Tuesday 1st of December 2020 03:28:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்தியா மீண்டும் அக்கறை காட்டத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1980ம் ஆண்டு காலப்பகுதி தொட்டே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான கரிசனையை இந்தியா காட்டி வந்தாலும் கூட அவை பேச்சுகள், அறிக்கைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று விடுவதுண்டு.

இதுவரை ஆக்கபூர்வமான எவ்வித பலாபலன்களும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக இலவுகாத்த கிளிகளின் நிலையிலேயே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பரிதாப நிலைமையை எட்டியுள்ளன. இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினைகளில் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் எமது தமிழ்த் தலைமைகள் இந்தியா பற்றிய நம்பிக்கைகளை ஊட்டி வருவதில் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்குவது என்ற அளவுக்குள் மட்டுப்படுத்திக் கொண்டாலும் சில சமயங்களில் அதற்கு அப்பால் சென்று சில நடவடிக்கைகளை மேற்கொள்வதுமுண்டு.

ஆனால் அவை இதுவரை இந்தியாவின் பிராந்திய நலன் சார்ந்ததாக அமைந்திருந்தனவேயொழிய அவற்றின் காரணமாகத் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிட்டவில்லை. அப்படியிருந்தபோதிலும் அண்மைய நாட்களில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகக் கூடுதல் அக்கறை காட்டுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இலங்கைப் பிரதமருடன் மேற்கொண்ட காணொலி உரையாடலின்போது இலங்கையின் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தியதாக இந்தியத் தரப்புச் செய்திகள் தெரிவித்திருந்தன. அது மட்டுமன்றி, இலங்கைக்கான இந்தியத் தூதரகம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்திய உயர்மட்டத் தலைவர்களுடனும் இந்திய கொள்கை வகுப்பாளர்களுடனும் பேச்சுக்களை நடத்துமுகமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்படியான நாடகங்களை ஏற்கனவே இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அரங்கேற்றியிருந்த போதிலும் இம்முறை நடைமுறைச் சாத்தியமான நகர்வுகள் மேற்கொள்ளப்படும் போலவே ஒரு தோற்றப்பாடு தெரிகின்றது. அதற்கான சர்வதேச, பிராந்திய மட்டத்திலான தேவை இந்தியாவுக்கு எழுந்துள்ளது.

இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என இலங்கையின் ஆட்சியாளர்களால் கூறப்பட்டு வந்த போதிலும் கூட இலங்கைக்கும் சீனாவுக்குமிடையான உறவு மிகவும் வலிமையானது. சீனாவின் பொருளாதாரப் பட்டுப் பாதைத் திட்டத்தின் ஒரு தளமாக இலங்கையைப் பாவிக்கும் வகையில் அதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டு விட்டன. அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம், கொழும்பு கிழக்கு கொள்கலன் இறங்குதுறையின் ஒரு பகுதி என்பன சீனாவின் தளங்களாகிவிட்டன.

எனினும் இந்தியா ஒரு புறமும், அமெரிக்கா மறுபுறமுமாக இலங்கை ழுமையாகச் சீனா பக்கம் விழுந்து விடாமல் தடுக்குமுகமாக ஒப்பந்தங்கள், உதவிகள் என இலங்கை மீது பல வலைகளை விரித்து வருகின்றன. ஆனால் இலங்கையோ தான் ஒரு நடுநிலைமை நாடு எனக் கூறிக் கொண்டு மிகத் தந்திரமான முறையில் இந்திய, அமெரிக்க நோக்கங்களுக்குள் மாட்டுப்படாமல் தப்பி வருகின்றது.

இந்த நிலையில்தான் நரேந்திரமோதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே ஒரு காணொலி உரையாடல் இடம்பெற்றது. அதில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயுள்ள வரலாற்றுப் பாரம்பரியமான உறவு பற்றியும், அவை பேணப்படுவது பற்றியும் பேசப்பட்டதுடன் இலங்கைக்கான நிதியுதவி வழங்குவது பற்றியும் இணக்கம் காணப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையேயான கலாசார உறவை மேம்படுத்தும் வகையில் பௌத்த மத வளர்ச்சிக்குப் பெருந்தொகையான நிதியும் வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டது. அத்துடன் இந்தியா 13வது திருத்தச் சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமெனவும் இலங்கையைக் கேட்டுக்கொண்டது.

இச்சம்பவம் இடம்பெற்றுச் சில நாட்களில் சீன அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தது. அக்குழுவுக்கும் இலங்கை அரசாங்க தரப்பினருக்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்களின்போது மேலும் பல உதவிகளைச் சீனா இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டதுடன் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையேயான அரசியல், பொருளாதார, கலாசார, பாதுகாப்பு உறவுகளின் நெருக்கம் பற்றியும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அது மட்டுமின்றி இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கை சீன உறவுகளின் அந்நியோன்னியம் பற்றியும் பல காத்திரமான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இச்சம்பவங்கள் இந்தியாவுக்கு நிச்சயமாகச் சினத்தை மூட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி இலங்கை தனது எதிர்பார்ப்பின் எல்லையைக் கடந்து விடக்கூடும் என்ற அச்சமும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளமையைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இப்படியான ஒரு புறச்சூழலில்தான் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பாகப் பேச்சுக்களை நடத்த இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது இலங்கை தனது கையை விட்டு முழுமையாக நழுவிப் போய்விடாமல் தடுக்க இந்தியா இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஆயுதமாகக் கையிலெடுக்கப் போகிறது என்பதன் அறிகுறியாகவே தென்படுகின்றது. அதாவது இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஆயுதமாகக்கொண்டு இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவரும் இரண்டாவது அலையாகவே இதைக் கருதவேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து இலங்கை அரசைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இந்திய அரசின் முயற்சியின் முதலாவது அலை 1987ல் அடித்து தமிழ் மக்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற அடிப்படையில் சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்கி அந்நிய முதலீடுகளுக்குக் கதவைத் திறந்து விட்டார். அதன் காரணமாக அமெரிக்கா சார்ந்த பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டன. அதேவேளையில் திருமலைத் துறைமுகத்துக்கு அமெரிக்கப் போர்க்கப்பல்களும் வந்து போக ஆரம்பித்தன.

பிராந்திய வல்லரசாகத் தன்னை உருவாக்கும் விதத்தில் பொருளாதார, இராணுவ முனைகளில் வளர்ந்து வந்த இந்தியா தனது எல்லையில் ஒரு அமெரிக்க சார்பு நாடு இருப்பதை விரும்பாத நிலையில் அது இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டது. பல்வேறு தமிழ் ஆயுதக்குழுக்களுக்கும் நிதி, ஆயுத, போர்ப் பயிற்சி என்பவற்றை வழங்கி இலங்கை அரசுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது.

அதுமட்டுமின்றி 1986ல் ஒப்பரேஷன் லிபரேசன் மூலம் இலங்கைப் படைகள் வடமராட்சியை ஆக்கிரமித்தபோது இந்திய விமானங்கள் அத்துமீறி இலங்கை வான்பரப்பில் புகுந்து உணவுப் பொதிகளைப் போட்டன. இது இலங்கைக்கு விடுக்கப்பட்ட இராணுவ எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது.

அத்தகைய ஒரு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அரசு இந்தியாவுடனான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதையடுத்து இங்கு இறங்கிய இந்திய அமைதிப்படை புலிவேட்டை என்ற பேரில் தமிழ் மக்கள் மீதே போரைக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்களின் பிரச்சினையை ஆயுதமாகக் கொண்டு இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டு வரும் இந்திய முயற்சியின் முதலாவது அலை தமிழ் மக்களுக்குப் பேரழிவையே ஏற்படுத்தியது.

தற்சமயம் அதே முயற்சியின் இரண்டாவது அலை ஆரம்பமாகியுள்ளதென்றே கருதுமளவுக்குப் புறச்சூழல் மெல்ல மெல்லக் குவிந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அதேவேளையில் எமது தமிழ்த் தலைமைகளும் இத்தகைய இரண்டாவது அலை மூலம் இந்தியா எமக்கு விடிவைத் தூக்கிக் கையில் தரப்போகிறது என எமது மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர்.

இங்கு இந்தியாவின் நோக்கம் அதன் பிராந்திய நலன் மட்டுமே என்பதையும் எமது பிரச்சினை அதற்கான ஒரு ஆயுதம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே நாம் கண்மூடித்தனமாக இந்தியாவை நம்பி அதன் பின்னால் இழுபடாமல் எமது தமிழ்க் கட்சிகளிடையே ஒரு உறுதியான ஐக்கியத்தைக் கட்டி வளர்த்து இலட்சிய உறுதி தளராத ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

அப்படியான ஒரு உறுதியான அடித்தளத்தில் நின்று உருவாகும் சூழலை யாருக்கும் விலை போகாமலும் தந்திரோபாயங்களைக் கையாண்டும் எமது நகர்வுகளை முன்னெடுப்பதே ஒரே வழியாகும்.

ஆனால் எமது பிரச்சினைகளுக்கு இந்திய அரசின் இரண்டாவது அலை தீர்வை வழங்குமென எதிர்பார்த்து அதன் பின்னால் இழுபடுவோமாக இருந்தால் முதலாவது அலையின்போது எதிர்கொண்ட பேரழிவுகளுக்கே மீண்டும் முகம் கொடுக்கவேண்டிவரும் என்பதை எமது தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

27.10.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE