Monday 18th of January 2021 07:18:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
சிறைச்சாலைப் படுகொலைகளும் ஜனநாயக அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்!

சிறைச்சாலைப் படுகொலைகளும் ஜனநாயக அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 11 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் 107 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் 38 பேர் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அது மட்டுமின்றி சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியபோதும் அவை விசேட அதிரடிப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. கைதிகள் களஞ்சியசாலையை உடைத்துக் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இரு சிறை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாக பிடித்து, சிறையை விட்டுத் தப்ப முயன்றபோது ஏற்பட்ட மோதலிலேயே மேற்படி அசம்பாவிதங்கள் இடம்பெற்றதாகச் சிறைச்சாலைத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. சிறைச்சாலைகளில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் தம்மை விடுவிக்கக்கோரிக் கைதிகள் குழப்பங்களில் ஈடுபட்டதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமைச்சர் விமல் வீரவன்ச இக்காரணங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதிக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் நோக்கத்துடன் ஒரு குழுவினர் கைதிகளுக்கு இரத்த வெறியூட்டும் மாத்திரைகளை வழங்கி இத்தகைய மோதலை ஏற்படுத்தினர் என்றதொரு கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். இப்படியான மாத்திரைகளும்கூட உள்ளனவா என்பது இதுவரைப் பொதுவாக அறியப்படவில்லை.

எப்படியிருப்பினும் மஹர சிறைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளும் பரபரப்பும் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் இரண்டாம் தரமானவையாகவே பார்க்கப்படுகின்றன. அதற்கான காரணம் நாளாந்தம் நாட்டில் இடம்பெற்றுவரும் கொரோனா மரணங்களும் வேகமாக அதிகாரித்துவரும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாகவும் எழுந்துள்ள அச்சுறுத்தலா அல்லது இலங்கையில் சிறைச்சாலைப் படுகொலைகள் அப்படியொன்றும் ஆச்சரியத்துக்குரியன அல்ல, என்ற மனப்பாங்கா என்பதைச் சரியாகக் கணிக்கமுடியவில்லை. எப்படியிருப்பினும் இரு விடயங்களுமே மனித உயிர்களின் உயிர் வாழும் உரிமைக்கு அச்சுறுத்தலானவை என்பதை மறுத்துவிட முடியாது.

சிறைக் கைதிகளின் கொரோனாவிலிருந்து தப்பி உயிர் வாழவேண்டுமென்ற தவிப்பை அவர்கள் வன்முறை மூலம் நிறைவேற்ற முயன்றபோது உயிர்களையே இழக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் வன்முறைகளிலும் ஏற்கனவே பழக்கப்பட்டவர்களாதலால் அவர்கள் அதே வழியில் கலவரங்களில் இறங்கியமையில் வியப்படைய எதுவுமில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நான்கு பக்கமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டுப் பலத்த கட்டுக்காவலிலுள்ள சிறை அதிகாரிகள், காவலர்களின் ஆயுதமேந்திய பாதுகாப்பிலுள்ள சிறைச்சாலைகளில் படுகொலைகள் இடம்பெறுவது எவ்விதத்திலும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல. ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கங்கள் மாறினாலும் அரச இயந்திரம் மாற்றமடைவதில்லை. நாட்டின் அரச அதிகாரத்தைக் கட்டிக்காப்பது நீதிமன்றம். சிறைச்சாலை, ஆயுதப்படைகள் உள்ளிட்ட அரச இயந்திரமேயாகும். அந்த அரசு இயந்திரத்தில் சிறைச்சாலையும் ஒரு முக்கிய அம்சமாகும்.

எனவே சிறைச்சாலை நடைமுறைகள் வழி தவறும்போது ஜனநாயகமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிடும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறைச்சாலைப் படுகொலைகள் அப்படியொன்றும் புதிதாக இடம்பெறும் சட்டமீறல்களல்ல. ஏற்கனவே பல முறைகள் இடம்பெற்றுப் பல மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டிருந்தன.

2012ம் ஆண்டில் இடம்பெற்ற வெலிக்கடைச் சிறைப்படுகொலைகள் இலகுவில் மறந்துவிடக் கூடியவையல்ல. இது தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலத்திலேயே இடம்பெற்றது. மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் இது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுச் சில சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலைத் திணைக்கள உயரதிகாரி ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டார். அந்த வழக்கு இப்போதும் இடம்பெற்று வருகிறது. இச்சம்பவத்தில் 25 கைதிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். திட்டமிட்ட வகையிலேயே கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1983 ஜூலையில் இலங்கையில் நாடு பரந்த இனக் கலவரங்கள் இடம்பெற்று பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், சொத்துக்கள், தொழில் நிலையங்கள் குடியிருப்புகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் அகதிகளாக விரட்டப்பட்ட காலப்பகுதியில் அந்தக் கொலை வெறி வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள்ளும் மூட்டப்பட்டது. 1983 ஜூலை 25ம் நாள் திறந்து விடப்பட்ட கொடிய குற்றவாளிகளான சிங்களக் கைதிகள் களஞ்சியசாலையின் ஆயுதங்களைக் கையிலெடுத்துக்கொண்டு வந்து தமிழ் கைதிகளைத் தாக்கினர். அத் தாக்குதலில் குட்டிமணி, தங்கத்துரை உட்பட 35 தமிழ்க் கைதிகள் கண்கள் தோண்டப்பட்டும், பிறப்புறுப்புகள் அறுக்கப்பட்டும், வெட்டிக் குடல்கள் வெளியே உருவப்பட்டும்; சிறைக் காவலர்கள் முன்னிலையில் படுகொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அதன் பின் 27ம் திகதி சிங்களக் கைதிகள் மேற்கொண்ட அதேபோன்ற தாக்குதலில் 18 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இலங்கைக்கே அவப் பெயரை ஏற்படுத்திய இச்சிறைச்சாலைப் படுகொலைகள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவுமில்லை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவுமில்லை. மாறாக இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களெனக் கருதப்பட்ட கொடிய குற்றவாளிகள் மணலாறு, கென்ற் பண்ணை, டொலர் பண்ணை ஆகிய பகுதிகளில் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை அமைக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அயற் கிராமங்களிலிருந்து வேட்டை, தேன் சேகரித்தல் போன்றவற்றுக்குக் காடுகளுக்குச் செல்லும் தமிழ் கிராமவாசிகளைக் கழுத்து வெட்டிக் கொன்ற பல சம்பவங்களும் இடம்பெற்றன. அதாவது சிறைச்சாலையில் படுகொலைகளை மேற்கொண்ட குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக மேலும் குற்றங்களைப் புரிய வாய்ப்பளிக்கும் அநீதி அரங்கேற்றப்பட்டது.

இவ்வாறே வவுனியா சிறைச்சாலையில் தங்களை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தமிழ்க் கைதிகள் வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொடிய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு டிலக்ஷன் என்ற இளைஞன் சித்திரவதைகளின் கொடூரம் காரணமாக 'கோமா' நிலைக்குத் தள்ளப்பட்டுப் பின் உயிரிழந்தான்.

பிந்துனுவௌ சீர்திருத்த முகாமில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுதலையாவதற்குச் சில நாட்கள் இருக்கும்போதே அதிகாரிகளின் அனுசரணையுடன் முகாமுக்குள் புகுந்த கிராமவாசிகள் நடத்திய கோடூரத் தாக்குதலில் 24 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட சிலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மேன்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கைச் சிறைச்சாலைகளின் வரலாற்றில் சிறைச்சாலை அதிகாரிகளினாலும் அவர்களின் அனுசரணையுடனும் ஏராளமான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதாவது நீதிமன்றக் கட்டளையின்றியே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இதுவரை எந்த ஒரு படுகொலைக்குமான நீதி கிடைக்கப் பெறவுமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவுமில்லை.

இப்படியான அநீதிகள் தமிழ் கைதிகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும்போது எந்தவொரு சிங்கள அரசியல்வாதிகளேர் சிங்களப் புத்திஜீவிகளோ தங்களின் அனுதாபங்களைத் தெரிவிக்கவுமில்லை கண்டனங்களை வெளியிடவுமில்லை.

இப்போது அதே கொலை வெறியாட்டம் 2012லும், 2020லும் சிங்களக் கைதிகள் மேலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

1983 வெலிக்கடையில் தமிழ்க் கைதிகள் மீது சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றபோது அது திருநெல்வேலியில் இடம்பெற்ற தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே சிங்களவர்களின் பல தரப்பினராலும் கருதப்பட்டு அதற்கு ஆதரவு வழங்கும் நிலைமையும் நிலவியது. டிலக்ஷனின் படுகொலை, பிந்துனுவௌ படுகொலை என்பனவும் பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளாகவே பார்க்கப்பட்டன. ஆனால் அந்த நடவடிக்கைகளின் மூலவேராக ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாடற்ற வகையில் அதிகாரத்தைப் பலப்படுத்த மேற்கொண்ட ஜனநாயக மீறலும், சர்வதேச மனித உரிமை மீறல்களும் மேற்கொள்ளப்பட்டன என்பது அவர்களால் உணரப்படவில்லை. தமிழர்கள் மீது நடத்தப்பட்டபோது பொருட்படுத்தப்படாத அநீதிகள் வளர்ச்சியடைந்து 2012 வெலிக்கடைச் சிறைப்படுகொலை, 2020 மஹர சிறைப்படுகொலை என விரிவடைந்துள்ளன. இப்படுகொலைகள் அன்று தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மீறல், மனித குல விரோத நடவடிக்கைகள் என்பவற்றின் தொடர்ச்சியேயன்றி இவை தனிச் சம்பவங்கள் அல்ல என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. இப்போக்கை மேலும் வலுப்படுத்த அரசு இயந்திரம் படிப்படியாக இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம்.

எனவே சிங்கள மக்கள் ஆட்சிப் பீடம் ஒடுக்குமுறை அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் மூலம் ஒரு ஜனநாயகத்தின் பேரிலான சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது என்பதைப் புரிந்து கொண்டு சகல ஒடுக்குமுறைகளுக்குமெதிராகவும் விழிப்படையத் தவறினால் நாடும் நாட்டு மக்களும் பேரழிவுக்குள் தள்ளப்படுவது தவிர்க்கப்படமுடியாயதாகும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

08.12.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE