Friday 19th of April 2024 02:53:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
நூற்றாண்டை நோக்கிய ஊடகப் பயணம் -  நா.யோகேந்திரநாதன்

நூற்றாண்டை நோக்கிய ஊடகப் பயணம் - நா.யோகேந்திரநாதன்


1960ம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்த 'நான் கண்ட சொர்க்கம்' என்ற சினிமாப் படம் வெளிவந்திருந்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் தங்கவேலு இயமனிடம் வாதிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது வானொலி ஒலிக்கத் தொடங்கவே அதில் இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனனின் குரல் கேட்கவே தங்கவேலு தனக்கே உரிய பாணியில் 'அடடா, மயில்வாகனனார் சொர்க்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார் போலிருக்கே' எனக் கூறுகிறார். அவ்வளவு தூரம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் இலங்கை, தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் மக்களின் அபிமானத்தைப் பெறுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தினர். தேசிய சேவையில் கணீரென ஒலிக்கும் செந்தில்மணி மயில்வாகனம், வர்த்தக சேவையில் ஒலிக்கும் மயில்வாகனன் ஆகியோரின் குரல்களுக்கு ஒரு தனித்துவமான பிரபலம் நிலவியது. அவர்கள் காலத்திலும் சரி, அவர்கள் காலத்துக்குப் பின் வந்த காலப் பகுதியிலும் சரி, அவர்களுடன் பணியாற்றிய அவர்களுக்குப் பின் பணியாற்றிய இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கெனத் தனிப்பாணி கொண்டவர்களாகவும் ஒவ்வொருவரும் மக்கள் மனதில் உயர்வான இடத்தை வகித்தவர்களாகவும் தாம் சார்ந்த துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி மேலும் மேலும் தமது திறமையை வளர்த்துக் கொண்டவர்களாகவும் இலங்கை வானொலியின் பெருமையை உச்ச நிலைக்கு உயர்த்தியவர்களாகவும் விளங்கினர். அந்நாட்களில் இலங்கை வானொலியே அனைவராலும் விரும்பிக் கேட்கும் வானொலியாக விளங்கியமைக்கு அவர்களின் அர்ப்பணிப்பான பணியே காரணம் என்றால் மிகையாகாது.

1922ல் தபால் தந்தித் திணைக்களத்தில் பொறியியலாளராகக் கடமையாற்றிய எட்வேட் ஹப்பர் என்பவரால் தபால் தந்தித் திணைக்களத்தில் ஒரு அறையில் ஒரு ஒலிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டு பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது.

16.12.1925ல் அப்போது ஆளுராயிருந்த கியூ கிளிபேட் என்பவரால் 'கொழும்பு வானொலி' என்ற பெயரில் வெலிக்கடையில் உள்ள கட்டிடமொன்றில் ஒலிபரப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச ஒலிபரப்புச் சேவையான லண்டன் பி.பி.ஸி. ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களில் இலங்கையில் வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் மட்டும் இடம்பெற்ற இச்சேவை இரண்டாம் உலக யுத்தம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையினரின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

எனினும் இது மீண்டும் 1949ல் மக்கள் சேவையாக இலங்கை வானொலி என்ற பேரில் மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. 1966ல் இது கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு சுதந்திர அமைப்பாக இயங்க ஆரம்பித்தது. 22.06.1972ல் இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயர் மாற்றப்பட்டதுடன் மும்மொழிகளிலும் ஒலிபரப்பு நேரங்கள் அதிகரிக்கப்பட்டன.

1950இல் வர்த்தக சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்பு இலங்கையில் மட்டுமின்றி தமிழர்கள் வாழுமிடமெங்கும் விரும்பிக் கேட்கப்படும் வானொலியாக இலங்கை வானொலி மாறியது. அதன் முதல் அறிவிப்பாளராகப் பணியாற்றிய மயில்வாகனனின் அறிவிப்புகளும் அவர் நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் ஒலிபரப்பிய விதங்களும் மக்களுக்கு இலங்கை வானொலி பற்றிய பெரும் அபிமானத்தை உருவாக்கின. வர்த்தக சேவை சினிமாப் பாடல்களையும் விளம்பரங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்ட முறைகள் பயனுள்ள வகையிலும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தன.

இலங்கை வானொலி கலை இலக்கியத்துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியதும் காத்திரமானதுமாகும். பல்வேறு துறைகளிலும் ஆற்றல் பெற்ற கலைஞர்கள், இலக்கியவாதிகள் அங்கு பணியாற்றி தங்கள் ஆற்றலால் வானொலியின் தரத்தை உயர்த்தியதுடன் பல புதிய கலைஞர்கள், படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களை வளர்த்து உயர்நிலை அடையவைக்கும் வகையிலும் பணியாற்றினர்.

வர்த்தக சேவையில் சினிமாப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும் தேசிய சேவை மூலம் கர்நாடக இசைக் கச்சேரிகள், தவில் நாதஸ்வரம், வயலின் போன்ற வாத்திய நிகழ்ச்சிகள் என்பன மூலம் பல சாஸ்திரீய சங்கீதக் கலைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்பட்டனர்.

இன்னொருபுறம் கிராமிய நிகழ்ச்சிகள் மூலம் விவசாயம், எமது பண்பாட்டு வாழ்வியல் அம்சங்கள் என்பன தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டதுடன் நாட்டார் பாடல்களும் இணைக்கப்பட்டன. இன்னொருபுறம் வி.வி.வைரமுத்துவின் அரிச்சந்திரா மயான காண்டம், பொன்.விவேகானந்தனின் காந்தவராயன் கூத்து உட்படப் பல பாரம்பரிய மேடை நாடகங்கள் வானொலிக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. அதேபோன்று வில்லுப்பாட்டுகள், கதாப்பிரசங்கங்கள், மலையகத்தின் காமன் கூத்து போன்றவற்றுக்கும் முக்கிய இடங்கள் வழங்கப்பட்டன.

மெல்லிசைப் பாடல்களில் இலங்கை வானொலியின் சாதனைகள் அற்புதமானவை. தென்னிந்திய சினிமாப் பாடல்களின் ஆதிக்கம் நிலவிய போதே மக்களின் அபிமானம் பெற்ற பல பாடல்கள் உருவாக்கப்பட்டன. கலாநிதி சண்முகலிங்கனால் எழுதப்பட்டு எஸ்.கே.பரராஜசிங்கத்தால் பாடப்பட்ட 'சந்தனமேடையின் இதயத்திலே' என்ற பாடல் இன்று வரைப் பிரபலமாக விளங்குகிறது. முத்துச்சாமி, ரொக்சாமி, செல்வராஜா, லத்தீப் போன்ற இசையமைப்பாளர்களும் முத்தழகு, கலாவதி போன்ற பாடகர்களும் இலங்கை வானொலி மூலமே வெளிக்கொண்டுவரப்பட்டனர். இப்போது அவர்களெல்லாம் சிங்கள சினிமாவில் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

இலக்கியச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், விவாத மேடைகள் என்பன மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் இலகுவான மொழியில் வழங்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டன. பல சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகப் பிரதி இயக்குனர்கள் இலங்கை வானொலி மூலம் அறிமுகமாகியே பின்பு பிரபல படைப்பாளிகளாக உயர்வு பெற்றனர். இன்று பிரபலமாக விளங்கும் சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் வர்த்தக சேவையின் 'இசையும் கதையும்' நிகழ்ச்சியூடாகவே இலக்கிய உலகில் பிரவேசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பான சமய நிகழ்ச்சிகள், சமய போதனைகள் என்ற வட்டத்திற்குள் முடங்கி விடாமல், பண்ணிசை, கதாகாலட்சேபங்கள், பாடல்கள். நாடகங்கள், வில்லுப்பாட்டு என்ற பல்வேறு பக்திரசம் கொண்ட அம்சங்களை உள்ளடக்கி கலைத்துவம் கொண்டவையாக விளங்கின.

அந்த நாட்களில் நண்பர் ஒருவர் இலங்கை வானொலியின் நாடகங்கள் பற்றிக் குறிப்பிடும்போது 'வேறு வானொலிகளில் நாம் நாடகங்களைக் கேட்பதுண்டு. ஆனால் இலங்கை வானொலியில் நாடகங்களைக் கேட்பது மட்டுமின்றிப் பார்க்கவும் முடியும். காதுகளுக்கும் பார்க்கும் சக்தியைக் கொடுக்கும் வல்லமை இலங்கை வானொலி நாடகங்களுக்கு உண்டு' என்றார். அவர் கூறியது நூறு வீதம் உண்மை. நாடகங்களின் தயாரிப்பு, நெறியாள்கை, ஒலிச்சேர்க்கைகள் என்பனவுடன் நடிகர்கள் தங்கள் குரல் மூலம் வெளிப்படுத்தும் உணர்வுகள் என்பன கேட்பவர்களுக்கு நாடகத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.

அந்நாட்களில் ஒலிபரப்பான கிராம சஞ்சிகை என்ற நிகழ்ச்சியில் விதானையார் வீட்டில், லண்டன் கந்தையா என இரு நாடகங்கள் 'சானா' என்றழைக்கப்பட்ட சண்முகநாதன் தயாரிப்பில் அடுத்தடுத்து ஒலிபரப்பப்பட்டன. அவை யாழ்ப்பாண சமூகத்தின் இயல்பான பேச்சு மொழி, ஒரு கிராமிய வாழ்வு, மரபு வழியான பழக்க வழக்கங்கள், போலிப் படாடோபம் என்ற விடயங்களை நடிகர்களின் நடிப்பாற்றல் மூலம் கண்ணில் கொண்டு வந்து நிறுத்துமளவுக்குத் தத்ரூபமாக விளங்கின. பின்னாட்களில் உலகப் புகழ்பெற்ற மேதைகளான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாயிருந்தபோது அவற்றில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சானாவின் பின்பு நாடகத்துறையைப் பொறுப்பேற்ற எழுத்தாளரும் பிரபல மேடை நாடகக் கலைஞருமான கே.எம்.வாசகர் பல அற்புதமான நாடகங்களைத் தயாரித்தார். கே.எஸ்.பாலச்சந்திரன், ராஜகோபால், ஜவாகர், யேசுரத்தினம், தர்மலிங்கம், ஜோக்கின் பெர்னாண்டோ, விஜயாள் பீட்டர், யுனைதாபரீத், செல்வம் பர்னாண்டோ. அருமைநாயகம், மார்க்கண்டன் போன்ற ஒப்பற்ற கலைஞர்களின் ஆற்றலை முழுமையாக வெளிக்கொண்டு வந்து மறக்கமுடியாத நாடகப் படைப்புக்களைத் தயாரித்தார். சில்லையூர் செல்வராசனின் மூலக்கதைக்கு கதை, வசனம் எழுதி வாசகர் 'தணியாத தாகம்' என்ற பேரில் தொடர் நாடகமாகத் தயாரித்தார். அந்த நாடகம் ஒலிபரப்பாவதன் ஆரம்ப இசையாக 'அத்தானே அத்தானே' என்ற பாடல் ஒலிபரப்ப ஆரம்பிக்கும்போதே எங்கு நிற்பவர்களும் ஓடி வந்து வானொலியைச் சுற்றி இருந்து விடுவர். அந்த நாடகத்தின் கடைசிக் காட்சியில் கதாநாயகியின் சடலம் ஒரு வாங்கில் கிடத்தப்பட்டிருக்க தலைமாட்டில் குத்துவிளக்கு எரிய, மணியத்தார் திருவாசகம் படித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் அக்காட்சியை அருகில் இருந்து காண்பவர்கள் போன்று விம்மி விம்மி அழுததை என்னால் மறக்கமுடியாது. அது வாசகரின் ஆற்றல். அவ்வாறே வரணியூரானின் 'இரை தேடும் பறவைகள்' நேயர்களை தன்னுடன் கட்டி வைத்த நாடகங்களில் ஒன்றாகும்.

அதேவேளையில் மரிக்கார் ராமதாசால் எழுதப்பட்டு அப்துல் ஹமீதால் நெறியாள்கை செய்யப்பட்டு ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன் ஆகியோரின் நடிப்பில் உருவான கோமாளிகள், கோமாளிகள் கும்மாளம், ஏமாளிகள் போன்ற நகைச்சுவை நாடகங்களும் மிகவும் பிரபலம் பெற்றிருந்தன.

இன்னொருபுறம் முஸ்லிம் நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் அனைவராலும் விரும்பி ரசிக்கப்பட்டன. அஸ்வத்கான் எழுதிய, தயாரித்த நாடகங்கள் மிகவும் தரமாக அமைந்திருந்தன.

தேசிய சேவையில் கே.எம்.வாசகரின் பின்பு பி.விக்னேஸ்வரன், காவலூர் ராஜதுரை, ஜோர்ஜ் சந்திரசேகரன், வி.எச்.அப்துல்ஹமீத் ஆகியோர் நாடகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாணியில் ஒருவரை ஒருவர் வெல்லும் வகையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஜோர்ஜ் சந்திரசேகரன் எழுதித் தயாரிக்கும் நாடகங்கள் வித்தியாசமானவையாகவும் நவீன இலக்கியப் போக்கிற்கு உட்பட்டவையாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானொலி அறிவிப்புத் துறையில் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் அனைவருமே கொடி கட்டிப் பறந்தவர்கள்தான். மயில்வாகனம் சர்வானந்தா, காதர், புண்ணியமூர்த்தி, விவியன் நமசிவாயம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், ரேலங்கி செல்வராஜா, ஜோக்கின் பெர்னாண்டோ, ஜுனைதா பரீத், இராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, கனிஷ்டா, திருச்செல்வம், நாகபூஷணி போன்ற இன்னும் பலர் தங்களுக்கென நேயர் கூட்டங்களை வைத்திருக்குமளவுக்குக் குரலாலும் ஆற்றலாலும் மக்களை வசப்படுத்தி வைத்திருந்தனர். ஒரு காலத்தில் சினிமா உலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போல் கே.எஸ்.ராஜாவும் அப்துல் ஹமீத்தும் விளங்க ஜோக்கின் பெர்னாண்டோ ஜெமினி கணேசனாக ஒரு நட்சத்திர அந்தஸ்துப் பெற்றிருந்தமையை மறந்து விடமுடியாது.

இவ்வாறு இலங்கை வானொலி செய்தி வழங்குவது, விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள், பாராளுமன்ற நடவடிக்கைகள், சர்வதேச அரசியல் என்பவற்றை தொகுத்துச் சிறந்த முறையில் வழங்குவது, இலக்கியப் படைப்புக்களைத் தயாரிப்பது, ஒலி பரப்புவது, கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்களை வளர்ப்பது எனப் பல முனைகளிலும் ஒப்பற்ற சாதனைகளைப் படைத்து 95 வருடங்களைக் கடந்து வந்த இலங்கை வானொலியை மனமார வாழ்த்துகிறோம்.

அதேவேளையில் 1983இன் பின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது காத்திரத் தன்மையில் குறைவடைந்து வருவது பற்றி எமது வருத்தத்தைத் தெரிவிக்கிறோம். நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காட்டப்பட்ட இனப்பாகுபாடு காரணமாகப் பலர் வெளியேறி விட்டனர். மேலும் யாழ்.குடாநாட்டில் தேசிய சேவை தெளிவாகக் கேட்பதில்லை. சில நாட்களாக தென்றல் ஒலிபரப்பும் கேட்பதில்லை. எப்படியிருந்தபோதிலும் இலங்கை வானொலி கடந்த காலத்தில் கலை, கலாசார, இசை, இலக்கியத்துறைகளில் வழங்கிய பங்களிப்புகள் என்றும் மறக்கமுடியாதவை என்ற வகையில் மீண்டும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE