Thursday 28th of March 2024 12:32:06 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சியில் 4347 பேர் பாதிப்பு: இரணைதீவு மக்களுக்கு உலருணவு அனுப்பிவைப்பு!

கிளிநொச்சியில் 4347 பேர் பாதிப்பு: இரணைதீவு மக்களுக்கு உலருணவு அனுப்பிவைப்பு!


இரணைதீவு மக்களிற்கு கடற் படையினருடைய உதவியோடு உணவு வழங்குவதற்கான செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைதீவு பகுதியில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் 2 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை நேற்றைய தினம் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களிற்கான உலருணவினை இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் வழங்கியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 1403 குடும்பங்களை சேர்ந்த 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்காலிக வீடு முழுமையாகவும், 204 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரணைதீவில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களிற்கு இன்று உணவுகள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பாதிக்கப்பட்ட 1403 குடும்பங்களிற்கும் உணவு வழங்கும் செயற்பாடுகள் பிரதேச செயலாகங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளையில் நீர் தேங்கி இருக்கும் இடங்கள், தடைப்பட்ட இடங்கள், குளங்களில் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிகள் பொதுமக்கள், பிரதேச சபை, இராணுவத்தினரின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது குளங்களிற்கான நீர் வருகை காரணமாக சில குளங்கள் நிறைந்துள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்து நீரை திறந்து விடுகின்றபோது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விடயத்தினை பிரதேச செயலகங்கள் ஊடாக தெளிவுபடுத்தி வருகின்றோம். எனவே மக்கள் சீரற்ற காலநிலை ஏற்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானத்தடன் நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற அதேவேளையில், தற்போது உள்ள கொவிட் 19 தொற்று சுழலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும், தேவையற்ற விதத்தில் வீடுகளைவிட்டு வெளியில் செல்லாது இருக்கும் வகையிலும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களிற்கு ஏற்பட்டுள்ள நேரடி பாதிப்புக்கள் தொடர்பான விடயங்கள் ஏற்கனவே பிரதேச செயலகங்கள் ஊடாக திரட்டப்பட்டுள்ளன. வாழ்வாதாரம் மற்றும் தொழில் சார்ந்த பாதிப்புக்கள் தொடர்பான விடயங்கள் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருகின்றது. குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் கூடியவிரைவில் அவ்வந்த திணைக்களங்கள் ஊடாக தகவல் தரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அனர்த்த முனாமைத்துவ சுற்றுநிருபத்தின் அடிப்படையிலேயே நிவாரணங்கள் வழங்கப்படுவது வழமையாக உள்ளது. அதற்கமைவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அங்கத்தவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இம்முறை மக்கள் இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தபோதிலும் அவர்களை முகாம்களில் த்குவதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. தற்போது உள்ள கொவிற் தொற்று காரணமாக கூடியவகையில் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சுற்றுநிருபத்திற்கு அமைவாக நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு சமைத்த உணவுகளை வழங்குவது சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலிற்கு அமைவாக மேற்கொள்ள முடியாத விடயமாகும். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களிற்கு எந்தவொரு நிவாரணத்தை வழங்குவதற்கு தொண்டர்கள் முயற்சிக்கின்ற போது அவர்கள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்துடன் தொடர்புபட்டு குறித்த காரியங்களை செய்ய வேண்டும். யாரும் தன்னிச்சையாக குறித்த செயற்பாட்டில் ஈடுபடமுடியாது எனவும் பொலிசாரும் குறித்த செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE