Friday 19th of April 2024 01:20:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணனை நீக்குவதற்கு தெரிவத்தாட்சி அலுவலர் இணக்கம்!

மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணனை நீக்குவதற்கு தெரிவத்தாட்சி அலுவலர் இணக்கம்!


யாழ்.மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குவதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சி உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய மாநகரசபை உறுப்புரிமையை மற்றொருவருக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவத்தாட்சி அலுவருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு தெரிவத்தாட்சி அலுவலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அது குறித்த வர்த்தமான அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியினால் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெரிவத்தாட்சி அலுவலர், யாழ்.மாநகரசபை, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்.

யாழ்.மாநகரசபை உறுப்புரிமை நீக்கம் தொடர்பானது.

2018 நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாநகர சபையில் கிடைக்கப்பெற்ற விகிதாசார ஆசனங்களில் ஒன்றினை எமது கட்சியில் போட்டியிட்ட திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கு வழங்கியிருந்தோம்.

கடந்த 10 ஆண்டுகளாக எமது கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் அரசியல் இயக்கத்துடனேயே பயணித்துவருகின்றது. அந்த வகையில் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிபார்சில், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் விகிதாசார பட்டியலூடாக, யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அந்த வகையில் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸூடன் செய்து கொண்ட புரிந்துணர்வின் பிரகாரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு நீக்கப்பட்டவரை எமது (அகில இலங்கை காங்கிரஸ்) உறுப்புரிமையிலிருந்தும் நீக்கியுள்ளோம். அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் விகிதாசார பட்டியலில் பெயர் வகித்த திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பிரகாரம்,

1977 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க திருத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10 A (1) (a) யின் பிரகாரம் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணனின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியினை நீக்கம் செய்து, அவரது இடத்திற்கு வேறொரு உறுப்பினரை எமது சிபார்சுக்கு அமைய நியமிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம், பொதுச்செயலாளர்,


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE