Monday 20th of September 2021 02:30:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 28 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 28 (வரலாற்றுத் தொடர்)


'மலையக மக்களுக்கு வைக்கப்பட்ட பொறியில் சிறுபான்மைச் சமூகங்கள்'

1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர் சட்ட சபையில் 33 வீதம் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருந்தனர் எனினும் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதன் மூலம் இவ்விகிதாசாரம் 20 ஆகக் குறைக்கப்பட்டது. தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய சிங்களக் கொள்கைகளுக்கான சக்தி வாய்ந்த எதிர்ப்பைத் தமிழர் பிரயோகிக்க முடியாதவாறு சிங்களவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றனர்.

இது சர்வதேசச் சட்டவல்லுனர் ஆணைக்குழுவின் சார்பில் இலங்கைக்குத் தூதுப் பணியை மேற்கொண்ட வேர்ஜினியா லியறி அவர்கள் 1948ல் 18ம் இலக்கச் சட்டத்தின் மூலம் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமை தொடர்பாக வெளியிட்ட கருத்தாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இச்சட்டத்தின் மூலம் மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதுடன் அவர்களின் வாக்களிக்கும் உரிமையும் பறிக்கப்பட்டு விட்டது என்பதே தென்படும். ஆனால் இது மலையக மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்குமே இழைக்கப்பட்ட அநீதி என்பதே அவர் சுட்டிக்காட்டும் உண்மையாகும்.

1947ம் ஆண்டு இடம்பெற்ற சட்ட சபைத் தேர்தலின்போது 13 தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் 1952ல் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்பு தமிழ் பிரதிநிதிகளின் தொகை 6 ஆகக் குறைந்தது. இதன் காரணமாகப் பாராளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதிகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஏனைய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை தாம் விரும்பியவாறு மேற்கொள்ள முடியும்.

சோல்பேரி அரசியலமைப்பின் மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்காக 29(2) பிரிவு உட்பட நான்கு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதில் அரசியலமைப்பில் ஏதாவது மாற்றம் கொண்டு வரவேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டுமென்பது ஒரு முக்கிய அம்சமாகும். எனவே மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதன் மூலம் சிங்களப் பிரதிநிதிகள் மட்டும் ஒன்றிணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்கிவிட முடியும்.

எனவே சோல்பேரி அரசியலமைப்பின் கீழ் 1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் அதே ஆண்டிலேயே மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதன் மூலம் அந்த அரசியலமைப்பு செயலிழக்க வைக்கப்பட்டதாக வேர்ஜினியா லியறி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படியானால் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் சி.சுந்தரலிகம். மலையகத் தலைவர்களான பெரி.சுந்தரம், ஜோர்ஜ் மேத்தா, டி.பி.ஜாயா போன்ற முஸ்லிம் தலைவர்கள் இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தும் ஒரு சிலர் நடுநிலை வகித்தும் அது நிறைவேற ஏன் வழிவிட்டனர் என்ற கேள்வி எழுகிறது. அது மட்டுமன்றி அச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சௌ.தொண்டமானும், இடதுசாரிகளும் ஏன் வலிமையான தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தவில்லையென்ற கேள்வியும் எழுகிறது. அதேபோன்று இச்சட்டத்தை ஜீ.ஜீ.பொன்னம்பலம் குழுவினர் ஆதரித்ததை எதிர்த்து தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி.நாகநாதன், கு.வன்னியசிங்கம் போன்றோரும் ஏன் மலையைக மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுக்கவில்லையென்பதும் மூன்றாவது கேள்வியாகும்.

அக்காலகட்டத்தில் பெரி.சுந்தரத்தைத் தலைமையாகக் கொண்ட இலங்கை இந்தியக் காங்கிரஸ், சௌ.தொண்டமானைக் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன மலையகத்தின் செல்வாக்குமிக்க தொழிற்சங்கங்களாக விளங்கின. அத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வுரிமையான குடியுரிமை பறிக்கப்படும்போது அத்தொழிற்சங்கங்கள் அதை எதிர்த்து ஆக்கபூர்வமான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை? மக்கள் போராடத் தயாராயில்லையென்று எவரும் காரணம் சொல்லிவிட முடியாது. ஏனெனில் மலையக மக்கள் ஏற்கனவே தங்கள் உரிமைகளுக்காகப் போராடியும் உயிர்த் தியாகம் செய்தும் உரிமைகளை வென்றெடுத்த அனுபவம் கொண்டவர்கள்.

1940ல் 16சதம் சம்பள உயர்வு கோரி கண்டி ஹேவாஹெட்ட, முல்லோயா தோட்டத் தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்றனர். அதில் கோவிந்தன் என்ற தொழிலாளி உயிர்த் தியாகம் செய்தார். இப்போராட்டம் பதுளை வரைப் பரந்து தோட்ட நிர்வாகத்தை அடிபணிய வைத்தது. தலவாக்கொல்லை லெவன் தோட்டத்தில் 12 மணி நேர வேலையை எட்டு மணி நேரமாகக் குறைக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வைத்திலிங்கம் என்ற தொழிலாளி உயிரிழந்த போதிலும் கோரிக்கைகள் வெற்றிபெற்றன. 1941ல் எட்டியாந்தோட்டை உருளவள்ளித் தோட்டத்தின் நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம் நாலு மாவட்டங்களையே ஸ்தம்பிக்க வைத்துவெற்றி பெற்றன. இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக நடத்திய போராட்டங்களில் 40க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உயிர் அர்ப்பணிப்பு வழங்கினர்.

எனவே தொழிற்சங்கங்கள் முன்வந்திருந்தால் நிச்சயம் தொழிலாளர்கள் போராட்டத்தில் தீவிரமாகக் குதித்திருப்பார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

பெரி.சுந்தரம், தொண்டமான் அகியோர் பெரிய கங்காணி பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரிய கங்காணிகள் தோட்டத்துரைமாருக்கு அடுத்த அதிகாரம் கொண்டவர்களாகவும் நிர்வாகததி;ன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தொழிலாளர் மேல் நேரடியாகச் செலுத்தும் நபர்களாகவும் விளங்கினர். தொண்டமானின் தந்தையார் பெரிய கங்காணியாக விளங்கியது மட்டுமன்றி நுவரெலியா மாவட்டத்தில் பல கடைகளை நடத்தியும் வட்டிக்குப் பணம் கொடுத்தும் பல வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். அவர் தான் பணியாற்றிய தோட்டத்தையே விலைக்கு வாங்குமளவுக்கு வசதி படைத்திருந்தார். தொண்டமானும் லண்டனில் கல்வி கற்றதுடன் மேற்குலகப் பாணி வாழ்க்கையையே மேற்கொண்டார். இவ்வாறே பெரி.சுந்தரமும் ஒரு பெரிய கங்காணியின் மகன் என்பதுடன் சட்டக் கல்லூரி உப அதிபர் தொடக்கம் பல உயர் பதவிகளை வகித்து வந்தார். இவர்கள் இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவிலும் பெருமளவு சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டனர்.

உழைக்கும் மக்களை அடக்கியாண்டு சுரண்டித் தங்கள் சுயலாபங்களைப் பெருக்கிக்n காண்ட இவர்களால் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளவோ, வலியை உணர்ந்து கொள்ளவோ முடியுமா? உயர்மட்ட வாழ்வில் சுகபோகங்களை அனுபவிக்கும் அவர்களால் பட்டினியின் கொடுமையையும் அட்டைக் கடியின் துன்பத்தையம் புரிந்து கொள்ள முடியுமா? தொழிலாளர்களை வெறும் உழைக்கும் இயந்திரங்களாக் கருதும் இவர்கள் குடியுரிமை பறிப்புக்கெதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமை தொடர்பாக ஆச்சரியப்படமுடியுமா?

ஆனால் இவர்கள் தங்கள் தலைமையினை தொழிற்சங்கங்களின் தொழிலாளர் பலத்தை வைத்து அரசியல் அதிகாரத்தைப் பெறவும் பொருளாதார பலத்தைப் பெருக்கவும் தாராளமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்தியப் பெருவர்த்தகர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயான வர்த்தகப் போட்டி சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நிலவி வந்தது. அதன் காரணமாக இரு தரப்பினருக்குமிடையே பரஸ்பர வெறுப்புணர்வு நிலவி வந்தது. இந்திய வர்த்தகர்கள் மீதான வெறுப்பு இந்தியர்கள் மீதான வெறுப்பாக விரிவடைந்து மலையக மக்களுக்கு எதிராக முஸ்லிம்களைச் செயற்பட வைத்திருக்கக் கூடுமெனக் கருதவும் இடமுண்டு.

வடபகுதித் தமிழ் தலைவர்கள் அனைவருமே நிலவுடமைப் பரம்பரையில் பிறந்த உயர்குல மேட்டுக்குடியினராகவும் அவர்கள் ஏனைய உழைக்கும் மக்களை சாதியின் பேரால் அவர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களாகவும் இருந்தனர். சாதி ஒடுக்குமுறைக் கட்டமைப்பு மெல்லத் தகர்ந்து கொண்டிருந்தாலும் உழைப்பின் மீதான சுரண்டல் தொடர்ந்தே வந்தது.

அவர்களைப் பொறுத்தவரை ஒரு மக்கள் கூட்டம் உரிமையற்றவர்களாக வாழ்வது ஒரு இயல்பான நடைமுறையாகவே கருதப்பட்டது. எனவே அவர்களின் நிலவுடைமை மேலாதிக்கச் சிந்தனைப் போக்கு மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஒரு பாரதூரமான விடயமாக எடுத்துக்கொள்ள அனுமதித்திருக்காது.

எனவே ஜீ.ஜீ.பொன்னம்பலம், மகாதேவா போன்ற மேட்டுக்குடியினர் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்படுவதற்கு ஆதரவு வழங்கியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவளித்தமையால் தமிழ்க் காங்கிரஸை விட்டு வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் பாராளுமன்றத்தில் கடும் சொற்போரை நடத்தினர். அவர்களால் நடத்தப்பட்ட சுதந்திரன் பத்திரிகையும் இப்பிரச்சினை தொடர்பாகத் தொடர்ந்து கடும் கண்டனங்களை மேற்கொண்டது. ஆனால் அவர்களாலும் பரந்துபட்ட மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

அந்த நாட்களில் 6 இலட்சம் மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதை எதிர்த்து மலையக, இலங்கைத் தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரு பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் நிச்சயமாக ஆக்கபூர்வமான பலன்களை எட்டியிருக்கமுடியும். இந்தியப் பிரதமர் தலையிட்டு மலையக மக்களுக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்க அழுத்தம் கொடுத்திருப்பார். அதுமட்டுமின்றி 1952ல் மேற்கொள்ளப்பட்ட நேரு – கொத்தலாவல உடன்படிக்கையையும் தவிர்த்திருக்க முடியும். நேரு - கொத்தலாவலை ஒப்பந்தம் மூலம் இலங்கை இந்திய அரசாங்கங்கள் மலையக மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டமைக்கான ஒன்றிணைந்த அங்கீகாரத்தை வழங்கிவிட்டன.

அதேவேளையில் மலையக, தமிழ், முஸ்லிம் தலைமைகள் இவ்விடயத்தில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்காமைக்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. மலையக மக்கள் மத்தியில் தொழிற்சங்க அடிப்படையில் இடதுசாரிகள் பலம் பெற்றிருந்ததுடன் பல போராட்டங்களை நடத்தி பல கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

மேலாதிக்க அரசியலுக்குச் சார்பான இந்தத் தலைமைகள் இந்த விடயத்துடன் இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் பலம் குறைவடைவதை விரும்பினர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

எப்படியிருந்த போதிலும் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதன் மூலம் இலங்கையின் பாராளுமன்றத்தில் சிங்களத் தரப்பினர் ஏனைய இனங்களுக்கெதிரான அதிகாரத்தைச் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. சிங்கள மேல்நாட்டு வர்க்கத்தினருக்கும் ஏனைய தமிழ் மலையக, முஸ்லிம் மேட்டுக்குடித்தலைமைகளுக்குமிடையே நிலவிய ஒருமித்த உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறைச் சிந்தனையின் விளைவாக அன்று ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுமே ஒடுக்கப்படும் நிலைக்கு வழிவகுத்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE