Saturday 20th of April 2024 09:22:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 33 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 33 (வரலாற்றுத் தொடர்)


"இன ஒடுக்குமுறையாகப் பரிணாமமடைந்த சிங்கள தேசிய எழுச்சி" - நா.யோகேந்திரநாதன்!

"இச் சபையின் உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி வெளியிலுள்ள தமிழ் மக்களுக்கும் இச்சபையிலிருந்து ஒரு வேண்டுகோளைவிடுக்க விரும்புகிறேன். தீவிரமான மன நிலையிலிருந்து பேசுவதற்கு நான் பழக்கப்பட்டவனல்ல. நமது பாரம்பரிய தாராண்மைப் பேச்சிலிருந்து விடுபடுமாறு நான் அவர்களைக் கேட்கவில்லை. ஆனால் எமது விருப்பத்துக்கு மாறாக ஒரு மொழி எம்மீது திணிக்கப்படுமானால் நாம் அதை எதிர்க்கவேண்டும். தொடர்ந்தும் எதிர்ப்போம். அத்துடன் எமது எதிர்ப்பையும் அங்கீகரிக்கப்பட்ட தார்மீக வழி நின்று மேற்கொள்வோம். எனக்கு வன்செயலில் நம்பிக்கையில்லை. இவ்வாறு வெளிப்படுத்தினால் அது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடக்கூடும். ஆதலால் உருப்படியான எதிர்ப்பியக்கம் மேற்கொள்ளப்படவேண்டும்".

இது 1952ம் ஆண்டு களனியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இலங்கையின் சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தபால் தந்தி அமைச்சராகவிருந்த சு.நடேசபிள்ளை அதை எதிர்த்து தன் பதவியை இராஜிநாமாச் செய்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையின் ஒரு பகுதி இது.

1952ம் ஆண்டு தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை தோற்கடித்து வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டவர். சிறந்த கல்விமானான இவர் சேர்.பொன்.அருணாசலம், சேர்.பொன்.இராமநாதன் ஆகியோரின் மருமகனுமாவர். இவரும் மட்டக்களப்பு பிரதிநிதியான நல்லையாவும் தனிச் சிங்களப் பிரேரணையை எதிர்த்துத் தங்கள் பதவிகளை இராஜிநாமாச் செய்தனர்.

சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழியாக வேண்டுமென்ற கோரிக்கை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் களனி மாநாட்டில் முன் வைக்கப்பட்டபோதிலும்கூட அது ஏற்கனவே வௌ;வேறு வடிவங்களில் தோன்றி வளர்ச்சி பெற்றதென்பதே முக்கிய விடயமாகும்.

பிரித்தானியரின் ஆட்சியில் ஆங்கிலம் கற்ற மேட்டுக்குடியினர், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியோர் போன்ற கனவான்களே சமூகத்தில் மட்டுமின்றி அரசியலிலும் மேலாதிக்கம் வகிக்கும் நிலை நிலவியது. அதுமட்டுமின்றி சிங்கள மொழியும் பௌத்த மதமும் புறந்தள்ளப்பட்டு விடும் நிலையும் உருவாகியிருந்தது. இந்த நிலை சிங்கள பௌத்த புத்திஜீவிகள் மத்தியில் இலங்கையின் சுதந்திரம் பற்றியும் சிங்கள, பௌத்த பெருமைகளை மீட்டெடுத்துக் காப்பாற்றி வளர்ப்பது தொடர்பானதுமான மீளெழுச்சி தொடர்பாகவும் சிந்திக்கத் தூண்டியது.

அதன் காரணமாக தேசிய சிந்தனை கொண்டோர், கலைஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பல தரப்பினரையும் இணைத்து பண்டாரநாயக்கவால் 1933ல் சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள பௌத்த தேசியமென்றால் ஏனைய இனங்கள், மதங்களுக்கு எதிரான உணர்வு என அநகாரிக தர்மபாலவால் உருவாக்கப்பட்ட கற்பிதம் அவ்வமைப்பில் நீறுபூத்த நெருப்பாக முடங்கிக் கிடந்த போதும் அது ஆரம்ப காலத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. பிளவுபட்டிருக்கும் சிங்கள இனத்தை ஒன்று சேர்த்துத் தேசாபிமானத்தைக் கட்டியெழுப்பி தேசத்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும் சிங்கள பண்பாட்டு, கலை, இலக்கியங்களை வளர்த்தெடுக்கக்கூடிய வகையில் மேற்கொள்வதுமே சிங்கள மகா சபையின் அடிப்படை நோக்கமெனப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்நிய ஆதிக்கத்துக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு தேசமோ அல்லது தேசிய இனமோ தங்களுக்குள் உள்ள பேதங்களைக் கடந்த ஒன்றுபட்டு விடுதலைக்குப் போராட விளைவதையும் தமது பண்பாடுகளை, இலக்கியங்களை வளர்க்க முனைவதையும் எவருமே தவறென்று சொல்லி விடமுடியாது. அது முழுக்கமுழுக்க நியாயமானது. அது ஒரு வரவேற்றக்கத்தக்க முற்போக்கான அம்சமாகும்.

ஆனால் ஒரு இனம் தனது மீட்சிக்காக வளர்த்தெடுக்கும் தேசிய, இன, மொழிப் பற்றானது ஏனைய இனங்களுக்கு எதிரான எல்லையை எட்டும் போதுதான் அது ஆபத்தான கட்டத்தை அடைகிறது. அது மட்டுமின்றி அது தனது முற்போக்குத் தன்மையை இழந்து நம்மையறியாமலே ஒடுக்குமுறையாளர்களுக்குச் சாதகமாகச் செயற்படும் பிற்போக்குத் தன்மை கொண்டதாக மாறுகிறது.

அவ்வாறுதான் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவாலும் சிங்கள மகா சபையாலும் முன்னெடுக்கப்பட்ட பௌத்த சிங்கள எழுச்சி இலங்கைத் தமிழ் மக்களுக்கெதிரான இன ஒடுக்குமுறையாகத் திசை திருப்பப்பட்டது.

சிங்கள மகாசபை ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலத்தின் இடத்திற்கு சிங்களத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்த போதிலும் 1951ம் ஆண்டில் இடம் பெற்ற அதன் மாநாட்டில் உடனயாகச் சிங்களம் நாட்டின் அரச கரும மொழியாக்கப்படவேண்டுமெனவும் தமிழர்கள் நிர்ப்பந்தித்தால் தமிழையும் அரச கரும மொழியாக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையிலேயே 1952ல் ஐ.தே.கட்சி சிங்கள மகா சபையின் தீர்மானத்தில் உள்ள தமிழையும் அரச கரும மொழியாக்க வேண்டுமென்ற பகுதியை, நிராகரித்துவிட்டு சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என்ற தீர்மானத்தை களனி மாநாட்டில் நிறைவேற்றியது.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே "சிங்களம் மட்டும்" என்ற கோரிக்கை சட்டசபையில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படவேண்டுமெனவும் சகல பாடசாலைகளிலும் சிங்களம் போதனா மொழியாக்கப்படவேண்டுமெனவும், பொதுப் பரீட்சைகளில் சிங்களம் கட்டாய பாடமாக்கப்பட வேண்டுமெனவும் 1943.06.22 அன்று அவரால் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு சட்ட சபை உறுப்பினரான வி.நல்லையாவால் "சிங்களம்" என்ற பதம் பாவிக்குமிடத்தில் "சிங்களமும், தமிழும்" என சேர்க்கப்பட்டு இத்தீர்மானத்தை நிறைவேற்றப்பட ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

எனினும் இலங்கை சுதந்திரம் பெறும்வரை ஜே.ஆர்.குழுவினரால் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் நல்லையா அவர்களின் திருத்தத்தை நிர்ப்பந்தத்தின் பேரால் ஏற்றுக்கொண்டாரேயொழிய அவர் மனம் விரும்பி அதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே அதனைச் செயற்படுத்தாமல் கிடப்பில் போட்டார் என்பதை 1944 மே மாதம் 24ம் நாள் சட்ட சபையில் அவர் வெளியிட்ட கருத்திலிருந்து புரிந்து கொள்ளமுடியும். அதாவது அங்கு அவர் "முழு உலகத்திலும் 30 இலட்சம் மக்களால் மட்டுமே பேசப்படும் சிங்கள மொழிக்குச் சமனான அந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங்கப்படின் சிங்கள மொழி பாதிப்புக்குள்ளாகுமென நான் பெரிதும் அஞ்சினேன். இந்தியாவில் 4 கோடிக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்கள், தமிழ்க் கலாசாரம் என்பவற்றின் செல்வாக்கு சிங்கள மொழியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என நான் எண்ணினேன்" எனத் தெரிவித்திருந்தார்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு, தேசியக் கொடியில் தமிழ் மக்களுக்கு உரிய இடம் வழங்காமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் தாயக நிலப் பகுதிகளை அபகரித்தல் என அடுக்கடுக்காகத் தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமையின் அடுத்த கட்டமாகவே சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக்கும் திட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்தது. அதை உத்தியோகபூர்வமாக சட்ட சபையில் ஆரம்பித்து வைத்தவர் ஜே.ஆர்.ஜயவர்த்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இடையிடையே தமிழ் மொழியையும் அரசாங்க மொழியாக்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லையெனக் கூறிக்கொண்டாலும் நடவடிக்கைகளில் இறங்கும்போது நேரெதிராகவே செயற்பட்டு வந்துள்ளார். எனினும் 1943ல் சிங்களம் மட்டும் என்ற கோஷம் வலுப்பெற்று வந்த போதில்தான் 1951ல் சிங்கள மகாசபை சிங்களத்தை அரச கரும மொழியாக்க வேண்டுமென்றும் தமிழர் கோரினால் தமிழையும் அரச கரும மொழியாக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தது.

மேற்படி கோரிக்கையுடன் வேறு சில கோரிக்கைகளும் ஐ.தே.கட்சி அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்டபோது அவை நிராகரிக்கப்பட்டன. எனவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது அமைச்சுப் பதவியைத் துறந்து ஐ.தே.கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அதேவேளையில் 1953ம் ஆண்டு இடம்பெற்ற மாபெரும் ஹர்த்தால் போராட்டம் காரணமாகப் பிரதமர் டட்லி சேனநாயக்க தனது பதவியை இராஜினாமாச் செய்தார். அதையடுத்து முன்னாள் இராணுவ அதிகாரியான சேர்.ஜோன்.கொத்தலாவல இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார்.

அதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 1951ல் வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சிங்கள மகா சபையைக் கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி; ஆரம்பிக்கப்பட்டபோது மொழிப் பிரச்சினையில் தனது கொள்கையாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட்டாலும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் சட்டபூர்வமாக சம அந்தஸ்து வழங்கப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

சேர்.ஜோன்.கொத்தலாவலை பிரதமர் பதவியை ஏற்ற பின்பு முதல் முதலாக வடபகுதிக்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற வைபவமொன்றில் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுமென வாக்குறுதியளித்தார். அவ்வாறே அவர் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் அதே வாக்குறுதியை வெளியிட்டார்.

இந்த நிலையில்தான் பிரதமர் வடக்கிலும், கிழக்கிலும் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதி அலட்சியம் செய்யப்பட்டு ஐ.தே.கட்சியின் களனி மாநாட்டில் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது சிங்களத்துக்கும் தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்ற கொள்கையை மாற்றி தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்துடன் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் 24 மணி நேரத்தில் சிங்களத்தை அரச கரும மொழியாக்கப் போவதாகக் கூறி 1956 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் சில இடதுசாரிகள் உட்பட பல கட்சிகளையும் கொண்டு அமைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி; ஆட்சியமைத்தது.

அதனையடுத்து 1956 ஜூன் மாதம் 6ம் நாள் தனிச் சிங்களச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரலாற்று ரீதியில் 1933ல் சிங்கள மகா சபை ஆங்கில ஆட்சிக்கெதிராகவும் சிங்கள மொழியையும் சிங்கள பௌத்த கலாசாரத்தையும் பாதுகாக்கும் முகமாகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தின் இடத்திற்குச் சிங்களத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் தமிழர்களின் உரிமையை மறுக்கவில்லை.

இது அவர்களின் நியாயபூர்வமான தேசிய உணர்வு.

ஆனால் இது தமிழினத்துக்கு எதிரானதாக மாற்றப்பட்டதன் நாயகன் ஜே.ஆர்.ஜயவர்த்தனவே. 1943ல் சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக்கப்படவேண்டும் எனவும் சகல பாடசாலைகளிலும் சிங்களமே போதனா மொழியாக வேண்டுமெனவும் சட்டசபையில் பிரேரணை கொண்டு வரப்பட்டதன் மூலம் அத்திசை திருப்பல் ஏற்பட்டது.

அவ்வாறே ஜெ.ஆர்.ஜயவர்த்தன களனி மகாநாட்டில் சிங்களம் மட்டும் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் பண்டாரநாயக்கவும் அதே கொள்கையை முன் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பண்டாரநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்ட நியாயபூர்வமான சிங்கள பௌத்த தேசிய எழுச்சியை வெகு லாவகமாக இன ஒடுக்கு முறையாக திசை திரும்பிய பெருமை ஐ.தே.கட்சிக்கு உண்டு. அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான உணர்வை தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வாக மாற்றி ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்து வந்தமையே அடிப்படை உண்மையாகும்.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE