Thursday 28th of March 2024 04:39:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
சஹ்ரான் குழுவை நம்ப நாம் முட்டாள்கள் அல்லர் - சம்பிக்க

சஹ்ரான் குழுவை நம்ப நாம் முட்டாள்கள் அல்லர் - சம்பிக்க


"உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்டதும், அதனை நடைமுறைப்படுத்தியதும் சஹ்ரானும் அவரது குழுவும் மட்டுமே என நம்பிக்கொண்டிருக்க நாம் முட்டாள்கள் அல்லர். இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்? இவர்களை இயக்கியது யார்? இவர்களுக்கும் புலனாய்வுத்துறைக்கும் உள்ள சம்பந்தம் என்ன? இந்தியாவுடன் இவர்களின் தொடர்பு என்ன? என்பதெல்லாம் கண்டறியப்பட வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையின் அமைவிடம் மற்றும் தற்போதைய வியாபாரக் கொள்கையுடன் இலங்கையின் கடற்படையை முன்னிறுத்திய புதிய வேலைத்திட்டமொன்றை இலங்கை முன்னெடுக்க வேண்டும். இலங்கைக்கு மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றன.

அன்று எவ்வாறு விடுதலைப்புலிகள் உருவாகியதோ அதேபோன்று மீண்டும் சில நிலைமைகள் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. உலக நாடுகள் அனைத்துமே இன்று தமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. நாம் இனியும் வல்லரசுகளில் தங்கியிருக்காது இலங்கைக்கென்ற நடுநிலையான சர்வதேசக் கொள்கையுடன் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாக வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதல் வெறுமனே தற்கொலை குண்டுத் தாக்குதல், ஆயுதங்களை அல்லது வாகனங்களில் மோதி கொள்வது என்பதாக மட்டுமே இருக்காது. இன்றைய நவீன யுகத்தில் ட்ரோன் தாக்குதல்கள், ஆளில்லா தாக்குதல்கள் மூலம் நடத்தப்படலாம். பலமான பாதுகாப்பைக் கொண்டுள்ள ஈரான் போன்ற நாடுகளில் கூட இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது நாடு கவனமாக இவற்றைக் கையாள வேண்டும்.

கடந்த ஆண்டு சஹ்ரானின் தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது. அதனைச் சாட்டாக வைத்து இப்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. இப்போது உண்மைகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் எந்த மட்டத்தில் உள்ளது?

இந்தத் தாக்குதலை திட்டமிட்டதும், அதனை நடைமுறைப்படுத்தியதும் சஹ்ரானும் அவரது குழுவும் மட்டுமே என நினைத்துக்கொண்டிருக்க நாம் முட்டாள்கள் அல்லர். எனவே, இந்தத் தாக்குதலில் பிரதானிகள் யார்? இவர்களின் தொடர்பு என்ன? யார் இவர்களை இயக்கியது? இவர்களுக்கும் புலனாய்வுத்துறைக்கும் உள்ள சம்பந்தம் என்ன? இந்தியாவுடன் இவர்களின் தொடர்பு என்ன? என்பதெல்லாம் கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் தாக்குதல்கள் போன்று வேறு எதுவும் நடக்காது தடுக்க முடியும்.

மத்திய வங்கி கொள்ளை குறித்து இந்த ஆட்சியாளர்கள் பேசினர். அர்ஜுன மகேந்திரனைக் கைதுசெய்வதாகக் கூறினார். கே.பியின் செவியில் பிடித்து இழுந்து வந்த எமக்கு அர்ஜுன் மகேந்திரனைக் கைதுசெய்வது பெரிய வேலையில்லை என்றனர்.

இவ்வாறு கூறியவர்கள் ஆட்சி அமைத்து ஓர் ஆண்டும் முடிந்துவிட்டது. மத்திய வங்கி ஊழல் குற்றச்சாட்டு என்னவானது? வெறுமனே அரசியல் காரணிகளுக்காக இந்தக் குற்றங்களைப் பயன்படுத்திக்கொள்ளாது உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE