Saturday 20th of April 2024 03:50:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 29 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 29 (வரலாற்றுத் தொடர்)


'நான் சிங்கக் கொடி ஏற்றப்படவேண்டும் என விரும்புவதற்கான காரணம் என்னவெனில் நாம் எமது தேசத்தைத் தோற்று மக்கள் இங்கிலாந்து அரசரைத் தமது அரசராக ஏற்றுக்கொண்ட சமயத்தில் இறுதிக் கண்டியரசன் சிம்மாசனத்திலிருந்து அகற்றப்பட்டு அவனது சிங்கக் கொடி இறக்கப்பட்டது. இப்போது ஆட்சியதிகாரத்தை இங்கிலாந்து மீளளிக்கையில் அதனுடன் கூடவே அந்தக் கொடியையும் இங்கிலாந்து மீளளிக்கவேண்டுமென விரும்புகிறேன். நாம் சுதந்தி;ர தினத்தன்று சிங்கக் கொடியை ஏற்ற வேண்டுமென விரும்புவதற்கு அதுவே பிரதான காரணமாகும்'.

1947ம் ஆண்டு ஒக்டோபர் 14ம் நாள் இலங்கையின் முதலாவது பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் 1948ன் முற்பகுதியில் இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்படுமென இங்கிலாந்து டி.எஸ்.சேனநாயக்காவுக்கு அறிவித்த நிலையில் நாட்டின் தேசியக் கொடி எப்படியமைய வேண்டுமென தீர்மானிக்கப் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்விவாதத்தில் இலங்கையின் தேசியக் கொடி சிங்கக் கொடியாக இருக்கவேண்டுமென்பதை நியாயப்படுத்தி டி.எஸ்.சேனநாயக்க தெரிவித்த கருத்து இது.

அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்க ஒரு சிங்கள தேசியவாதியாக நின்று நாங்கள் பறிகொடுத்த சுதந்திரத்தை மீளப்பெறும்போது இறக்கப்பட்ட தங்கள் கொடி மீண்டும் ஏற்றப்படவேண்டுமென விரும்புவதில் தவறேதும் இருக்கமுடியாது. ஆனால் 1815ல் ஆங்கிலேயர் கண்டி அரசைக் கைப்பற்றிய போது சிங்கக் கொடி கண்டி அரசின் கொடியாக இருந்ததேயொழிய முழு நாட்டினதும் கொடியாக இருக்கவில்லை. கோட்டை இராச்சியம் போத்துக்கேயரால் கைப்பற்றப்பட்டபோது அவர்களின் கொடி சிங்கக் கொடியாக இருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. சிங்கள தேசத்தின் வீரநாயகனாகச் சித்தரிக்கப்படும் துட்டகைமுனுவின் கொடியும் சிங்கக் கொடியல்ல. அதேபோன்று யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடியும் நந்திக்கொடியாகவே இருந்தது.

அதாவது ஐரோப்பியரின் வருகையின்போது கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று இராசதானிகள் நிலை பெற்றிருந்தன. இவற்றில் கண்டி அரசு மட்டுமே நமது கொடியாக சிங்கக்கொடியை ஏற்றுக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டபோது அதன் கொடி நந்திக்கொடியாகவே இருந்தது.

அதில் கவனத்திலெடுக்க வேண்டிய முக்கிய அம்சம் சிங்கக்கொடி இறக்கப்பட்டு பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி ஏற்றப்பட்டபோது நாயக்க வம்ச அரசனான கீர்த்தி ஸ்ரீவிக்கிரமாஜசிங்கனிடமிருந்தே கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டது. ஆனால் ஆங்கிலேயருடன் இணைந்து சிங்கக் கொடியை இறக்கி யூனியன் ஜாக் கொடியை ஏற்ற ஒத்துழைத்தவர்கள் எஹலப்பொல, மொல்லியகொட போன்ற சிங்களத் தளபதிகளே!

எனவே சிங்கக் கொடி என்பது முழுத் தேசத்தி;ன் கொடியாக மட்டுமின்றி முழுச் சிங்கள மக்களின் கொடியாகக் கூட ஏற்றுக்கொள்வதற்குப் பொருத்தமற்றதென்றே கருத வேண்டியுள்ளது.

எனினும் இலங்கை சுதந்திரம் பெறும்போது இது ஒரு சிங்கள தேசம் என்பதை வலியுறுத்தவே கண்டி அரசையும் கண்டி அரசனின் கொடியையும் தந்திரமான முறையில் பயன்படுத்தினார் டி.எஸ்.சேனநாயக்க.

எனவே ஆரம்பத்தில் தமிழ் தலைவர்கள் தேசியக் கொடி விடயத்தில் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இது பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தேசியக் கொடி சிங்களவரின் சிங்கக் கொடியையும் தமிழரின் நந்திக்கொடியையும் முஸ்லிம்களின் பிறைக் கொடியையும் கொண்டதாக அமையவேண்டுமென வலியுறுத்தினார். ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களும் தேசியக் கொடியில் மூவர்ணங்களையும் சேர்த்து அதன் வழி தாமும் சுதந்திரம் வென்றெடுத்த விடுதலையிலும் பங்குபற்றுகின்றோம் என தாம் உணரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இவ்வாறே வன்னியசிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரும் தேசியக் கொடியில் தமிழர், முஸ்லிம்களின் சின்னங்கள் இணைக்கப்படவேண்டுமென வலியுறுத்தினர்.

அது மட்டுமின்றி இலங்கைத் தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்களாயிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஏ.ஈ.குணசிங்க போன்ற தலைவர்களும் இலங்கையின் தேசியக் கொடி சிங்கக் கொடியாக அமையவேண்டுமென்பதில் பிடிவாதமாயிருந்தனர். அதேவேளையில் சில முஸ்லிம் தலைவர்களும் சிங்கக் கொடிக்கு ஆதரவு தெரிவித்தனர். பெரி.சுந்தரம் போன்ற மலையகத் தலைவர்களும் இந்த நிலைப்பாட்டுக்குத் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கவில்லை.

எனினும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் சுயேட்சை உறுப்பினர்களான சி.சுந்தரலிங்கம், மகாதேவா போன்றோரும் கடுமையாக எதிர்த்த நிலைமையைச் சமாளிக்க டி.எஸ்.சேனநாயக்க ஒரு தந்திரத்தைக் கையாண்டார்.

அவர் பாராளுமன்றத்தில் சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடியை ஏற்றிய பின்பு அதில் மாற்றம் செய்யவேண்டுமென்பது யாவரதும் விருப்பமாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விருப்பத்துக்குப் பொருத்தமான கொடியை ஏற்றலாம் எனவும் சிங்கக் கொடியை ஏற்றிய பின்பு வேறு ஒரு கொடியை அதற்குப் பதிலாக ஏற்றுவதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது எனத் தெரிவித்தார். அவரின் இந்த வாக்குறுதி சகல தரப்பினராலும் ஏற்கப்பட்ட நிலையில் இலங்கை சுதந்திரம் பெறும் நாளில் இலங்கையின் தேசியக் கொடியாகச் சிங்கக் கொடியே ஏற்றப்படவேண்டுமென்ற பிரேரணை மட்டக்களப்புப் பிரதிநிதி சின்னலெப்பையினால் முன் வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே 1936ல் தனிச் சிங்கள அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது வை..துரைசாமி, மகாதேவா, பாலசிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களை எவ்வித அதிகாரமுமற்ற துணை அமைச்சர்களாக நியமித்ததன் மூலம் தமிழர் தரப்பின் எதிர்ப்பை மழுங்கடித்தைப்போன்று ஜீ.ஜீ.பொன்னம்பலம் லண்டனில் இருந்த வேளையில் ஏனைய தமிழ்த் தலைவர்களுக்கு வாக்குறுதி;களை வழங்கி அவர்களின் ஆதரவைப் பெற்று 90 வீத வாக்குகளுடன் அரசாங்க சபையில் சோல்பேரி அரசியலமைப்பை நிறைவேற்றியமை போன்று மீண்டும் தேசியக் கொடி விடயத்திலும் டி.எஸ்.சேனநாயக்க தந்திரத்தைக் கையாண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டார்.

ஏற்கனவே இரு தடவைகள் டி.எஸ்.சேனநாயக்கவிடம்; ஏமாந்த அனுபவத்தைப் பொருட்படுத்தாமலே தமிழர் தரப்பினர் மூன்றாவது தடவையாகவும் அவரின் நோக்கத்தை நிறைவேற்ற அனுமதித்து விட்டனர்.

எனவே சுதந்திர நாளில் தேசியக் கொடியாகச் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு விட்டது. எனினும் தமிழர் தரப்பினர் கொடுத்த தொடர் அழுத்தங்கள் காரணமாக இலங்கையின் தேசியக் கொடி சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க டி.எஸ்.சேனநாயக்கவால் 1948 மார்ச் மாதம் 6ம் திகதி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் 7 பேரைக்கொண்ட ஒரு தேசியக் கொடிச் செயற்குழு அமைக்கப்பட்டது.

இரண்டு வருடங்களாக இக்குழு பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இறுதியில் 1950 மாசி 13ம் நாள் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. சிவப்பு நிறப்பின்னணியில் கொடியின் மத்திய பகுதியில் வாளேந்திய சிங்கம் பொன்னிறத்தில் அமைந்திருக்கவேண்டுமெனவும் நான்கு மூலைகளிலும் பொன்னிற அரசமிலைகள் பொறிக்கப்படவேண்டுமெனவும் அதேவேளையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அடையாளப்படுத்தும் விதத்தில் சம அளவிலான செம்மஞ்சள், பச்சை நிறக்கோடுகள் கொடியின் அளவுக்கு 1.5 என்ற விகிதாசார அளவில் அமைக்கப்படவேண்டுமெனவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இக்கொடியில் சிங்களவர்களின் சின்னமான வாளேந்திய சிங்கம் பொறிக்கப்பட்ட அதேவேளையில் தமிழர்களின் நந்தியோ, முஸ்லிம்களின் பிறையோ இணைக்கப்படவில்லை. இரு இனங்களும் இரு வர்ணக் கோடுகளால் அடையாளப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி நான்கு மூலைகளிலும் பௌத்த மதச் சின்னமான அரசிலைகள் பொறிக்கப்பட்டன.

எனவே இக்கொடியானது நான்கு மூலைகளிலும் பொறிக்கப்பட்ட அரசமிலைகள் மூலம் இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவருமே பௌத்த மதத்திற்கு உட்பட்டவர்கள் என்ற செய்தியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. வாளேந்திய சிங்கக் கொடியின் மத்தியிலும் ஏனைய இரு இனங்களின் அடையாளங்களும் கோடுகளாக ஒரு ஓரத்திலும் பொறிக்கப்பட்டமை நாட்டின் தலைமைத்துவமான இனம் சிங்களவர் என்பதையும் ஏனையவர்கள் அவர்களுடன் அண்டி வாழ்பவர்கள் என்பதையும் வலியுறுத்துகின்றன. அவர்கள் தமிழர்கள், முஸ்லிம்களின் நந்தியையும் பிறையையும் கூடி ஏற்கத் தயாராயிருக்கவில்லை.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்தாலும் 1978ல் பௌத்தத்துக்கு முதலிடம் என்பது அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் அண்மைக் காலங்களில் இலங்கை ஒரு பௌத்த சிங்கள தேசம் என்ற கோஷம் சிங்கள அரசியல்வாதிகளாலும் பௌத்த பீடங்களாலும் உரத்து வலியுறுத்தப்பட்டாலும் இலங்கையின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டபோதே இது ஒரு சிங்கள பௌத்தர்களுக்குரிய தேசம் என்பதும் ஏனையோர் அவர்களை அண்டி வாழ்பவர்கள் என்பதும் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.

இக்கொடி பற்றி விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது தமிழ் தலைவர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்கள் எவ்வளவுதான் தங்கள் வாதங்களை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் ஆதாரங்களுடன் முன்வைத்த போதிலும் டி.எஸ்.சேனநாயக்கவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் தங்கள் நிலைப்பாட்டில் ஒரு அணுகூட இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்தார்கள். இறுதியில் அவர்களின் பெரும்பான்மை மூலம் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.

சேர்.பொன்.அருணாசலம் காலத்திலிருந்து ஜீ.ஜீ.பொன்னம்பலம். எஸ்,ஜே.வி.செல்வநாயகம் காலம் வரை சிங்களத் தலைமைகள் வாக்குறுதிகளை வழங்குவதும் பின் ஏமாற்றுவதுமே இலங்கை அரசியலில் மீண்டும் மீண்டும் பதியப்படும் வரலாறாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், வவுனியாத் தொகுதியின் சுயேச்சை உறுப்பினரான சி.சுந்தரலிங்கம் தேசியக் கொடியை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்தார். அப்போதுகூட ஏனைய தமிழ் உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்றப் பதவிகளையும் துறந்து தங்கள் பலமான எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இன்னொரு புறம் வவுனியா தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுந்தரலிங்கமும் அதே தேசியக்கொடியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். எனவே அவரின் எதிர்ப்பும் அர்த்தமற்றுப்போய்விட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளன்று தனிச் சிங்களக்கொடி ஏற்றப்படுவதை எதிர்த்து அனைத்து தமிழ்த் தலைவர்களும் புறக்கணித்திருந்தால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அது தொடர்பாகக் கவனம் செலுத்தியிருப்பார்கள். ஏனெனில் தம்மால் சுதந்திரம் ஒரு நாட்டுக்கு வழங்கப்படும்போது அந்த நிகழ்வை அந்த நாட்டின் ஒரு தேசிய இனம் புறக்கணிப்பதைத் தவிர்க்கவே முயன்றிருப்பார்கள்.

சிங்கள மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கும் தமிழ் மேட்டுக்குடித் தலைமைகளுக்குமிடையேயான உள்ளார்ந்த இணக்கம் தமிழர்களை ஒடுக்குவதற்கான வாய்ப்புகளைச் சிங்கள தேசத்துக்கு மீண்டும், மீண்டும் வழங்கியமையே இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சகல நெருக்கடிகளுக்கும் அடிப்படைக் காரணமாகும் என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மையாகும்.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE