Thursday 25th of April 2024 01:43:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
டீவில்லியர்ஸ் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களுர் அபார வெற்றி!

டீவில்லியர்ஸ் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களுர் அபார வெற்றி!


ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் லீக் ஆட்டத்தில் ஏபிடீ வில்லியர்சின் ருத்ரதாண்டவத்தின் மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி.

ஐபிஎல் கிரிக்கெடின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.

இதில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் - ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தலைவர் ஸ்டீவ் சுமித் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி, ரொபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ரொபின் உத்தப்பா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராஜஸ்தான் 5.4 ஓவரில் 50 ரன்களை எடுத்த நிலையில் தொடக்க வீரரான ஸ்டோக்ஸ் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

22 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 41 ஓட்டங்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த சஞ்சுவ் சாம்சன் 9 ஓட்டங்களில் வெளியேறினார்.

7.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி சற்று தடுமாறியது. அடுத்துவந்த அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

25 பந்துகளை சந்தித்த பட்லர் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 36 பந்துகளை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் 1 சிக்சர் 6 பவுண்டரிகள் உள்பட 57 ஓட்டங்கள் குவித்து மோரிஸ் பந்தில் வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 177 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியின் ராகுல் தெவாட்டியா 11 பந்துகளை சந்தித்து 19 ஓட்டங்களுடனும் ஆர்ச்சர் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பெங்களூர் தரப்பில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சவாலான வெற்றி இலக்கான 178 ஐ நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களுர் அணி ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிஞ்ச் 2 ஆறு ஓட்டங்களை விளாசி 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து அணித்தலைவர் விராட் கோலி மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான படிக்கலுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

படிக்கல் நிதானமான ஆட்டத்தை தொடர விராட் கோலி ராஜஸ்தான் பந்து வீச்சை அவ்வப்போது விரட்டி அடித்தார். ஆட்டத்தின் 12 வது ஓவரின் இறுதி பந்தில் 37 பந்துகளை எதிர்கொண்டு 35 ஓட்டங்களுடன் படிக்கலும் 13வது ஓவரின் முதலாவது பந்தில் 32 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு 6 ஓட்டங்கள், ஒரு 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களையும் பெற்று அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேனர்.

அதிரடிக்கு பெயர்போன டீவில்லியர்ஸ் குர்கீரட் சிங்குடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை தம்வசப்படுத்தியதாக ராஜஸ்தான் அணி ஆறுதலடைவதற்கு கூட அவகாசம் கொடுக்காது டீவில்லியர்ஸ் ருத்திரதாண்டவம் ஆடினார்.

இதன் மூலம் 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களுர் அணி.

டீவில்லியர்ஸ் 22 பந்துகளை மட்டும் எதிர் கொண்டு ஆறு 6 ஓட்டங்களையும் ஒரு 4 ஓட்டத்தையும் விளாசி 55 ஓட்டங்களை பெற்றும், குர்சீரட் சிங் 17 பந்துகளை எதிர்கொண்டு 19 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்து வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

ருத்ரதாண்டவத்தின் மூலம் பெங்களுரின் வெற்றிக்கு காரணமாக இருந்த டீவில்லியர்ஸ் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE