Friday 29th of March 2024 06:45:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்: இலங்கையில் தீர்வு ஏற்பட உதவுவர்! இரா.சம்பந்தன் நம்பிக்கை!

பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்: இலங்கையில் தீர்வு ஏற்பட உதவுவர்! இரா.சம்பந்தன் நம்பிக்கை!


"அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம். இலங்கையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் - உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தொகுதிகளைக் கைப்பற்றி 46ஆவது ஜனாதிபதியாகவும், தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹரிஷ் அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரையும் வரவேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் விவகாரத்தை அமெரிக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்குக் கொண்டுவந்திருந்தது. அப்போது அமெரிக்காவில் பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியே ஆட்சியில் இருந்தது.

இந்தநிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஸ் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்கள் இருவரும் ஜனநாயகவாதிகள். அரசியல் ரீதியில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர்கள்.

ஜோ பைடன், செனட் சபையிலும் இருந்திருக்கின்றார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு தடவைகள் உப ஜனாதிபதியாகவும் இவர் பதவி வகித்திருக்கின்றார்.

கமலா ஹரிஸ், இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் மகள். நீண்ட காலம் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர்கள் இருவரும் சமத்துவம், நீதி, நியாயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குப் போதிய மதிப்பு வழங்கிச் செயற்படக்கூடிய தலைவர்கள்.

இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம்.

இலங்கையில் சமத்துவத்தின் அடிப்படையில் - நீதியின் அடிப்படையில் - நியாயத்தின் அடிப்படையில் - சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.

இலங்கைத் தீவில் நீண்டகாலமாக அவ்விதமானதோர் அரசியல் தீர்வு இன்னமும் ஏற்படவில்லை.

அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் - உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் இவர்கள் உதவக்கூடிய பக்குவம் உடையவர்கள். அதில் ஆற்றல் உடையவர்கள்; அறிவுடையவர்கள்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE