'தமிழர்களின் பலத்தைச் சிதைக்கும் இரண்டாவது வியூகம்'
பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் பெருந்தொகையான சிங்களவர்களை இறக்குமதி செய்கின்ற அரச குடியேற்றத்திட்டங்களைத் தமிழர் ஆட்சேபித்துள்ளனர். குடியேற்றம் பற்றிய அவர்களின் கவலை அவர்களின் உடல் பற்றிய பாதுகாப்பின்மையுடனும் அவர்களின் பாரம்பரிய தாயகத்தில் அவர்கள் சிறுபான்மையாகி விடுவர் என்ற அச்சங்களுடனும் தொடர்பானது.
இது 1981ல் இலங்கை வந்த சர்வதேசச் சட்ட வல்லுனர் ஆணைக்குழுவின் தூதுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் வேர்ஜீனியா லியரி அவர்கள், இலங்கை அரசாங்கத்தால் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்தாகும்.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது ஒரு படையெடுப்பை நடத்தி மேற்குக் கரை, ஜோர்தானின் ஒரு பகுதி, எகிப்தின் சினாய், சிரியாவின் கோலான் குன்று போன்ற பகுதிகளைக் கைப்பற்றிய போர் நடவடிக்கையை தலைமை தாங்கி வழிநடத்தியவரும் பின்னாட்களில் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்தவருமான மோசே தயான், எத்தனையோ படையெடுப்புகளை இரத்தம் சிந்தி மேற்கொள்வதைவிட குடியேற்றங்கள் மூலம் நிலங்களைச் சுலபமாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும்' எனக் கூறியிருந்தார்.1948ம் ஆண்டு 18ம் இலக்கச் சட்டத்தால் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதன் மூலம் தமிழர்களின் பாராளுமன்றப் பலம் பாதியாகக் குறைக்கப்பட்டது. தமிழர் பலத்தைக் குறைக்கும் அந்த முதலாவது வியூகத்தின், இலங்கைப் பாராளுமன்றத்தில் தாம் நினைத்தவற்றை நிறைவேற்றக்கூடிய பெரும்பான்மையை நிரந்தரமாகத் தக்க வைக்கவும் சிறிய முயற்சிகளுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவும் அடித்தளமிடப்பட்டது. அவ்வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளும் வாய்ப்பு சிங்களத் தரப்புக்கு இலகுவாகவே ஏற்படுத்தப்பட்டது.
அதன் அடுத்தகட்டமாகத்தான் தமிழர் பலத்தை மேலும் சிதைப்பதற்கான இரண்டாவது வியூகமாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இத்திட்டத்தின் பிரமாண்டமான வடிவம்தான் கல்லோயா அல்லை – கந்தளாய் ஆகிய குடியேற்றத்திட்டங்களாகும்.
1949 ஆகஸ்ட் 28ம் நாள் பிரதமர் டி.எஸ்.சேனாயக்க கல்லோயா குடியேற்றத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லோயா ஆற்றைத்திசை திருப்பி இங்கினியாகலையில் ஒரு பிரமாண்டமான அணை கட்டப்பட்டது. சேனநாயக்க சமுத்திரம் என அழைக்கப்படும் இந்த பிரமாண்டமான நீர்த்தேக்கம் இலங்கையின் மிகப் பெரிய நீர்த் தேக்கம் எனக் கருதப்படுகின்றது.
ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கர் நீர்ப்பாசன வசதியுள்ள இத்திட்டத்தில் 150 குடும்பங்களையும் கொண்ட 40 குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் 6 குடியேற்றங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டன. 1956, 1958 காலப்பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் கல்லோயா முற்றிலும் தனிச் சிங்களக் குடியேற்றமாக்கப்பட்டது. அப்பகுதியில் தமிழர்களின் அடையாளம் கூடத்துடைத்தழிக்கப்பட்டு விட்டது. 1960ல் கல்லோய குடியேற்றவாசிகளுக்கென அம்பாறை என்ற தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. 1961ல் பிபிலை, மகாஓயா போன்ற சில சிங்களப் பிரதேசங்களும் இணைக்கப்பட்டு அம்பாறை என்ற புதிய நிர்வாக மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. அதையடுத்து சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக அதிகரித்த நிலையில் அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினராக்கப்பட அது ஒரு சிங்கள மாவட்டமாக மாற்றமடைந்தது.
இவ்வாறு கல்லோயா குடியேற்றத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழிடமான மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை என சிங்கள மாவட்டம் உருவாக்கப்பட்ட காலப்பகுதியிலேயே திருகோணமலை மாவட்டத்திலும் அல்லை மற்றும் கந்தளாய் குடியேற்றங்கள் மூலம் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்பட்டது. கந்தளாய் குளம் குளக்கோட்ட மன்னனால் கட்டப்பட்டு அதில் ஒரு பகுதி கோணேஸ்வரம் ஆலயப் பராமரிப்புக்கென வழங்கப்பட்டதாகக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. ஆனால் அது அக்ரபோதி என்ற சிங்கள மன்னால் கட்டப்பட்டதாக சிங்கள வரலாற்றாசிரியர்கள் சாதித்து வருகின்றனர்.
கந்தளாய் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 77 வீதம் சிங்களவர்களும் 23 வீதம் தமிழர்களும் குடியேற்றப்பட்டனர். அல்லையில் 65 வீதம் சிங்களவருக்கும் 35 வீதம் முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டன.
அவ்வாறே தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான முதலிக் குளம், மொரவேவா என்ற பேரில் குடியேற்றத்திட்டமாக்கப்பட்டு சிங்களவரும் தமிழரும் இனவிகிதாசாரத்தில் குடியேற்றப்பட்டாலும் இனக் கலவரங்களின் போது படையினர் உதவியுடன் தமிழர்கள் விரட்டப்பட்டு அது தற்சமயம் தனிச் சிங்களக் குடியேற்றத் திட்டமாகிவிட்டது. மேலும் கப்பற்துறை, பாலம் போட்டாறு பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களின் 5,000 ஏக்கர் காணிகளில் சிங்களவர் குடியேற்றப்பட்டனர். நொச்சியாகம என்ற அந்தக் குடியேற்றத்தைச் சுற்றி அபயபுர, மிகிந்தபுர, அலி ஒலுவ, சேருவாவில போன்ற பல குடியேற்றங்கள் முளைத்தன. இதேபோன்று சிங்களவர்களின் சட்டவிரோதக் குடியேற்றங்கள் மூலம் மேலும் பல குடியேற்றங்கள் உருவாகின.
1881ல் திருகோணமலை மாவட்டத்தில் 4.2 வீதமாக இருந்த சிங்களவர்களின் சனத் தொகை 1991ல் 33 வீதமாக அதிகரித்திருந்தது. அதாவது திருமலை மாவட்ட சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி சிங்களவராகிவிட்டது. அப்படியான நிலையில் 1976ல் சேருவில என்ற சிங்களத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. எவ்வாறு மட்டக்களப்பின் ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை உருவாக்கப்பட்டதோ அவ்வாறே திருமலை மாவட்டத்தில் சேருவில உருவாக்கப்பட்டது.
இவ்வாறே தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரம் திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு தமிழருக்கெதிராகத் தொடங்கப்பட்ட இரண்டாவது போர் வியூகம் கிழக்கை மட்டுமின்றி வடக்கையும் விட்டு வைக்கவில்லை.
1950 கல்லோயா அல்லை கந்தளாய் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டும் தமிழ் மக்களின் பல பாரம்பரிய வாழிடங்கள் சிங்கள மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் வவுனியா மாவட்டத்தில் பதவியா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சு.சுந்தரலிங்கம் சிங்களவருடன் சம அளவில் தமிழரைக் குடியமர்த்த முயன்றபோதும் தமிழ் மக்கள் அங்கு குடியேறச் சம்மதிக்கவில்லை. அதன் காரணமாக அங்கு அம்பலாங்கொட, அம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய வரண்ட பிரதேசங்களைச் சேர்ந்த சிங்களவர் குடியேற்றப்பட்டு இது ஒரு தனிச் சிங்களக் குடியேற்றமாக உருவாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஹொரவபத்தான, கெப்பிட்டிப்பொல, மாமடு, மடுகந்தை போன்ற பல சிங்களக் குடியேற்றத் தி;ட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1956ல் பாவற்குள குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டு அதில் 595 தமிழ்க் குடும்பங்களும் 453 சிங்களக் குடும்பங்களும் குடியமர்த்தப்பட்டன. வாரிக்குட்டியூர் என்ற ஒரு சிங்களப் பகுதி அங்கு உருவாக்கப்பட்டது. இக்குடியேற்றங்கள் உருவானமையின் காரணத்தால் தமிழர்கள் பாரம்பரிய மாவட்டமான வவுனியாவின் வவுனியா தெற்கு என்ற சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கப்பட்டது.
1965 – 1970 ஆட்சியிலிருந்த தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் உட்பட ஏழு கட்சிகள் இணைந்து ஐ.தே.கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தால் நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள மணலாற்றுப் பகுதி பெரும் வர்த்தகர்களுக்கு விவசாயப் பண்ணைகளை அமைப்பதற்காக 99 வருடக் குத்தகையில் தலா ஆயிரம் ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டன. அவ்வகையில் கெனற்பாம், டொலர் பாம், யானை பீடிக் கம்பெனிபாம், சிலோன் தியேட்டர் பாம், சரஸ்வதி பாம் உட்பட 12 பெரும் பண்ணைகள் அமைக்கப்பட்டன. இப்பண்ணைகளில் வேலை செய்வதற்கென அங்கு ஏராளமான மலையக மக்கள் குடியேற்றப்பட்டனர்.
1977ல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக உள்ள10ர் விவசாய உற்பத்திகளின் சந்தை வாய்ப்புகள் நலிவடைந்துபோகவே பல பண்ணைகளின் உற்பத்திகள் கைவிடப்பட்டன. 1977, 1979, 1983 காலப்பகுதிகளில் ஏராளமான மலையக மக்கள் தென்னிலங்கையை விட்டும் மலையகத்திலிருந்தும் விரட்டப்பட்டனர். அவர் காந்தீயம் என்ற தொண்டு நிறுவனத்தால் மணலாற்றில் அமைந்திருந்த பண்ணைகளில் குடியேற்றப்பட்டனர்.
அதேவேளையில் 1983ன் பிற்பகுதியில் கென்ற், டொலர் பண்ணைகளில் குடியிருந்த மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவை சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டன. திறந்த வெளிச்சிறை என்ற பேரில் அங்கு கொடிய குற்றவாளிகள் குடியேற்றப்பட்டனர். 1988 – 89 காலப் பகுதிகளில் குற்றவாளிகள் குடும்பத்தினரானவர்களும் ஏனையோர்களுமாக 35,000 பேர் குடியேற்றப்பட்டனர். மண்கிண்டியில் உள்ள தமிழ் மக்கள் விரட்டப்பட்டு ஜானகபுர என்ற குடியேற்றம் அமைக்கப்பட்டது.
1984ல் மணலாறு மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 48 மணி நேரத்தில் அங்கிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்த ஒழியலைக் கிராம மக்கள் ஒரே இரவில் 28 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் பண்ணைகளில் வாழ்ந்த தமிழர் மட்டுமின்றி கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், தென்னைமரவாடி, பட்டுக்குடியிருப்பு, புலிபாஞ்ச கல், தனிக்கல்லு, ஒழியமலை, தண்டுவான் போன்ற பாரம்பரிய தமிழ் கிராமங்களின் மக்களும் வெளியேற்றப்பட்டனர். அடுத்து மணலாறு வெலி ஓயா எனப் பெயர் மாற்றப்பட்டுத் தனிச் சிங்கள மாவட்டமாக அதாவது இலங்கையின் 26வது மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இவ்வாறே மன்னார் மாவட்டத்திலும் முந்திரிகைக்குளம் என்ற பாரம்பரிய தமிழ் கிராமத்திலிருந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டு 1,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட கஜூ வத்த என்ற குடியேற்றம் உருவாக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறே மடு ரோட் பகுதியிலும் ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது.
இவற்றைவிட மணலாற்றின் மண்கிண்டியில் ஜானகபுர என்ற சிங்களக் கிராமம் இராணுவத் தளபதி ஜானக பெரேராவால் உருவாக்கப்பட்டது. இவ்வாறே மன்னார் மாவட்டம் தந்திரிமலையில் இராணுவத் தளபதி டென்சில் கொப்பேக்கடுவவால் ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு டி.எஸ்.சேனநாயக்கவால் வகுக்கப்பட்ட தமிழர்களின் பலத்தைக் குறைக்கும் இரண்டாவது வியூகமான தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் திட்டம் இன்றுவரை மாறிமாறி வரும் அரசாங்கங்களால் தொடரப்படுகிறது. மட்டக்களப்பில் அம்பாறை, திருகோணமலையில் சேருவில, வவுனியாவில் வவுனியா தெற்கு மணலாறு என பிரதேசங்கள் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளும், நிலத் தொடர்பைத் துண்டிக்கும் செயற்பாடுகளும் இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றும் தூரநோக்குக் கொண்டவை என்பதை மறுத்துவிட முடியாது.
தொடரும்
அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை