Wednesday 24th of April 2024 06:31:49 PM GMT

LANGUAGE - TAMIL
-
பாம்பியோவின் பயணத்தினை  வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா இலங்கை? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

பாம்பியோவின் பயணத்தினை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா இலங்கை? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை அமெரிக்க உறவின் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோவின் விஜயம் ஒரு வரலாற்று நிகழ்வென இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மைக் பாம்பியோவின் விஜயம் இலங்கை அரசியல் பரப்பில் ஜேவிபி உட்பட பல தரப்பினரிடமும் அதிக கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை ஆடசியாளர்கள் பாம்பியோவை எதிர் கொண்ட விதத்தையும் அதன் மறுபக்கத்தையும் தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

முதலாவது மைக் பாம்பியோவும் இலங்கை ஜனாதிபதியும் சந்தித்த போது ஜனாதிபதி வெளிப்படுத்திய விடயங்களை நோக்குவோம்.

இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதேயாகும். வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாக அமையும் அதிகாரத்துவ மைய நடைமுறைகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.இலங்கை அதிக விவசாய வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு தேவையான வளங்களைக் கொண்ட நாடாகும். எமது விவசாயத் துறையை நவீனமயப்படுத்த ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. அதற்கு உதவுங்கள்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை நடுநிலையானது. இலங்கை ஏனைய நாடுகளுடன் பேணிவரும் உறவு வரலாற்று கலாசார மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பின் பிரகாரம் முக்கியமானது.சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத் தன்மை இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பனவற்றை விட்டுக் கொடுப்பதற்கு ஒரு போதும் நாம் தயார் இல்லை.பிரிவினைவாதப் போரை முடிபுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவியது. அதன் விளைவாக இலங்கை கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளவில்லை என்றார் கோட்டபாய ராஜபக்ச.

ஜனாதிபதியின் கலந்துரையாடலில் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொன்றும் இராஜதந்திர உத்தியைக் கொண்டவை. சீனாவைப் நிராகரிக்காத ஜனாதிபதி சீனாவுடனான உறவின் வரலாற்றையும் கலாசாரத்தையும் தொட்டுக் காட்டியதுடன் பிரிவினைவாதப் போருக்கு பின்னான சீன இலங்கை உறவின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

சுயாதீனத்தையும் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் விட்டுக் கொடுக்க முடியாததென்பதுடன் அதிகாரத்துவ மைய நடைமுறைகளையும் நிராகரித்தார். அது மட்டுமல்ல எம்சிசி உடன்பாட்டின் முக்கிய பகுதியான விவசாய உற்பத்திக்கான தேவையை தொட்டுக் காட்டியதுடன் எம்சிசியிலிருந்து விவசாயத்தை வேறுபடுத்தி அதன் முடிபினை வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலம் மைக் பாம்பியோவின் விஜயத்தின் மையத்தையே தகர்த்துவிட்டார். ஆனால் மைக் பாம்பியோ இலங்கை விஜயத்தின் போது தெரிவித்த கருத்துக்களை அவதானிக்கும் போது அமெரிக்காவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை ஆசியாவில் மிகவும் வயது முதிர்ந்த ஜனநாயக நாடு என வர்ணித்தர பாம்பியோ அமைதியான சபீட்சமுள்ள இறைமையுடைய இலங்கையோடு அமெரிக்கா உறவை பேணவுள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் இலங்கைப் படைகளுடனான கூட்டுப் பயிற்சிகள் ஒத்துழைப்புக்கள் மற்றும் நீண்ட கால அபிவிருத்தி குறித்தும் ஜனாரதிபதி கோட்டபாயாவுடன் பேசியதாக பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்தார். அது மட்டுமன்றி கோவிட்-19 காலப்பகுதியில் ஆறு பில்லியன் அ.டொலரினை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியதாகவும் வைரஸ் பரவல் காலத்தில் அமெரிக்காவுக்கு தேவைப்பட்ட உதவிகளை இலங்கை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடும் போது சீனக் கம்யூனிஸக் கட்சி ஒரு வேட்டையாடும் சக்தி என்றும் ஆனால் அமெரிக்கா நட்புச் சக்தி எனவும் குறிப்பிட்டதன் மூலம் பாம்பியோ இலங்கை பொறுத்து ஒரு மென் போக்கினை கடைப்பிடித்து;ளளதை அவதானிக்க முடிந்தது. இலங்கை மண்ணில் இருந்து கொண்டு சீனாவை கண்டித்ததுடன் இலங்கையை அரவணைக்கும் போக்கினை வெளிப்படுத்தியதாக கூர்மை இணையத் தளம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது. ஆனாலும் மைக் பாம்பியோ இலங்கையை கையாண்ட விதம் தனித்துவமானதாகவே தெரிகிறது. அது ஒரு மென் போக்காகவே அமைந்துள்ளது.

வெளிப்படையாக கூறுவதானால் இலங்கை ஜனாதிபதியின் உரையாடலுக்கும் பாம்பியோவின் ஊடக கருத்திற்கும் அதிக வேறுபட்ட தொனி தெனட்படுகிறது. இலங்கை தனது நிலைப்பவாட்டில் விட்டுக் கொடுக்காத போக்கும் அமெரிக்காவின் நிலையில் தளர்வும் அவதானிக்க முடிந்தது.இலங்கை விடயத்'தில் அமெரிக்க வல்லரசின் இராஜாங்க செயலாளரது வெளிப்பாடு போன்று அமையாது இருந்ததுடன் சீன விடயத்தில் மட்டும் அதனைக் காணமுடிந்தது. இதனால் இலங்கைக்கு வருகை தந்த செயலாளர் பாம்பியோ 72 வருட உறவை பலப்படுத்திவிட்டுச் செல்வதைக் காணமுடிந்தது.

இரண்டாவது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான பத்திரியாளர் சந்திப்பின் போது இலங்கையின் ஐக்கியம் நல்லிணக்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நாம் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறோம். எமது நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் உறுதியாக இருக்கிறோம். பக்கச்சார்பற்ற அணிசேரா நாடாக இலங்கை தொடர்ந்தும் பயணிக்கும்.அந்த வகையில் அமெரிக்காவுடனும் ஏனைய நாடுகளுடனும் இலங்கை இணைந்து பயணிக்கும் என்றார்.

மூன்றாவது மைக் பாம்பியோவின் விஜயத்தில் இந்தியா வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இலங்கை வருகை தராததும் பாம்பியோ இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்திக்காததும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இது திட்டமிடப்பட்டதா அல்லது ஜனாதரிபதியின் கருத்துடன் நிலைமையை பாம்பியோ புரிந்து கொண்டாரா என்பது கேள்விக்குரியதே. ஆனால் சம்பிருதாய பூர்வமாகவேனும் பிரதமரை வெளிநாட்டின் இராஜாங்க செயலாளர் சந்திப்பது மரபாகும். இது வேறு ஏதேனும் விடயத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.இது ஒரு இராஜீக விடயமாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. இதன் மூலம் அதிக மாற்றம் இலங்கைப்பரப்பில் சாத்தியப்பட வாய்ப்புள்ளது.

நான்காவது இதே சந்தர்ப்பத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைமையை கௌரவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய தலைவர் ராஜூ உட்பட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐந்தாவது இந்திய தூதுவர் கோபால் பாக்லே உடனான சந்திப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டுள்ளது. வடக்கு கிழக்கின் அபிவிருத்தி இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு ஜெனீவா தீர்மானம் தொடர்பில் உரையாடப்பட்டு;ள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் இந்தியத் தரப்பு தமிழ் தரப்பு அமெரிக்கா தரப்பு சீன தரப்பு என பல முனையில் இலங்கையின் அமைவிடம் பொறுத்து நெருக்கடிக்குள்ளாகிவருகிறது. இதில் இலங்கை அரசாங்கம் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் செயல்படுவதனை ஜனாதிபதி பாம்பியோவை சந்தித்த போது வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இலங்கை அணிசேராமை என்று குறிப்பிட்டுக் கொண்டு சீனாவை அதிகம் ஈர்க்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலங்கையின் புறச்சூழலும் அதனையே வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் வெளியுறவுச செயலாளர் மென் போக்கினைக் கடைப்பிடித்தாலும் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிபுகள் தரப் போகும் மாற்றம் எவ்வாறானதாக அமையும் என்பது மட்டுமல்ல அமெரிக்கா போன்று இந்தியா செயல்பட முனையுமா என்பது பிரதான கேள்வியாகும். ஆனால் இந்தியாவை கையாளும் ஆயுதங்கள் அனைத்தும் இலங்கை ஆட்சியாளரிடம் உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அப்படியாயின் இந்தக் களம் இலங்கைக்கானதாகவே அமையவுள்ளது என்ற முடிபுக்கு வரமுடியும். ஆனால் இந்தியத் தரப்பு தொடர்ச்சியாக இலங்கை விடயத்தில் கவனம் செலுத்துகிறதை அவதானி;கக முடிகிறது. அதனால் ஏற்படப் போகும் அணுகுமுறைகள் இலங்கை ஆட்சியாளர் எதிர்பார்ப்பது போல் அமையுமா என்பது சந்தேகமானதே. காரணம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வருகைதர உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE