Thursday 28th of March 2024 02:40:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
மடு தேவாலயத்திற்கு வருவதற்கு புலிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டது!

மடு தேவாலயத்திற்கு வருவதற்கு புலிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டது!


இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும், கிழக்கிலிருந்து மேல் மாகாணங்களுக்கும் சுதந்திரமாக பயணிக்கக் கூடிய யுகமொன்றை அமைப்போம் என நான் அன்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

இன்று இந்த தம்பபவனி மின் உற்பத்தி நிலையம் அந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை 2020.12.08 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிற்கு 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் இலங்கையின் பாரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே, ஒரு பணியை ஆரம்பித்து அதனை நிறைவேற்றுவது என்பது அரசியல்வாதியொருவருக்கு மட்டுமின்றி அனைத்து மனிதனுக்கும் தனது வாழ்வில் கிடைக்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியான விடயமாகும்.

2014 ஆம் ஆண்டில் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்த திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காக அதிகபட்ச மகிழ்ச்சியுடன் இன்று நான் மன்னார் தீவுக்கு வந்தேன்.

அதேபோன்று மன்னாருக்கு வரும்போது சுற்றியுள்ள வீதிகள் அனைத்தும் கார்பட் இடப்படுவதை நான் கண்டேன். மின்சார சபையின் இத்திட்டத்தினாலேயே சுற்றியுள்ள வீதிகள் கார்பட் இடப்படுவதாக அமைச்சர் டளஸ் அவர்கள் கூறினார்.

2008 ஆம் ஆண்டளவில் மடு தேவாலயத்திற்குச் செல்லும் வீதி புனரமைக்கப்பட்டு, மடு திருவிழாவிற்கு நாட்டின் தலைவராக நான் வரவிருந்தபோது, இங்கு வருவதற்கு விடுதலை புலிகளின் அனுமதி பெற வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் தலைவருக்கு மடு தேவாலயத்திற்கு வருவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டது. இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும், கிழக்கிலிருந்து மேல் மாகாணங்களுக்கும் சுதந்திரமாக பயணிக்கக் கூடிய யுகமொன்றை அiமைப்போம் என நான் அன்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

இன்று இந்த தம்பபவனி மின் உற்பத்தி நிலையம் அந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்டது அல்லவா என்று நான் உங்களிடம் வினவுகின்றேன்.

அன்று 1890 இல் முதலாவது மின்குமிழ் ஒளிரவிடப்பட்ட நாள் முதல் மின்சாரம் என்பது அனைவரதும் கனவாக இருந்து வருகிறது. அதன்போது கிராமத்திற்கு மின்சார வசதியை ஏற்படுத்துவதே பாரிய சவாலாக அமைந்தது. பொறியியலளார் டீ.ஜே.விமலசுரேந்திர அவர்கள் உள்ளிட்ட அறிஞர்களின் தைரியம் மற்றும் பங்களிப்புடன் அந்த சவாலை வெற்றிக் கொள்ள முடிந்தது.

மின்சாரத்தை வழங்க சிறிது காலம் பிடித்தது என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும், சில ஆட்சியாளர்களின் குறுகிய பார்வை கொண்ட நடவடிக்கைகள் நாட்டின் மின்சாரத் துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன. கலவரங்களின்போதும் போரின்போதும் மின் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் அற்பமானது அல்ல. இதன் விளைவாக, பிற்காலத்தில் கூட நாட்டில் பெரும் மின் தடை ஏற்பட்டது. நாம் இன்னும் சில விளைவுகளை எதிர்கொண்டு வருகிறோம்.

அது குறித்து அறிந்தமையால், மற்ற எல்லா முடிவுகளையும் போலவே, மின்சாரம் குறித்தும் நாங்கள் எப்போதும் திட்டத்துடனேயே செயற்பட்டோம். நமது அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்த போதெல்லாம், நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய தேவையான மின்சாரம் வழங்குவதில் கவனம் செலுத்தினர்.

எமது ஆட்சிக் காலத்தில் உமா ஓய, மேல் கொத்மலை, மொரகஹகந்த போன்ற நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தோம். அதேபோன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின் தடைகளை மேற்கொள்ளவில்லை.

எனவே, மின்சாரத்தைப் பார்த்திராத தொலைதூர கிராமங்களை அபிவிருத்திப் பாதையில் கொண்டு வந்து மின்சாரம் வழங்க முடிந்தது. நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள பிள்ளைகள் குப்பி விளக்கின் ஒளியில் கல்வி கற்கும் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இன்றும் அன்றும் நாங்கள் உறுதியாக நம்பினோம்.

2005ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வரும்போது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 65 வீதமானோருக்கு மாத்திரமே மின்சாரம் காணப்பட்டது. 2015ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 98 வீதமானோருக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க எமக்கு முடியுமானதாயிற்று.

இதன் விளைவாக, நகரத்தை போன்றே கிராமத்திலும் மின்குழிழ்கள் ஒளிரும் ஒரு உருமாறும் சகாப்தத்தை நாங்கள் உருவாக்கினோம்.

கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்படாத நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகளை நாம் கடந்த காலத்தில் நிறைவுசெய்தோம். அதன் மூலம் 900 மெகாவொட் மின்சார திறன் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

2020 க்குள் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விரிவுபடுத்தவும் 2015 இல் நாங்கள் ஏற்கனவே திட்டங்களை வகுத்திருந்தோம். இருப்பினும், 2015 ல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான முறையான திட்டம் இல்லை.

இதன் விளைவாக, எதிர்காலத்தில் மின் பற்றாக்குறையை நாம் சந்திக்க நேரிடும். அந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் ஏற்கனவே மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறோம்.

கெரவலபிட்டிய எல்.என்.ஜி. மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 300 மெகாவொட் திறனும், நுரைச்சோலை மற்றுமொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதன் ஊடாக 300 மெகாவொட் திறனையும் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விலையுயர்ந்த வெப்ப மின் நிலையங்களை படிப்படியாகக் குறைப்பதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பிரபலப்படுத்துவதே எமது நோக்கமாகும்.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பிரபலப்படுத்த 2013 ல் தான் நடவடிக்கை எடுத்தோம். அப்போதிருந்து நாங்கள் காற்றாலை மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க திட்டமிட்டோம்.

எங்களுக்கு பின்னர் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் அந்தத் திட்டத்தைத் தொடரும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. நல்லதை நல்ல விதமாகவும், தீயதை தீயதாகவும் காண்பதற்கு அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு மாற்றத்திற்காக எங்களை பழிவாங்குவதை மாத்திரமே செய்தனர்.

கல்வியின் மூலம் நாட்டில் மனித வளங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வீதிகள் அமைக்கப்பட்டு, ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, ஒரு மின்குமிழ் ஏனும் புதிதாக ஒளிரும்போது மக்களின் எதிர்பார்பார்ப்புகளும் ஒளிபெறும். நாம் ஒரு அரசாங்கமாக இது தொடர்பில் எப்போதும் புரிந்துகொண்டுள்ளோம்.

அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபரும் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பான நாட்டில் வாழ விரும்புவார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவார்கள். இதைப் பற்றி யோசித்த மக்கள் கடந்த தேர்தலில் எங்களுக்கு மிக உயர்ந்த மக்கள் ஆணையை வழங்கினர்.

எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

மின்சாரத்தை எடுத்துக்கொண்டாலும், சுபீட்சத்தின் நோக்கின் அடிப்படையில் மின்சார பாவனையாளர் எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியாளராக பரிவர்த்தனை செய்யப்படுவர்.

இன்று யதார்த்தமாகியுள்ளதும், அன்று எமது அரசாங்கத்தின் கீழ் 2014ஆம் ஆண்டு ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட திட்டமொன்றாகும். அதனால் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கு அமையவும் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஒரு மைல் கல்லாகும். இன்று முழு உலகமும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி குறித்து பேசுகின்றது. எனினும் அந்த நாடுகள் அனைத்தும் இயற்கை மூலங்களிலிருந்து மின்சாரம் பெறும் அளவுக்கு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. அந்தவகையில் நம் நாடு எவ்வளவு அதிஷ்டமானது?

மின்சாரத்தை உருவாக்க நாம் காற்றாலை மட்டுமல்ல, சூரிய சக்தியையும் பயன்படுத்தலாம்.

இந்த அனைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம், 80 வீதமான மின்சார திறனை தேசிய கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்க்கிறோம்.

இதுவரை, தனியார் துறைக்கு ஒரு சிறியளவில் அல்லது காற்றாலை மின்சாரம் அடிப்படையில் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இலங்கை மின்சார சபைக்கு அந்த திறன் இருக்கவில்லை. ஏனெனில், இப்போது வரை, காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் துறைக்கு சொந்தமானவை. அதனால், மன்னாரில் திறக்கப்படும் இந்த காற்றாலை மின் நிலையம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான முதல் காற்றாலை மின் நிலையமாக வரலாற்றில் இடம்பெறும்.

எமது நண்பர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்கள், மிகவும் குறுகிய காலத்திற்குள் இந்த திட்டத்தை நிறைவுசெய்வதற்கான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுத்தார். இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அதேபோன்று அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட இத்திட்டத்துடன் தொடர்புடைய இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள், அதிகாரிகள், சக ஊழியர்கள் ஆகியோர் பெறும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தருணத்திலிருந்து இந்த திட்ட இலக்கின் திறனில் 30 சதவீதம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும். எதிர்காலத்தில் மொத்த திறனில் 100 வீதம் மின் கட்டமைப்பில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள் இன்னும் சில மாதங்களில் அடையப்படும்போது, ஒரு அலகு மின்சாரத்தை மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்.

அதன் மூலம் அனைவருக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் இலக்கை அடைவதற்கும், ஆண்டுதோறும் அதிகரித்துவரும் மின்சார கேள்விக்கான நெருக்கடியை தீர்ப்பதற்கும் முடியும்.

இன்று காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான தீர்வாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்தப்படுகிறது. அத்தகைய திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் இல்லை.

மன்னார் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவங்களிலும் நல்ல காற்று வீசும் பகுதி. மேலும், இதன் மூலம் ஏராளமான புலம்பெயர்ந்த பறவைகள் இலங்கைக்கு வருகின்றன. விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த காற்றாலைகளை ஒரு நேரத்தில் நிறுத்தும் ரேடார் அமைப்பையும் நாங்கள் நிறுவியுள்ளோம்.

மக்களாகிய நீங்கள் மகிழ்ச்சியடையும் வகையில்; நாட்டின் அபிவிருத்தியை பலப்படுத்தும் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கமாகும். அதனால் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு நாம் ஒன்றினை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். எங்களின் வழிமுறையானது பழிவாங்குவது அல்ல நாட்டிற்கு சேவை செய்வதே ஆகும்.

அதனால் பாரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையமொன்றினை எமது நாட்டினுள் அமைப்பது தொடர்பாக அரசாங்கம் என்ற ரீதியில் இன்று நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். அண்மையில் ஏற்பட்ட சூறாவளி நாட்டை தாக்கும் முன்பே எதிர்க்கட்சியில் சிலர் அதைப்பற்றி எதிர்வு கூறியிருந்ததை நான் கண்டேன். அவர்கள் காத்திருப்பது மக்களுக்கு பேரழிவு ஏற்பட்டு அவர்கள் அரசாங்கத்திற்கு குறைகூறும் விடயத்தினை எவ்வாறு உருவாக்கலாம் என்று. இவ்வாறான குறுகிய அரசியல் நோக்கங்கள் கொண்டவர்களை நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர். மின்சாரம் வழங்குவதற்கு நான் முன்னுரிமை அளித்தபோது எனக்கு நினைவிருக்கிறது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் என்னிடம் கேட்டனர் மின்சாரம் உண்ணுவதற்காகவா என்று. நான் கூறினேன் ஆம், மின்சாரம் வழங்கி, தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் போது மின்சாரத்தின் மூலம் உண்ண கிடைக்கும் என்று கூறினேன்.

கொவிட் 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் பொருளாதாரமானது பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆயினும் எமது நாட்டு மக்களை அத்தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். அதுபோலவே ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயல்திட்டங்களை நடைமுறப்படுத்த நாம் ஆரம்பித்துள்ளோம். இறக்குமதியினை கட்டுப்படுத்தி உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான நம்பிக்கையினை ஊக்கப்படுத்தியுள்ளோம். இன்றைய தினம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் காற்றாலையும் அதற்கான ஒரு பலமாகும்.

நண்பர்களே, சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின்படி 2030 ஆம் ஆண்டளவில் எமது நாட்டின் மொத்த மின்சாரத்தில் 70 சதவீதம் அல்லது 80 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தங்கியிருக்க வேண்டும்.

மின்சாரத்துறையில் இடம்பெறும் இப்பாரிய மாற்றத்திற்கு, இலங்கையில் பாரிய காற்றாலை மின்நிலையம் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதை நான் நினைவூட்ட விரும்புகின்றேன். உங்கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா,இராஜங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், யதாமினி குணவர்தன , கே.திலீபன், மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ளஸ், மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE