Saturday 19th of June 2021 09:35:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் இலங்கை! - நா.யோகேந்திரநாதன்!

அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் இலங்கை! - நா.யோகேந்திரநாதன்!


இரண்டாவது உலகயுத்தம் முடிவுக்கு வந்த பின்பு அமெரிக்கா உலக மேலாதிக்கத்தைத் தனது இராணுவ, பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை லாவகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் படை நடவடிக்கை, இராணுவ சதிப் புரட்சி, நாடுகளின் நிலவும் உள்நாட்டு அரசியல், இன, மத முரண்பாடுகளைக் கையாளுதல், இராஜதந்திர நகர்த்தல்கள் எனப் பல்வேறு வழிமுறைகள் உள்ளடங்கும். தமது கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் அரசுத் தலைவர்களின் ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கும் அரசுத் தலைவர்களைக் கொல்வதற்கும் தயங்குவதில்லை.

கொங்கோவின் லுமும்மா, சிலி நாட்டின் அலண்டே, சிம்பாவின ரொபேட் முகாபே, ஈராக்கின் சதாம் ஹூசைன், லிபியாவின் கேணல் கடாபி, ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா, பங்களாதேஷின் முஜிபுர் ரஹ்மான் எனத் தங்கள் நாடுகளைச் சுதந்திர தேசங்களாக வளர்க்க முயன்ற பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். அல்லது அவர்களின் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. அந்த நாடுகளின் அடுத்த ஆட்சியாளர்களாக அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு இசைவானவர்கள் பதவியேற்றப்பட்டனர். இப்படுகொலைகளின் பின்னணியும் ஆட்சிக் கவிழ்ப்புக்களின் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மையசக்தியாகச் செயற்பட்டது என்பது வெளிப்படையான உண்மை.

இரண்டாம் உலகப் போரின்போது பேரழிவைச் சந்தித்த சோவியத் யூனியன் துரித கதியில் வளர்ச்சியடைந்து அமெரிக்காவுக்கு சமமான நிலையில் இராணுவ, பொருளாதார ரீதியில் வலிமை பெற்றிருந்தது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு இடையூறாக விளங்கும் வகையில் சோவியத் யூனியன் சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்துவரும் வறிய நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேண ஆரம்பித்தது. எனவே இரு நாடுகளுக்குமான பனிப்போர் யுகம் ஆரம்பமாகியது.

இந்நிலையில் அமெரிக்கப் பின்னணியுடன் போலந்தில் இடம்பெற்ற தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டம் வெற்றி பெற்றதுடன் சோவியத் ஒன்றியத்தில் முதல் உடைவு ஏற்படுத்தப்பட்டது. அதனையடுத்து ஒவ்வொன்றாக உறுப்பு நாடுகள் சோவியத் ஒன்றியத்தை விட்டு வெளியேறின. ஒரே சமஷ்டிக் குடியரசாக விளங்கிய நாடுகள் பிரிந்து சென்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவுக்குச் சமமான பலம் கொண்ட ஒன்றியமாக விளங்கிய சோவியத் யூனியன் சிதைவடைந்து ரஷ்யா அமெரிக்காவைவிடப் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

எனினும் வடகொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகளோ பொருளாதாரத் தடைகளோ ஆட்சித் தலைவர்கள் மீதான படுகொலை முயற்சிகளோ என எவற்றாலும் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. ஏனெனில் அந்த நாடுகளின் ஆட்சியின் பின்னாலுள்ள மக்கள் பலத்தின் முன் அமெரிக்காவின் அத்தனை நயவஞ்சக முயற்சிகளும் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஏற்கனவே தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்படாத ஆட்சிகளைக் கவிழ்த்தும் ஆட்சியாளர்களைக் கொன்றும் சுவை கண்ட அமெரிக்கா தொடர்ந்தும் அத்தகைய முயற்சிகளில் பல்வேறு வழிமுறைகள் மூலம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்தகைய அமெரிக்க முயற்சிகளில் ஒன்றுதான் கடந்த ஒக்டோபர் 27ம் நாள் அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ அவர்களின் கொழும்பு விஜயமாகும்.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் பின்பு தற்சமயம் வளர்ச்சியடையும் நாடுகளின் மீதான அமெரிக்க மேலாதிக்கத்துக்குச் சவால் விடும் வகையில் சீனா ஒரு பொருளாதார, இராணுவ வல்லரசாக வளர்ச்சி பெற்று வருகின்றது.

பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் சீனா பொருளாதார உதவி, முதலீடுகள், உட்கட்டுமானங்கள் கடனுதவி போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் அவற்றுடன் நெருக்கமான உறவை வளர்த்து வருகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது வலிமையை நிலை நிறுத்தும் வகையில் தன் பட்டுப்பாதைக்கமைவாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் தனக்குச் சாதகமான மையங்களை உருவாக்கி வருகின்றது.

அவ்வகையில் இலங்கையிலும் சீனா கொழும்புத் துறைமுக இறங்குதுறை, துறைமுக நகரம், அம்பாந்தோட்டைத் துறைமுகம், மாத்தளன் விமான நிலையம் என்பனவற்றை தனக்குச் சாதகமான முறையில் எவ்வித இடையூறுமின்றிப் பயன்படுத்தும் வகையில் உடன்படிக்கைகளும் உறவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தின் பிரதான மையமாக விளங்கும் இலங்கையை சீனா முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடந்த அரசாங்க காலத்தில் அமெரிக்காவும். இலங்கையும் சீபா, எம்.சி.சி உடன்படிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகின. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அவற்றைக் கைவிடுமளவுக்கு அவை நிறைவேற்றுவதில் எதிர்மாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மைக் பொம்பியோவின் விஜயம் இலங்கைக்கு சீனா தொடர்பான விடயங்களில் கடுமையான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலேயே அமையுமென எதிர்பார்க்கப்பட்டது.

வெளிப்படையில் பொம்பியோ, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் மென்மையாகவும் சுமுகமாகவும் பேசியது போன்று தோன்றினாலும் அதற்குள் ஒரு மிரட்டல் இருந்ததை அவதானிக்க முடிகிறது. இலங்கையின் இறைமை தொடர்பாக அவர் அக்கறைப்படுவது போன்று கருத்துக்களை வெளியிட்ட போதிலும் சீனாவுடனான உறவுகளை மட்டுப்படுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதில் தொனித்தது.

ஒரு உலக வல்லரசின் எச்சரிக்கை இனிமையாகவும் அக்கறை காட்டும் பாவனையுடனும் பொம்பியோ அவர்களால் இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டது. அதேபோன்று ஆலோசனை சொல்வது போன்ற தொனியில் இலங்கை கடந்த காலச் சம்பவங்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறுவதில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுகூட இலங்கை தமக்கு அடிபணிய மறுத்தால் மீண்டும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் இலங்கையை நோக்கி ஏவிவிடப்படுமென்ற ஒரு மறைமுக எச்சரிக்கையாகும்.

ஆனால் மைக்போம்பியோவின் கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ எவ்வித குழப்பமோ, கெஞ்சலோ இன்றி உறுதியான மொழியில் தெளிவான பதிலை வழங்கியுள்ளார். அவற்றில் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியின் உறுதியும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற வகையிலான திட்டவட்டமும் இருந்ததை அவதானிக்க முடிகிறது.

அவர் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை நடு நிலையானது எனவும் வெளிநாடுகளுடனான உறவுகள், கலாசாரம், பொருளாதாரம், அபிவிருத்தி என்பனவற்றின் அடிப்படையிலேயே இருக்குமெனவும் அவை இலங்கையின் சுயாதீனம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பன விட்டுக்கொடுக்கப்படாத வகையிலுமே அமையுமெனவும் பதிலளித்துள்ளார். சீனா ஒரு வேட்டையாடும் சக்தி எனவும் சீனாவுடனான உறவு இலங்கையின் இறைமையைப் பாதிக்குமெனவும் பொம்பியோ விடுத்த எச்சரிக்கைக்கான இலங்கையின் பதிலே இது. இது அமெரிக்காவுடனான உறவும் இலங்கையின் சுயாதீனத்தைப் பாதிக்குமளவுக்கு இருக்கமுடியாது என்ற செய்தியும் இதற்குள் புதைந்து கிடப்பதை அவதானிக்க முடியும். இலங்கையின் நோக்கமும் கடன் பெறுவதல்ல எனவும் அந்நிய முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே இலக்கு எனவும் ஜனாதிபதி தெரிவித்ததன் மூலம் எம்.சி.சி., சீபா உடன்படிக்கைகளுக்கான விருப்பமின்மையைச் சுட்டிக்காட்டி விட்டார்.

ஒட்டு மொத்தத்தில் ஜனாதிபதியின் பதில் இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்காவின் எந்தவித அழுத்தங்களுக்கும், அடிபணியத் தயாராயில்லை என்பதை எவ்வித மயக்கத்திற்கும் இடமின்றி வெளிப்படுத்தியுள்ளது.

இதன் விளைவுகள் இரண்டு விதத்தில் அமையமுடியும். ஒன்று கடந்த காலங்களைப் போன்று தனக்கு கட்டுப்படாத ஆட்சியாளர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பது, அல்லது ஆட்சியாளர்களைப் படுகொலை செய்வது போன்ற சதி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அடுத்தது இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களை முன்வைத்து ஐ.நா. சபையின் மூலம் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுத்து அடி பணிய வைக்கமுயலலாம்.

இலங்கையில் ஒரு இராணுவச் சதிப் புரட்சியை நடத்தி ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்துவது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. ஏனெனில் இலங்கையின் இராணுவக் கட்டமைப்பு முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் அது இராணுவ ரீதியில் மட்டுமின்றி சிவில் நிர்வாகத்திலும் பலம் பெற்று விளங்குகிறது. அதே வேளையில் ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடவும் முடியாது. ஏனெனில் இன்றைய அரசு பரந்துபட்ட சிங்கள மக்களின் உறுதியான ஆதரவுப் பின்புலத்தைக் கொண்டது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்தியா மூலம் படை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றால் அது மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமாகவே அமைந்துவிடும். எனவே அமெரிக்கா தனது வழமையான வழிமுறைகள் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயமாகும்.

அடுத்தது போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபை மூலம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவையாவும் வெகு சுலபமாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வீட்டோ சக்தி மூலம் முறியடிக்கப்பட்டு விடும். ஜி.எஸ்.பி. சலுகைகளை நிறுத்துதல், மீன் இறக்குமதியை நிறுத்துதல் போன்ற தனிப்பட்ட நாடுகளால் சில பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அவற்றை ஈடு செய்ய சீனா தயங்கப் போவதில்லை. அது இலங்கையை சீனாவுடன் மேலும் நெருக்கமாகப் பிணைக்கும் நிலைமையையே உருவாக்கி விடும்.

எனவே உலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவால் இந்தச் சின்னஞ்சிறு தீவின் கேந்திர முக்கியத்துவம், உறுதியான இராணுவக் கட்டமைப்பு, அரசின் பின்னாலுள்ள மக்கள் ஆதரவு, சர்வதேச வல்லாதிக்கப் போட்டி என்பன காரணமாக எதுவும் செய்யமுடியாதென்ற புறச் சூழலே நிலவுகிறது.

அதேவேளையில் பொம்பியோ பொறுப்புக் கூறல் பற்றிக் குறிப்பிட்டமையையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்வெக் இந்நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசியமையையும் வைத்துக்கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கை மீது இனப் பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்துங்களைக் கொடுக்கப் போகின்றன என்ற மாயையை தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தரப்பினர் பரப்ப முயல்கின்றனர்.

ஆனால் கடந்த காலங்களில் எவ்வாறு இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தமது நலன்கள் சார்ந்து பயன்படுத்தினரோ அது போன்றே எதிர்காலத்திலும் அவர்கள் அந்த எல்லையைத் தாண்டப் போவதில்லை. அதேவேளையில் இலங்கை அரசும் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாதளவுக்கு உறுதியாக உள்ளது என்பதையும் மறுத்துவிடமுடியாது.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

10.11.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, அமெரிக்காபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE