Monday 18th of March 2024 09:35:05 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்)


"சுதந்திர இலங்கையில் வலுவிழந்த சோல்பேரி அரசியலமைப்பு"

“தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் மிகவும் குறுகிய நோக்கத்துடனும் முட்டாள்தனமாகவும் நடந்து கொண்டுள்ளார்கள். 1945இல் அரசியல் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவராக நான் பணியாற்றியபோது இந்த இரு சமூகங்கள் குறித்தும் நிறையவே ஆராய்ந்தேன். அப்போது இலங்கையின் பொருளாதாரத்துக்கு தமிழ் மக்கள் ஆற்றிய ஆற்றிக்கொண்டிருக்கும் பங்களிப்பைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். அதுபோல சிங்களவர்களை விடத் தமிழர்கள் மிகவும் கல்வியும் திறமையும் உடையவர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்”.

“மலையகத் தொழிலாளர்களின் நிலைமை கவலையைத் தருகிறது. இந்தளவு பெருந்தொகையினரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை இல்லாமற் செய்யப்பட்டமை வருந்தத்தக்கது. தமது பிரதேசத்தில் நிரம்பியிருக்கும் மக்கள் கூட்டத்தினருக்கு வாக்குரிமை இருப்பது கண்டிப் பிரதேச மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மக்களுக்காக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை ஒதுக்கியிருந்தால் இன்னும் நியாயமான தீர்வாக அமைந்திருக்க முடியும்”.

“நான் முன்வைத்த அரசியல் யாப்பில் சிறுபான்மையிருக்குப் போதுமான பாதுகாப்பு இருப்பதாகவே கருதினேன். ஆனால் அரசியல் யாப்பின் 29ஆவது சரத்து எதிர்பார்த்தளவு பலனளிக்கவில்லையென்பது உண்மையே”.

சோல்பேரி ஆணைக்குழுவின் தலைவராக விளங்கி சோல்பேரி அரசியலமைப்பை சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பாக அமுலுக்குக் கொண்டு வந்த சோல்பேரிப் பிரபு 30.04.1964 அன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.சுந்தரலிங்கம் அவர்களுக்குத் தன்னால் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியாமைக்கான தனது கவலையைத் தெரிவித்து எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இவை.

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்குதான் தனது அரசியல் யாப்பின் மூலம் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று உண்மையை ஏறக்குறைய 20 வருடங்களின் பின்பு மனவருத்தத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த போதே அதே ஆண்டிலேயே சோல்பேரி அரசியலமைப்பினால் இலங்கையின் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியாது என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது.

இலங்கைக்கு 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் நாள் சுதந்திரம் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இதே மலைய மக்களை இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாதவர்களாக்கும் 18ம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து 1949ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தின் மூலம் 6 இலட்சம் மலையக மக்கள் வாக்குரிமையை இழந்தனர்.

சோல்பேரி அரசியலமைப்பு அமுலுக்கு வந்ததுமே மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மிகவேகமாகவே நிறைவேற்றப்பட்டும் விட்டன. அதாவது சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கென வரையப்பட்ட 29ஆவது சரத்தின் இரண்டாம் பிரிவு கவனருக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரம் அரச நீதி சேவை ஆணைக்குழுக்கள் 2/3 பெரும்பான்மையாலேயே அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரமுடியும் என்ற விதி போன்ற அனைத்தும் நடைமுறையிலிருந்த போதே 6 இலட்சம் மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். அதன்மூலம் மலையக மக்களின் சார்பில் 7 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் நிலையையும் இல்லாமற் செய்யப்பட்டது. அது ஒட்டு மொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையிலும் கணிசமான வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

அநகாரிக தர்மபாலவின் மது ஒழிப்பு இயக்கத்தின் மூலம் பொது அரசியலில் உள்நுழைந்து அரசியல்வாதியாக உருவான அன்றைய ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான டி.எஸ்.சேனநாயக்க மலையக மக்களை நாடற்றவர்களாக மாற்றியதன் மூலம் ஒரே கல்லில் மூன்று காய்களை விழுத்தியிருந்தார்.

முதலாவது தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவாக வாழும் பிரதேசங்களின் சிங்களவர் சிறுபான்மையினராக இருப்பதால் தமிழர்கள் தேர்தல் மூலம் அப்பகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பை இல்லாமல் செய்வது. தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற் சங்க ரீதியாகப் பலம் பெற்றிருந்த இடதுசாரிகளின் ஆதரவைப் பலவீனப்படுத்துவது. மூன்றாவது பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழ் பிரதிநிதிகளின் தொகையைக் குறைப்பது என்பனவாகும்.

டி.எஸ்.சேனநாயக்க எவ்வாறு சோல்பேரி ஆணைக்குழுவில் தன்னால் முன் வைக்கப்பட்ட அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காக தந்திரமான முறையில் காய்களை நகர்த்தியும் வாக்குறுதிகளை வழங்கியும் தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டாரோ அவ்வாறே இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் பல புத்திசாலித்தனமான முன் நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் வெற்றி பெற்றார்.

இலங்கை சுதந்திரம் பெறும் வரையில் டி.எஸ். சேனநாயக்கவாலோ அல்லது வேறு எந்த சிங்களத் தலைவர்களாலோ மலையக மக்களின் பிரஜாவுரிமை பற்றியோ வாக்குரிமை பற்றியோ எவ்வித கருத்துக்களும் முன் வைக்கப்படவுமில்லை அது பற்றி விவாதங்கள் எதுவும் நடத்தப்படவுமில்லை.

ஆனால் டி.எஸ்.சேனநாயக்கவால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் வலுவான ஒரு அடித்தளத்தை அமைப்பதற்குமான முன் நடவடிக்கைகள் அமைதியாகவும் ஆழமாகவும் முன்னெடுக்கப்பட்டன.

முதலாவதாகச் சோல்பேரி அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியபோது பிரஜாவுரிமை பற்றி முடிவெக்கும்போது ‘தற்போதுள்ள வாக்குரிமை தேர்தல் சம்பந்தமான சட்டங்கள் சில திருத்தங்களுடனேயே திருப்தியளிக்கப்பட்ட நகல் திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே சோல்பேரி ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய இச்சட்டங்களைச் சீரமைக்கும் பணி இலங்கையில் புதிய பாராளுமன்றத்திற்கு உரியதாகும்” எனத் தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தில் மலையக மக்களின் பிரஜாவுரிமை தொடர்பாக நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாவிட்டாலும் பெரும்பான்மை சிங்களப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு நாடாளுமன்றத்திடம் பிரஜாவுரிமை பற்றித் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதன் மூலம் பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற சோல்பேரி அரசியல் யாப்பு மூலம் ஒரு மறைமுகமான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இத்தீர்மானம் மலையக மக்களை இலக்கு வைத்தே முன்வைக்கப்பட்டது என்பது வெளியே தெரிந்து கொள்ள முடியாதவாறு வெகு லாவகமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது.

இரண்டாவதாக டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் 14.02.1947 சோல்பேரி அரசியலமைப்பின் அடிப்படையில் முதலாவது பாராளுமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டபோது தமிழ் முஸ்லிம் மலையகப் பிரதிநிதிகளின் ஆதரவை அரசாங்கத்துக்குத் திரட்டும் வகையில் திட்டமிட்ட நகர்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக சுயேட்சை உறுப்பினரான வவுனியா சுந்தரலிங்கத்துக்கு வர்த்தக அமைச்சுப் பதவியும் 1948இல் ஜீ.ஜீ. பொன்னம்பலத்துக்கு கைத்தொழில் அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டன. அது மட்டுமன்றி முஸ்லிம் மலையகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் அமைச்சுத் துணை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.

இலங்கை இந்திய காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் பெரி.சுந்தரம் உட்பட்ட பல முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகள் செனட் சபை உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அதாவது அந்நாட்களில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களை அரசாங்கத்துடன் இணைத்ததன் மூலம் டி.எஸ்.சேனநாயக்க தன் நோக்கங்களை நிறைவேற்றத் தன் பின்னால் ஒரு பலமான அணியை உருவாக்கிக் கொண்டார். மேலும் வடக்குக் கிழக்கில் இவரால் முன்வைக்கப்பட்ட தொழிற்சாலைகள் விவசாயத் திட்டங்கள் போன்றவற்றுக்கான ஆலோசனைகளும் பிரித்தானிய ஆட்சியாளர்களிடையே இவர் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு தலைவர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியது.

அவ்வாறு டி.எஸ்.சேனநாயக்க தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்த பின்பே 04.08.1948 அன்று இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு கூடிய இரண்டாவது கூட்டத் தொடரில் இந்திய பிரஜாவுரிமைச் சட்டம் டி.எஸ்.சேனநாயக்கவால் முன்மொழியப்பட்டது. 1948 டிசெம்பர் வரை இப்பிரச்சினை தொடர்பாகப் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.

டி.எஸ்.சேனநாயக்க டட்லி சேனநாயக்க எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஜே.ஆர். ஜயவர்த்தன உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் இந்திய மக்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தினர். அதேவேளையில் வவுனியா உறுப்பினரான செ.சுந்தரலிங்கம் அரசில் ஒரு உறுப்பினராக இருந்தமையால் அச் சட்டத்திற்குத் தனது ஆதரவை வழங்கினார்.

ஆனால் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மேற்படி விவாதங்களின்போது பங்கு கொள்ளாமல் மௌனம் காத்து வந்தார். ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் எம்.வி.நாகநாதன் ஆகியோர் இச்சட்டத்தை எதிர்த்துக் கடும் விவாதங்களை மேற்கொண்டனர். அதேவேளையில் மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் ஆற்றிய உரைகள் காரசாரமானவையாக மட்டுமின்றிக் காத்திரமாகவும் அமைந்திருந்தன.

இம்மசோதாவை எதிர்த்து என்.எம்.பெரேரா ஆற்றிய உரை சிங்களத் தலைவர்களை மட்டுமின்றி இம்மசோதாவுக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தலைவர்களையும் திக்குமுக்காட வைத்துவிட்டது.

“இந்தியர்களை நீங்கள் ஏன் உங்கள் நாட்டவர்களாக நடத்தக் கூடாது? இந்தியர் இங்கு வாழ்வதற்கும் தொழில் புரிவதற்கும் சாவதற்கும் தயாராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கப்படுவது ஆகக் குறைந்த பட்சத் தீர்வாகும். அவர்கள் மனிதர்களைப் போல நடத்தப்பட வேண்டுமேயொழிய வெறுமனேயே வேண்டத்தகாதவர்களாக நடத்தப்படக்கூடாது”.

டாக்டர் என்.எம்.பெரேரா இக்கருத்துக்களை முன்வைத்தபோது ‘வெள்ளி நாக்கு’ எனத் தனது பேச்சாற்றலால் புகழ்பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவோ எவரையும் தன் எதிர்பாராத வாதங்களில் முறியடிக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோ அவற்றை முறியடிக்கும் விதமாகக் கருத்துக்களை முன் வைக்காது மௌனம் காத்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் முஸ்லிம் தலைவர்களும் சில இந்தியப் பிரதிநிதிகள் உட்பட ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான சில தமிழ்ப் பிரதிநிதிகளும் இம்மசோதாவுக்கு ஆதரவளித்தனர்.

குறுகிய இம்மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது முஸ்லிம் பிரதிநிதிகளான டி.பி.ஜாயா எஸ்.என்.இஸ்மாயில்ரூபவ் ஏ.சின்னலெப்பை ஆகியோரும் தமிழ் பிரதிநிதிகளான ஜீ.ஜீ.பொன்னம்பலம் கே.கனகரட்னம்ரூபவ் வி.நல்லையா. எஸ்.யு.எதிர்மன்னசிங்கம்ரூபவ் ரி.இராமலிங்கம் ஏ.எல்.நம்பிஐயா சி.சுந்தரலிங்கம் ஆகியோர் தமது ஆதரவை வழங்கினர்.

ஆனால் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பி.குமாரசிறி கே.ராஜலிங்கம் பி.ராமானுஜம் எஸ்.சிவபாலன் எஸ்.சுப்பையா எஸ்.தொண்டமான் பி.வன்னியசிங்கம் சி.வி.வேலுப்பிள்ளை போன்ற தமிழர்கள் இம்மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். இறுதியில் 1948 டிசெம்பர் 10இல் இம்மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் பெற்று 30 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சி.சுந்தரலிங்கம் இம்மசோதாவுக்கு ஆதரவளித்தபோதும் இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1949ல் கொண்டுவரப்பட்ட இந்திய பாகிஸ்தானியர் சட்டம் மூலம் மலையக மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் முற்றாகவே நாடற்றவர்களாக்கப்பட்டனர்.

இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்ட முதலாவது இன ஒடுக்குமுறை நடவடிக்கை மூலம் ஒரே சமூகத்தைச் சேர்ந்த 6 இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். ஆனால் இத்தகைய ஒரு மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறைக்கு சிறுபான்மையினராகும் தமிழர்களில் சில தலைவர்களும் முஸ்லிம்களின் தலைவர்களும் ஆதரவு வழங்கியமை ஒரு பெரும் வரலாற்றுக் கறை என்பதை மறுத்துவிடமுடியாது.

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் மகாவம்சம் மூலம் மூட்டிவிடப்பட்ட இனக்குரோதத் தீ இனமேலாதிக்க சிந்தனையாக வளர்ச்சி பெற்று இதற்கு அநகாரிய தர்மபாலவால் நிறுவன வடிவம் கொடுக்கப்பட்டது. அதே இனக்குரோத இனமேலாதிக்க இனஒடுக்குமுறைப் போக்குக்கு ஜனநாயக வடிவம் கொடுத்து அமுல்படுத்தியவர் டி.எஸ். சேனநாயக்க. அவரது முதல் தாக்குதலில் பலி கொள்ளப்பட்டவர்கள் மலைய மக்களே.

ஆனால் அந்நடவடிக்கை மூலம் தமிழர்களின் அரசியல் பலம் பாதியாகக் குறைக்கப்பட்டும் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் பலம் பலவீனப்படுத்தப்பட்டும் ஆளும் இனவாத மேல்தட்டு அரசியல் சக்திகளின் கை மேலோங்கியது என்பதே வரலாறாகும்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE