Tuesday 19th of March 2024 08:59:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 26 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 26 (வரலாற்றுத் தொடர்)


"மலையக மக்களை நாடற்றவர்களாக்கிய மேட்டுக்குடி அரசியல்"

இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் குடியுரிமை பெறுவதற்கு எவ்வித தாமதமுமின்றி ஒழுங்கு செய்யப்படவேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதால் இம் மசோதாவின் சரத்துக்களை ஆராய்ச்சி செய்வதில் நான் நீண்டகாலம் செலவு செய்ய விரும்பவில்லை. மேலும் விவாதித்துக் கொண்டிருப்பதால் அதிக பயன் கிடைக்காது. நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள். நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இலங்கையில் வாழும் இந்தியர்களின் ஆவலைத் தீர்ப்பதற்கு ஏதாவதொரு நடடிவடிக்கை எடுக்கவேண்டும். எனவே இலங்கையில் வாழும் இந்தியர்கள் பிரஜாவுரிமை பெறுவதற்கு சட்டமியற்ற நடவடிக்கை எடுக்குமாறு மிகுந்த விநயத்துடன் வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும் இலங்கைப் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவுக்குமிடையே மலைய மக்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பாக மூன்று மாத காலமாக இடம்பெற்ற கடிதத் தொடர்புகளின் பின்பு இந்தியப் பிரதமர் இவ்விடயம் தொடர்பாக 1948ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி டி.எஸ்.சேனநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்திய முக்கிய விடயமாகும்.

இதன்மூலம் நேரு அவர்கள் மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான டி.எஸ்.சேனநாயக்கவின் நிலைப்பாட்டில் அதிருப்தியடைந்திருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அவர் தான் விநயமாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டாலும் அதில் மலையக மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்ற விடயம் தொடர்பாக ஒரு அழுத்தம் இருப்பதைக் கவனிக்கமுடியும்.

இந்தியப் பிரதமர் செப்டெம்பர் மாதம் 8ஆம் நாள் இக்கடிதத்தை இலங்கைப் பிரதமருக்கு அனுப்பிய போதும் அது பொருட்படுத்தப்படாமலே டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 20 அதிகப்படியான வாக்குகளால் சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மலையக மக்களின் குடியுரிமையை இல்லாமற் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகிய இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே மலையக மக்கள் தொடர்பான விடயங்களில் அக்கறை செலுத்தி வந்தனர். இது தொடர்பாக அவர்களுடன் மலையகத் தலைவர்கள் மட்டுமின்றி வடபகுதித் தலைவர்களும் தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை இந்தியக் காங்கிரஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரான பெரி.சுந்தரம் இந்தியா சென்று மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடனும் அப்போது இந்தியாவின் கவர்னராக இருந்த வேல்ஸ் பிரபுவுடனும் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தினார். பின்பு 1947இல் மலையக மக்களை இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கை சிங்கள மகாசபை போன்ற அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டபோது பெரி.சுந்தரம் அவர்கள் இந்தியா சென்று பிர்லா மாளிகையில் காந்தி, நேரு ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தினார்.

அதேபோன்று மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த 18ம் இலக்கச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கி அதை நிறைவேற்றத் துணைபோன ஜீ.ஜீ.பொன்னம்பலமும் 18ம் இலக்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரும்படி அழுத்தம் கொடுக்கும்படி கோரி ஜவஹர்லால் நேருவுடன் தொடர்பு கொண்டார்.

இலங்கை இந்திய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ஜவஹர்லால் நேரு வந்து கலந்து கொள்ளுமளவுக்கு பெரி.சுந்தரம் இந்திய தலைவர்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழ் காங்கிரஸ் தலைவர்களும் இலங்கை இந்திய காங்கிரஸ் தலைவரும் மலையக மக்களின் குடியுரிமையைப் பாதுகாக்க இந்தியத் தலைவர்களின் உதவியை நாடியிருந்த காரணத்தால் அவ்விடயம் தொடர்பாக நேரு அவர்கள் கூடுதலான கரிசனையைக் காட்டினார்.

ஆனால் இந்தியக் குடியுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது ஜீ.ஜீ.பொன்னம்பலம் எவ்வித கருத்தையும் தெரிவிக்காதது மட்டுமின்றி அது நிறைவேறும் வகையில் அதற்காதரவாக வாக்களித்தார். சுந்தரலிங்கம் அதற்கு ஆதரவளித்தபோதும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அதேபோன்றே இலங்கை இந்தியக் காங்கிரஸ் தலைவர் பெரி.சுந்தரம் அவர்களும் தங்கள் ஆதரவையோ எதிர்ப்பையோ தெரிவிக்கவில்லை.

இங்கு கவனத்திலெடுக்கப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் சுந்தரலிங்கம் வர்த்தக அமைச்சராயிருந்தார். 1948ன் பிற்பகுதியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கைத்தொழில் அமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியால் நியமிக்கப்பட்டார். அதேவேளையில் மலையக மக்களின் தலைவரான பெரி.சுந்தரம் 1950ல் நுவரெலியாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

அதுமட்டுமன்றி அவர் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் இலங்கைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1951ல் இலங்கைப் பாராளுமன்றத்தின் செனற் சபையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் 1931ல் இடம்பெற்ற தேர்தலில் பிரபல தொழிற் சங்கவாதியான நடேசய்யருடன் ஹட்டனில் போட்டியிட்டு வெற்றிபெற்று கைத்தொழில் வர்த்தக அமைச்சின் நிறைவேற்றுக் குழுவின் தலைவராகச் செயற்பட்டார்.

இவ்வாறு தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் இலங்கை இந்திய காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த பதவி வகித்தது மட்டுமின்றி பிரித்தானிய ஆட்சியாளர்களாலும் இந்தியத் தலைவர்களாலும் மதிக்கப்படும் தலைவர்களாகவும் விளங்கினர். இவர்கள் ஆரம்பத்தில் மலையக மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தபோதிலும் அம்மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அம்மக்களைக் கைவிட்டு விட்டனர். இவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்ற கேள்வி எழும்போது பதவிகளுக்குப் பலியாகி விட்டனர் என எண்ணத் தோன்றும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படியான ஒரு தோற்றப்பாடு தென்பட்டாலும் அதைவிட அடிப்படையான சில காரணங்களும் உண்டு.

இவர்கள் இருவருமே எப்போதும் கொழும்பு மைய அரசியலில் தங்கள் செல்வாக்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டே தங்கள் ஒவ்வொரு நகர்வுகளையும் மேற்கொண்டனர். அதற்கு அவர்கள் தத்தமது இனங்களின் சக்தி மிக்க தலைவர்களாக நிலைபெற தங்கள் இன மக்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து தமக்கென ஒரு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால் கொழும்பு மைய அரசியலில் தங்கள் மேல்நிலையைத் தக்க வைக்க வேண்டிய தேவை எழும்போது அவர்கள் தங்கள் மக்களைக் கைவிடத் தயங்குவதில்லை.

அவர்கள் அப்படித் துரோகம் செய்தாலும் ஏற்கனவே தங்களைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட நாயகத் தன்மை காரணமாகவும் பேச்சாற்றல், அதிகாரம், குடும்ப பாரம்பரியம் என்பன காரணமாகவும் மக்கள் தம்மைக் கைவிடாது பார்த்துக்கொண்டனர். ஆனால் அது அவர்களின் வீழ்ச்சிக்கு அடிக்கப்பட்ட முதல் மணி என்பதை அப்போது அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியைக் சேர்ந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி. நாகநாதன், கு.வன்னியசிங்கம் ஆகியோரும் இலங்கை இந்திய காங்கிரஸைச் சேர்ந்த சௌ.தொண்டமான், இராஜலிங்கம், இராமானுஜம் போன்ற தலைவர்களும் அம்மசோதாவை எதிர்த்து வன்மையாகக் குரல் கொடுத்ததுடன் எதிர்த்தும் வாக்களித்தனர்.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ் மக்கள் மத்தியிலும் மலையக மக்கள் மத்தியிலும் புதிய தலைமைகள் தோன்றுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டன.

ஜீ.ஜீ.பொன்னம்பலமும் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த வேறு சில தலைவர்களும் மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் 18ம் இலக்க சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததை அடுத்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி.நாகநாதன், கு.வன்னியசிங்கம் ஆகியோர் தமிழ்க் காங்கிரஸிலிருந்து வெளியேறினர். அத்துடன் சமஷ்டிக் கோரிக்கையை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டது.

அதேவேளையில் பெரி.சுந்தரத்தின் நிலைப்பாட்டையடுத்து சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் எழுச்சிமிக்க தலைவராக உருவாகினார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் செல்வாக்கு மிக்க தலைமையாகியது.

இந்த மேட்டுக்குடித் தலைவர்கள் 18ம் இலக்கப் பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய போது அவர்களுக்கு டி.எஸ்.சேனநாயக்கவால் ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டது. அதற்கு ஏற்கனவே இப்பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் நேரு அக்கறை காட்டியது ஒரு காரணமாகும். அதாவது 18ம் இலக்கச் சட்டத்தின் திருத்தமாக இலங்கை இந்தியப் பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதாகும்.

அச்சட்டம் 1949ல் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதிலுள்ள கடும் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் காரணமாக வாக்குரிமை இழந்த 6 இலட்சம் மலையக மக்களின் 50,000 பேருக்கு மட்டுமே மீண்டும் குடியுரிமை கிடைத்தது.

எப்படியிருந்த போதிலும் சிங்கள மேல்த்தட்டு அரசியல்வாதிகளின் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு தமிழ் மேல்த்தட்டு அரசியல்வாதிகளும் துணைபோனார்கள். ஏனெனில் இரு தரப்பினரை மனிதர்களாகக் கருதாமல் வெறும் உழைக்கும் இயந்திரங்களாகக் கருதுவதில் இரு தரப்பினரும் ஒரே சிந்தனைப் போக்கையே கொண்டிருந்தனர்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான மலையக மக்களை நாடற்றவர்களாக்குவதில் தமிழ்க் காங்கிரஸ் அரசியல்வாதிகளும் இலங்கை இந்தியக் காங்கிரஸ் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்கி நம் தமிழ் அரசியலில் அழிக்க முடியாத கறையை பதிவு செய்து விட்டனர் என்பது தான் உண்மை.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE