Wednesday 24th of April 2024 09:20:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமை போர்க்குற்றமே! - சபையில் கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமை போர்க்குற்றமே! - சபையில் கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு


"பிரபாகரன் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே நாம் கூறும் போர்க்குற்றம். அதாவது ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமை போர்க்குற்றமே."- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் பாதுகாப்பது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அரச தரப்பு எம்.பியும் முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளையில் அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ச கூறினார் எனவும், பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்துக்காகத் தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்று கூறினார் எனவும் தெரிவித்திருந்தார். இதுதான் போர்க்குற்றம். ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமை போர்க்குற்றமே.

வன்னியில் இறுதிப்போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களான நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைச் சந்தித்தேன். விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்சவுடன் நான் பத்து தடவைகளுக்கும் மேல் இது குறித்து பேசினேன். மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம். கடல் மார்க்கமாக அவர்களை மறு பக்கம் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அப்போது நாட்டில் இல்லாத காரணத்தால் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை எனவும் தொலைக்கட்சியில் அறிவிப்பு விடப்பட்டது. அதனைக் கேட்டு நான் பெரும் அச்சமடைந்தேன். ஏனெனில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் போர் ஆரம்பிக்கப்பட்டபோதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

போர் தொடங்கியபோது வன்னியில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால், 17 ஆயிரம் மக்களே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தனர் என்று அரசு கூறியது. உணவு மற்றும் மருந்துகளை 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பியது. இதுதான் உண்மை.

மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே, இலக்கங்களில் அரசு பொய்களைக் கூறிக்கொண்டுள்ளது. இறுதிப் போரில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை" - என்றார்.

கஜேந்திரகுமார் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்தபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் இராணுவத்தளபதியும் எதிர்க்கட்சி எம்.பியுமான பீல்ட் மார்ஷ சரத் பொன்சேகா மற்றும் அமைச்சர்கள், அரச தரப்பு பின்வரிசை எம்.பி.க்கள் குறுக்கீடுகளைச் செய்ததுடன் சிலர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் பிரயோகித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE