Saturday 19th of June 2021 10:38:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவின் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய  இராஜதந்திரத்துக்குள் இலங்கை அகப்படுமா?

இந்தியாவின் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய இராஜதந்திரத்துக்குள் இலங்கை அகப்படுமா?


அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் பாம்பியோ வருகை தந்த பின்பு இந்தியா இலங்கை விடயத்தில் கரிசனை அதிகம் கொள்வது போல் தெரிகிறது. அதற்கான அவசியப்பாடு இந்தியாவுக்கு அதிகமாக அமைந்திருப்பதுவும் சீனா தொடர்பில் அமெரிக்கா கொண்டிருக்கும் நிலைப்பாட்டை ஒத்ததாக இந்தியா இருக்கின்ற போதும் நிதானப் போக்கினை கடைப்பிடிகிறது. அதே நேரம் இந்தியா சீனாவுக்கு எதிரான கூட்டு பாதுகாப்பு நகர்வுகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாகவே இலங்கை அரசியல் விடயத்தில் அதிக ஈடுபாட்டைக் காட்ட முனைகிறதைக் காணமுடிகிறது. இக்கட்டுரையும் இந்தியா இலங்கை விடயத்தில் அண்மைக்காலத்தில் பின்பற்றிவரும் அணுகுமுறைகளில் காணப்படும் மாற்றங்களை தேடுவதாக உள்ளது.

28.10.2020 அன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பால்லே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்திந்தார். இருவரது உரையாடலிலும் அரசியல் தீர்வு முயற்சிகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்திற்கு பின்பான அடுத்த விடயங்கள் இரு நாட்டு உறவுகள் இந்திய பிரதமருடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பினது பேச்சுக்கள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விடயம் என்பன உரையாடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது மட்டுமன்றி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை தரவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியது.

இதன் மூலம் தெளிவான நகர்வுக்கான அணுகுமுறை ஒன்றினை இந்தியத் தரப்பு மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடியும். பாம்பியோவின் வருகையின் போது இலங்கை ஆட்சித்துறையின் தெளிவான போக்கு சீனாவுடனான உறவின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தியிருந்தது. அதனை கருத்தில் கொண்டும் இலங்கை சீன உறவின் முக்கியத்துவம் கருதியும் இந்தியாவின் அணுகுமுறைகள் அமைய ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இலங்கையின் ஆட்சியாளர்கள் தாம் பின்பற்றுகின்ற வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தை புவிசார் அரசியலைக் கருத்தில் கொள்ளாத போக்கினை கையாள்வதாக இந்திய ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்படுகிறனர். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தவறானவையாக தென்படாத போக்கும் நிலவுகிறது. புவிசார் பொருளாதாரத்தையும் புவிசார் அரசியலையும் ஓரே திசைக்குள் நகர்த்த முடியாத இயல்பான போக்கு ஒன்றுக்குள் இலங்கைத் தரப்பு அகப்பட்டுள்ளது. அதாவது சீனாவிடமிருந்து பொருளாதாரத்தை மட்டும் பெறுதல் என்பது சாத்தியமற்ற பொறிமுறையாகும். காரணம் சீனாவுக்கு பொருளாதார ஒத்துழைப்புடன் தெளிவான அரசியல் நலன் ஒன்றும் காணப்படுகிறது. அத்தகைய அரசியல் நலன்கள் நிறைவேற்றும் போது சீனாவின் இராணுவப் பலம் தவிர்க்க முடியாது இணைத்துக் கொள்ளப்படும் நிலை ஏற்படும். அதுவே இந்திய நலனுக்கு தடையான விடயமாக தெரிகிறது. கடந்த ரணில் விக்கிரமசிங்க - மைத்திரி ஆட்சியில் அமெரிக்க-சீன முரண்பாடு வெளிப்படையாக அமையாததது மட்டுமன்றி மேற்குலகின் நட்புச்சக்தியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்போது இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இந்தியா பற்றி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை தேர்தல் காலத்தில் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. ஆனால் அதனை தொடருவார்கள் என்று எதிர்பார்த்த இந்தியாவுக்கு ஒரு வகை ஏமாற்றமாகவே அது அமைந்துள்ளது என்பது புரிந்து கொள்ளக் கூடிய விடயமாகும். இதனாலேயே இந்தியாவின் அணுகுமுறை இலங்கை நோக்கி அமையும் போது இலங்கைத் தமிழ் தலைமைகளை சார்ந்து செயல்படும் போக்கினை காணமுடிகிறது.

இலங்கை பொறுத்து இந்தியாவின் அணுகுமுறையில் அவ்வப்போது முன்னகர்வுகளும் தற்காலிக பின்வாங்கலும் நிலவுகின்றதை கடந்த காலம் முழுவதும் அவதானிக்க கூடிய இன்னோர் விடயமாக தெரிந்தது. அதனை இனிவரும் காலங்களில் இந்தியா பின்பற்ற முடியுமா என்பது கேள்விக்குரியதே. அதற்கு வலுவான புறச்சூழல்கள் வெளிப்படையாக செயல்படுவதனையும் இலங்கை என்பது இந்துசமுத்திரத்தின் மைய நாடு என்ற அடிப்படைக்குள்ளுமே அமெரிக்க - இந்திய அணிபார்க்க முயலுகிறது. அதனையே சீனாவும் கருத்தில் கொள்கின்றன. அதனால் நிலமை இலங்கைக்கானதாக அமையவுள்ள வாய்ப்புக்கள் ஆபத்தான நிலையை எட்ட முடியும்.

குறிப்பாக இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி இலங்கையுடனான கடல்படை பயிற்சி ஒன்றினை கடந்த மாதம் திருகோணமலை கடல்பரப்பினை அண்டிய பகுதியில் மேற்கொண்டிருந்தது. தற்போது 06.11.2020 முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மலபார் கடல்படைப்பயிற்சி ஒன்றினை இந்தியா அமெரிக்கா ஜப்பான் அவுஸ்ரேலியா என்பன இணைந்து மேற்கொள்கின்றன. இதன் இரண்டாவது கட்டம் எதிர்வரும் 12.11.2020 முதல் மூன்று நாட்கள் அராபியக் கடல் பகுதியில் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய தெற்கு இந்து சமத்திரக் கடலையும் மேற்கு இந்துசமுத்திரப்'பகுதியிலும் இந்தகைய கடல்படைப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அண்மைய மைக் பாம்பியோவின் வருகையில் ஆசியாவின் முக்கிய தீவுகளான இலங்கையும் மாலைதீவும் கருதப்பட்டதுடன் மூலோபாய நிலங்களைக் கொண்ட சிறிய நாடுகளையும் தீவுகளையும் நோக்கி அமெரிக்கா தனது வெளியுறவை திசை திருப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனால் இந்த நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுவந்த சீனாவின் போக்கினை தடுப்பதே அதன் பிரததான உத்தியாகத் தெரிகிறது. ஒருவகையில் தீவுகளின் நட்புத் தேசமாக விளங்கிய சீனாவின் போக்கினை கையாளும் விதத்திலேயே அமெரிக்க வெளியுறவுத் துறை அத்தகைய கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நிரந்தரமான நெருக்கடியை தீவு நாடுகளுக்கும் சழிறிய நாடுகளுக்கும் ஏற்படுத்தும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

எனவே இந்தியாவின் போக்கில் ஏற்பட்டுள்ள மாறுதல் நிரந்தரமானதாக அமைய வாய்ப்புள்ளது. காரணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஸ்குவாட் நாடுகளுக்கும் இந்து சமுத்திரம் அவசியமானதாக அமையப்பெற்றுள்ளது. அதிலும் இந்து சமுத்திரத்திலிருந்து சீனாவின் பிரசன்னத்தை தவிர்க்கும் விதத்தில் செயல்பட ஆரம்பித்துள்ளன. அதனால் இந்தியாவின் அணுகுமுறையும் நீண்ட காலத்திற்கு அவசியமானதாக அமைய வாய்ப்புள்ளது. இந்தியா தனது பாதுகாப்பினை இலக்காக கொள்வதுடன் மட்டும் நின்றுவிடாது இந்து சமுத்திரப் பாதுகாப்பினையும் அதன் கட்டுப்பாட்டையும் சீனாவுக்கு பகிரத் தயாராக இல்லாத சூழலையும் கொண்டுள்ளது. அடிப்படையில் சீனா மட்டுமல்ல அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளும் இந்து சமுத்திர நாடுகள் அல்லாதவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் இந்து சமுத்திரம் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளின் பிரதிபலிப்பே இன்றைய நெருக்கடிக்கு காரணமாகும். வலரலாற்றுப் பேராசியர் கே.என். பணிக்கர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் முன்வைத்த கருத்துக்களை மையப்படுத்தி நோக்கும் போது இந்து சமுத்திரமே இந்தியாவின் உயர் வாழ்வு என்று குறிப்பிட்டிருந்தார்.. அதனை கடந்த கால இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்ற தவறின் பிரதிபலிப்பே இன்றைய நெருக்கடிக்கு காரணமாகவுள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவிடமும் ஸ்குவாட் நாடுகளிடமும் தங்கியிருக்க வேண்டிய நிலையை இந்தியாவுக்குள் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்தியாவை கையாளும் வலிமையுட்ன் இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் உள்ள போதும் இந்தியாவின் இலக்கு இந்தியாவுக்கானதாக மட்டுமல்ல என்பதை விளங்கிக் கொளளுதல் வேண்டும். அதனால் இந்து சமுத்திர நாடான இலங்கை தீவு அதிக விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ள தயாராக வேண்டும். அல்லது முழுமையான எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ள தயாராக வேண்டும். நடுநிலை என்பது பேச்சளவில் இருக்கும் தத்துவமே அன்றி நடைமுறைசார் தத்துவமல்ல. இலங்கையின் பொருளாதாரத் தேவைக்கும் அரசியல் பாதுகாப்புக்கும் சீனா அவசியமானது. ஆனால் இந்தியாவின் புவிசார் அரசியலுக்கும் அதன் பாதுகாப்பிற்கும் இலங்கை இந்தியாவுக்கு அவசியமானது என்ற வகையில் முரண்பாட்டின் தளம் இயல்பானதாகவே அமையப் பெற்றுள்ளது.

எனவே இந்தியா பொறுத்து எழுந்துள்ள அரசியல் போக்கானது இலங்கை ஆட்சியாளரால் கையாளப்பட முடியும் என்ற வாதம் ஒரு எல்லைவரை நகரக் கூடியது. அதன் எல்லை எதுவென்பதே தற்போதுள்ள கேள்வியாகும். அதுவும் இலங்கை அரசியல் இந்து சமுத்திரத்திற்குள் அகப்பட்டுள்ளதனால் அதன் எல்லை இந்து சமுத்திரம் வரை விரிவடைந்துவிட்டது. சீனாவா அமெரிக்காவா என்பதே தற்போதுள்ள இந்துசமுத்திரப் போட்டியாகும். இருபத்தியோராம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு எனக்குறிப்பிட்ட அமெரிக்க கடற்படையை உருவாக்கிய தயார்மாகன் இந்து சமுத்திரத்தை யார் ஆளுகிறார்களே அவர்கள் ஆசியாவை ஆளும் திறன் உடையவர்களாக மாறுவார்கள் ஆசியாவை ஆளுபவர் உலகத்தை ஆளுவார்கள் என்பதே அவரது சிந்தனையாகும். அதுவே இன்றய போட்டியாகும். அதற்குள் இலங்கையின் அரசியலும் உள்ளடங்கியுள்ளது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE