Friday 19th of April 2024 04:03:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் முழுமையாக  முடக்கப்படுகிறது பிரான்ஸ்!

மீண்டும் முழுமையாக முடக்கப்படுகிறது பிரான்ஸ்!


பிரான்ஸில் மீண்டும் நாடு தளுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்தப் பொது முடக்கம் பெரும்பாலும் டிசம்பர் -01 வரை அமுலில் இருக்கும் என உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார்.

எனினும் கடந்த மார்ச் அறிவிக்கப்பட்டதைப் போன்று இந்தப் பொது முடக்கம் கடுமையானதாக அமுல் செய்யப்படவில்லை. அவசர, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பெறக்கூடிய வகையில் புதிய தேசிய அளவிலான முடக்கம் எளிதாக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனா தொற்று நோயாளர் தொகை கட்டுப்பாடுடின்றி அதிகரித்து வருவதுடன், மரணங்களும் உயர்ந்துவரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸின் இரண்டாவது அலை முன்னரை விட ஆபத்தானதாக இருக்கக்கூடும் என பொது முடக்கத்தை அறிவித்து இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்தார்.

கோவிட் -19 இன் விரைவான எழுச்சியால் நாங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுளோம் என தொலைக்காட்சி உரையில் மக்ரோன் அறிவித்தார். அனைத்து பிரெஞ்சு பிராந்தியங்களும் இப்போது உச்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் அவா் கூறினார்.

வெள்ளிக்கிழமை முதல் பொதுமுடக்கம் அமுலுக்கு வந்தாலும் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பகல் பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும்.

அத்துடன், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது, மருத்துவ உதவியைப் பெறுவது மற்றும் தினசரி ஒரு மணி நேர உடற்பயிற்சி தவிர ஏனைய நேரங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை வளாகங்கள் மற்றும் மருந்தகங்கள் போன்றன திறக்கப்படலாம். எனினும் கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் மூடப்படும்.

வீட்டிலிருந்து வேலையைச் செய்ய இயலாதவர்கள் என நிறுவனங்களால் கருதப்படுவோர் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மக்ரோன் கூறினார்.

கடந்த வசந்த காலத்தைப் போலவே மருத்துவத் தேவை, பாதிக்கப்பட்ட உறவினருக்கு உதவுதல், அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு மற்றும் நடைப் பயிற்சி என்பனவற்றுக்காக வெளியே செல்லலாம்.

எனினும் வெளியே செல்வதற்கான நியாயபூா்வமாக காரணங்களை உறுதிப்படுத்த வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் எழுத்துப்பூர்வ அறிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக, பிரான்ஸில் தினசரி பல்லாயிரக்கணக்கான புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது நாடு தழுவிய ரீதியில் ஒவ்வொரு வாரமும் 100,000 பேருக்கு 380- என்ற வீதத்தில் புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை வரையான 24 மணி நேரத்தில் 523 கொரோனா மரணங்கள் பதிவாயின. இது ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த தினசரி இறப்பு எண்ணிக்கையாகும். இத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா மரணங்கள் 35,541 ஆக உயர்ந்துள்ளன.

பிரிட்டன் மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா மரணங்கள் பிரான்ஸில் பதிவாகியுள்ளன.

தற்போது தினசரி தொற்று நோயாளர் தொகை சராசரியான 40,000 என்ற அளவில் பதிவாகிவரும் நிலையில் இந்த எண்ணிக்கை தினசரி 5,000 என்ற அளவுக்குக் குறைந்தால் சமூக முடக்கல் நடவடிக்கைகள் படிப்படியாக எளிதாக்கப்படும் என ஜனாதிபதி மக்ரோன் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE