Friday 19th of April 2024 02:05:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
பரபரப்புக்கு மத்தியில் '20' விவாதம் நாளை ஆரம்பம்! இரட்டைக் குடியுரிமை சரத்தை நீக்க கோட்டா மறுப்பு?

பரபரப்புக்கு மத்தியில் '20' விவாதம் நாளை ஆரம்பம்! இரட்டைக் குடியுரிமை சரத்தை நீக்க கோட்டா மறுப்பு?


பெரும் பரபரப்புக்கு மத்தியில் அரமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான முதலாம் நாள் விவாதம் நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரவு 7.30 மணிவரை விவாதம் தொடரும்.

இரண்டாம் நாள் விவாதம் நாளைமறுதினம் இரவு 7.30 மணிக்கு முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 20ஆவது திருத்தச் சட்ட வரைவு வாக்கெடுப்புக்கு விடப்படும், சிலவேளை '20' நிறைவேறுவதற்கு இரவு 10 மணிகூட தாண்டலாம்.

அதேவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிகோலும் சரத்துக்கள் உள்ளிட்ட மொத்தமாக 7 சரத்துக்களை நீக்கிவிட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கைத் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, முஸ்லிம் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன '20’ ஐ எதிர்ப்பதற்குத் தீர்மானித்து எதிராக வாக்களிக்கவுள்ளன.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் எம்.பிக்களை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டபாய மறுப்பு

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான சரத்தை நீக்க மறுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைக் குடியுரிமை சம்பந்தமான சரத்தைத் தவிர, அவசர சட்ட வரைவை நிறைவேற்றுவது, கணக்காய்வு சட்ட வரைவு மற்றும் அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுக்கும் சரத்துக்களை திருத்த அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அப்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தானும் ஒரு காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தவர் என்பதால், 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள அந்தச் சரத்தை நீக்குவதற்கு இணங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அவசர இடர் நிலைமைகளில் மாத்திரம் அவசர சட்ட வரைவுகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்ற வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE