Friday 19th of April 2024 07:31:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொது முடக்க நிலைக்கு நகரும்  ரொரண்டோ, பீல் பிராந்தியங்கள்!

பொது முடக்க நிலைக்கு நகரும் ரொரண்டோ, பீல் பிராந்தியங்கள்!


ஒன்ராறியோ மாகாணத்தின் ரொரண்டோ மற்றும் பீல் பிராந்தியங்கள் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் பொதுமுடக்க நிலைக்கு நகர்கின்றன.

மாகாணத்தில் தொற்று நோயாளர் தொகை கூர்மையாக அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இரு பகுதிகளையும் பொது முடக்க நிலைக்கு நகர்த்தும் அறிவிப்பை மாகாண முதல்வர் டக் போர்ட் வெளியிட்டார்.

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பொது முடக்க நிலை குறைந்தபட்சம் 28 நாட்கள் நீடிக்கும். இக்காலப்பகுதியில் பொது முடக்க உத்தரவைப் புறக்கணித்து சுகாதார விதிகளை மீறுவோருக்கு 750 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என மாகாண அரசு அறிவித்துள்ளது.

தொற்று நோய் நெருக்கடி மேலும் மோசமடைவதைத் தடுக்க இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தேவையாகவுள்ளதாக முதல்வர் போர்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், டர்ஹாம் மற்றும் வாட்டர்லூ பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை (கடும் கட்டுப்பாட்டுப் பகுதி) மண்டலங்களுக்குள் நகர்கின்றன.

அதே நேரத்தில் ஹூரான்-பெர்த், சிம்கோ-முஸ்கோகா, தென்மேற்கு ஒன்ராறியோ மற்றும் விண்ட்சர் ஆகியவை ஒரேஞ் (கடும் கட்டுப்பாடுகளை நோக்கி நகர வேண்டிய பகுதி) மண்டலத்திற்குள் நுழைகின்றன.

பொது முடக்க நிலைக்கு நகரும் ரொராண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாகப் பேணப்படும்.

குடும்ப உறுப்பினரல்லாத எந்தவொரு நபரும் வீடுகளில் ஒன்றுகூட முடியாது.

தனியாக வசிக்கும் நபர்கள் அயலவர்களோரடு தொடர்புகளை வைத்திருக்க முடியும்.

வெளிப்புறக் கூட்டங்களில் 10 பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது .

உணவகங்களில் பொதி செய்த உணவு விநியோகம் மட்டுமே செய்யலாம். அல்லது வீடுகளுக்கு விநியோகம் செய்யலாம்.

மத வழிபாடுகள் அல்லது நிகழ்வுகள், இறுதி சடங்குகள் மற்றும் திருமண நிகழ்வுகளில் உட்புறங்கள் மற்றும் திறந்த வெளிப்புறங்களில் 10 பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது.

ஜிம்கள் உள்ளிட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்படும்.

அத்தியாவசியமற்ற சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களின் உள்ளே மட்டுப்படுத்தப்பட்ட அளவானோரே பொருட்களை கொள்வனது செய்ய அனுமதிக்கப்படுவர். அல்லது வீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்கப்படும்.

தனிப்பட்ட பராமரிப்பு சேவை மையங்கள், சூதாட்ட விடுதிகள், களியாட்ட மையங்கள் மூடப்படும்.

இரண்டாம் நிலை கல்வி நிறுவனங்கள் இணைய வழி ஊடான விரிவுகளையே முன்னெடுக்க முடியும். நேரடிப் பயிற்சி அவசியமான மருத்துவ மாணவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும்.

மருந்தகங்கள், மருத்துவ நிலையங்கள், பல் சிகிச்சை நிலையங்கள், உணவுப் பொருள் விற்பனை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் கட்டுப்பாடுகளைப் பேணியவாறு திறக்க முடியும்.

பொது முடக்க நிலை காலப்பகுதியிலும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ரறியோவில் நேற்று வெள்ளிக்கிழமை புதிய தொற்று நோயாளர் தொகை 1,418 ஆக பதிவானது. அத்துடன் மருத்துவமனைச் சேர்க்கை 22%, தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதி 50% அதிகரித்த நிலையில் பொது முடக்க நிலைக்கு நகரும் அறிவிப்பை மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மாகாணத்தில் நேற்று மேலும் 8 கொரோனா மரணங்கள் பதிவாகின. இவற்றுடன் ஒன்ராறியோவில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,451 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மாதத்தில் இதுவரை 315 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய நாட்களில் பதிவான தொற்று நோயாளர் தொகையில் 80 வீதமானவர்கள் பொது முடக்க நிலைக்கு நகரும் சிவப்பு மண்டல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE