Thursday 28th of March 2024 02:46:13 PM GMT

LANGUAGE - TAMIL
.
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில் தமிழ் முஸ்லிம் ஐக்கியம்! - நா.யோகேந்திரநாதன்!

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில் தமிழ் முஸ்லிம் ஐக்கியம்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் அரசியலில் பௌத்த சிங்கள பேரினவாதம் மிகவும் வலிமை பெற்ற சக்தியாக ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் வழி நடத்துமளவுக்கு ஆதிக்கம் பெற்றுள்ளது. பேரினவாத சக்திகளின் தாளத்துக்கு ஆடமறுக்கும் அரசியல்வாதிகள் புறமொதுக்கப்படும் நிலையே நிலவி வருகின்றது.

பொதுவாகவே தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் மொழியுரிமை, நிலவுரிமை, பொருளாதாரம், மதம் என்பனவற்றின் மீது பல்வேறு முனைகளில் வெவ்வேறு வடிவங்களில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அரசாங்கம் மட்டுமன்றி அரச இயந்திரம் கூட பௌத்த சிங்கள மயப்படுத்தப்பட்டு அதற்கேற்ற வகையிலேயே அதன் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படியான ஒரு மோசமான நிலையில் இலங்கையின் சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தங்களைத் தாங்கள் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தமது இருப்பைத் தக்க வைக்க முடியுமென்ற இக்கட்டான கட்டம் வளர்ச்சியடைந்து வருகின்றது.

இதிலிருந்து சிறுபான்மை மக்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ஒரு பொதுவான கொள்கையின் கீழ் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு உறுதியான ஐக்கியம் கட்டியமைக்கப்படவேண்டும். சிறுபான்மையினரான இந்த மூன்று தரப்பினரும் தமிழ் மொழியையே தாய் மொழியாகக் கொண்டிருந்த போதிலும் கலாசாரம், வாழ்வியல் முறைகள், தொழில் உறவுகள், மதம் என்பன வெவ்வேறானவை. ஆனால் அவை சிநேகபூர்வமான முரண்பாடுகளேயன்றி பகை முரண்பாடுகளல்ல. ஒரு தரப்பினர் பின்பற்றும் மதத்துக்கோ அல்லது மதங்களுக்கோ கலாசாரத்திற்கோ, பொருளாதாரத்திற்கோ மற்றைய தரப்பினர் இடையூறாகவோ அல்லது பாதிக்கும் வகையிலோ இல்லை.

எனவே ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் இன, மத அடிப்படைகளின் தனித்துவத்துக்கும் பங்கம் வராத வகையில் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஐக்கியப்பட முடியும்; ஐக்கியப்படவும் வேண்டும். அதேநேரத்தில் அப்படியான ஒரு ஐக்கியம் உருவாவதைத் தவிர்க்க பேரினவாத சக்திகளும் பேரினவாத மயப்பட்டுள்ள அரசியல்வாதிகளும் அரசு இயந்திரமும் தங்களாலான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

06.10.2020 அன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின் முஸ்லிம்களை தனித்துவ அடையாளத்துடன் அரசியலில் அடையாளப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை மேலெழுந்தது. முஸ்லிம்களை இவ்வாறு தமிழர்களிடமிருந்து பிரித்து தனித்தரப்பாக அடையாளப்படுத்த எமது புலனாய்வுப் பிரிவுக்கும் பெரும் தேவை இருந்தது. அது ஒரு மறைமுகத் தந்திரோபாய வியூகம். அவ்வாறு முஸ்லிம்கள் தனித்தரப்பாக அடையாளப்படுத்தப்பட்டதனூடாக யுத்தத்தின்போது உளவுத் தகவல்களைச் சுலபமாகப் பெறக்கூடியதாயிருந்தது எனத் தெரிவித்திருந்தார்.

இது ஏற்கனவே எல்லோருமே அறிந்த விடயமாக இருந்த திலும் போர் இடம்பெற்ற காலத்தில் பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்ஹ வாயிலிருந்து வெளிவரும் போது அது கூடுதல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.

அதேவேளையில் வடக்கிலிருந்து முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றியமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும்கூட அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே அரச தரப்பால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதாவது வடக்கை விட்டு முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்ற வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத தேவை ஏற்கனவே அரச தரப்பால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அமரர் அஷ்ரப் அவர்களின் கோரிக்கையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் ஊர்காவற்படை ஆரம்பிக்கப்பட்டது. உலக முஸ்லிம்களின் பரம வைரியான இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் முஸ்லிம் ஊர்காவற்படைக்கு பயிற்சிகளை வழங்கியது என்பது ஒரு முக்கியமான விடயமாகும்.

முஸ்லிம் ஊர்காவற் படையினர் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து கிராமங்களைச் சுற்றி வளைத்து மக்கள் ஓரிடத்தில் கூட்டி, ஒவ்வொரு இடங்களிலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, கொக்கட்டிச்சோலை, வீரமுனை, உடும்பன் குளம் எனப் பல இடங்களிலும் இப்படியான படுகொலைகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் தமது உறவுகள் படுகொலை செய்யப்படும் நிலையில் கொதிப்படைந்த தமிழ் மக்கள் வடக்கிலுள்ள முஸ்லிம்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு பெரும் இரத்தக்களரியைத் தவிர்க்கும் முகமாகப் புலிகள் முஸ்லிம்களை வடக்கை விட்டு வெளியேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் முஸ்லிம்களை ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்றவே அவர்கள் வடக்கை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்ற உண்மை மூடிமறைக்கப்பட்டு அந்நடவடிக்கை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோத்தை வளர்க்கும் ஒரு ஆயுதமாக ஒரு சிலரால் பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து அரச தரப்பினரின் நோக்கத்தை நிறைவேற்ற வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையை மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்து வந்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த நாட்களில் கிழக்கில், ஹிஸ்புல்லாஹ், ஒமாபா, ஜிஹாத் போன்ற முஸ்லிம் வன்முறைக் கும்பல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான கொலைகள் உட்பட வன்முறைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முஸ்லிம்கள் தனித்தரப்பாக அடையாளப்படுத்தப்பட்டு, அத்தரப்பு தமிழர்களுக்கு எதிரான ஒரு அமைப்பாக வெறியூட்டப்பட்டு இரு இனங்களுக்குமிடையே விரிசலை ஏற்படுத்துவதில் அரச தரப்பும், அரச புலனாய்வுப் பிரிவினரும் திட்டமிட்ட வகையில் மிக இலாவகமாகச் செயற்பட்டனர். பதவிக்காகவும் ஏனைய சில சலுகைகளுக்காகவும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த சில முஸ்லிம் தலைவர்களும் அதற்குத் துணை நின்றனர். இப்போது எவ்வாறு திட்டமிட்டவாறு அரச தரப்பும், அரச புலனாய்வுப் பிரிவும் முஸ்லிம்களைத் தமிழர்களுக்கு விரோதமாகப் பிரித்து தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்தினர் என்பதை ரணில் விக்ரமசிங்ஹ அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் தோற்கடிக்கப்படும்வரை முஸ்லிம் தரப்பினரைத் தம்முடன் அரவணைத்துத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்திய பேரினவாத சக்திகள் 2010இன் பின்பு முஸ்லிம்களை நோக்கித் தமது அநீதிகளை ஏவி விட்டன.

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், புனித குரான் நூலை எடுத்து வீதியில் எறிதல், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல், எரியூட்டல், பேருவளை தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பேரழிவுகள், ஏப்ரல் 21 குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி மேல் மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் என முஸ்லிம்கள் நிம்மதியாக வாழவோ, வர்த்தக நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடவோ, மதக் கடமைகளை நிறைவேற்றவோ முடியாதபடி பல நெருக்கடிகள் தொடர்கின்றன.

அதுமட்டுமின்றி இன்றும்கூட தம்புள்ள பள்ளிவாசலை அது அமைந்துள்ள பகுதியிலிருந்து அகற்றும் திட்டங்கள், புல்மோட்டையில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான 500 ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானதெனக் கூறப்பட்டு அங்கு மூன்று விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்களவர்களைக் குடியேற்றல், மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்களின் பாரம்பரியக் காணிகளை வனவளத்திணைக்களம் உரிமை கோருதல், அக்கரைப்பற்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான மாணிக்கமலைப் பகுதியை தீபவகாபி யாத்திரிகர்களுக்குத் தங்குமிடம் அமைக்க ஆக்கிரமித்தல் எனப் பல்வேறு முனைகளிலும் முஸ்லிம்களுக்கெதிரான அநீதிகள் தொடர்கின்றன.

இனவாதப் பௌத்த பிக்குகளால் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுதல், தமிழர்களின் வழிபாட்டிடங்களைத் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்து வழிபாடுகளுக்குத் தடை செய்தல், கிழக்கில் புத்த பிக்குகள் தலைமையில் விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரவைகள் என்பன சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படல், தமிழ் மக்களின் விவசாய நிலங்கள், மீன்பிடி மையங்கள் என்பன வன வளத் திணைக்களத்தால் அபகரிக்கப்படல் எனத் தமிழ் மக்கள் மீதான அநீதிகளும் தொடர்கின்றன.

இதேபோன்று சம்பள உயர்வு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற சகல விடயங்களிலும் மலையக மக்கள் ஓரங்கட்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.

எனவே இன்று சிங்கள பௌத்த பேரினவாதிகளால் வழிநடத்தப்படும் அரசும் அரச இயந்திரமும் சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நாட்டின் இரண்டாம்தரப் பிரஜைகளாக்கி அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் நாட்டின் சிறுபான்மையினராகிய மூன்று இனங்களும் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைவது தவிர்க்கமுடியாததாகிறது.

இவ்விடயத்தில் நாட்டின் பிரதான சிறுபான்மை இனம் என்ற வகையில் அப்பணியை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ் மக்களின் கட்சிகளுக்கு உண்டு. அதற்கு தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் ஐக்கியத்தை உருவாக்க ஒரு பலமான அணியாக உருவாவது முக்கிய தேவையாகும். அத்தகைய ஒரு முயற்சி தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவால் முன்னெடுக்கப்பட்டபோது க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணி, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கின. ஒரு ஐக்கியத்துக்கான முயற்சிகள் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் சம்பந்தன், சுமந்திரன் குழுவினர் மாவை சேனாதிராஜாவின் கரங்களைக் கட்டிப்போட்டு விட்டதாகச் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஐக்கியத்துக்கான முயற்சிகள் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த தேர்தல் காலத்தின்போது முஸ்லிம் காங்கிரஸுக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே ஒரு மேலோட்டமான ஐக்கியம் உருவானபோதும் அது திட்டவட்டமான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரை உருவாகவில்லை. அப்படி உருவாவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதத்தைக் கொள்கையாகக் கொண்ட ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் ஆகியோர் பேரினவாதிகளுடன் இணைந்து தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் என்றுமே தமிழ் தரப்புடன் இணைந்து செயற்படப் போவதில்லை.

திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து மனோகணேசன் முற்போக்கு முன்னணியை உருவாக்கி மலையக மக்களைப் பலமான சக்தியாகத் திரட்டமுயன்றாலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதற்கு எதிரான பாதையிலேயே செயற்பட்டு வருகின்றது.

தமிழ்க் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ மலையக் கட்சிகளோ தங்களுக்குள்ளேயே கூட ஒரு ஐக்கியத்தை உருவாக்க முடியாத நிலையே நிலவி வருகின்றது. இப்படியான நிலைமையில், சிறுபான்மையினரான மூன்று தரப்பினரும் ஒன்று சேர்ந்து ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு பலமான சக்தியாக ஒன்றுபடுவார்களென எதிர்பாக்கமுடியுமா?

ஆனால் அப்படியான ஒரு ஐக்கியம் கட்டியெழுப்பப்படாவிட்டால் இந்த மூன்று இனங்களும் அடிமைகளாக்கப்பட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்தால் பலி கொள்ளப்படும் நிலை தவிர்க்கப்படமுடியாததாகிவிடும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

20.10.2020


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE