ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் டெல்லி அணியை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகதி பெற்றது மும்பை அணி.
டுபாயில் நேற்றையதினம் நடைபெற்ற தகுதிச் சுற்று முதலாவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களையும் பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் எதிர்கொண்டன.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மும்பை அணிக்கு வழங்கியிருந்தது.
அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மும்பை அணியின் இஷான் கிஷன் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும், டி கொக் 40 ஓட்டங்களையும்ஈ ஹர்த்திக் பாண்டியா ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
201 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு மும்பை ஆரம்ப பந்து வீச்சாளர்களான டிரென் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோர் அச்சுறுத்தலாக விளங்கினர்.
முதலாவது ஓவரில் டெல்லி அணியின் பிரித்வி ஷா மற்றும் ரகாணே ஆகியோரை ஓட்டமெதுவும் பெறாத நிலையில் டிரென் போல்ட் ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சியளித்தார்.
அடுத்த ஓவரை வீசிய பும்ராவும் தன் பங்கிற்கு ஷிகர் தவானை ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார். முன்னணி வீரர்கள் மூவரும் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தமை டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மட்டும் எடுத்து 57 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணி தரப்பில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 65 ஓட்டங்களையும், அக்சார் பட்டேல் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா