Wednesday 20th of January 2021 09:52:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
உலகை உலுக்கும் புதிய மரபியல்  மாற்றம் பெற்ற கொரோனா?  - விஞ்ஞான உலகம் சொல்லும் விளக்கம் என்ன?

உலகை உலுக்கும் புதிய மரபியல் மாற்றம் பெற்ற கொரோனா? - விஞ்ஞான உலகம் சொல்லும் விளக்கம் என்ன?


கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தடுப்பூசி மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக உலகம் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதே வைரஸின் மரபியல் மாற்றம் பெற்ற புதிய வகை குறித்து அச்சம் இன்று உலகை மீண்டும் ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் பயணங்களுக்குத் தடை விதித்துள்ளன.

இதனால் கிட்டத்தட்ட உலகில் இருந்து இங்கிலாந்து இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வகை கொரோனா பரவியுள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் இருந்து புதிய வகை வைரஸ் இறக்குமதியாகியிருக்கலாம் என உலகெங்கிலும் உள்ள வைரஸ் மரபணு குறியீடுகளை கண்காணித்து வரும் நெக்ஸ்ட்ஸ்ட்ரெய்ன் (Nextstrain)அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸின் பிறழ்வு குறித்து விஞ்ஞான உலகில் இருந்து வெளிவரும் தெளிவற்ற தகவல்களும் அதிக குழப்பங்களுக்கு வித்திடுகின்றன.

வைரஸின் புதிய பிறழ்வு சாதாரண வைரஸை விட 70 வீதம் அதி வேகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் என லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டொக்டர் எரிக் வோல்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுவரை நாம் பார்த்ததிலிருந்து இது மிக விரைவாக பரவி வருகிறது. எனவே, இது குறித்து தீவிர கவனம் செலுத்தி ஆராய்வது முக்கியம் எனவும் அவா் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக மரணங்களை விளைவிக்கும் என்ற எச்சரிக்கைகளும் சில தரப்புக்களால் விடுக்கப்பட்டுள்ளன.

எனினும் புதிய வகை வைரஸ் உண்மையிலேயே வேகமாகப் பரவுகிறதா? என்பதனை உறுதி செய்யும் வலுவான ஆதரங்கள் இல்லை என நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் துண்ணுயிரியல் துறை பேராசிரியர் ஜொனாதன் போல் கூறினார்.

குறுகிய காலத்தில் ஒரே வைரஸில் பல பிறழ்வுகள் இடம்பெறுவது அச்சுறுத்தலாது என விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இதேவேளை, தடுப்பு மருந்தின் விளைவுகள் வைரஸின் மரபணு மாற்றத்திற்கு காரணமா? என்ற சந்தேகங்களும் விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கனவே, தொற்று நோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ரெமெடிசிவரின் எதிர்மறையான விளைவின் சாத்தியம் குறித்து விஞ்ஞானிகள் சிலர் எச்சரித்திருந்தனர்.

இவ்வாறான தடுப்பு மருந்துகள் சில வேளைகளில் வைரஸ் பிறழ்வை ஊக்குவிக்கும் போக்கைக் கொண்டுள்ளன. இவை நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.

இது வைரஸ் கட்டுபாட்டு நடவடிக்கைகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

சில கொரோனா தொற்று நோயாளிகளிடம் வைரஸின் பல பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நோயாளிகள் தொற்று நோயுடன் மிகவும் கடுமையாகப் போராட வேண்டி ஏற்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சில தரப்பினர் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்ட வைரஸின் புதிய திரிபு வேகமாக பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த மாதத்தில் டிசம்பர் தொற்று பரவல் 60 வீதம் அதிகரித்துள்ளது என பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகரான பேட்ரிக் வலன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி புதிய வகைப் வைரஸ் பிறழ்வுகளுக்கும் சாதாகமாக எதிர்வினையாற்றுமா? என இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைரஸ்கள் தொடர்பில் ஆய்வு செய்துவரும் டாக்டர் ரவி குப்தா கூறினார்.

இந்த விடயம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ஆனால் இது குறித்து துரித கதியில் ஆய்வுகள் செய்யப்பட்டு நிலைமையின் தீவிரத்தை அறிந்துகொள்வது முக்கியமானது என அவா் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கொரோனாவில் ஏற்படும் புதிய பிறழ்வுகளை எதிர்க்கும் சக்தியைக் கொண்டிருக்கும் என அமெரிக்க அரசாங்கத்தின் தடுப்பூசி விநியோக முயற்சிகளின் தலைமை அறிவியல் ஆலோசகர் டொக்டர் மோன்செஃப் ஸ்லாவி குறிப்பிடுகிறார்.

ஒன்று அல்லது இரண்டு பிறழ்வுகள் தடுப்பூசியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனக் கருத முடியாது. அவ்வாறு தடுப்பூசியில் அதிக தாக்கங்கள் ஏற்பட வைரஸின் மரபணு குறியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதால் இதுகுறித்து உடனடியாக நான் கவலைப்படவில்லை.

ஆனால் மாற்றங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதால் தடுப்பூசிகளில் காலப்போக்கில் சில மாற்றங்கள் தேவைப்படலாம். எனவே, வைரஸில் ஏற்படுத்தி மரபு ரீதியான மாற்றங்களை மிக உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

ஒரு பிறழ்வு என்பது வைரஸின் மரபணு வரிசையில் மாற்றம் என குறிப்பிடப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடக்கிறது. சற்றே மாற்றியமைக்கப்பட்ட திரிபு ஒரு நாட்டிலோ அல்லது பிராந்தியத்திலோ மிகவும் பொதுவான ஒன்றாக மாறக்கூடும் என சியாட்டிலிலுள்ள பிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் உயிரியலாளரும் மரபியல் நிபுணருமான ட்ரெவர் பெட்ஃபோர்டு சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு வைரஸ் அதன் மேற்பரப்பில் உள்ள புரதங்களை மாற்றுவதன் மூலம் அதற்கான மருந்துகள் அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பிக்க உதவும்.

கொரோனாவில் ஏற்படும் சில பிறழ்வுகள் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்கு எதிர்மறையான விளைவுகளை வெளிப்படுத்துவது என்பதும் அவதானிப்பட்டுள்ளதாக அவா் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றங்களைக் கொண்ட ஒரு கொரோனா வைரஸைக் கண்டுபிடித்தனர். இந்த பிறழ்வு கொண்ட வைரஸ் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக தொற்றைப் பரப்பும் தன்மை கொண்டிருந்ததாகவும் அவதானிக்கப்பட்டது.

இந்த புதிய பிறழ்வுடன் தொடர்புடைய ஏறக்குறைய 6,000 தொற்று நோயாளர்கள் உலக அளவில் அடையாளம் காணப்பட்டனர். பெரும்பாலும் டென்மார்க் மற்றும் இங்கிலாந்தில் இவ்வாறான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைரஸ்கள் தொடர்பில் ஆய்வு செய்துவரும் டொக்டர் ரவி குப்தா கூறினார்.

அதன் பின்னர் கொரோனா வைரஸில் வேறு பல பிறழ்வுகளும் கண்டறியப்பட்டன. டென்மார்க்கில் உள்ள மிங்க் பண்ணைகளிலிருந்து பரவிய கொரோனா வைரஸூம் இவ்வாறான பிறழ்வு கொண்ட ஒரு வகையைச் சேந்ததே.

தென்னாபிரிக்காவிலும் இவ்வாறான வைரஸ் புதிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவா் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் தற்போது பரவும் புதியவகை பிறழ்வுகொண்ட வைரஸ் தென்கிழக்கு இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது, அன்றிலிருந்து இப்பகுதியில் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பைச் சோ்ந்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை, புதிய வகை மரபணு ரீதியாக மாற்றம் பெற்ற கொரோனா வைரஸால் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்கள் மீண்டும் பாதிக்கப்படலாம் என் அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கண்டறியப்பட்ட கொரோனா வைரஸில் இருந்து மாற்றம் பெற்ற வைரஸ் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவா்களுக்கு மீண்டும் பரவும் சாத்தியம் உள்ளது எனவும் இல்லை எனவும் மாறுபட்ட தகவல்கள் விஞ்ஞானிகளிடம் இருந்து வெளியாகியுள்ளன.

ஆக மொத்தத்தில் இங்கிலாந்தில் தீவிரமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து விஞ்ஞான உலகம் இதுவரை தெளிவான அறிவியல் ரீதியில் ஆதரமான கருத்தக்களை வெளியிடவில்லை.

எனினும் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொடர்பில் பெரும்பாலான நிபுணா்களின் கருத்துக்கள் அச்சமூட்டுபவையாகவே உள்ளன.

ஏற்கனவே உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 7 கோடியே 72 இலட்சத்து 50 ஆயிரத் ஆயிரத்தைக் கடந்துள்ளது. அத்துடன் இதுவரை உலகெங்கும் 17 இலட்சத்தக்கு மேற்பட்டவா்கள் இறந்துள்ளனர்.

இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் அதன் தீவிர பரப்பல் மற்றும் ஆபத்துக்கள் குறித்து வெளிவரும் அச்சுறுத்தல்களை சாதாரணமாகக் கடந்து விட முடியாது என்பதே உண்மை.

பல கோடி மக்களை பாதித்து, பல இலட்சம் உயிர்களைப் பலியெடுத்து, உலகின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துள்ள இந்த கொரோனாவோடு இன்னும் எத்தனை வருடத்துக்குத் தான் போராட வேண்டும்? என்ற அச்சமே இன்று உலகெங்கும் மேலெழுந்துள்ளது.

அருவி இணையத்துக்காக மதிமுகன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, உலகம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE