Thursday 28th of March 2024 08:13:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
“கொழும்பு அரசியலில் பேசுபொருளான கொரோனாப் பாணி” - அகநிலா

“கொழும்பு அரசியலில் பேசுபொருளான கொரோனாப் பாணி” - அகநிலா


கொழும்பு மாநகர சபை உட்பட மேல்மாகாணத்தில் கோவிட் 19 தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையிலும், மாகாண சபைத் தேர்தல், கோவிட் பாணி மருந்து என்று கடந்த வாரமும் கொழும்பு அரசியலானது என்றும் போல் பரபரப்பாகவே இருந்தது.

நாட்டு வைத்தியரான கேகாலை தம்மிக்க பண்டாரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனாவுக்கு பாணி மருந்து குறித்து கடந்த சில வாரங்களாக மிகவும் முக்கியமாக பேசப்பட்டிருந்தது. கொழும்பில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் இந்த மருந்து பற்றி பலவாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். சாதிக்காய் மற்றும் தேன் உட்பட சில இரகசியப் பொருட்களை சேர்த்து தயாரித்துள்ள இந்த பாணி கொரோனா நோயாளிகளை சுகப்படுத்தி அவர்கள் உடலிலிருந்து கொரோனா வைரஸை அழித்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் இந்த பாணி மருந்தினை சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சியும் அருந்தியதை தொலைக்காட்சிகள் பெரும் எடுப்பில் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர். அதுமட்டுன்றி சபாநாயகர் உட்பட ஆளும் கட்சி தரப்பினர் சிலரும் பாராளுமன்றத்தில் வைத்து இந்த பாணியினை அருந்தியிருந்தமை எதிர்க்கட்சி தரப்பினர் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. பகிரங்கமாகவே ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் சிறு பிள்ளைத்தனமாக ‘அவர்கள் மட்டும் பாணி மருந்தினை அருந்தினார்கள். எங்களுக்கு தரவேயில்லை’ என்று வேதனைப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புகளைத் தூண்டியிருக்கும் இந்த தம்மிக்க பாணி தொடர்பில் உரிய ஆய்வுகளை முன்னெடுத்து சரியான தகவல்களை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு, ஆயுர்வேத திணைக்களம் முக்கியஸ்தர்கள் நாட்டு வைத்தியர் தம்மிக்க தயாரிக்கும் பாணியினை நேரடியாகவே அவரது வாசஸ்தலத்திற்கு சென்று அவதானித்திருந்தனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலாக அமைச்சர் விமல் வீரவன்ச தனது அமைச்சின் சார்பில் சாதிக்காய் உட்பட இதர மூலப்பொருட்களை அரைப்பதற்கு ஒரு இயந்திரத்தினையும் தம்மிக்கவும் அன்பளிப்பாக அளித்திருந்தார். அத்துடன் நாட்டு வைத்தியர் தம்மிக்க தான் தயாரித்த பாணியினை மகாநாயக்க தேரர்களுக்கும் நேரடியாக சென்று வழங்கி ஆசிப்பெற்ற நிகழ்வும் கடந்த வாரம் நடைபெற்றது. சிங்கள ஊடகங்களும் அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருந்தன.

எனினும் தனக்கு காளியின் நேரடி அருள் உள்ளதாகவும், அவர் தனக்கு மருந்தினை பரிந்துரைப்பதாகவும் அதற்கேற்ப தான் மருந்தினை தயாரிப்பதாகவும் கூறி அவர் ஊடகங்களுக்கு காளி அருள் வந்தது போன்று பலவிதமாக போஸ்களையும் கொடுத்திருந்தார். இதனால் இந்துக்களின் பெண் தெய்வமான காளி அம்மனை இந்துக்களின் மனதினை புண்படுத்தும் விதமாக இழிவுப்படுத்தி சமூக ஊடகங்களில் வெறுப்பேற்றும் பல்வேறு பதிவுகள் இடப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது குறித்து மனோகணேசனும் தனது கண்டனத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேவேளை. நீண்ட நாட்களுக்கு பின்பு தனது மௌனத்தைக் கலைத்துக் கொண்டு கூட்டம் ஒன்றில் பேசிய ரணில் விக்கிரமசிங்கவும் இந்த பாணி விவகாரம் தொடர்பில் தனது அபிப்பிராயத்தினைக் கூறி பல்கலைக்கழக நிபுணர்கள் மட்டத்தில் இந்த விடயத்தினைக் கையாண்டு மக்களின் மத்தியில் உள்ள ஐயப்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மீண்டும் விவகாரமாகியிருக்கும் 13

அரசியலமைப்பின் 13வது திருத்ததின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை தொடர்பாக மீண்டும் பரவலாக பேசப்படுகின்றது. அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ளதனை அடுத்து பௌத்த மத தலைவர்கள் உட்பட சில ஆளும் தரப்பினர்களும், எதிர்த்தரப்பினர்களும் இந்த மாகாண சபை முறை அர்த்தமற்றது என்றும், மாகாண சபை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்களைப் பரவலாகக் கூறி வருகின்றனர். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் முன்வந்துள்ளது என்றும் அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். மாகாண சபைகள் மக்களுக்கு பிரயோசனம் அற்றது. அவற்றை பராமரிப்பதற்கென வீணே அதிக நிதியை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை புதிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உட்பட இதர உறுப்பினர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த வாரம் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு சென்றிருந்த வேளை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டிருந்தார். எவ்வாறாயினும் மாகாண சபைகள் தொடர்பில் ஆளும் தரப்பிற்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு தரப்பு மாகாண சபைகள் வேண்டும் என்று கூறுகின்ற போதிலும் மற்றொரு தரப்பு அதற்கு எதிராக கருத்துக்களைக் கூறி வருகின்றது. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அடுத்த ஆண்டு நடத்துவதாயின் அதற்கு முன்பு பாராளுமன்றத்தில் சில சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அத்துடன் அரசாங்கமும், தேர்தல் ஆணைக்குழுவும் பழைய முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன்படி பழைய முறையான மாவட்ட விருப்பு முறையின் அடிப்படையில் தேர்தல்கள் நடக்கும் என்று தெரிய வருகின்றது. எவ்வாறாயினும் அடுத்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல்கள் நடைபெறும் என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வாசுதேவவுக்கு மக்கள் எதிர்ப்பு

குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்ட எஹலியகொட தலாவிட்டிய பிரதேசத்திற்கு கடந்த வாரம் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சென்றிருந்த வேளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள்; அவரை சூழ்ந்து கொண்டு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் அடிக்கல் நாட்டும் விழாவைக் கைவிட்டு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாய நிலை அமைச்சருக்கு ஏற்பட்டிருந்தது. தலாவிட்டிய பிரதேசத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வரட்சிக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் போது அப்பகுதியின் நீர் தேவையை நிறைவேற்றாமல் அப்பகுதியில் உள்ள வாவியிலிருந்து நீரை எடுத்து நகருக்கு விநியோகிக்கும் திட்டம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் மக்களின் இந்த எதிர்ப்பு போராட்டம் அரசியல் சதிகாரர்களின் வேலை என்று குறிப்பிட்டிருந்த அமைச்சர், மக்களுக்கு நீர் வசதிகளை செய்து கொடுக்கும் நல்ல எண்ணத்துடன் செயற்பட்ட போதிலும் இவ்வாறு சிலர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டது கவலைக்குரிய விடயம் என்று தெரிவித்திருந்தார்.

சுதந்திரக் கட்சியின் அவலம்

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கும், பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் பாரியளவு பங்களிப்பு செய்து வெற்றி வாகை சூட உதவிய சுதந்திரக் கட்சி தனது அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் மொட்டுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இதுவரை ஆளும் தரப்பிலிருந்து சரியான பதில் எதுவும் கிடைக்காமை காரணமாக சுதந்திரக் கட்சி மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இவ்விடயங்கள் குறித்து ஆராய நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை அதற்குரிய பதில் கிடைக்கவில்லை என்றும், இதனால் தமது கட்சி ஆதரவாளர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்பு ஆளும் கட்சியிலிருந்து வெளியேறும் முடிவினை சுதந்திரக் கட்சி எடுக்கும் என்று அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டிருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குறி வைத்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறித்தும் சுதந்திரக் கட்சி அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது எவ்வாறாயினும் அரசாங்கத்திலிருந்து விலகி தனித்து சுயாதீனமாக செயற்படுவது குறித்து உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை தற்போது அக்கட்சி ஆரம்பித்துள்ளது என்றும், அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தினைக் கற்பிக்கும் முகமாக அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சம்பிக்கவின் அரசியல் நகர்வு

ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் அக் கட்சியிலிருந்து வெளியேறுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தனர். கட்சியின் விசேட மாநாட்டிலேயே சம்பிக்க தலைமையிலான குழுவினர் இந்த அறிவிப்பினை விடுத்திருந்தார். சம்பிக்க ரணவக்கவின் இந்த முடிவு குறித்து அனைவராலும் பேசப்பட்டது. ஹெல உறுமயவிலிருந்து விலகி அவர் சஜித்தின் மக்கள் சக்தியுடன் நேரடியாக இணைந்துகொள்வாரா? அல்லது தேசியவாதிகளை இணைத்து தேசிய மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போகின்றாரா? என்று பல கேள்விகள் எழுந்தன. பொதுவாக ஜாதிக்க ஹெல உறுமய கட்சி பௌத்த தேசியவாதத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியாகும். அதிலிருந்து சம்பிக்க ரணவக்க விலகியதன் ஊடாக அவர் பௌத்த தேசியவாத கொள்கையிலிருந்து விலகி செயற்பட முயல்கின்றாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் உள்ளக தகவல்களின்படி சம்பிக்க உட்பட அவருக்கு ஆதரவான குழுக்கள் ஹெல உறுமயவிலிருந்து விலகுவதற்கு இரண்டு அரசியற் காரணங்கள் உள்ளன.

அதில் ஒன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி யாப்பாகும். அதாவது இதுவரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது டயனா கமகேயின் கட்சி யாப்பின் அடிப்படையிலேயே இயங்கி வந்தது. அவர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பின்பு ஐக்கிய மக்கள் சக்தி துரிதமாக தனி யாப்பு ஒன்றை தயாரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு அதனை அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கியிருந்தது. இந்த யாப்பினை ஹெல உறுமயவின் குழுவும் ஆராய்ந்தது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்புக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்று அவர்கள் புரிந்துகொண்டனர். இதனால் இந்த யாப்பு குறித்து தமது நிலைப்பாட்டை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சக்திக்கு அறிவித்திருந்தது. இதனால் யாப்பில் திருத்தங்களை செய்ய ஐக்கிய மக்கள் சக்தி உடன்பட்டு அதற்காக மரிக்கார், ஹரீன் பெர்ணான்டோ, எரான்; விக்கிரமரத்ன ஆகியோர் அடங்கிய குழுவொன்றை நியமித்து அதற்கான பணிகளும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

மற்றைய காரணம், ஹெல உறுமயவின் கட்சி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையாகும். இதன்படி அனைவரும் இணங்கக் கூடிய பொதுக் கொள்கை ஒன்றின் அடிப்படையில் கட்சி செயற்பாடுகளை பரந்த அளவில் கட்டியெழுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையிலேயே ஆறு மாதங்கள் வரை சுயாதீனமாக செயற்பட்டு நிலைமைகளை அவதானித்த பின்பு தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக சம்பிக்க தரப்பு தீர்மானித்திருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் கிடைப்பின் அது பற்றி பரிசீலித்துப் பார்த்தல். அவ்வாறு இல்லாதுவிடின் சுயாதீன மக்கள் சக்தி ஒன்றை புதிதாகக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தல் ஆகியனவே தற்போது ஹெல உறுமயவின் தீர்மானமாக உள்ளது.

இந்த காரணங்களின் அடிப்படையிலேயே சம்பிக்கவின் அரசியல் நகர்வு இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அவர் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கின்றார் என்பதே அரசியல் வட்டாரங்களின் கருத்தாகும்.

அருவி இணையத்துக்காக அகநிலா


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE