Thursday 18th of April 2024 10:04:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாடகச் செம்மல் ச.உருத்திரேஸ்வரன் காலமானார்! (2012 இல் வெளியாகிய நேர்காணலின் இணைப்பு)

நாடகச் செம்மல் ச.உருத்திரேஸ்வரன் காலமானார்! (2012 இல் வெளியாகிய நேர்காணலின் இணைப்பு)


ஈழத்தின் பழம்பெரும் நாடக்கலைஞர் நாடகச் செம்மல் ச.உருத்திரேஸ்வரன் கடந்த 23ஆம் திகதி கொழும்பில் காலமானார்.

யாழ்ப்பாணம் அரியாலையை பூர்வீகமாகக் கொண்ட அவர், நவீன நாடகத்தின் தொடக்காலத்திலிருந்து புகழ்பெற்ற கலைஞராக விளங்கிவந்திருக்கின்றார்.

புலோலி கிழக்கு, வடமராட்சியில் வாழ்ந்துவந்த அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் அங்கு காலமானார்.

நாடகச் செம்மல் ச.உருத்திரேஸ்வரன் 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பத்திரிகை ஒன்றுக்காக வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றினை இணைக்கின்றோம். நேர்கண்டவர் - வசாவிளான் தவமைந்தன்

ஈழத்தமிழரின் நாடக வரலாற்றில் நாடக அரங்கக் கல்லூரியின் பங்களிப்பானது வரலாற்றுச் சாதனைகள் கொண்டதாக இருப்பதை யாவரும் அறிவர். இந்தக் கல்லூரியால் உருவாக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கான நடிகர்கள் உலகம் முழுவதும் ஈழத்து நாடக மரபைத் தற்காலத்தில் பேணி வருகின்றனர். இங்கே உருவாக்கப்பட்ட சிறந்த நடிகராகவும் நாடக நெறியாளராகவும் நாற்பதிற்கும் அதிகமான நாடகங்களில் நடித்த பட்டறிவு கொண்ட முதிர்ந்த கலைஞராகவும் கடந்த நாற்பது ஆண்டுகளிற்கும் மேலாகக் கலைப் பணியாற்றி வருபவர் நாடகச் செம்மல் ச.உருத்திரேஸ்வரன்.

மறைந்த சதாசிவம் - பொன்னம்மா தம்பதியரின் மகனாக 28.05.1947இல் அரியாலையில் இவர் பிறந்தார். அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலை, யாழ்.மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி கற்று குண்டசாலை விவசாயக் கல்லூரியில் விவசாயத்துறை டிப்ளோமாவை நிறைவு செய்து 1972இல் அரச பணிக்கான நியமனம் பெற்று விவசாய முகாமையாளராக அனுராதபுரம், கோப்hய், பதுளை போன்ற இடங்களிலும் கமநலசேவைத் திணைக்களத்தில் தலைமைப்பீடப் பெரும்பாக உத்தியோகத்தராகவும் பதில் உதவி ஆணையாளராகவும் பணியாற்றி 2009இல் ஓய்வு பெற்ற பின்னர் மீள் நியமனம் வழங்கப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சேவையாற்றியவர்.

யாழ்ப்பாணத்தின் கலைக் கிராமங்களுள் ஒன்றான அரியாலையே இவரது பிறந்த ஊர் என்பதால் குழந்தைப் பருவத்திலிருந்தே கலைச் சூழலில் வளர்ந்து வந்தார். 1919ஆம் ஆண்டிலிருந்து சுதேசிய திருநாள் என்னும் மாபெரும் கலைவிழாவை ஆண்டு தோறும் இவ்வூர் மக்கள் நடாத்தி வருகின்றனர். இவ்விழாவின் நிறைவு நாள் நிகழ்வாகப் பிரமாண்டமான நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வந்தமையால் இவ்வூர்ச்; சிறுவர்கள் தமது வீடுகளில் மேடை போட்டுத் திரை கட்டி நாடகம் நடிப்பதையே தமது விழையாட்டாகப் பின்பற்றி வந்தனர்.

இவ்வாறு சிறு வயதிலிருந்தே நாடகத்துறையில் ஈடுபடத் தொடங்கிய உருத்திரேஸ்வரன் தனது பதின் நான்காவது வயதில் “யார் கதாநாயகி” என்னும் நகைச்சுவை நாடகப் போட்டியில் மரிக்கொழுந்து என்னும் தாய் வேடமிட்டு நடித்தார். முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இந்நாடகத்தைத் தொடர்ந்து மலிவான மாப்பிள்ளை, நாகவல்லி போன்ற நாடகங்களிலும் நடித்துப் பெயர் பெற்று வந்தார்.

1968இல் அரியாலை சுதேசிய விழாவில் மேடையேற்றப்பட்ட “இராஜராஜ சோழன்” என்னும் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழைத் தனதாக்கிக் கொண்ட இவர் எல்லாளன், இலங்கேஸ்வரன் போன்ற ஆற்றுகைகளிலும் சிறப்புற நடித்து நாடகத் துறையில் ஆழக் கால் பதித்துக் கொண்டார்.

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் 1978இல் தொடங்கப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியால் நடாத்தப்பட்ட நாடகப் பயிலரங்குகளில் இணைந்து கொண்ட இவர் நவீன நாடக அரங்கிற்குரிய அதி சிறந்த நடிகனாகத் தன்னை வளப்படுத்திக் கொண்டார். எடுப்பான தோற்றமும் கணீரென்ற குரல் வளமும் நடிப்புத் திறனும் இசைபாடும் வல்லமையும் கொண்டமைந்த இவர் நாடக அரங்கக் கல்லூரியால் தயாரிக்கப்பட்ட புதியதொரு வீடு, சங்காரம், அவள் ஏன் கலங்குகிறாள், அபசுரம், சக்தி பிறக்குது, தியாகத் திருமணம், குருசேத்திரோபதேசம், பாரதியின் பாஞ்சாலி சபதம், தெய்வப் பாவை, நாவலர், கூடி விழையாடு பாப்பா போன்ற சரித்திரப் படைப்புக்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்.

இதை விட இராட்சசன், ஒதெல்லோ, கர்ணன், உயிரோவியம், சகுந்தலை, மனோன்மணி, பாதுகை, தலைநகர், சேரன் செல்வி போன்ற கிராமிய, சரித்திர நாடகங்களிலும் வி.எம். குகராஜனின் கதை இதுதான் என்னும் ஒளிப்படத்திலும் நடித்தவர்.

நாடக அரங்கக் கல்லூரியால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நாடகப் பயிலரங்குககளில் வளவாளராகக் கலந்து சிறப்பித்த இவர் கடந்த ஆண்டு (2011) கனடாவிலும் நாடகப் பயிலரங்குகளை நடாத்தியவர். புலோலி கிழக்கு, வடமராட்சியில் தற்போது வசித்து வரும் இவர் புழுவாய் மரமாகி, தியாகத்திருமணம், தெய்வப்பாவை, வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள் போன்ற நவீன நாடகங்களை நெறியாள்கை செய்திருக்கும் நாடக ஆசானாகவும் மும்மொழித் திறன் கொண்ட சத்திய மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கி வருகின்றார்.

இக்கலைஞர் தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“கிராமங்கள் தோறும் நிகழ்த்தப்பட்டு வந்த எமது நாடகக் கலையானது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றுக்கொள்ளக் கூடிய கலைவடிவமாகத் தரம் உயர்ந்துள்ளமையும் எண்ணற்ற மாணவர்கள் இதனைக் கற்று வருகின்றமையும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. இதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு ஓய்வின்றி உழைத்துப் பெரும் வெற்றி கண்டவர் எனது குருநாதரும் ஈழத்து நவீன நாடகக் கலையின் தந்தையுமான குழந்தை.ம.சண்முகலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அரங்கக் கட்டமைப்பு பற்றிய தெளிவற்ற நிலையில் கிராமங்களில் நாடகங்களை மேடையேற்றிக் கொண்டிருந்த ஏராளமான நாடக ஆர்வலர்களை அரங்க நுட்பங்கள் தெரிந்த நாடக மாந்தராக உருவாக்கிய பெருமை நாடக அரங்கக் கல்லூரியையே சாரும். இக்கல்லூரியால் உருவாக்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன் என்பதைக் கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். குழந்தை ம.சண்முகலிங்கம், அ.தாசீசியஸ், சி.மௌனகுரு, எஸ்.ரி.அரசு, ஏ.ரி.பொன்னுத்துரை, பிரான்சிஸ் ஜெனம், வி.எம்.குகராஜா போன்றோர் எனது நாடக உலகின் பேராசான்கள் என்பதிலும் ஆனந்தமடைகிறேன். சிறு வயதில் என்னை ஊக்கப்படுத்திய ஐ.எஸ்.சண்முகநாதன், ஈ.கே.குமாரையா போன்றோரும் மறக்க முடியாதவர்கள்.

நாடகத் துறையில் பெருவளர்ச்சி கண்டு வரும் நாம் ஈழத்தமிழரிற்கு உரித்தான நாடக வடிவத்தை உருவாக்குவதற்கு எதிர்காலத்தில் முயற்சிக்க வேண்டும். தொடக்க காலத்தில் தென்னிந்தியத் தாக்கம் கொண்டதாகவே நாடகங்கள் இங்கே மேடையேற்றப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறுவதில்லை. நாடக அரங்கக் கல்லூரியின் அடித்தளத்தில் உருவான கலைஞர்கள் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் தனித்துவமான உணர்வுபூர்வமான நாடகங்களை ஆற்றுகைப்படுத்தி வருகின்றமை போற்றுதற்குரியதே” என்று தனது கருத்துக்களை இவர் கூறுகின்றார்.

15.07.2012 வசாவிளான் தவமைந்தன்


Category: கட்டுரைகள், நேர்காணல்
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE