Thursday 18th of April 2024 06:45:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஹம்பாந்தோட்டை நோக்கிய சீனாவின் நேரடி முதலீட்டுத் திட்டம்  கூட்டு இராஜதந்திரத்தின் வெற்றியா?

ஹம்பாந்தோட்டை நோக்கிய சீனாவின் நேரடி முதலீட்டுத் திட்டம் கூட்டு இராஜதந்திரத்தின் வெற்றியா?


உலகளாவிய ரீதியில் சீனாவின் பலம் அதிகரித்துக் கொண்டு செல்வது இலங்கை போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு இலாபகரமானதாகவே அமைய வாய்ப்பு அதிகமுண்டு.

அதனையே இலங்கையும் தனது நலனுக்கான பாதுகாப்பெனக் கருதுகிறது. வடக்கு கிழக்கிலும் தென் இலங்கையிலும் பல புரட்சிவாதிகள் ஏன் சீன செல்வாக்கை எதிர்த்து குரலெழுப்பாது இந்திய ஜப்பான் அமெரிக்க செல்வாக்கினை எதிர்க்கின்றனர் என்ற கேள்வி எழுகிறனர்.இது மிக மோசமான கேள்வி தான். காரணம் இலங்கையில் பௌத்த மகாசங்கத்தினரும் பெரும்பான்மை தீவிரவாதமும் ஆட்சியாளரை விட இலங்கை அரசையே பபாதுகாக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். அதனால் இலங்கை அரகைப் பாதுகாக்கும் சக்திகளுடன் உறவு வைத்திருப்பதும் அவர்களது செல்வாக்கினை ஏற்றுக் கொள்வதும் தவிர்க்க முடியாதது எனக் கருதுகின்றனர். அதனாலேயே சீன உறவை செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். இந்திய-அமெரிக்க கூட்டிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்க வேண்டுமாயின் சீனாவுடனான உறவு இலங்கை அரசுக்கு அவசியமானது. அதனையே தற்போதைய அரசாங்கம் மேற்கொள்கிறது. இக்கட்டுரையும் இலங்கை-சீன உறவின் புதிய பரிமாணத்தை தேடுவதன் மூலம் இலங்கையின் கூட்டு தந்திரேபாயத்தை( Collective Diplomacy) புரிந்துகொள்வதாக அமையவுள்ளது.

19.11.2020 அன்று சீனாவின் புதிய தூதுவர் கியி சென்ஹேங் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவைச் சந்தித்து தனது பதவி சான்றிதளை கையளித்தார். அப்போது ஜனாதிபதிக்கும் புதிய தூதுவருக்குமான உரையாடலில் சில முக்கிய விடயங்கள் பகிரப்பட்டது.

குறிப்பாக பிரிவினை வாதத்திற்கு எதிரான பேரில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை உட்கட்மைப்பு அபிவிருத்திற்கு சீனா பெரிதும் உதவியது. சீனாவுக்கு இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை சிலர் விமர்சித்தனர். இந்த திட்டங்கள் பயனற்றவை எ;பது அவர்களது வாதமாகும். உண்மை அதுவல்ல. சீனாவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அதிக வருமானம் மற்றும் தொழில்வாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. எனது பதவிக் காலம் முடிவதற்குள் இந்தத் திட்டங்களின் மூலம் அதிக பட்ச நன்மைகளை பெற்றுக் கொள்வதே எனது நோக்கமாகும் என்றார். அவர் மேலும் தெரிவிக்கும் போது இலங்கை அதன் அபிவிருத்தி முயற்சிகளில் மேலும் வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக முதலீட்டை ஈர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறது என்றார்.

இதற்கு பதிலளித்த சீனாவின் புதிய தூதுவர் சென்ஹோங் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால நட்புறவை மேலும் மேம்படுத்தும் அபிவிருத்தி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்றார்.

அது மட்டுமன்றி புதிய சீனத் தூதுவர் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியதுடன் புதிய அபிவிருத்தி உடன்பாடு ஒன்றிலும் கைச்சாத்திட்டார். குறிப்பாக ஹம்பாந்தோட்டைத் துறைமுக தொழில்துறைப் பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழில் சாலைக்கான ஒப்பந்தம் இருவராலும் கைச்சாத்திடப்பட்டது.சீனாவின் டயர் உற்பத்தி நிறுவனமான ~hங்டொங் ஹாஹீவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அ.டொடலை முதலீடு செய்ய உடன்பட்டுள்ளன.இதன் பிரகாரம் மூன்று ஆண்டுக்குள் உற்பத்தி உள்நாட்டுத் தேவையை கடந்து ஏற்மதிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.வருடாந்தம் 9 மில்லியன் டயர்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேசத் துறைமுகத்தில் 121 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள தொழில்துறைப் பூங்காவில் பாரிய தொழிவாய்ப்புகளும் ஏற்றுமதி வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. அது தரனித்து இலங்கைக்கு மட்டுமல்ல சீனாவின் கம்பனிக்கும் அதிக இலாபத்தை தருவிக்கக்கூடியது என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக இலங்கையின் ரப்பர் உற்பத்தியினால் அமையவுள்ள டயர் தொழில் சாலையின் உற்பத்தியில் அதிக இலாபம் அடைய வாய்பட்புள்ளது. அத்தகைய இலாபத்தில் பங்கினை அடையும் கம்பனியாக ~hங்டொங் விளங்கப்போகிறது.

எது எவ்வாறு அமைந்தாலும் இலங்கை தெளிவான பொருளாதார அடித்தளத்தை சீனாவுடன் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.கடனைவிட முதலீட்டை ஊக்குவிக்கும் புதிய அரசாங்கம் சீனாவுடனான பொருளாதார உறவை வளர்ப்பதன் மூலம் அரசியல் உறவையும் வலுப்படுத்துகிறது.அமெரிக்க -இந்திய கூட்டின் நெருக்கடியைக் கடந்து செல்வதற்கு இலங்கைக்கு கிடைத்த பிரதான வாய்ப்பாக சீனக் கம்பனிகளது வருகை அமைந்துள்ளது எனலாம். குறிப்பாக மிலேனியம் சவால் உடன்பாடு தொடர்பில் அமெரிக்காவுடன் எழுந்த நெருக்கடியை கையாளும் விதத்தி-ல் இலங்கையின் நகர்வு சீனா சார்பானதாக அமைந்துள்ளது. அதற்கு வலுக் கொடுக்கும் வி-தத்தில் சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார விரிவாக்க ஒத்துழைப்பு (Regional Comprehensive Economic Partnership) விளங்கப் போகிறது. அதனை நோக்குவது அவசியமானது.

முதலாவது சீனாவின் பலமென்பது இலங்கை ஆட்சியாளரின் பலம் மட்டுமல்ல இலங்கை அரச இயந்திரத்தின் பலமுமாகும். காரணம் இலங்கைத் தீவின் இருப்பு அதன் வெளியுறவுக் கொள்கையினாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனை கடந்த காலத்திலும் சமகாலத்திலும் இலங்கை சரிவரப் பிரயோகப்படுத்தி வருகிறது. மகாநாமரின் மகாவம்சத்தின் உருவாக்கத்திலிருந்து இலங்கையின் வெளியுறவு இலங்கை அரச இயந்திரத்தை பாதுகாக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியா சாம்ராட்சியத்தின் விஸ்தரிப்பிலிருந்து இலங்கைத் தீவை பாதுகாக்க ஆரம்பித்த சிந்தனை தொடர்ச்சியான வரலாற்றுப் போக்காக மாறியுள்ளது. அத்தகைய சிந்தனை மரபை 1950 மற்றும் 1960 களில் புலமைசார் தளத்தில் நவீன மரபுக்குள் கொண்டு சென்றவர் செல்ரன் கொடிக்காரா. இதன் தொடர்ச்சியையே ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதன்மையானவர். இதனால் இந்தியாவையும் அமெரிக்காவையும் எப்படி எதிர் கொள்வதென்ற எண்ணம் இலங்கையின் புலமைசார் தளத்திலும் அரசியல் தலைமைகளிடமும் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. சீனா என்பது தனித்து ஒரு நாடாக இல்லை. அது ஒரு நீட்சிபெற்ற நட்பு நாடுகளின் கூட்டாகும். அதன் அடிப்படை பொருளாதாரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது முதல் நிலை குறிகாட்டியாகும். அதன் அடுத்த கட்ட இலக்குகள் அரசியல் இராணுவமாக அமையலாம். ஆனால் அதற்காக சீனா இலங்கையில் அரசியலையோ இராணுவத்தினையோ முதன்மைப்படுத்தாது பொருளாதாரத்தின் வழியாக அதனை அடைய முயலுகிறது. அதற்காக அரசியலையும் இராணுவத்தினையும் கைவிட்டதென்று அர்த்தமாகாது.

இரண்டாவது இலங்கைத் தீவானது இனமோதலுக்கு பின் நெருக்கடிமிக்க அரசியலைக் கொண்டுள்ளது. அதில் இந்தியா அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் என்பன சீனாவுக்கு எதிரான தளத்தில் இயங்குவதனால் இலங்கையை கையாள முனைகின்றன. பதிலுக்கு இலங்கை ஆட்சியானது இந்த நாடுகளை கையாளத் தவறுமாயின் பாதுகாப்பற்ற இருப்பினையே எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதனாலேயே சீனாவை முன்னிறுத்திக் கொண்டு இந்த நாடுகளை இலங்கை ஆட்சித்துறை கையாளத் தொடங்கியுள்ளது.இது தற்போது ஆரம்பித்துள்ளது என்பதல்ல. கடந்த காலத்திலும் அத்தகைய கையாளுகையையே இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவந்துள்ளனர். இது சற்று வித்தியாசமானதாக அமைந்துவருகிறது. அதற்காலக இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியா மற்றும் அமெரிக்க சகட்திகளை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. மாறாக எப்படி அவுஸ்ரேலியா நியூசிலாந்து ஜப்பான தென்கொரியா போன்ற நாடுகள் செயல்படுவது போல் காட்டிக் கொள்ள முயலுகிறது.

மூன்றாவது அவ்வாறு இலங்கை செயல்படுவதற்கு வலுவான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது பொருளாதார முதலீடுகளே அன்றி கடன்கள் அல்ல என்ற வாதத்தை இலங்கை ஜனாதிபதி அமெரிக்க வெளியுறவுச் செயலாளருக்கும் சீனாவின் புதிய தூதுவருக்கும் தெரிவித்துள்ளார். அதனை வெளிப்படையாகப் பார்த்தால் சரியானது போல் தெரிகிறது. இலங்கைத் தீவில் வளர்ச்சியடையாத பணிக்குழுவும் அரசியல் தலையீடுடைய நிர்வாகமும் கடனைப் பெறுவதன் மூலம் விருத்தியை சாத்தியப்படுத்திவிட முடியாது என்பது தெரிகிறது. ஆனால் முதலீட்டினால் வளச் சுரண்டலும் பாதுகாப்பற்ற ஏற்றுமதியும் சாத்தியமாகும் வழிமுறை அதிகமாகும். இது விடயத்தில் பொருளியலாளர்களே பதிலளிக்க வேண்டும். வெளிப்படையாகப் பார்த்தால் கடன்களால் ஏற்படுகின்ற பாதிப்பினை விட முதலீட்டினால் ஏற்படும் பாதிப்பு அதிகமானதென்ற மதிப்பீடு நிலவுகிறது. முதலீட்டின் இலாபம் முதலிட்ட அரசுகளை அதிகம் சாரும். ஆனால் தென்கிழக்காசிய நாடுகள் நேரடி முதலீட்டினாலேயே பொருளாதார விருத்தியை அடைந்ததுடன் புதிய தொழில் நுட்ப நாடுகளாக வளர்ச்சியடைந்தன. அதற்கு தென் கிழக்காசிய நாடுகளின் பணிக்குழுக்களே பிரதான காரணமாகும். அதிகாரத்தை விட பொருளாதார விருத்திக்கும் சமூகக் கட்டுமாணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள தென் கிழக்காசிய நாடுகள் நேரடி முதலீட்டினால் அதிக இலாபத்தினை அடைந்துள்ளன.

நான்காவது அமெரிக்க -இந்திய கூட்டின் பிரதான நோக்கம் இராணுவ ஒத்திகைகளும் அரசியல் அணுகுமுறையாக விளங்குகின்றன. ஆனால் சீனாவின் அணுகுமுறை பொருளாதாரமாகவே தெரிகிறது. இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத் தேவைகள் முதன்மையானதாக அமைந்திருப்பதனால் சீனாவுடனான உறவு அதிக முக்கியத்துவம் பொருந்'தியதாக அமமைகிறது. ஆனால் அத்தகைய பொருளாதாரத் தேவையுடன் சீன நகர்வு நின்றுவிடுமா என்ற கேள்வி முக்கியமானது. அவ்வாறே இலங்கைத் தீவுக்கும் அத்தகைய அரசியல் தேவை அவசியமானதாக உள்ளதனால் சீனாவுடனான உறவை முதன்மையானதாக நோக்குகின்றது. இந்தியாவை கையாளும் சக்திகளை நோக்கிய நகர்வையே இலங்கை பின்பற்றுகிறது. இது எதிர்ப்புவாதமல்ல. இது ஒரு இராஜதந்திரக் கையாளுகையாகும்.

எனவே சீன இலங்கை உறவு ஆசிய-பசுபிக் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பினால் பலமடைந்திருப்பதுடன் முழு உலகத்திலும் சீனாவின் அணி பொருளாதார அணியாகவும் பலமான அணியாகவும் மாறியுள்ளது. சீனாவின் மென் அதிகார அணுகுமுறையானது அமெரிக்க இந்திய நட்புக்களையும் புவிசார் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தினாலான வலுவையும் சாத்தியப்படுத்தியுள்ளது. இலங்கை ஜனாதிபதியினது ஆட்சிக்காலம் ஒருவருடத்தை நிறைவு செய்தமைக்கான வாழ்துத் தெரிவித்த இந்தியப் பிரதமரது செய்தியும் இந்திய பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரது வருகையும் இந்தியாவுக்கான அடுத்த கட்ட அரசியலாகவே தெரிகிறது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE