Tuesday 23rd of April 2024 07:16:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல்

“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல்


‘கொரோனா வந்ததும் வந்தது இன்னும் மனிசர பாடாய்ப் படுத்திக் கொண்டு இருக்கு’ முன் வீட்டு பரமேஸ் அக்கா முணங்கிக் கொண்டே கதவடியில் வந்து நின்றாள்.

கொழும்பில் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருக்கும் தொடர் மாடி வீடுகளில் அவரவர் கதவடியில் வந்து நின்றாலும் நமது வீட்டுக் கதவடியில் வந்து நிற்பது போல் தான் இருக்கும்.

முகத்தினை துணியினால் பொத்திக் கொண்டு நின்ற பரமேஸ் அக்காவைப் பார்க்க பாவமாகக் கிடந்தது. ‘ஏன் அக்கா என்னாச்சு’ என்று கேட்ட என்னை மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு ‘ஏன் உமக்கு கத தெரியாதே… நம்மட மல்காந்தி இப்போ கோல் எடுத்தவா. அவவும் மற்ற பிளட் ஆக்களோட சேர்ந்து கீழே போய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போறாவாம். நியூஸ்ல காட்றவை தானே.. ஒவ்வொரு பிளட்களையும் ஆட்கள் கத்திக் கொண்டிருக்கினை. அவ என்னையும் கூப்பிட்டவா. எத்தின நாளைக்கு தான் இப்படி எங்கள அடைச்சு வைச்சு கொடுமைப்படுத்தப் போறியள் என்று எல்லோரும் நியாயம் கேட்கப் போறாங்க. நீயும் இறங்கி கீழ வாயேன். இந்த அரசாங்கத்த ஒரு கைப் பாப்பம்!’

பரமேஸ் அக்காவைப் பார்க்க பாவமாக தான் இருந்தது. அவசரத்தில் பேஸ்மாஸ்க் இல்லாம துணியைக் கட்டிக் கொண்டு போகப் போறா. கீழே நிற்கிற பொலிஸ்காரன்கள் கண்டமேனிக்கு பேசப்போறாங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த போது பரமேஸ் அக்காவின் கையில் இருந்த போன் சிணுங்க தொடங்கியது.

‘ஹலோ ஹலோ மம மே தென் எனவா. பொட்டக் இன்னக்கோ!’ என்று கூறி விட்டு, என்னைப் பார்த்து ‘நீங்கள் வாறியளோ? டிவிக் காரரும் வந்திருக்காங்களாம். வாரும் அந்த 5 ஆயிரம் பத்தி பேசின அந்த மந்திரியையும் சேர்த்து கிழிச்சிட்டு நியாயம் கேட்டு வருவம்’ என்றார்.

பல நாட்களைக் கடந்திருக்கும் லொக் டவுன்.

உணவுப் பற்றாக்குறை.

பணப் பற்றாக்குறை.

எல்லாம் சேர்த்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்த பரமேஸ் அக்கா உட்பட கொழும்பு வாழ் லொக் டவுன் வாசிகள் இவ்வாறு புறுபுறுத்து பறபறத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், செய்திகள் மீது நாட்டு நடப்புகள் மீது கடும் அக்கறையும் வாசிப்பும் கொண்ட அவரது பரம தோழி மல்காந்தியும், பரமேஸ் அக்காவும் அடிக்கடி டிவியில் செய்திகளைப் பார்த்து ஓவர் ஆல் டிஸ்கஷன் நடத்திக் கொள்வதை நான் நன்கறிவேன்.

இது போதாது என்று என்னையும் வம்பில் இழுத்து விட்டு என்டெர்டெயின்ட்மன்ட் தேடுவது தான் அவர்களின் கொரோனா லொக்டவுன் கால பிழைப்பாக இருக்கின்றது.

கொ. மு அதாவது கொரோனாவுக்கு முன் வரை தென்னிந்திய டிவி நாடகங்கள் தான் உயிர் மூச்சு என்று இருந்த பரமேஸ் அக்கா, இப்போ தலைகீழாக மாறி அந்த நாடகங்கள் எல்லாம் ‘வெரி வெரி போரிங்’ என்று தீர்க்கமான முடிவை எடுத்து விட்டார். இப்போ உலக அரசியல் முதல் உள்நாட்டு நடப்பு வரை அரங்கேறும் அனைத்;துவித என்டர்டெயின்ட்மன்ட்களும் அக்காவுக்கு பிங்கர் டிப்ஸில் இருக்கும் அளவுக்கு அத்துப்படி. கூடவே மல்காந்தியையும் சேர்த்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு தரம் எல்லாவற்றையும் எடுத்து அலசி ஆராய்ந்து துவைத்து காய வைத்து விட்டு தான் மறுவேலைப் பார்ப்பாள்.

இப்பொழுது லோக்கல் டிவி செனல் செய்திகளில் தொடர்மாடிகளில் வசிப்போர் வரிசைக் கட்டிக் கொண்டு பொலிசாருடன் மல்லுக் கட்டுவதைப் பார்த்து விட்ட மல்காந்தியும், பரமேஸ் அக்காவும் வரிந்துக் கட்டிக் கொண்டு அடுத்த கட்ட வேலைக்கு ஒருவாறு என்கேஜ் ஆகி விட்டனர்.

என்னைப் பார்த்து முறைத்த பரமேஸ் அக்கா, ‘ஏன் ஹலோ நீர் என்ன அந்த மந்திரி விமல் வீரவன்சவின் ஆளோ. கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி சிலையாட்டம் நிற்கின்றீர்.’ என்று அதட்டிக் கேட்க சற்று சுதாகரித்துக் கொண்டு ‘இல்லையே’ என்றேன்.

‘இப்பிடித் தான் பல வருஷங்களுக்கு முதல் ஒருத்தன் 2500 ரூபா கதையை சொன்னான். இப்போ இவன் 5 ஆயிரம் கதையை சொல்கிறான். 5 ஆயிரம் ரூபா எத்தனை நாளைக்கு போதும்? 5 ஆயிரம் கொடுத்தது ஒரு மாசம் வைச்சு சாப்பிடவாம்… 3 நாளைக்குள் முடிக்க இல்லையாம்… அது தான் பார்ளிமென்ட்டில மனோ அண்ண நல்லா நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாரு. இவங்க எல்லாம் சிவப்பு சட்டையை மாட்டிக் கிட்டு ஒரு காலத்தில புரட்சி பத்தி பேசினவங்க. இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு ஆக்கள் கஷ்டத்தப் பத்தி நினைக்காம பதவிக்கு வந்தவுடன் உளறிக் கொட்டுறாங்க’ என்று பரமேஸ் அக்கா ஆவேசமாகக் கூறிக்கொண்டு இருந்தாள்.

‘ஓம் ஓம்’ என்று தலையாட்டிக் கொண்டு நின்ற என்னிடம் மீண்டும் ஏதோ சொல்ல வந்த பரமேஸ் அக்காவை கையிலிருந்த தொலைபேசி மீண்டும் சிணுங்கி தடுத்து நிறுத்தவும் அப்பாடா என்று இருந்தது எனக்கு.

‘ஐயோ மல்காந்தி, மெ தென் எனவா! எப்பாத? எய்? மக்வுனாத? ஹா ஹா . அப்பராதே னே. என்ட படிப் பெலட்ட பொட்டக் கத்தாகரமுக்கோ’…

(அது என்னவோ பரமேஸ் அக்காவின் புரோக்கன் சிங்களம் மல்காந்திக்கு புரிகின்றது. மல்காந்தியின் புரோக்கன் தமிழ் பரமேஸ் அக்காவுக்கு புரிகின்றது. எப்படியோ இடையில் மாட்டிக் கொண்டு நான் எல்லாவற்றையும் தமிழில் கிரகித்துக் கொள்வேன். மல்காந்தியின் தமிழும் பரமேஸ் அக்காவின் சிங்களமும் படும் பாடு என்னை சிரிப்பில் ஆழத்தினாலும், அந்த சங்கடத்தை ஏன் மற்றவர்களுக்கு கொடுப்பானேன் என்று நானே மல்காந்தியின் சிங்களத்தைத் தமிழ்ப்படுத்தி விட்டேன் என்பதைக் கவனிக்க.)

போனை காதிலிருந்து எடுத்த பரமேஸ் அக்கா ‘அநியாயம் வேலை கென்சல் ஆகிட்டு. பொலிஸ் ஆட்கள் வந்து நிவாரணம் தர்றதா சொல்லியிருக்காங்களாம்’ என்று நான் கேட்காமலேயே கூறிய அவர், ‘மல்காந்தியை வரச் சொன்னேன். அவட்ட புதுக் கதைகள் நிறைய இருக்காம். சிங்களப் பேப்பர்களா ஒன்னு விடாம மனுசனோட சேர்;ந்து பார்க்கிறவ தானே. கொஞ்சம் கதைக் கேட்போம். பொழுதும் போகும்.’ என்று கண்ணை சிமிட்டினாள்.

பரமேஸ் அக்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மல்காந்தி வந்துக் கொண்டிருந்தார். கொரோனா டிஸ்ட்டன்ட் மெயின்ட்டன் பண்ணும் நல்ல எண்ணத்தில படியின் கீழ் நின்று கொண்டு பேச்சைத் தொடங்கிய அவர், பிரதமர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து அவரின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டம் வரையும் சம கால அரசியல் நிகழ்வுகளை சொல்லிக் கொண்டிருக்க பரமேஸ் அக்கா வாய் திறந்து கேட்டுக் கொண்டிருந்தாள். இருவருக்கும் மத்தியில் ஆமாம் போடும் ஆளாக தவிர்க்க முடியாமல் நான் நின்று கொண்டிருந்தேன். போதாக் குறைக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு கதை சொல்லி வாயை சுட்டுக் கொண்ட மந்திரியையும் அர்ச்சிக்க அவர்கள் மறக்கவில்லை. பாவம் அந்த ஆள். ஏதோ அவசரப்பட்டு உளறிக் கொட்டிப் போட்டுது என்று சொல்ல முடியாத அளவுக்கு விலாவாரியாக ஆக்கிரோஷமாக மக்கள் படும் கஷ்டங்களை விளங்காமல் பேசிட்டார். இந்த பெண்களோ சேர்ந்து கொண்டு, அவன் விளங்காமல் போகோணும், கட்டையில போகோணும் என்று வசைபாடுவதைக் கேட்க என்னவோப் போலிருந்தது.

மகிந்தவுக்கு 7 கேக்

பிரதமர் மகிந்தவின் 75 வது பிறந்த நாள் விழாவைப் பற்றி பேசியது மட்டுமல்லாமல் அவருக்கு கிடைத்த 7 கேக்குளையும் பற்றி மல்காந்தி வாய் நிறைய நேரில் பார்த்தது போல் விபரித்துக் கொண்டிருக்க பரமேஸ் அக்காவோ, ‘எத்தத,? எத்தத,?’ என்று வாய்ப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக ஒரு பேர்த்டேயிக்கு ஒரு கேக் கிடைப்பதே இப்பொழுது பெரும் பாடாய் இருக்கும் நிலையில் 7 கேக்குகள் கிடைப்பது எவ்வளவு அதிர்ஸ்டமானது என்று கூறிய மல்காந்தி, அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவும், ‘ஆமாம், ஆமாம் அவரின் 75வது பேர்த்டேக்கு அடுத்த நாள் பட்ஜெட். பிறகு ஜனாதிபதி மல்லியின் ஒரு வருட பதவிப் பூர்த்தி நாள் என்று ராஜபக்சக்களுக்கு இந்த நவம்பர் மாதம் மறக்கமுடியாத சிறப்பான மாதமாக அமைந்து விட்டது தானே’ என்று பரமேஸ் அக்கா சொல்ல, அதுமட்டுமல்ல ‘இன்னும் சில விசயங்கள் இருக்கு’ என்று தொடர்ந்த மல்காந்தி, ‘மகிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக சமர்ப்பித்த 11 வது பட்ஜட் இதுவாம். இவ்வாறு 11 பட்ஜட்களை முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் தான் சமர்ப்பித்திருந்தாராம். இதன்படி பட்ஜட் சமர்ப்பிப்பில் ரொனி டி மெல் படைத்த சாதனையை பிரதமர் முறியடித்து விட்டாராம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு சமர்ப்பிக்கப்பட்ட 75 வது பட்ஜட் இது. அப்படிப் பார்த்தால் பிரதமர் தனது 75 வது வயது பூர்த்தியடைவதற்கு முதல் நாள் தான் நாட்டின் 75வது பட்ஜட்டை சமர்ப்பித்திருக்கின்றார்’ என்று கூறி முடிக்கவும், பரமேஸ் அக்கா புலம்பத் தொடங்கினாள். ‘மல்காந்தி இவ்வளவு ஸ்பெஷலான பட்ஜட் என்று நீ சொன்னாலும் இதில் சாதாரண மக்களுக்கு என்ன இருக்கு? எப்பவுமே ஆளும் பக்கம் உள்ளவங்க பட்ஜட் நல்லம் அதி அற்புதம் என்பார்கள். எதிர்ப்பக்கம் உள்ளவங்க படு மோசம் என்பாங்க. இது காலம் காலமாக நடக்கிறது தானே? யார் ஆண்டா என்ன எங்கட பொழப்ப நாங்க தான் பார்க்கோணும்’ என்று சலித்ததுக் கொண்டே, ‘இப்போ கொரோனா பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க எந்த திட்டமும் பட்ஜட்ல இல்லையே. சாமான் விலை நாளுக்கு நாள் ரொக்கட் வேகத்தில அதிகரிக்குது. ஆனால் எங்கட வருமானம் அதிகரிக்குதா? இல்லையே. விலைவாசியைக் கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்காம இருப்பது நியாயமா?’ பரமேஸ் அக்கா கவலையுடன் சொல்லிக் கொண்டிருந்தா. ‘ஆமாம். பரமேஸ் நங்கி. நேத்து கொட்டஹேன எங்கட அக்கா கோல் எடுத்தா. அவ சொன்னா சாமான் விலை ரொம்ப மோசமாம். வீட்டு கிட்ட சாமான எடுத்துக் கொண்டு விற்க யாவரிகள் வந்தாலும் ஆனை விலை குதிரை விலை சொல்றாங்களாம். இப்படி அநியாயம் நடப்பதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது தவறு தான். எல்லாத்தையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேணாமா?’ மல்காந்தி கூறி பெருமூச்சு விட்டார். ‘உண்மை தான். எங்கட விலை உது தான். வாங்கினால் வாங்குங்க இல்லாட்டி விடுங்க என்று திரும்பிப் போறாங்களாம். அதனால எவ்வளவு கஸ்டத்திலயும் பிள்ளைக்குட்டியைப் பட்டினிப் போடாம இருக்க அவங்க சொல்ற விலைக்கு வாங்க வேண்டியதா இருக்காம்’ பரமேஸ் அக்கா கவலையுடன் கூறி முடித்தாள்.

பச்சை மீனும் சஜித்தும்

மல்காந்தியும், பரமேஸ் அக்காவும் ஒருவாறு பட்ஜட் பரபரப்புகளை முடித்து விட்டு பேலியகொட பக்கம் திரும்பினர். ‘என்ன மல்காந்தி. சப்பான்க்காரன் சாப்பிடுற மாதிரி பச்சை மீனை ஒருத்தர் சாப்பிடறத டிவியில பார்த்தியளா?’ என்று கேட்க, மல்காந்தி விலாவாரியாக விபரிக்க தொடங்கினாள். ‘ஓம் ஓம் பாத்தன். திலிப் வெதஆரச்சி பச்சை மீன் சாப்பிட்டதைப் பார்த்து எல்லாம் கேலிப் பேசினாங்க. ஆனால் பொருளாதார ரீதியில் விழுந்திருக்கும் மீன் பிடிக்கிற ஆட்களுக்கும் விற்கிற ஆட்களுக்கும் அவர் ஒட்சிசன் கொடுத்திருக்கிறார். அது பெரிய விசயம் தானே. அது மட்டுமில்லாம எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் அவர் செய்த வேலையைப் பாராட்டியிருக்கிறார். இந்த வேலையை அரசாங்கம் செய்திருக்கணும். ஆனால் அவங்க அது பத்தி கணக்கெடுக்கல. நீங்க இத செஞ்சு நாட்டுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறீங்க என்டு சஜித் அவரைப் பாராட்டியிருக்கிறார்’.

‘என்னவோ. இப்ப கொஞ்சம் மீன் மேலே இருந்த கொரோனா பயம் ஆட்கள்ட்ட குறைஞ்சுக் கொண்டே வருகுது. எனக்கும் நல்ல டேஸ்ட்டா மீன் கறி சாப்பிடணும் போல இருக்கு’ என்று பரமேஸ்; அக்கா சப்புக் கொட்டிக் கொண்டாள்.

‘ம் எனக்கும் அப்படித்தான். லொக்டவுன் முடியட்டும் நானே சால மீன் கறி சமைச்சு தாறேனே’ என்று கூறிய மல்காந்தி தொடர்ந்து, ‘சஜித் ஆக்கள் அவங்கட ஒபிஸ்ல பொதுமக்கள் குறைகளைக் கேட்க கொஞ்ச பேர நியமிச்சிருக்காங்களாம். உனக்கும் ஏதாவது குறை இருந்தா எடுத்து சொல்லு. ஹரீன் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார, முஜிபுர், மரிக்கார் எல்லாம் அங்க பிஸியா இருக்காங்க’ என்று சொல்லவும், ‘ஐயோ மல்காந்தி குறையைக் கேட்டு என்ன செய்ய. அவங்க எல்லோரும் நினைச்சா எவ்வளவோ செய்யலாமே’ என்ற பரமேஸ் அக்கா, ‘பார்ளிமென்ட்ல இருக்கிற எல்லாரும் தங்கட மாச சம்பளத்தையும், மத்த நிவாரணங்களையும் அரைவாசியாக் குறைக்க சொல்லிக் கேட்டு அந்த காசில மக்களுக்கு உதவலாம் தானே. என்ன நான் சொல்றதுல நியாயம் இருக்கு தானே… நல்ல யோசிங்க மல்காந்தி, இப்போ இந்த மந்திரிமார் எல்லாம் நாட்டின் பொருளாதாரம் விழுந்துப் போச்சி, கடன் கூடிப் போச்சி, நிவாரணம் தர முடியேல்ல என்டு தானே புலம்புறாங்க தானே. ஆனா தங்கட சம்பளங்களையும், இதர சலுகைகளையும் குறைச்சு அந்த காசுல மக்களுக்கு நிவாரணம் தர முன்வாறாங்களா? இல்லையே?’. பரமேஸ் அக்காவின் கேள்வியில நியாயம் இருப்பதாக தான் எனக்கும் பட்டது. மல்காந்தியும் அந்த கருத்தை ஆமோதிக்கும் விதமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள். ‘பாவம் ரோஸி அக்கா தான் ஓடி ஓடி கொழும்பில ஆக்களுக்கு ஏதா செஞ்சு கொண்டிருக்கிறா. கொழும்பை முழுசா லொக்டவுன் பண்ணினால் நல்லம் என்டு வேற சொல்றா. போறப் போக்கைப் பார்த்தாள் கொரோனா வந்து சாகுற மனிசர் எண்ணிக்கை குறைஞ்சு பட்டினியால சாகிறவங்க தான் அதிகரிப்பாங்க போல இருக்கு’ பரமேஸ் அக்கா ஆதங்கப்பட்டா.

5 கோடியும் முன்னாள் ஜனாதிபதியும்

‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இப்பொழுது அடிக்கடி டிவியில பார்க்க முடியுது தானே. மனிசன் நல்ல பிரெஸ்ஸா ரிலாக்ஸா சாட்சியமளிக்க வந்து போறார்’ என்று புதுக் கதையொன்றுக்கு அத்திவாரம் போட்ட மல்காந்தி, ‘பரமேஸ் உனக்கு தெரியுமா, றோயல் பார்க் கொலை சம்பவத்தில குற்றவாளி ஜுட் ஷமந்தவுக்கு பொது மன்னிப்பு வழங்க மைத்திரிபால 5 கோடி ரூபா லஞ்சம் வாங்கியதா புதுக் கiதையொன்றை வன்ஷொட் மேன் எங்கட ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கிறார். அதற்கு நெகோஷியேசன் செய்ய உதவிய ரத்தன தேரர் 3 கோடி வாங்கியதாகவும் மேலதிக தகவல் வந்திருக்கு’. ‘அப்படியா?’ என்று வாயைப் பிளந்த பரமேஸ் அக்கா, ‘இது என்ன புதுக்கதையா இருக்கு’ என்றாள். ‘ஓம். புதுக்கதை தான். எங்கட ரஞ்சன் அய்யாவ பத்தி தான் தெரியுமே. அவர் இப்போ இந்த குற்றச்சாட்ட மைத்திரிபால சிறிசேன மேலேயும், அத்துரலியே ரத்தன தேரர் மேலேயும் சுமத்தியிருக்கிறார். பெரிய பெரிய தலைகள்ட தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்து கொடிக்கட்டிப் பறந்தவராயிட்டே. அவர் செய்த அந்த வேலைகளை ஆமோதிச்ச நாள தான சனம் அவர பார்ளிமென்ட்டுக்கு அனுப்பியிருக்கிறாங்க’ என்று மல்காந்தி சொல்லவும், ‘ஐயோ மல்காந்தி அதை கொஞ்சம் விபரமா தான் கூறுமென்’ என்று பரமேஸ் அக்கா கெஞ்ச தொடங்கினாள். தொடர்ந்து கூறிய மல்காந்தி, ‘அது தான் அந்த றோயல் பார்க் கொலை கேஸில மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்தப் பெடியனுக்கு 2019ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால தனது பதவிக்காலத்தில பொது மன்னிப்பு குடுத்திருந்தார். அதற்காக தான் அவர் இந்த பெரிய அமௌன்ட்டை இலஞ்சமா வாங்கினார் என்பது தான் ரஞ்சனின் குற்றச்சாட்டு. இதை மைத்திரிபாலவும், ரத்தன தேரரும் மறுத்து அபாண்டமான பொய் என்டும் சொல்லியிருக்காங்கள்’.

‘5 கோடியா’ என்று வாயைப் பிளந்த பரமேஸ் அக்கா, சலித்துக் கொண்டே ‘5 ஆயிரம் நோட்டைப் பார்த்தே எத்தனையோ கிழமைப் போயாச்சு, நாங்க எல்லாம் எப்ப 5 கோடியப் பார்க்கப் போறோம்’ என்றாள். அத்துடன், ‘அது என்ன சபாநாயகர ரஞ்சன் லொக்கா லொக்கா என்று கூப்பிடுறத பத்தி பார்ளிமென்ட்ல கொமண்ட் அடிச்சிருந்தாங்களே? என்று கேட்க, ‘ஆமா ரஞ்சன் அப்படித்தான். எல்லாருக்கும் அவரால் ரொம்ப ரொம்ப என்டெர்டெயின்ட்மன்’ என்று மல்காந்தி சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தாள்.

திடீரென்று அம்மா அம்மா என்று உள்ளே சத்தம் வர பரமேஸ் அக்கா ‘ஐயோ பிள்ளைகளுக்கு பசி வந்திட்டு போல’ மல்காந்தி பிறகு பேசுவோமே’ என்று கூறிக் கொண்டே என்னையும் கண்டுகொள்ளாது உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

இப்படி ஒருவாறு மல்காந்தி வித் பரமேஸ் அக்கா மீட்டிங் அன்றைய தினம் சுமுகமாக என்ட் ஆகியது.

அருவி இணையத்துக்காக அகநிலா


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE