;

Monday 26th of October 2020 07:23:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனேடியப் பல்கலைக்கழகங்களுக்கு  3.4 பில்லியன் டொலர் வரை வருவாய் இழப்பு!

கனேடியப் பல்கலைக்கழகங்களுக்கு 3.4 பில்லியன் டொலர் வரை வருவாய் இழப்பு!


கோவிட்-19 தொற்று நோயால் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கனேடிய பல்கலைக்கழகங்கள் புதிய கல்வியாண்டில் 3.4 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என கனடா புள்ளிவிவரங்கள் துறை கணித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நிதி இழப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை புள்ளிவிபரத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வருவாயில் கல்வி கட்டணம் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

2013-2014 ஆம் கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம் மொத்த நிதியில் 24.7 சதவீதமாகவும், 2018-2019 ஆம் கல்வியாண்டில் 29.4 சதவீதமாகவும் பங்களிப்புச் செய்தது.

பல்கலைக்கழகங்களுக்காக வருவாயில் 45.8 என்ற மிகப்பெரிய பகுதியை அரசாங்க மானியமாக வருகிறது.

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கான நிதி வருவாயில் அதிக பங்கு வெளிநாட்டு மாணவா்களிடம் இருந்தே கிடைக்கிறது. கனேடிய மாணவர்களை விட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவா்கள் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிக நிதியைச் செலுத்துகிறார்கள்.

2017-2018 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மட்டும் ஒட்டுமொத்தக் கல்விக் கட்டணத்தில் சுமார் 40 வீதத்தை செலுத்தினர்.

இந்நிலையில் வெளிநாட்டு மாணவர் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதால் 2021 கல்வியாண்டில் கனடியப் பல்கலைக்கழகங்கள் 377 மில்லியன் டொலர் முதல் 3.4 பில்லியன் டொலர் வரை வருவாய் இழப்பீட்டை எதிர்கொள்ளக்கூடும் எனவும் புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில் முன்னைய ஆண்டை விட வெளிநாட்டு மாணவா்களுக்கான அனுமதிகள் 58 சதவீதம் குறைந்துள்ளன. ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளில் 13 வீதம் செப்டம்பர் மாதத்துடன் செல்லுபடியற்றதாகியுள்ளன.

அதேவேளை, கனேடிய மாணவர் பதிவுகளும் இந்த ஆண்டு குறையக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பாடசாலைகளில் உயர்தரக் கல்வியை முடித்த 17 முதல் 24 வயதுடையவர்களில் 20 சதவீதம் பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிடவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றுநோய் பல்கலைக்கழக வரவு செலவுத் திட்டங்களில் அல்லது பதிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை மிக விரைவில் ஆதாரங்களுடன் தெரிவிப்பதாக கனடாவின் பல்கலைக்கழக வெளி விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறை பணிப்பாளர் வெண்டி தெர்ரியன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களும் தொற்றுநோய் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு செயற்படுகின்றன. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பை இணைய வழியில் முன்னெடுக்க பல்கலைக்கழகங்கள் உதவி வருகின்றன என அவர் கூறினார்.

இது வெளிநாட்டு மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்ள எங்களுக்கு உதவுகிறது என்று தெர்ரியன் குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE