Thursday 28th of March 2024 07:20:29 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியத் தூதர் - சம்பந்தன் கொழும்பில் திடீர் சந்திப்பு! - தமிழர் தரப்பின் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு!

இந்தியத் தூதர் - சம்பந்தன் கொழும்பில் திடீர் சந்திப்பு! - தமிழர் தரப்பின் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு!


இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்தியத் தூதுவரின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமான இந்தியன் ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கை - இந்திய இரு நாட்டு உறவுகள், சமகால அரசியல் நிலைவரங்கள், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்படப் பல தரப்பட்ட விடயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சீண்டிப் பார்க்கும் வகையில் இலங்கை அரசுடன் சீனா நேரடியாக இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றது. இதற்குப் பதிலடி வழங்கும் நடவடிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் நேரடியாகக் களமிறங்கியுள்ளன.

இந்தப் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்க இந்திய இராஜதந்திர தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் காணொளி ஊடாகப் பேச்சு நடத்துவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டியிருந்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அலுவலகம் ஊடாக இந்தியத் இந்தியத் தரப்பினர் பேச்சுக்கான காலத்தை விரைவில் ஒழுங்கு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று மாலை இந்தியன் ஹவுஸுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைத் திடீரென அழைத்த இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, அவருடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் தகவல் வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்தவை வருமாறு: -

"மிகவும் முக்கிய சந்திப்பு. திருப்திகரமான சந்திப்பு. இதன்போது இரு நாட்டு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசினோம். அரசியல் தீர்வு முயற்சிகள், இந்தியாவின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை அடுத்து ஏற்பட்டுள்ள விடயங்கள், புதிய அரசமைப்பு உருவாக்கம், இந்தியப் பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் போன்ற பல விவகாரங்கள் குறித்து பேசினோம். தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் என்னிடம் கேட்க வேண்டியவற்றை இந்தியத் தூதுவர் கேட்டறிந்தார். தமிழர் தரப்பில் கூற வேண்டிய விடயங்கள் அனைத்தையும் அவரிடம் நான் தெளிவுபடுத்திக் கூறினேன். தொடர்ந்தும் பேசுவோம்" - என்றார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களின் முதலீடுகளை முன்னெடுப்பது குறித்து இந்தியா ஆர்வம் காட்டுகின்றது எனவும், வடக்கு, கிழக்கின் அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அது ஆயத்தமாக இருக்கின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார் எனவும் அறியமுடிந்தது.

இலங்கை - இந்தியப் பொருளாதார வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கை அரசுடன் பல உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில், இந்திய முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடுகள் செய்யவும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது பேசப்பட்டது எனத் தெரியவந்தது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன், வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தயாராக இருக்கின்றது எனவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார் எனவும் அறியமுடிந்தது.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE