Thursday 28th of March 2024 04:34:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
தேசிய இனங்களும் கட்டமைக்கப்பட்ட தேசமும்! - நா.யோகேந்திரநாதன்!

தேசிய இனங்களும் கட்டமைக்கப்பட்ட தேசமும்! - நா.யோகேந்திரநாதன்!


'நவம்பர் 27"

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி புலம்பெயர் நாடுகள் தமிழகம் என எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தாயக விடுதலைக்கு ஆகுதியாக தங்களை அர்ப்பணித்த அந்த வீரர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கும் புனிதமான நாள் அது.

மௌனாஞ்சலி செலுத்தி சுடரேற்றி அஞ்சலிக்கும் அந்த நிமிடங்கள் இலட்சக் கணக்கான தமிழ் இதயங்களை ஒன்றிணைத்து ஒரே நேரத்தில் ஒரு ஒப்பற்ற உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும் அற்புதத்தை அரங்கேற்றும் மகத்துவம் கொண்டவை. மாவீரர்கள் மழை, வெய்யில், பனி, பசி, தூக்கமின்மை, காயங்கள் வேதனைகள் என அத்தனை துன்பங்களையும் தாங்கி விடுதலையை நோக்கிப் பயணித்தவர்கள் களங்களில் குண்டுகள் பட்டும், எறிகணைச் சிதறல்கள் தாக்கியும் வீழ்ந்த போதும் இலட்சியக் கனவுடன் உயிர்களை அர்ப்பணித்தவர்கள்.

மாவீரர்களின் வாழ்வும் சாவும் மக்களுக்கானவை. எமது மக்களின் சுதந்திரத்துக்காகவும் சுபீட்சத்திற்காகவும் அவர்களின் உதிரம் நெய்யாக ஊற்றப்பட்டு விடுதலை வேட்கையைப் பெரு நெருப்பாகக் கொழுந்துவிட்டு எரிய வைத்தன.

எனவேதான் அவ்வீரர்களின் அஞ்சலி என்பது தமிழ் மக்களின் உடலில் ஓடும் குருதியிலும் உள்ளத்தில் உறையும் உணர்வுகளிலும் பெருக்கெடுக்கும் ஒரு ஒப்பற்ற வெளிப்பாடு.

அந்த வீரர்கள் துயிலும் இல்லங்களில் சுடரேற்றி அஞ்சலி செய்வதைத் தடுக்க நீதிமன்றத்தடை, ஆயுதப் படையினரின் மிரட்டல் என எத்தனையோ கெடுபிடிகள். அத்தனை தடைகளையும் ஊடுருவி எமது மக்கள் அஞ்சலிகளை மேற்கொண்டனர். அந்த நிமிடங்களின் புனிதத்தில் ஒன்றிக் கலந்தனர்.

அது எந்தவொரு பெரும் சக்தியாலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாத மகத்துவம்.

அந்த வீரர்கள் மக்களுக்காக போர்க் களங்களில் உயிர்களைப் பலி கொடுத்தவர்கள். ஆனால் அந்த ஒப்பற்ற தியாகம் மட்டும்தான் அவர்களின் எல்லையல்ல. அவர்கள் தமிழீழ தேசத்தைக் கட்டமைத்தவர்கள்.

எமக்கென ஒரு ஆட்சி இல்லை. எமக்கென நிர்வாகக் கட்டமைப்பு இல்லை. எம்மிடம் இப்போது முப்படைகளும் இல்லை.

ஆனால் தமிழீழத் தேசம் மாவீரர்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நாம் இப்போது வாழ்வது தமிழீழத் தாயகத்தில் என்பது வெறும் கற்பனையல்ல் கையாலாகாதவர்களின் கனவல்ல. அது உண்மை.

சோவியத் யூனியனின் அதிபராயிருந்த ஜோசேப் ஸ்டாலின் அவர்கள் தேசமென்றால் என்னவென்று அளித்த விளக்கம் இது.

வரலாற்று ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட மொழி, பொதுவான ஒரு பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை பொதுவான கலாசாரத்தினூடாக வெளிப்படும் உளவியல்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த நிலையான மக்கள் சமூகமொன்றே தேசமாகும். இவை ஒரு தேசத்திற்குரிய புறநிலை அம்சங்கள்.

இந்த நான்கு அம்சங்களும் இயல்பாகவே எம்மிடம் அமைந்துள்ளதுதான் தமிழர் தேசம். காலத்துக்குக் காலம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் நாம் தேசத்திற்குரிய புறநிலை அம்சங்களின் தனித்துவம் குன்றாமலே ஒரு நிலையான சமூகமாக எமக்கான நிலப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம்.

அரசுகள் மாறலாம்; ஆட்சிகள் மாறலாம்; ஆனால் எமது தேசம் ஒரு தேசமாக குலைந்து, சிதறி விடாமல் நிலைத்திருக்கிறது.

அதேவேளையில் ஒரு தேசத்தின் அகநிலை அம்சங்கள் பற்றி 'ஏனஸ்ட் றெனன்" என்ற அறிஞர் பின்வருமாறு விபரிக்கிறார்.

'தேசம் என்பது ஒருவர் செய்த தியாகம் ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராயிருக்கும் தியாகம் என்ற உணர்வின்பால் கட்டமைத்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை நினைவில் கொள்கிறது. நிகழ்காலத்தில் தொடர்வதற்கான பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான வகையில் தெளிவாக வெளிப்படுத்தப்படும் அங்கீகாரம்ரூபவ் விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகள் மூலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது நித்திய பொது உளப்பாங்கின் வெளிப்பாடாகும்."

ஜோசேப் ஸ்டாலின் அவர்களின் கூற்றுப்படியான புறநிலை அம்சங்களைக் கொண்டுள்ள நாம் ஏனஸ்ட் றெனனின் அகநிலை அம்சங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளோம்.

அவ்வகையில் போராளிகளும் எமது மக்களும் செய்த தியாகம், அவர்கள் மீண்டும் மீண்டும் செய்யத் தயாராயிருந்த தியாகங்கள் என்பவற்றின் அடிப்படையில் எம்மிடையே நிலை கொண்டுள்ள ஒற்றுமை எம்மை ஒரு தனித்துவமான தேசமாக்குகிறது. அதுமட்டுமின்றி நிகழ்காலத்தில் தொடர்வதற்கான பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான வகையில் வெளிப்படுத்தப்படும் அங்கீகாரம் விருப்பு என்பன தியாகிகள் நாளாகவும் அந்நாளின் அஞ்சலிகளாகவும் விரிகின்றது.

அவ்வகையில் ஒரு தேசத்திற்கான புறநிலை அம்சங்களையும் அகநிலை அம்சங்களையும் முழுமையாகக் கொண்ட ஒரு தனித்துவமான தேசமாக நிமிர்ந்து நிற்கிறோம்.

எனவேதான் எமது வீரர்களுக்கான அஞ்சலி நாள் என்பது எமது தேசத்தின் இருப்பின் மறுக்க முடியாத அகநிலை வெளிப்பாடாகும்.

அதன் காரணமாகவே இலங்கையின் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுகளைக் கண்டு அஞ்சுகின்றனர். அவற்றைத் தடுப்பதன் மூலம் தமிழீழ தேசத்தின் அகநிலை அம்சங்களைக் குலைத்துவிட முடியுமெனக் கனவு காண்கின்றனர்.

அதன் காரணமாகவே பொது வெளிகளில் போரில் உயிரிழந்த வீரர்களின் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்வதை நீதிமன்றத் தடை உத்தரவுகள் மூலம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அதன் எதிர்விளைவாக மேலும் வலிமையான உணர்வுடன் அஞ்சலி நிகழ்வுகள் பல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்டன.

ஏனென்றால் இது செய்து முடிந்த செய்யத் தயாரான தியாகங்களில் உருவான ஒற்றுமையில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தின் அங்கீகாரத்தினதும் விருப்பினதும் வெளிப்பாடாகும்.

அதேவேளையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் போரில் உயிரிழந்த தியாகிகளை அஞ்சலிக்க அனுமதிக்கப் போவதில்லையெனவும் சூளுரைத்துள்ளார். மேலும் வெளிநாடுகள் சிலவற்றால் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் உயிரிழந்த வீரர்களின் நினைவு நாளைக் கொண்டாட அனுமதிக்கப்படுகிறதெனவும் தாங்கள் அப்படி அனுமதிக்கப் போதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

போரில் உயிரிழந்த வீரர்கள் எதிரிகளாயிருந்தாலும் கூட அவர்களைக் கௌரவிப்பது காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் இயல்பான மரபு. அவ்வகையில் வெளிநாடுகளில் தங்களால் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செய்வதை அவர்கள் தடுப்பதில்லை.

இலங்கையில் ஜே.வி.பி.யினர் இரு தடவைகள் ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் புரட்சி செய்தவர்கள்.

அவர்களும் பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டவர்கள். அப்போது கொல்லப்பட்ட ஜே.வி.பி.யினருக்கு அஞ்சலி செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஏனெனில் ஜே.வி.பி.யினர் அவர்களின் தேசத்தின் பிரஜைகள்.

ஆனால் அவர்கள் எமது வீரர்களின் அஞ்சலியை மட்டும் தடை செய்கின்றனர். ஒரு தேசத்திற்குரிய புறநிலை அகநிலை அம்சங்களை முழுமையாகக் கொண்ட எம்மிடம் எமக்கென்று ஒரு அரசு இல்லை. எமது நாடு ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட தேசம்.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது தேசத்தை விடுவிக்கப் போராடிய வீரர்களை அவர்கள் தமது பிரஜைகளாக ஏற்கவில்லை. எதிரி தேசத்தின் போர் வீரர்களாகவே பார்க்கின்றனர். எனவே அவர்கள் எமது வீரர்களை அஞ்சலி செய்வதைத் தடுக்கின்றனர். அதாவது இந்நடைமுறை மூலம் எமது தேசம் அவர்களால் விரும்பியோ, விரும்பாமலோ அங்கீகரிக்கப்படுகிறது.

எனவே அஞ்சலி நிகழ்வுகள் என்பன எவ்வழியில் அனுஷ்டிக்கப்பட்டாலும் கூட அது ஒரு அஞ்சலி நிகழ்வாகவோ பிதிர்கடன் கழிக்கும் மரபாகவோ மட்டுப்படவில்லை. அது புறநிலையிலும் அகநிலையிலும் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தின் இருப்பை உறுதி செய்யும் ஆணித்தரமான வெளிப்பாடாகும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

01.12.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE