Thursday 28th of March 2024 09:15:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 27 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 27 (வரலாற்றுத் தொடர்)


"மேலாதிக்க அரசியலின் திட்டமிட்ட குடியுரிமைப் பறிப்பு"

ஒரு சிங்களவரைத் தமிழரால் பிரதிநிதித்துவப்படுத்தமுடியாது. அதேபோல் ஒரு தமிழரைச் சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கைத் தமிழரைப் போல் இந்தியத் தமிழர் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் வாழவில்லை. கண்டிப்பிரதேசத்தில் தோட்டங்களில் குழுக்களாக வாழ்கின்றனர். ஒரு தொகுதியில் இந்தியத் தமிழர்கள் அதிகமாக இருந்தால் அது இந்தியத் தமிழரால் பிரதிநிதித்துவப் படுத்தபடும். இதனால் சிங்கள மக்கள் தங்கள் வாக்குரிமையின் பலனை இழந்துவிடுவார்கள். இந்தியத் தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்குமிடங்களில்கூட அத் தொகுதியில் யார் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் அவர்களுக்கு வாக்குப்பலம் உண்டு. 1947ல் அவர்கள் ஒன்றிணைந்து கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தார்கள். அதனால் 13:14 தொகுதிகளில் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற முடிந்தது.

இது இலங்கையின் முதலாவது அரசியலமைப்பான சோல்பேரி அரசியலமைப்பைத் தயாரித்தவரான ஐவன் ஜெனிங்ஸ் அவர்கள் தனது அலரி மாளிகைக்கான பயணம் என்ற நூலில் டி.எஸ்.சேனநாயக்கவின் கூற்றாக வெளியிட்ட கருத்தாகும்.

இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கவிடமும் அவரது மேட்டுக்குடிச் சிங்களத் தலைவர்களிடமும் மலையக மக்களின் சகல உரிமைகளையும் பறித்து அவர்களை அடிமை நிலைக்குள் தள்ளி வெறும் உழைக்கும் இயந்திரங்களாகப் பயன்படுத்தும் அடிப்படை நோக்கம் நீண்ட காலமாகவே நிலை கொண்டிருந்தது. 1948ம் ஆண்டு அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டாலும் அதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே அதை மேற்கொள்வதற்கான அடித்தளம் மெல்ல மெல்ல மிக லாவகமாக உருவாக்கப்பட்டு வந்தது. அது தொடர்பாக இலங்கைத் தமிழ்த் தலைவர்களோ, இந்தியத் தமிழ் தலைவர்களோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஏனெனில் இலங்கைத் தமிழ் தலைவர்களும் இந்தியத் தமிழ்த் தலைவர்களும் மேட்டுக்குடி அரசியல்மேலாதிக்க சிந்தனைப் போக்கைக் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் மலையக மக்களைத் தொழிலாளர்களாக மட்டுமே பார்த்தனரேயொழியத் தமிழர்களாகப் பார்க்கவில்லை. எனவே தொழிலாளர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இலங்கை இந்தியக் கனவான் அரசியல்வாதிகள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

ஏனெனில் சிங்கள, தமிழ், இந்திய மேட்டுக்குடியினர் ஏற்கனவே வர்க்க அடிப்படையில் உழைக்கும் மக்கள் மீது ஒடுக்கு முறைகளையும் சுரண்டலையும் மேற்கொண்டு வருபவர்களே.

1939ல் மலையகத் தமிழர்களின் வாக்காளர்கள் தொகை இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரமாக இருந்தது. அதன் காரணமாக 1930 தேர்தலில் கணிசமான மலையகப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் இடதுசாரிகளும் அடங்கியிருந்தனர். இந்த நிலையில் 1941ல் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நேரடி விசாரணை மூலம் தங்கள் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை அரசாங்க சபை அமுலாக்கியது. இம் மீள்பதிவு காரணமாக இரண்டேகால் இலட்சமாக இருந்த மலையகத் தொழிலாளர்களின் வாக்காளர் தொகை ஒரு இலட்சத்து அறுபத்தெட்டாயிரமாகக் குறைக்கப்பட்டது. அதாவது ஏனைய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையில் 50 வீதமானோர் வாக்காளர்களாக இருந்தபோது மலையகத் தொழிலாளர்களில் 11 வீதத்தினருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக மலையக மக்களின் பிரதிநிதிகள் 1947ம் ஆண்டு தேர்தலில் 14 பேராக இருக்க வேண்டிய நிலையில் 7 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மலையக மக்களின் கல்வியறிவின்மையைப் பயன்படுத்தி மேற்படி மோசடி மேற்கொள்ளப்பட்டது.

1946ல் உருகுவள்ளித் தோட்டத் தொழிலாளர்கள் உரிமைக் கோரிக்கைகளை முன் வைத்தும், குடியிருப்பு, சுகாதாரம் போன்ற விடயங்களில் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்தும் தொடர் போராட்டத்தை நடத்தினர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததுடன் ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் தோட்டத்தைவிட்டு தொழிலாளர்களை வெளியேற்றினர். இந்த நிலையில் உருகுவள்ளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஹட்டன், இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கேகாலை ஆகிய மாவட்டங்களின் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

உருகுவள்ளித் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டதால் அவர்களின் முன்னைய பதிவு இரத்துச் செய்யப்பட்டது. அதன் காரணமாகப் புதிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டி வந்தது. ஏனைய நான்கு மாவட்டங்களிலுள்ள தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் தவறினால் புதியவர்களாகவே பதிவு செய்யப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே புதியவர்களாகப் பதிவு செய்தனர். வாக்குரிமை பெறுவதற்கு 7 வருடங்கள் தோட்டத்தில் குடியிருந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனை காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலுமுள்ள மலையக மக்கள் குடியுரிமை பெறும் தகைமையை இயல்பாகவே இழந்தனர்.

1948ம் ஆண்டு 18ம் இலக்கச் சட்டத்தின் மூலம் சுதந்திர இலங்கையில் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டாலும் கூட அதன் முன்பு 1941ல் இடம்பெற்ற வாக்காளர்கள் தகைமையை உறுதிப்படுத்தும் மீள்பதிவு மூலமும் 1946ல் நான்கு மாவட்டங்களில் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அடிப்படையாக வைத்தும் அவர்களைப் புதிய குடியிருப்பாளர்களாகப் பதிவதன் மூலமே தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கும் திட்டத்துக்கான ஏற்பாடுகள் மிக லாவகமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்ததைப் புரிந்து கொள்ளமுடியும்.

இந்தியப் பிரஜாவுரிமைச் சட்டம் என்ற பேரில் 1948ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் நாள் முன்வைக்கப்பட்ட 18ம் இலக்கச் சட்டம் ஏறக்குறைய நான்கு மாதங்களாகக் கடும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு 1948 டிசம்பர் 10ம் திகதி ஆதரவாக 52 வாக்குகளைப் பெற்றும் எதிராக 32 வாக்குகளைப் பெற்றும் 20 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாவை ஜீ.ஜீ.பொன்னம்பலம் உட்படச் சில முக்கிய தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள் ஆதரித்தபோதிலும் அதை எஸ்.ஜே.வி.செல்வநாயகம், நாகநாதன், வன்னியசிங்கம் ஆகிய தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இம்மசோதாவுக்கு எதிராக எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சௌ.தொண்டமான், என்.எம்.பேரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா உட்பட்ட இடதுசாரித் தலைவர்கள் ஆகியோர் ஆற்றிய உரைகள் காத்திரமானவையும் நியாயபூர்வமானவையுமாகும்.

இம்மசோதா நிறைவேற்றப்பட்ட பின்பும் இது திருத்தப்பட்டு மலையக மக்கள் மீண்டும் பிரஜாவுரிமை பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டுமெனவும் கோரி ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம் ஆகியோரைக் கொண்ட குழுவினர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் பேச்சுக்களை நடத்தினர். இப்பேச்சுக்களின் முடிவில் டி.எஸ்.சேனநாயக்க இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சம்மதத்துடன் 18ம் இலக்கச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் மீண்டும் வாக்குரிமை பெறும் வகையில் ஒரு திருத்தச் சட்டத்தைக் கொண்டு நிறைவேற்றப் போவதாக வாக்குறுதி வழங்கினார்.

டி.எஸ்.சேனநாயக்க வாக்குறுதிகளையும் பதவிகளையும் வழங்கி தனது நோக்கத்தை நிறைவேற்றுவதும் தனது நோக்கம் நிறைவேறிய பின்பு தான் வழங்கிய வாக்குறுதிகளைப் பயன்படுத்தியே தனது வாக்குறுதிகளுக்கு நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்துவதிலும் மிகவும் கைதேர்ந்தவராவார்.

அதற்காக 1949ம் ஆண்டு இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டத்தை 18ம் இலக்கச் சட்டத்தின் ஒரு திருத்த மசோதாவாகப் பாராளுமன்றத்தில் முன் வைத்து நிறைவேற்றினார்.

இச்சட்டத்தின் மூலம் நேருவின் தலைமையில் இயங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் குடியுரிமை பெறத் தகுதியற்றவர்களின் தொகை மிகக் குறைவாகவே இருக்குமென டி.எஸ்.சேனநாயக்கவைப் பாராட்டியிருந்தது. அதேவேளை இலங்கை இந்தியக் காங்கிரஸ் தலைவர்களான பெரி.சுந்தரம், ஜோர்ஜ் மேத்தா ஆகியோரும் அச்சட்டம் மூலம் 75 வீதமான மலையக மக்கள் குடியுரிமை பெற்று விடுவர் எனக் கூறி அதை ஆதரித்தனர்.

ஆனால் நடைமுறையில் இடம்பெற்றதோ இந்த இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டத்தின் மூலம் 6 இலட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர் என்பதேயாகும்.

பெரி.சுந்தரம், ஜோர்ஜ் மேத்தா ஆகியோர் தலைமையிலான இலங்கை இந்திய காங்கிரஸ் ஒரு பலமான சக்தியாக விளங்கிய அதேவேளையில் இலங்கை, இந்திய ஆட்சியாளர்களிடம் செல்வாக்குப் பெற்ற தலைவர்களாகவும் அவர்கள் விளங்கினர். அப்படியிருந்தபோதிலும் 6 இலட்சம் மலையக மக்கள் நாடற்றவர்களாகப்படும் நிலை எப்படித் தோன்றியது என்ற கேள்வி எழலாம். அதற்கான காரணங்களாக மூன்று காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஒன்று – அன்று மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் படித்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்த காரணத்தால் கல்வியறிவற்ற தொழிலாளர்கள் சட்டத்தையோ அதன் நிபந்தனைகளையோ புரிந்து கொண்டு, தமக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தும் தாங்கள் தொடர்ச்சியாகக் குடியிருந்தமையை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

இரண்டாவது – மலையகத் தொழிலாளர்களின் தலைமையாக விளங்கிய தரப்பினர் முக்கியமாக வர்த்தக சமூகத்தினராகவும் பெரிய கங்காணிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவுமே விளங்கினர். பெரிய கங்காணிகள் தோட்டங்களில் தோட்டத்துரைகளுக்கு அடுத்த அதிகாரம் படைத்தவர்களாகவும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்தும் அநீதிகளுக்குத் துணைபோபவர்களாகவுமே விளங்கினர். இந்த இரு தரப்பினருமே மலையக மக்களின் தலைவர்களாகவும் தொழிற்சங்க வாதிகளாகவும் தம்மைக் காட்டி அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமது வருவாய்களைப் பெருக்கி தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்கிக் குவித்து தமது பொருளாதாரத்தை மேம்படுத்தினரேயொழிய உழைக்கும் மக்களின் நலன்கள் தொடர்பாக உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை.

மூன்றாவது – பிரஜாவுரிமைப் பதிவு ஆணையாளர், பதிவை நேரடியாக மேற்கொண்ட பிரதி ஆணையாளரிடம் 85 வீதமான விண்ணப்பங்களை ஏதாவது காரணம் கூறி நிராகரிக்கும்படி கட்டளையிட்டிருந்தார்.

இவ்வாறு டி.எஸ்.சேனநாயக்க நீண்டகாலமாகவே மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையை இல்லாமற் செய்யும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கி சுதந்திரம் கிடைத்ததுமே அதை நிறைவேற்றி வைத்தார். இக்குடியுரிமை பறிப்பின் மூலம் மலையக மக்கள் தங்கள் பாராளுமன்ற பலத்தை முற்றாக இழந்த அதே வேளையில், தமிழ் மக்களின் நாடாளுமன்ற பலமும் பாதியாகக் குறைக்கப்பட்டது.

இதை நன்கு தெரிந்து கொண்டும் தமிழ் காங்கிரஸ் தலைமையும், இலங்கை இந்தியக் காங்கிரஸும் டி.எஸ்.சேனநாயக்கவுக்கு ஆதரவு வழங்கிய வரலாற்றுத் துரோகம் காரணமாக இன்றுவரை தமிழ் மக்களும், மலையக மக்களும் துயர் சுமந்து வாழ வேண்டிய அவலம் நிலவுகிறது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE