Monday 18th of January 2021 07:43:04 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 34 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 34 (வரலாற்றுத் தொடர்)


"ஆட்சி பீடமேறிய சிங்களமும் ஒரு நாடு; ஒரே மொழிக் கொள்கையும்" - நா.யோகேந்திரநாதன்!

"சமத்துவம் தான் எமது தேசத்தின் விடுதலைக்கும் அதன் விகிதாசாரங்களின் ஐக்கியத்துக்குமான பாதை என நாம் நம்புகிறோம். அன்றேல் இத்தேசத்தின் ஒரு பெரும் பிரிவானது தானே தேசத்துரோகத்துக்கு நிர்ப்பந்திக்கப்படுவதன் மூலம் ஒரு சிறிய அரசிலிருந்து இரத்தம் சொரிகின்ற இரு சிறிய அரசுகள் தோன்றக்கூடும். அதுவே ஏகாதிபத்தியம் அண்மையில் திருப்பிக் கொடுத்ததை அவர்கள் மீண்டும் சுருட்டிக் கொள்ள வழிவகுத்துவிடும்"

இது 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் நாள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசால் சிங்களம் மட்டுமே இலங்கையில் அரச கரும மொழி என்ற சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டபோது அதை எதிர்த்து சமசமாஜக் கட்சித் தலைவர்களில் ஒருவரும் தெஹிவளை – கல்கிசை தேர்தல் தொகுதியின் உறுப்பினருமான கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. அதுமட்டுமின்றி சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடது சாரிக் கட்சிகள் பாராளுமன்றத்தில் மட்டுமின்றி நாட்டின் பல நகரப் பகுதிகளிலும் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து எதிர்ப்பியக்கங்களை நடத்தினர். சமசமாஜக் கட்சியினர் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடத்திய கூட்டத்தில் டொக்டர் என்.எம்.பெரேரா உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இனவாதி ஒருவனால் அவரை நோக்கி வீசப்பட்ட கைக்குண்டில் ஒரு துறைமுகத் தொழிலாளி கையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்வின் ஆர்.டி.சில்வா தனது உரையில் குறிப்பிட்டது போலவே தனிச் சிங்களம் சட்டத்துடன் முனைப்புப் பெற்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் வலுப்பெற்று பின் தனிநாட்டுக்கான போராக விரிவடைந்து பெரும் இரத்தாறு ஓடியது. அது மட்டுமின்றி அந்நிய வல்லாதிக்க சக்தி;கள் இனப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி; இலங்கையில் தமது நோக்கங்களை நிறைவேற்ற முயல்வதையும் காணலாம்.

இவ்வாறு ஒரு காலத்தில் நியாயத்தை வலியுறுத்தி இலங்கையின் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறிய கொல்வின் ஆர்.டி.சில்வா பேரினவாதிகளின் பக்கம் சாய்ந்து தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் 1972ம் ஆண்டின் அரசியலமைப்பைத் தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் தமது அடிப்படைக் கொள்கையான பாட்டாளி வர்க்கப் புரட்சிகர அரசியலைக் கைவிட்டது போன்றே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான மாக்ஸீயக் கோட்பாடுகளையும் புறந்தள்ளி விட்டனர்.

ஏற்கனவே சிங்கள அரசியல் தலைமைகளிடம் தமிழ் மக்கள் தொடர்பாக இரண்டு விதமான அணுகுமுறைகள் காணப்பட்டன. ஒன்று இலங்கைக்கு தேசிய காங்கிரஸின் தொடர்ச்சியாக உருவான ஐக்கிய தேசியக் கட்சியினதும் மற்றது சிங்கள மகா சபையின் மறுவடிவாக உருவாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் அணுகுமுறைகளாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி மலையக மக்களை நாடற்றவர்களாக்கியும் இலங்கைத் தேசியக் கொடியில் பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் முக்கியத்துவப்படுத்தியும். பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும் தமிழர்களின் அரசியல். வாழிடத் தகைமைகளைப் பலவீனப்படுத்தியும் தமிழ் தேசியத்தைச் சிதைக்கவுமான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. அதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தலைமைகளுக்குமிடையேயுள்ள ஏகாதிபத்திய சார்பு அரசியல் நிலைப்பாடு காரணமாகவும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் இழுத்துப் பறித்து நீர்த்தப் போக வைத்தும் அவர்கள் தமிழ் தலைமைகளுடன் ஒருவித நல்லுறவைப் பேணி வந்தனர். ஆனால் அக்கட்சி சிங்கள தேசியத்தை முன்வைத்து இலங்கையை அரசியல், பொருளாதார, கலாசார சுதந்திரம் கொண்ட நாடாகக் கட்டியெழுப்புவது தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டவில்லை.

அதேவேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆங்கிலேயரின் ஆட்சியில் சிதைக்கப்பட்ட சிங்கள பௌத்த தேசிய விழுமியங்களை மீளக் கட்டியெழுப்புவதையும் ஆங்கிலம் வகித்த மேலாதிக்க நிலைமையை மாற்றி அதே அந்தஸ்துக்கு சிங்களத்தைக் கொண்டு வருவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. அதேவேளையில் தமிழுக்கும் உரிய இடம் வழங்கவேண்டுமென்பதில் அது தெளிவான பார்வையைக் கொண்டிருந்தது. அதாவது அக்கட்சி இலங்கையை சுயமான அரசியல், பொருளாதார, கலாசாரம் கொண்ட நாடாக மாற்றுவதை அடிப்படைக் கொள்கையாக அது கொண்டிருந்தது.

இவ்வாறு ஏகாதிபத்திய சார்பு, மேட்டுக்குடியினரின் நலன்களைப் பேணும் அமைப்பாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, நடுத்தர அடித்தட்டு மக்களின் நலன்களைப் பேணும் அமைப்பாக ஸ்ரீலங்கா சுதந்தி;ரக்கட்சியும் நேரெதிரான கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும்கூட சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக்குவதில் இரண்டும் ஒரே நேர் கோட்டில் வந்து நின்றன. ஆனால் அந்த இரு தரப்பினரின் நோக்கங்களிலும் வேறுபாடு இருந்தமை முக்கிய விடயமாகும். ஐ.தே.கட்சி இதை ஏற்கனவே தான் மேற்கொண்டு வந்த தமிழர்களின் தேசிய இனத் தனித்துவத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே அணுகியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களத்தை அரியணை ஏற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எப்படியிருப்பினும் இரு தரப்பினரும் இலங்கையில் தமிழ் மொழிக்கான அரசியல் உரிமையை நிராகரித்தனர்.

இவ்வாறு நேரெதிரான கொள்கைகளைக்கொண்ட இரு சிங்களத் தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வந்த தனிச் சிங்களம் சட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டியமை போன்றே அதை எதிர்ப்பதில் தமிழர் தரப்பும் தமது பேதங்களையும் கடந்து ஒன்றுபட்டு எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

தமிழ்க் காங்கிரஸ் சமஅந்தஸ்துக் கோரிக்கையையும் தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையையும் வவுனியா சுந்தரலிங்கம் தனியரசுக் கோரிக்கையையும் முன்வைத்து ஒருவரோடொருவர் முட்டிமோதி;க் கொண்டிருந்த நாட்கள் அவை. ஆனால் தனிச் சிங்களச் சட்டம் முன்வைக்கப்பட்டபோது மூன்று தரப்பினருமே அதற்கெதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினர்.

அதுமட்டுமின்றி ஐ.தே.கட்சி உறுப்பினராக இருந்த சு.நடேசன், வி.நல்லையா, குமாரசாமி ஆகியோரும் தனிச் சிங்களச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். மேலும் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக பருத்தித்துறைத் தொகுதி உறுப்பினராகிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்.கந்தையா ஆற்றிய உரை மிகவும் பிரசித்தமானது. அவரின் ஆணித்தரமான கருத்துகள் எவரையும் எதிர்ப்புக் குரல் எழுப்பமுடியாதவாறு காத்திரமாக அமைந்திருந்தன.

அதற்குப் பதிலளித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் "கௌரவ பருத்தித்துறை உறுப்பினரின் உரையானது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நியாயத்தையும் உணர்வுகளையும் தெளிவாகவும் புத்திசாதுரியத்துடன் வெளிப்படுத்தியிருந்தமையை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சிங்கள மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அவர்கள் எனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டதை நினைவுகூர முடியும்.

அவற்றிலிருந்து நாம் தனிச் சிங்களச் சட்டமானது தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் சிங்கள அரசியல் தலைமைகளுக்குமிடையே ஒரு தெளிவான கோட்டை வரைந்து விட்டது.

1952ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டட்லி சேனநாயக்கவைப் பிரதமராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் நிபந்தனைகளுக்கு இணங்கி பல மக்கள் விரோத நடவடிக்கைகளில் இறங்கியது. அப்போது நிதியமைச்சராயிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன 25 சதமாக இருந்த ஒரு கொத்து அரிசியின் விலையை 70 சதமாக உயர்த்தியதுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. புகையிரதக் கட்டணங்கள், தபால் கட்டணங்கள் என்பன உயர்த்தப்பட்டதுடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவும் நிறுத்தப்பட்டது. இதை எதிர்த்து இடதுசாரிகளின் தலைமையில் மாபெரும் ஹர்த்தால் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் காரணமாக முழுநாடுமே ஸ்தம்பித்த நிலையை அடைந்ததுடன் எங்கும் ஆர்ப்பாடங்கள், ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்கள் எனப் பெரும் போராட்ட அலை எழுந்தது. அமைச்சரவைக் கூட்டம் கூட பலத்த பாதுகாப்பின் மத்தியில் துறைமுகத்தில் தரித்திருந்த பிரிட்டிஷ் கப்பலில் நடத்த வேண்டிய நிலை எழுந்தது. இந்த நிலையில் டட்லி சேனநாயக்க பிரதமர் பதவியை விட்டு ராஜினாமாச் செய்ய முன்னாள் இராணுவ அதிகாரியான சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்பு கடுமையான இராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு அடக்குமுறைகளும் துப்பாக்கிச் சூடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஹர்த்தால் காரணமாகவும் அதற்கெதிரான ஒடுக்குமுறைகள் காரணமாகவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடு பரந்தளவில் மக்களின் வெறுப்புக்குள்ளானது.

அது மட்டுமின்றி 1954ல் யாழ்ப்பாண விஜயம் மேற்கொண்ட சேர்.ஜோன் கொத்தலாவல சட்டபூர்வமாகச் சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கினார்.

அதன் காரணமாக தென்னிலங்கையில் பிரதமரின் வாக்குறுதிக்கெதிராக சிங்கள இனவாதிகளால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஹர்த்தால் காரணமாகவும் பிரதமரின் சம அந்தஸ்து அறிவிப்புக் காரணமாகவும் சரிந்துபோன ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கை மீளக் கட்டியமைக்க ஜே.ஆர்.ஜயவர்த்தன மேற்கொண்ட தந்திரமே களனி மாநாட்டின் 'சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக வேண்டும்' என்ற தீர்மானம். அவர் ஐக்கிய தேசியக் கட்சி மேலிருந்த நாட்டு மக்களின் வெறுப்பைத் திசை திருப்பக் கையிலெடுத்த ஆயுதம் தான் அது.

இப்படியான நிலையில்தான் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுமெனவும் தமிழுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படுமெனவும் அறிவித்திருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1956 தேர்தல் கோஷமாக 24 மணிநேரத்தில் சிங்களத்தை அரச கரும மொழியாக்கப் போவதாகப் பிரகடனம் செய்தார்.

அதன் விளைவாக தேர்தலில் பெரும் வெற்றியீட்டிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1956 ஜூன் மாதம் 5ம் நாள் தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்து செப்டெம்பர் மாதம் நிறைவேற்றினார்.

ஒட்டுமொத்தத்தில் உலக ஏகாதிபத்தியங்களின் தேசிய இனத்தனித்துவங்களைச் சிதைக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் தேசியத்தைக் கருவறுக்கும் பல்வேறு நேரடி, மறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கைத் தேசியம் என்றால் சிங்களத் தேசியம் மட்டும்தான் என்ற வகையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு தரப்பினரும் தங்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற தனிச் சிங்களச் சட்டத்தை சட்டபூர்வமாக உறுதிப்படுத்திக் கொண்டனர்.

எனவேதான் ஒரே நாட்டுக்குள் இரு தேசங்கள் உருவாக வேண்டிய தேவையும் உருவாகக் கூடிய சூழலும் தோன்றி இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராக விரிவடைந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச, இந்தியக் கூட்டுச் சதி மூலம் தற்காலிகமாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அதற்கான தேவை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாகும்.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE