Friday 19th of April 2024 05:47:12 PM GMT

LANGUAGE - TAMIL
-
பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி எதற்கு? - சபையில் சி.வி.வி கேள்வி!

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி எதற்கு? - சபையில் சி.வி.வி கேள்வி!


"நாட்டில் 11 வருடங்களுக்கு முன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில், அவசியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகமான நிதியை அரசு ஒதுக்கி வருகின்றது. இதனூடாக இந்த அரசு இன்னொரு போரை எதிர்பார்க்கின்றதா? அவ்வாறு ஒரு போர் என்றால் அது தமிழர்களுடனா? இந்தியாவுடனா? மேற்கு நாடுகளுடனா? யாரைப் பார்த்து அரசு அஞ்சுகின்றது?" - இவ்வாறு சபையில் நேற்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அரசு 2021ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுக்கு அபரிதமான தொகையை ஒதுக்கியுள்ளது. எதற்காக இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது? யாருடன் போரை மேற்கொள்ள இந்த நிதித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னொரு போரை எதிர்பார்த்தா அரசு இந்தத் தொகையைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளது? அப்படி போர் என்றால் யாருடன்? அந்தப் போர் தமிழர்களுடனா அல்லது இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா? யாரைப் பார்த்து இந்த அரசு அஞ்சுகின்றது.

எதற்காகப் போர்க்கால வரவு - செலவுத் திட்டமொன்றை சமாதான காலத்தில் முன்வைத்துள்ளீர்கள்?என்னைப் பொறுத்தவரை இந்த வரவு - செலவு திட்டத்தில் குறைந்த நிதியைப் பாதுகாப்புக்கும், அதிகளவு நிதியை நுண் பொருளாதார மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் முகத்துடன் கோபித்துக்கொண்டு உங்கள் மூக்கை வெட்டப் பார்க்கின்றீர்கள். நாட்டின் ஒரு சாராரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதால்தான் போர்க்கருவிகள், பீரங்கிகள், தற்பாதுகாப்புக் கவசங்களை வாங்கிக் குவிக்கின்றீர்கள்.

காலாட் படைகளை அதிகரிக்கின்றீர்கள். பெரும்தொகை கடற்படை உபகரணங்களை வாங்குகின்றீர்கள். இதுவரை கண் மண் தெரியாமல் வாங்கிக் குவித்ததால்தானே எமது தேசியக் கடன் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.

2021ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் 1.9 ட்ரில்லியன் ரூபா. உத்தேச செலவு என்றுமில்லாதவாறு 3.52 ட்ரில்லியன் ரூபாவாக உயரப் போகின்றது. 1.56 ட்ரில்லியன் ரூபா விழுக்காட்டை எப்படி சமாளிக்க போகின்றீர்கள்? இது நீங்கள் தமிழர்களை நம்பாததால் வந்த வினை. உங்கள் தேசியக் கடன் எங்களையும் பாதிக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

விரைவில் உங்களை நம்பத்தகுந்த கடன் கேட்பவர்களாக நாடுகள், நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க முடியாது நீங்கள் தவிக்கின்றீர்கள்.

எவ்வாறு மேலும் கடன் தர முடியும் எனக் கேட்பார்கள். தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப் பிரித்துத் தருமாறு கேட்கவில்லை.

ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்றத் தயாராகவுள்ளோம்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திகள் குறித்து அரசு கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். போர் முடிந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள் இன்னமும் வறுமையான மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. எனவே, வேலைவாய்ப்புகள், அபிவிருத்திகள் என்பவற்றுக்கு அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எனவே, இதுகால வரையும் சிந்தித்த வழியிலேயே சிந்திக்காது புதுவிதமாகச் சிந்திக்கப் பழகுங்கள்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE