Thursday 28th of March 2024 05:52:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு!

இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு!


இலங்கை அரசியலில் இந்திய அமெரிக்க அணுகுமுறையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனை கடந்த இரு மாத காலப் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. இது அண்மிய வாரத்தில் இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் உரையாடல் ஒன்றுக்காக வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் அவர்களின் வருகை யின் போது தெளிவாககத் தெரிந்தது.

இந்திய இலங்கை உறவு அயல் நாடு என்பதைக் கடந்து சீன இலங்கை உறவினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் அஜித் டோவால் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ் தரப்பினரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி திரும்பினார். அவரது விஜயத்தின் நிறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோடு இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய விடயங்களை ஊடகங்களுக்கு: தெரிவித்த விடயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. இக் கட்டுரையில் அஜித் டோவால் புது டில்லியில் வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தி புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் முன்வைக்கப்படுகின்றது.

முதலாவது அஜித் டோவாலின் கொழும்பு வருகை முதன்மையாக இலங்கையுடன் கடல் சார் கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒன்றினை இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்வதோடு இலங்கையின் கடற்படை பாவனைக்கு உட்படுத்தியிருக்கும் ராடர்கள் இந்திய கடற்படையின் ராடர்களின் கண்காணிப்புக்குள் அமைந்திருத்தல் வேண்டும் என்றும் அல்லது இரு நாடுகளும் ஒரே மாதிரியிலான ராடர் செயற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும் அதற்கு இலங்கை இணக்கம் தெதரிவிக்கும் எனவும் நம்பிக்கை புதுடில்லிக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இரண்டாவது இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் வர்த்தக ரீதியிலும் கடல் போக்குவரத்து அடிப்படையிலும் பிராந்திய நாடுகளை ஊக்குவிப்பது என்றும் அதற்கான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கும் என்றும் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அது மட்டுமன்றி இந்து சமுத்திரப் பாதுகாப்பு வலயத்தில் பாகிஸ்தானை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தாம் தெரிவித்ததாக அஜித் டோவால் குறிப்பிட்டார்.

மூன்றாவது கொழும்பின் நிதி நகரத்தின் கிழக்கு முனையத்தில் ஜப்பான் இந்தியக் கூட்டின் அபிவிருத்தித் திட்டத்திற்கு இலங்கை ஒப்புதுல் அளிக்கும் என்றும் இந்தியா இலங்கை ஜப்பானுடன் இணைந்து இத்தகைய அபிவிருத்தித் திட்டத்தினை மேற்கொள்ளும் என்றும் புது டில்லியில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நான்கு இந்து பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் இலங்கையின் பங்களிப்பு உறுதிப்பாடுடையதாக அமையும் என்றும் அஜித் டோவால் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் விதத்திலும் இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே இந்திய செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற போது தெரிவித்தார். அதாவது கொழும்பு துறைமுகம் கிழக்கு முனைய கொள்கலன் அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடமே ஒப்படைக்கும் என்றும் அந்த விடயத்தில் இலங்கையிடம் மாற்றுக் கருத்து இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதே போன்றே கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளலும் மைக் பாம்பியோவும் இலங்கை பொறுத்து அதிக நம்பிக்கை உடையவராக காணப்படுகின்றார். இவற்றை வைத்து அவதானிக்கும் பொழுது இரு நாடுகளும் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அதிக நம்பிக்கை கொண்டிருப்பது அதன் ஊடாக இலங்கையின் திட்டமிடல்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் பங்களிப்பு செய்கின்ற எண்ணத்தோடு இந்த நாடுகள் செயல்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஆனால் இதே நேரம் இலங்கை இந்தியா-அமெரிக்கத் தரப்போடும் சீனாவோடும் சமதூரத்தில் உறவைக் கையாண்டு கொண்டு அரசியல் ரீதியிலும் பொருளாதார அடிப்படையிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுகளை மேற்கொள்ள முனைகின்றது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத் திட்டமிடல்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களை சீனாவோடு நிலைத்திருக்கக் கூடிய உறவினைக் கொண்டிருப்பதோடு அதற்பான பலப்படுத்தல்கள் அதற்கான ஒத்துழைப்புக்கள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சீனாவின் தலைமையில் அண்மைக் காலத்தில் ஏற்படுத்தப்பபட்ட ஆசியான் மற்றும் பசுபிக் நாடுகளுடனான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டை அடுத்து தென் கொரிய இலங்கை உறவு பலமடைய ஆரம்பித்துள்ளது. இலங்கையின் தற்போதைய தேவையை முதன்மைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி உலக நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பபை வலுப்படுத்தும் இலங்கை அதனை போருக்குக்குப் பிந்திய உபாயமாகக் கொள்ள விளைகிறது. இதன் ஒரு கட்டமாகவே இலங்கைக்கு வருகை தந்திருந்த தென் கொரிய தூதுக் குழுவை மதிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறே பொருளாதார நெருக்கடிகளைக் கையாளும் உத்திகளை இலங்கை வகுத்துக் கொண்டிருந்த போதும் தென்னாசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுடன் சீனா மேற்கொண்டிருக்கும் இராணுவ புரிந்துணர்வுக்கான உடன்படிக்கை மிகப் பிரதானமான விடயமாகத் தெரிகின்றது.

சீனா பாகிஸ்தானுடன் மட்டுமல்ல நேபாளத்துடனும் மலைதீவுடனும் போட்டியிட்டுக் கொண்டுள்ள செய்முறையை அவதானிக்க முடிகிறது. பாகிஸ்தானுடன் மேற்டகொண்டுள்ள இராணுவ புரிந்துணர்வு உடன்படிக்கையினை இலங்கையுடனும் மேற்கொள்ள சீன விரும்புகின்ற போதும் இலங்கை அத்தகைய போக்கினை உடனடியாக மேற்கொள்ளாது என்பதே அதன் அணுகுமுறைகளில் தெரிகிறது.ஆனால் அத்தகைய நகர்வுக்கு இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் செயல்பட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் இந்தியாவிடமுண்டு. அதனைத் தடுப்பதற்கான விட்டுக் கொடுப்புகளையே இந்தியாவும் அமரிக்காவும் மேற்கொண்டு வருகின்றன. இது கடந்த 2019 முதல் நேபாளத்துடன் பாரிய இராணுவத் தளபாடங்களை வழங்க சீனா முன்வந்த போதே நெருக்கடி இந்திய அமெரிக்க கூட்டுக்குள் ஏற்பட்டுவிட்டது. அதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்தியாவும் அமெரிக்காவும் அதரிக விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன் அதனை இலங்கை சாதுரியமாக கையாள ஆரம்பித்துள்ளதையும் விளங்குதல் வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை சீனாவின் நேரடி பொருளாதார ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இராணுவ ரீதியான நெருக்கத்தையும் எதிர்கொள்ள முனைகிறதைக் காணமுடிகிறது. அது மட்டுமன்றி சர்வடீதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களில் நெருக்கடி நிலவும் போதும் அத்தகைய சிக்கலிலிருந்து விலகுவதற்கும் சீனாவின் ஒத்துழைப்பு அவசியமானதாக கருதுகிறது. எனவே இத்தகைய அரசியல் களத்தினை தொடர்ச்சியாகவும் நிதானமாகவும் கையாளும் விதத்திலேயே இலங்கை பயணிக்கின்றது. இதில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அணுகுமுறைகள் இலங்கையை சீனாவின் பக்கமிருந்து மீட்பதற்கான நகர்வாக அமைந்தாலும் அதனை கையாளும் விதத்தில் இலங்கையின் தந்திரோபாய அணுகுமுறை காணப்படுகிறது. அஜித் டோவால் இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுக்கும் உரைகளை வெளிப்படுத்தியிருப்பதையும் அதனையே இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்திருப்பதையும் பார்க்கும் போது அஜித் டோவால் இலங்கையின் மீதான நம்பிக்கையை அதிகம் பலப்படுத்துபவராகவே விளங்குகிறார். அவரது நம்பிக்கையிலேயே கடந்த பல தசாப்தங்கள் இந்தியத் தரப்பும் இந்தியத் தரப்பின் நம்பிக்கையிலேயே இலங்கைத் தமிழ் தரப்பும் செயல்படுகிறது. ஆனால் எத்தகைய மாறுதலும் ஏற்பட்டதாக தென்பட வில்லை.

தற்போதும் இலங்கைத் தமிழ் தரப்பு அஜித் டோவால் இந்தியப் பிரதமரோடு நேரடியாக தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்தும் வடக்கு கிழக்கு பொருளாதார விருத்தி பொறுத்தும் உரையாடுவார் என்ற நம்பிக்கை தெரிவித்தது. ஆனால் இலங்கை விடயத்தில் அஜித் டோவால் தமிழர் பொறுத்து எந்தத் தகவலும் பரிமாற்றியதாக அவரது புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கவில்லை என்பதை வாசகர்கள் மனதில் கொள்ளுதல் வேண்டும்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE