Thursday 28th of March 2024 06:16:20 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழினத்தை அழிக்கவே முடியாது! - நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி.!

தமிழினத்தை அழிக்கவே முடியாது! - நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி.!


எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை அழிக்க முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

"நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர்.

நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டே இந்த நாடாளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 வயதான அரச ஊழியர் ஒருவரும் அடங்குகின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தையும், மாவீரர் நாள் பதிவுகளையும் முகப்புத்தகத்தில் பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைதுசெய்துள்ள அரசு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயலாகும்.

இவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாகப் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள்.

அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேபோன்று அரசு ஏனைய விடயங்களை மறைப்பதற்காக இவ்வாறு அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்வதை நிறுத்த வேண்டும்.

கார்த்திகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருசில இடங்களில் மக்கள் விளக்குகளை - தீபங்களை ஏற்றுவதற்காகச் சிறிய அலங்காரங்களைச் செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.

நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவத்துக்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றியபோது, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட முடிந்தது எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்சினைகளை உரூவாக்குகின்றீர்கள்.

நீங்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து சஹ்ரானை உருவாக்கியதாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றீர்கள். நீங்களே சஹ்ரானை உருவாக்கினீர்கள்.

நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்குத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையையே கேட்கின்றனர். அதனை வழங்குவதற்குக்கூட இந்த அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE