Friday 19th of April 2024 02:34:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
அஜித் டோவால் விஜயமும் இலங்கை அரசியலும்! - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

அஜித் டோவால் விஜயமும் இலங்கை அரசியலும்! - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை அரசியல் உறுதிப்பாடு என்பது இந்தியாவுடனான உறவிலே அதிகம் தங்கியிருப்பதான தோற்றப்பாடு உண்டு. அதனை நிராகரிக்க முடியாது விட்டாலும் இலங்கை இந்தியாவை கையாளுவதனைப் பொறுத்ததாகவே அத்தகைய எண்ணம் வளர்ந்துள்ளது. அதிலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைமை இலங்கை ஆட்சிக்கு விரோதமாக அமைய ஆரம்பித்ததன் பின்பாடு இந்தியாவைக் கையாளும் திறன் இலங்கை ஆட்சியாளருக்கு அவசியமானதாக அமைந்தது. ஆனால் இந்தியத் தரப்பு இலங்கையைத் திருப்திப்படுத்த முடியாத சூழலிலேயே இலங்கைத் தமிழரை அரவணைத்துக் கொண்டது. ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும் அதனையே வெளிப்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை முன்னிறுத்தி ஈழத் தமிழரை கையாளும் இந்தியா இந்திரா காந்தியின் படுகொலைக்கு உரித்துடைய நாட்டுடன் மட்டும் புரிதலுடனும் அதிக நெருக்கமுடனும் செயல்படுவதை புரிந்து கொள்ளும் போது வாதத்தின் போலித்தனம் தெரிகிறது. இக்கட்டுரையும் ஆரோன் டோவிட் மில்லர் குறிப்பிட்டது போல் 'இராஜதந்திரத்தின் முடிவு' என்பது போலவே அஜித் டோவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை இறுதியாக சந்திப்பு அமைந்துள்ளதா என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

நவம்பர் 28-29.ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வருகை தந்த இந்தியாவின் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் அஜித் டோவால் இலங்கைஇ இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையிலான பாதுகாப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால் அத்தகைய மகாநாட்டை விட இலங்கை விடயமே அவரிடம் மேலானதாக அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.அதன் அடிப்படையில்; இலங்கையின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இறுதி நேர சந்திப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் சந்தித்துள்ளார். இவரது விஜயத்தின் முக்கியத்துவத்தை முதலில் அவதானிப்போம்.

முதலாவது இதில் இலங்கையின் ஜனாதிபதியை சந்தித்த போது உரையாடிய விடயங்கள் அதிக தனித்துவம் மிக்கதாகவும் இலங்கை தொடர்பில் இந்தியாவின் எண்ணப்பாடு எவ்வாறு அமைய உள்ளது என்பது பற்றிய தெளிவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பதென உரையாடி உள்ளார். அது மட்டுமன்றி இலங்கையின் உட்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் அதன் விருத்தி தொடர்பில் உரையாடியதோடு இந்தியாவினுடைய பங்களிப்போடு அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்த வேண்டுமென இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. அவ்வாறே இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும்; பங்களிப்புக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியா விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் இரு நாட்டுக்குமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு அதற்கான அவசியப்பாட்டை இரு தலைவர்களும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இரண்டாவது இந்திய பாதுகாப்புச் செயலாளர் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் உரையாடிய போது முதன்மைப்படுத்திய விடயங்களை அவதானித்தல் அவசியமாகும். குறிப்பாக கொவிட் 19 தொற்று நிலைக்கு மத்தியிலும் பிராந்திய அடிப்படையில் நாடுகளுக்கிடையிலான பொருளாதாரப் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் தென்னாசிய பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரப் பலத்தை கட்டியெழுப்பவது மட்டுமன்றி அபிவிருத்தி நோக்கில் பயணிக்கும் மூலோபாயங்களைக் கண்டறிய வேண்டுமென அஜித் டோவால் தெரிவித்துள்ளார். அதற்கான ஒப்புதலை அளித்த இலங்கைப் பிரதமர் பிராந்திய மட்டத்தில் நாடுகளுக்கிடையிலான கருத்தாடல் ஒன்றைக் கட்டியெழுப்புதல் அவசியமென்றும் அதற்கான மூலோபாயப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டுமெனவும் இத்தகைய நகர்வுக்கு இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தiலைமை தாங்க வேண்டுமெனவும் அஜித் டோவால் முன்மொழிந்துள்ளார். அதற்காக இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் ஒப்புதல் அளித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட இலங்கைப் பிரதமர் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒப்பானதாக தென்னிலங்கைப் பகுதிகளிலும் மேற்கொள்வதற்கு ஆதரவைப் பெற்றுத் தருமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அது மட்டுமன்றி நவீன இந்தியத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இலங்கையில் நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இச் சந்திப்பின் போது இரு தலைவர்களாலும் உடன்பாடு எட்டப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லோவிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மூன்றாவது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சந்திப்பொன்றை தமிழ் தேசியக் கூட்;டமைப்பின் தலைவர் சம்மந்தனுடன் அஜித் டோவால் மேற்கொண்டுள்ளார். 29.11.2020 அன்றைய தினம் நிகழ்ந்த சந்திப்பானது 30 நிமிடங்கள் நீடித்ததென்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் வாசஸ்தலத்தில் நடைபெற்றதென்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் விவகாரம் குறித்தும் வடக்கு கிழக்கின் நிலைமைகளை மையப்படுத்தியும் இருவரும் பேசிக் கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டடமைப்பின் தலைமை தகவல் வெளியிட்டது.

இத்தகைய உரையாடலும் சந்திப்புகளும் பல்வேறுபட்ட எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதனை அவதானித்தல் அவசியாகும்.

ஒன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலின் விஜயம் இந்து சமுத்திரப் பிராந்திய மாநாட்டுக்கான விஜயமாக அமைந்திருந்தது. ஆனால் அதன் உள்ளடக்கத்தில் தெளிவான விடயங்களை இந்து சமுத்திரம் பொறுத்து முதன்மைப்படுத்தியதை விட இலங்கை இந்திய ஒத்துழைப்புக்கான விடயம் அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனை முதன்மைப்படுத்திய உரையாடல்களில் அவரது விஜயத்தின் போது இந்தியப் பிரதமரது வாழ்த்துக் கடிதம் இலங்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டமை உணர்த்துகிறது.

இரண்டாவது இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரமதமர் உடனான உரையாடலின் போது இந்தியப் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையுடனான பொருளாதார அபிவிருத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இலங்கைத் தரப்பு வடக்க கிழக்கு மலையகத்தைக் கடந்து தென்னிலங்கையுடனான இந்திய ஒத்துழைப்பை அதிகம் முதன்மைப்படுத்தியிருந்தமையம் அதற்கான ஒப்புதலை அஜித் டோவால் தெரிவித்திருந்தமையையும் கண்டுகொள்ள முடிந்திருந்தது. கடந்த வாரங்களில் சீனாவின் புதிய தூதுவர் இலங்கைப் பிரதமரோடு மேற்கொண்ட உடன்பாடு சீனாவின் நேரடி முதலீட்டுக்கான முதல் கட்ட முயற்சியாக அமைந்திருந்தது. அத்தகைய முதல் கட்ட முயற்சி ஹம்பாந்தோட்டை தொழில் பூங்கா மற்றும் அதில் அமையவுள்ள ரயர் தொழிற்சாலை முக்கியமானதாக விளங்கியிருந்தது. அத்தகைய இலங்கை சீன பொருளாதார அபிவிருத்திக்காகன கட்டமைப்பை எதிர்கொள்ளும் விதத்திலேயே அஜித் டோவாலின் விஜயம் பார்க்கப்பட வேண்டும். சீனாவக்கு மாற்றீடான இந்திய முதலீடுகளையும் இந்திய பொருளாதார வாய்ப்புக்களை இலங்கையில் விஸ்தரிப்பதையும் இலக்காகக் கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரது விஜயம் அமைந்துள்ளது.

மூன்றாவது அஜித் டோவாலின் தமிழ்த் தரப்புடனான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இல்லாமை மட்டுமன்றி முக்கியத்துவம் குறைந்ததும் தமிழ்த் தரப்பினை திருப்திப்புடுத்துகின்ற விதத்திலம் அமைந்திருந்தமை தெளிவாகத் தெரிகின்றது. 1980களுக்குப் பின்னர் குறிப்பாக இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தரப்பை இறுதியாக கையாளும் போக்கொன்றைக் கண்டு கொள்ள முடிகிறது. இது இந்தியத் தரப்பின் இராஜதந்திரத்தின் முடிவாவே தெரிகிறது. இவ் வகையில் சந்திப்பானது அஜித் டோவால் சம்மந்தன் சந்திப்பு அமைந்துள்ளது. இராஜதந்திரம் என்பது ஒரு போதும் முடிவதில்லை. தோல்வியயை நோக்கிய சமர்களை நகர்த்துவது அல்லது வெற்றி கொள்வது இராஜதந்திரமாகும். யதார்த்தமாகப் பார்த்தால் இலங்கை ஆட்சியாளர்களை சீன தரப்பிடமிருந்து விலக்கிக் கொள்ள தமிழ்த் தரப்பையே முதலில் அஜிக் டோவால் சந்தித்திருக்க வேண்டும். அத்தகைய முதல் சந்திப்பின் ஊடாக ஒரு செய்தியை இலங்கை ஆட்சித்துறைக்;கு அனுப்பிவிட்டு அஜித் டோவால் இலங்கை தரப்புடனான சந்திப்பை மேற்கொண்எருப்பாராயின் அதற்கொரு இராஜதந்திர முகம் இருந்திருக்கும். இதனாலேயே அஜித் டோவாலின் விஜயம் இராஜதந்திர தோல்வியாக தெரிகிறது. இது தொடர்ச்சியான இந்திய இராஜதந்திரத்தின் தோல்வியாக மதிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை இந்திய உடன்பாட்டுக்குப் பின்னர் இந்திய இராஜதந்திரத்தின் பலவீனங்கள் இலங்கை ஆட்சியாளர்ளளையும் அரசையும் பலமான நிலைக்கு இட்டுச் செல்ல உதவுகிறது. இதில் இலங்கை இராஜதந்திரம் வலுவான நிலையிலேயே காணப்படுகிறது.

எனவே தான் ஆரோன் டோவிட் மில்லர் குறிப்பிடுவது போல் இந்தியத் தரப்பின் அணுகுமுறை இலங்கை விடயத்தில் மட்டுமன்றி பிராந்திய சர்வதேச மட்டத்திலும் இராஜதந்திரத்தின் முடிவா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கை ஆட்சியாளர்கள் இராஜதந்திரத்தின் பலத்திற்கு முன் இந்தியத் தரப்பு தோற்கடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தரப்பும் அதன் அரசியல் தலைமைகளும் இந்தியத் தரப்பை கையாளுவதை கைவிட்டதன் பிரதிபலிப்பும் முக்கிய காரணமாகும். இதனால் இந்திய-அமெரிக்க கூட்டை மட்டுமல்ல இலங்கைத் தமிழரையும் பாதுகாக்க முடியாது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE