Friday 19th of April 2024 06:27:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிரியல் ஆராய்ச்சி மாநாடு யாழ். பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

உயிரியல் ஆராய்ச்சி மாநாடு யாழ். பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!


யாழ். பல்கலை. விலங்கியல் துறை மாணவர்களுக்கான உயிரியல் ஆராய்ச்சி மாநாடு யாழ் பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது.

உலக வங்கி அனுசரணையுடன், எஹெட் திட்ட நிதியுதவியின் கீழ் இளநிலைப் பட்ட மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், நவீன விஞ்ஞான களத்திற்கு மாணவர்களை வெளிப்படுத்துவதைக் கருத்தில் கொண்டும் நடாத்தப்படும் மாணவர்களுக்கான ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறை மாணவர்களால் முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மாநாட்டில், உயிரியல் விஞ்ஞானம் சார்ந்த 14 ஆராய்ச்சி சுருக்கங்கள் வெளியிடப்படவுள்ளன. இவை விலங்கியற்றுறைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டவையாகும்.

இந்த நிகழ்வில் சிலந்தி வலைகள் பற்றிய தமது ஆய்வு பற்றி நாட்டிங்காம் பல்கலைகழகத்தை சேர்ந்த கூர்ப்பியல் நிபுணர் பேராசிரியர் சாரா நிகழ்நிலையில் உரையாற்றவுள்ளார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

விலங்கியல் துறையில் கல்வி பயிலும் மாணவர்களது அமைப்பான விலங்கியல் மாணவர் சங்கம் தங்கள் சகபாடிகளின் துறை சார்ந்த - தொழில் சார்ந்த திறன் அபிவிருத்திக்கான பல செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இது தவிர, பல சமூக மட்ட நலனோம்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. மக்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்த தமது கல்வி அறிவை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமான அமைப்பாக இது திகழ்கின்றது.

யாழ்.பல்கலைக்கழக விலங்கியல் துறை, பல்கலைக்கழகத்தில் தொன்மையான ஒரு துறை ஆகும். இங்கு பல ஆராய்ச்சிகள் செம்மையாக மேற்கொள்ளப்படுகின்றன. விலங்கியல் துறையில் பல உலகத்தரம் வாய்ந்த ஆய்வு கூடங்கள் செயற்படுகின்றன. பூச்சியியல், மூலக் கூற்று உயிரியல், சூழலியல், மற்றும் உயிர்த் தொழிநுட்பவியல் ஆகிய துறைகளில் இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது ஆய்வு மையமான பூச்சியியல் ஆராய்ச்சி மையம் விலங்கியல் துறையின் ஆய்வாளர்களால் பிரேரிக்கப்பட்டு இப்போது திறம்பட செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE