்கு மல்லுக்கட்டி அரசியலதிகாரம் சிங்களவரிடம் போக வழி வகுத்தனர்.

இந்த நிலையில் 1948இல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் 1947இல் குறிப்பிட்ட இளகுநிலை ஒத்துழைப்பின் அடிப்படையில் டி.எஸ்.சேனநாயக்க அரசுக்கு ஆதரவை வழங்கியதன் அடிப்படையில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்கு கைத்தொழில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று சட்டத்துறையிலும் விஞ்ஞானத்திலும் உயர் கல்வி பெற்று சிறந்த சிவில் குற்றவியல் வழக்கறிஞராக விளங்கிய சுந்தரலிங்கம் சிறந்த கல்விமானும் சிறந்த வழக்கறிஞரும் பேச்சாளருமான ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்ற மேதைகள் எட்டாம் வகுப்புக் கல்வி மட்டுமே பெற்ற டி.எஸ்.சேனநாயக்காவின் அரசியல் நரித்தனத்தின் முன் எப்படித் தோல்வியடைந்தனர் என்ற கேள்வி எழலாம்.

அவர்கள் தோல்வியடைந்தார்களா? அல்லது இரகசிய உடன்படிக்கை மூலம் தமிழ் மக்களின் சுயாதிபத்தியத்தை விற்று பதவிகளைப் பெற்று தங்கள் கனவான் அரசியலைப் பாதுகாத்துக் கொண்டார்களா என்பது பதில் காணப்படவேண்டிய முக்கிய கேள்வியாகும்.

இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது அரசியலதிகாரம் சிங்களவரிடம் கையளிக்கப்பட்டபோது சோல்பேரி அரசியலமைப்பில் செனற் சபை 29வது சரத்து 2/3 பெரும்பான்மையின்றி அரசியலமைப்பைத் திருத்தமுடியாது என்ற விதி தேசாதிபதிக்கு கூடிய அதிகாரம் சுதந்திரமான அரசசேவை நீதி ஆணைக்குழுக்கள் என்பன சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புக்காக இணைக்கப்பட்டவை எனக் கூறப்பட்டது. அதை எமது தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் சோல்பேரி அரசியலமைப்பு அமுலில் இருந்தபோதே மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதும் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்கு வந்தது என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

எனவேதான் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையில் பிடிவாதமாக நின்ற ஜீ.ஜீ. பொன்னம்பலம் அதைக் கைவிட்டு சோல்பேரி அரசியலமைப்பை ஏற்று அமைச்சரவைப் பதவியைப் பெற்றுக்கொண்டமை அவரின் மூன்றாவது துரோகமாகக் கருதப்படுகின்றது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE