;

Wednesday 28th of October 2020 07:32:24 PM GMT

LANGUAGE - TAMIL
.
உரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்! - நா.யோகேந்திரநாதன்!

உரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்! - நா.யோகேந்திரநாதன்!


தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டமை உட்படத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடந்த 28ஆம் நாளன்று தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்திய உண்ணாவிரதப் போராட்டம், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் அழைப்பை ஏற்று 28ஆம் திகதி வடக்குக் கிழக்கெங்கும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஹர்த்தால் என்பன மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அந்நடவடிக்கைகளையடுத்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசனை நடத்தியதுடன் தொடர்ந்து ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத் திட்டத்தை வகுத்து அதன் அடிப்படையில் முன்னகர்வது எனத் தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குப் பின்பு தமிழ் மக்கள் ஒன்று திரண்டு உணர்வுபூர்வமாகப் பங்களித்து ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தியது தியாகி திலீபனின் உண்ணாநோன்புப் போராட்டத்தின்போதுதான். அன்று அவ்வாறு முழு மக்களையும் எழுச்சி பெற வைத்த திலீபனின் மகத்தான இலட்சிய உயிர் அர்ப்பணிப்பு 33 வருடங்களின் பின்பும் மக்களை அதே உணர்வுடன் எழுச்சி கொள்ள வைத்த அதே வேளையில் தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைய வைத்துள்ளது.

என்றாலும் தமிழ்க் கட்சிகளின் அந்த ஒற்றுமை நிலைபெற்று நின்று எமது நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை முன்கொண்டு செல்லுமா? அல்லது எம்மிடையேயுள்ள சில மக்கள் விரோத, தேசிய விரோத, புலி விரோத சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வலுவிழந்து போய்விடுமா என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. திலீபனின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ் மக்கள் தாங்களாக உணர்வு பூர்வமாகப் பங்களிப்பு வழங்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிட்டமையும் அது தொடர்பாகத் தமிழரசுக் கட்சி அவர்மீது நடவடிக்கை எடுக்காததும் குறைந்த பட்சம் கண்டனத்தைக் கூட உத்தியோகபூர்வமாக வெளியிடாமையும் இந்தகைய சந்தேகத்தை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லை. தமிழ்த் தலைமைகளின் அரசியல் காலம் காலமாகவே ஐக்கியப்படாமை என்ற விடயத்தில் உறுதியாக நின்றுள்ளமையே வரலாறாகும்.

1931இல் யாழ்ப்பாண இளைஞர் பேரவை தேர்தலைப் பகிஷ்கரித்தபோது ஜி.ஜி. பொன்னம்பலம் ஒத்துழைக்க மறுத்து மன்னாரில் போட்டியிட்டமையும் அகில இலங்கை வம்சாவழிக் குடிமக்களின் அமைப்பு சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தபோது கொழும்பு மைய கனவான்அரசியல்வாதிகள் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன் வைத்தும், தமிழ் காங்கிரஸ் சம அந்தஸ்து கோரும் போது தமிழரசுக் கட்சி சமஷ்டி கோரியும், ஒரு தரப்பினர் தமிழ் பல்கலைக்கழகம் கோரினால் மற்றத் தரப்பு இந்துப்பல்கலைக்கழகம் கோரியும் என்று எதிரெதிரான கோரிக்கைகளை முன் வைத்துப் பேரினவாதிகள் தமிழினத்தைத் தாழ்த்தும் வாய்ப்பை வழங்கியவர்கள் எமது தலைவர்கள் என்பதை மறந்துவிடமுடியாது.

ஆனால் 1977இல் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தபோது 90 வீதமான மக்கள் தமது ஆதரவை வழங்கித் தமது ஐக்கியத்துக்கான ஆவலை வெளியிட்டனர். அதேபோன்று 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரும்பாலான தமிழ் அணிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். 2005, 2010, 2015 தேர்தல்களிலும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது ஐக்கியத்துக்கான தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தினர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி விடயத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடயத்திலும் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை அலட்சியம் செய்து பதவி மோகத்துக்காகவும் தான் தோன்றித்தனமான போக்குகளாலும் ஐக்கியம் பலி கொண்டதை இலகுவில் மன்னித்து விடமுடியாது.

எனவே அன்று உருவான இந்த ஐக்கியம் நிலைபெற்று எமது உரிமைப் போராட்டத்தில் நல்ல விளைபலன்களைத் தரவேண்டுமானால் கடந்த காலத்தில் உருவான ஐக்கியம் குலைந்தமைக்கான காரணங்கள் தொடர்பாக திறந்த மனதுடன் விமர்சனம் செய்து அவை களையப்படவேண்டும்.

அது சாத்தியமா என்பது ஒரு முக்கிய கேள்வியாகும். ஏனெனில் எமது தலைவர்கள் எமது உரிமைப் போராட்டத்தின் நலன்களுக்குத் தமது குறுகிய குழுநிலை அபிலாஷைகளைக் கீழ்ப்படுத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த ஜனநாயகக் குரலாக தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்க வைக்கப்பட்ட பின்பு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூடடமைப்புக்கே என்பதில் இன்னொரு கருத்து இருக்கமுடியாது. அதை அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தால் இன்றைய பின்னடைவு ஏற்பட்டிருந்திருக்காது.

முதன்முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்த பெருமை கஜேந்திரகுமார் அணியினருக்கு உரியதாகும். அவர்கள் தங்கள் அணிக்கு இரண்டு ஆசனங்களைக் கோரியதில் நியாயம் இல்லையென்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில் 2005ஆம் ஆண்டு தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பத்மினி சிதம்பரநாதனும், கஜேந்திரனுமே பெற்றிருந்தனர். அது மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிவிடாமல் உள்ளிருந்து போராடி கூட்டமைப்புக்குள் தம்மைப் பலப்படுத்தியிருக்கவேண்டும். த.தே.கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே கஜேந்திரகுமார் அணியினர் வெளியேறும் வகையில் திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டன என்பதை அவர்கள் புரிந்து கொண்டு வெளியேறுவதைத் தவிர்த்திருக்கவேண்டும். எப்படியிருப்பினும் த.தே.கூட்டமைப்பைப் பலவீனப்படுத்திய குற்றத்தில் இரு தரப்பினருக்கும் பங்குண்டு.

2010ல் சுமந்திரன் த.தே.கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்குமதி செய்ப்பட்டார். அவர் தனது கையாட்களை வைத்துக்கொண்டு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் எதிராகவும் என்னென்ன தொல்லை கொடுக்கமுடியுமோ அத்தனையையும் அவர் மேற்கொண்டார். த.தே.கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது என்ற மாயையில் சம்பந்தர், மாவை சேனாதிராஜா ஆகியோரும் சுமந்திரனுக்கு ஒத்தூதினர். தங்களுக்கெதிரான சதியையும் அதன் உள்நோக்கத்தையும் புரிந்து கொண்டு விக்னேஸ்வரன் அவர்களும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் வெளியேறாது கூட்டமைப்புக்குள் தங்களைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். எனவே அவர்களை வெளியேற்றச் சதி செய்தவர்கள் எப்படி கூட்டமைப்பைப் பலவீனப்டுத்திய குற்றவாளிகளோ அவ்வாறே வெளியேறியோரும் அத்தகைய குற்றவாளிகளேயாகும்.

இப்படியான நிலையில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், கஜேந்திரகுமார். சி.வி. விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தாங்களைத்தாங்களே மனந்திறந்து சுயவிமர்சனம் செய்து தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்வார்களா?

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திலீபனின் நினைவஞ்லி நிகழ்வுகளில் தமிழ் மக்கள் தாமாகவே உணர்வு பெற்று பங்குகொள்ளவில்லையெனவும், தமிழ் கட்சிகள் ஐக்கியப்படும்போது மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும் தெரிவித்த கருத்துக்கள் அவர் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.

அவர் ஏற்கனவே சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரை வெளியேற்றுவதில் எவ்வாறு திட்டமிட்டு காய்களை நகர்த்தினாரோ, உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது அதைத் தடுக்கும் முகமாக டக்ளஸ் தேவானந்தா குழுவினருடன் இணைந்து ஆட்சியமைக்க அவசரஅவசரமாக எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டாரோ,ஐக்கிய தேசியக் கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் நலன்களை உதாசீனப்படுத்தி எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையாகக் கருதுமளவுக்கு எவ்வாறு அதை வழி நடத்தினாரோ அதே வழிமுறையிலிருந்து அவர் இன்னும் வெளிவரவில்லை என்பதும் இனியும் வெளிவரப் போவதில்லை என்பதையும் அவரது அண்மைய கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

அது மட்டுமன்றி திலீபனின் நினைவஞ்சலி பற்றியும் தமிழ் கட்சிகளின் ஒற்;றுமை பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிகயோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த பட்சம் சம்பந்தர் பாணியில் ‘அது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து’ என்று கூடத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியும் சுமந்திரனின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்புவது தவிர்க்கமுடியாததாகும். இவை தமிழ்க் கட்சிகளிடம் ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையிலான பாதையில் முன் செல்வதற்கான சாதகமான வாய்ப்புக்களைச் சிதைக்கக் கூடியவை என்றே தோன்றுகின்றது. இப்படியான கருத்துக்கள் மீண்டும் கஜேந்திரகுமார், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோருடன் முரண்பாடுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகத் துக்கு இடமில்லை.

எனவே கடந்த காலங்களின் மக்களின் ஏகத் தலைமையாகப் பலம் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைந்து பலவீனமடைய என்ன காரணங்கள் அமைகின்றன அக்காரணங்களின் மூலங்களாக யார் திட்டமிட்டுச் செயற்படுகின்றார்கள் என்பன பற்றி மனந்திறந்த, தமிழ் மக்களின் நலன் சார்ந்த விமர்சனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இதன் மூலம் ஒற்றுமையின் சிதைவுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவை அகற்றப்படுவதுடன் அவற்றின் காரணகர்த்தாவாக உள்ள நபர்கள் களையெடுக்கப்படவேண்டும்.

அப்படியான முறையில் ஒரு வலுவான ஒற்றுமை கட்டியெழுப்பப்படாவிட்டால் ஒற்றுமைக்காக மாவை. சேனாதிராஜா அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நேருக்கு நேர் கடை போட்ட விடயமாகவே முடிவடையும் என்பது திண்ணம்.

எனவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம் என்பது சாத்தியமா என்பது சந்தேகத்திற்கிடமாகவே இதுவரை தென்படுகின்றது என்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

13.10.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: க.வி.விக்னேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், மாவை சோ.சேனாதிராஜா, இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE