Wednesday 24th of April 2024 11:19:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவின் உயிர்நாடியான குடியேற்றத்தில்  கொரோனாவால் ஏற்பட்டுள்ள பெரு வீழ்ச்சி!

கனடாவின் உயிர்நாடியான குடியேற்றத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பெரு வீழ்ச்சி!


கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக எல்லை மூடப்பட்டுள்ளதால் கனடாவில் பல்லாயிரக்கணக்கான குடியேற்றங்கள் தடைப்பட்டுள்ளன.

புதிய நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறவிருந்தவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு கனடா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது மக்கள்தொகையைத் தக்க வைத்துக் கொள்ளவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கனடா புலம்பெயர்ந்தோரை அதிகளவில் நம்பியுள்ளது. ஆனால் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 34,000 நிரந்தர குடியிருப்பாளர்களை மட்டுமே கனடா அனுமதித்தது.

இது 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 67 சதவீதம் குறைந்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விசா அலுவலகங்கள் மூடப்பட்டதால் கனடாவின் குடியேற்றம் அடுத்த சில ஆண்டுகளுக்கு குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஈடு செய்ய கனடாவுக்கு இப்போது ஒரு வழி உள்ளது.

தற்போது கனடாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் புகலிடம் கோருவோர் நிரந்தர வதிவிடக் கோரிக்கையை விரைவாகப் பரிசீலிப்பதே இந்த வழியாகக் கருதப்படுகிறது.

நாங்கள் அவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்கினால், அவர்களால் கனடா பயனடைய முடியும். அதேவேளை, அவா்களும் பயனடைய முடியும் என கனேடிய அகதிகளுக்கான பேரவையின் நிர்வாக இயக்குனர் ஜெனட் டென்ச் (Janet Dench) தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் புகலிடம் கோருபவர்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக அனுமதிப்பதே தற்போதைய நெருக்கடிகள் தீரும்வரை புலம்பெயர்ந்தோரின் பற்றாக்குறையைத் தணிக்கும் ஒரு வழியாக உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை மூலம் 2020 -ஆம் ஆண்டில் கனடாவுக்குள் 341,000 பேர் வருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதில் 30 சதவீதம் குறையும் என கனடாவின் ரோயல் வங்கியின் சமீபத்திய அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

கனடா வருவோர் தொகை குறைந்துவருவது நீண்ட கால பாதிப்புக்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதுதான் கவலையானது என ரோயல் வங்கியின் மூத்த பொருளாதார நிபுணரும் வங்கி அறிக்கையின் ஆசிரியருமான ஆண்ட்ரூ அகோப்சோவிச் (Andrew Agopsowicz) கூறினார்.

சர்வதேச மாணவர்களின் வருகையும் கனடாவில் இ்வ்வாண்டு குறைந்துள்ளது. 2019 இல் 642,000 பேர் கனடாவில் படித்து வந்தனர்.

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக கனடா அதிக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கிறது. கனேடிய பொருளாதாரத்திற்கு 22 பில்லியன் டொலர் பங்களிப்பை வெளிநாட்டு மாணவா்களின் வருகை வழங்குகிறது. அத்துடன் ஆண்டுக்கு 170,000 வேலைகளுக்கான மனித வளங்களையும் இதன்மூலம் பெற முடிந்தது.

அத்துடன் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கான முக்கிய ஆதாரமாக சா்வதேச மாணவா் வருகை இருந்தது. ஆனால் இந்தாண்டு அவற்றில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இரண்டாவது காலாண்டில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட புதிய ஆய்வு மாணவா்களுக்கான அனுமதிகளையே கனடா குடிவரவுத் துறை வழங்கியது. இந்தத் தொகை 2009-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 107,000 ஆக இருந்தது.

வாட்டர்லூ பல்கலைக்கழகம், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளில் வலுவான நற்பெயரைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,000 சர்வதேச மாணவர்களுக்கும், சுமார் 35,000 கனேடிய மாணவர்களுக்கும் இந்தப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்குகிறது.

ஆனால் இப்போது இங்குள்ள சுமார் 2,000 வெளிநாட்டு மாணவர்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் தங்கள் சொந்த நாட்டிலிருந்து இணையவழியில் தங்கள் படிப்புகளை தொடர்வதாக சர்வதேச நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் கிறிஸ்டின் மெக்வெப் கூறினார்.

இந்நிலையில் கனடாவில் உள்ள மற்றும் அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கும் வழிமுறைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு கனடா வரமுடியாதவர்கள் நிலைமை சீரானதும் விரைவாக வர ஊக்குவிக்கப்படலாம்.

இதேவேளை, வெளிநாட்டு மாணவா் விடயத்தில் குடிவரவுத் துறை புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஒட்டாவா தெரிவித்துள்ளது. புதிய திட்டம் மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து படிப்பதை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் கற்கையை முடித்ததும் அவா்கள் கனடாவில் பணியாற்றுவதற்கான அனுமதியைப் பெற முடியும்.

இதற்கிடையில் இந்த ஆண்டு வெளிநாடுகளைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளர்களை அதிகளவில் உள்ளீர்க்க கனடா மத்திய அரசு விசேட நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அதுவும் சாத்தியமாகவில்லை.

வெளிநாட்டுத் தொழிலாளா்களின் வருகை இவ்வாண்டு 50 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவசாயத்தை மட்டுமன்றி சுகாதார - பாதுகாப்பு, கட்டுமானம், போக்குவரத்து மற்றும் பிற துறைகளிலும் முக்கியமான பங்களிப்பைச் செலுத்துபவர்களாவர்.

நாங்கள் அவர்களை தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று அழைக்கிறோம், ஆனால் அவர்கள் செய்து வரும் பணி தற்காலிகமானது அல்லது தேவையற்றதல்ல என ரைர்சன் பல்கலைக்கழக குடிவரவு மையத்தின் இயக்குனர் உஷா ஜோர்ஜ் கூறினார்.

தொழில்த்துறையில் அவா்களின் பணிகள் அத்தியாவசியமானவை எனவும் அவா் கூறினார்.

இதேவேளை, சட்டவிரோதமாக எல்லை தாண்டி கனடாவுக்குள் வருவோரும் காலம் தாழ்த்தப்பட்டாலும் இறுதியில் பெரும்பாலும் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாறுகின்றனர். ஆனால் இவ்வாறான வருகையும் இவ்வாண்டு 3,100 ஆகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு புகலிடம் தேடி அல்லது அகதித் தஞ்சம் கோரி வந்த ஆயிரக்கணக்காணவா்களின் நிரந்திர வதிவிடக் கோரிக்கையை விரைவாகப் பரிசீலிப்பதன் மூலம் தொழிலாளர் தேவையை ஈடு செய்ய முடியும் எனவும் கருதப்படுகிறது.

அகதிகள் நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களை விரைவாக்குவதன் மூலம் கனடா பயனடையும். அவா்களது வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என கனேடிய அகதிகள் பேரவையின் நிர்வாக இயக்குனர் ஜெனட் டென்ச் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதாரத் துறையில் பணிபுரியும் சில புகலிடம் கோரிக்கையாளர்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற விண்ணப்பிக்கலாம் என்று ஒட்டாவா ஏற்கனவே அறிவித்துள்ளது.

கனடாவில் குடியேறியவர்கள் பெரும்பாலானோர் அங்குள்ள பூர்வீக மக்களை விட சிறந்த கல்வியாளர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அதிக தொழில்களைத் தொடங்குகிறார்கள். அவா்களின் பங்கும் கனடாவின் வளர்ச்சியில் அளப்பெரியது எனவும் ஜெனட் டென்ச் சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஆண்டு கொரோனாவுக்கு ஒரு பாதுகாப்பான தடுப்பூசி அல்லது பயனுள்ள சிகிச்சைகள் வரும் என நம்பப்படுகிறது. இவ்வாறு தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் எல்லைகளை மீண்டும் திறக்க முடியும்.

எனினும் அதற்கு முன்னர் உள்ள பற்றாக்குறையை ஈடு செய்ய முடிந்தவரை மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் புகலிடம் கோருவோரை நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அவர்களின் பின்னணி என்னவாக இருந்தாலும் கனடாவில் அவா்கள் அவா்கள் சிறந்த குடிமக்களாக உருவாகுவார்கள். அதுவே இதுவரையும் நடந்துள்ளது .

மூலம் - theglobeandmail - john ebbiton)


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE