Thursday 28th of March 2024 11:04:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
பாலன் பிறப்பும் தேவ சாம்ராஜ்யமும்! - நா.யோகேந்திரநாதன்!

பாலன் பிறப்பும் தேவ சாம்ராஜ்யமும்! - நா.யோகேந்திரநாதன்!


உலகம் முழுவதுமுள்ள கிறீஸ்தவ மக்கள் தேவகுமாரனாகிய யேசுவின் பிறப்பை நத்தார் பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். மனித குலத்தைப் பாவ நெருப்பிலிருந்து மீட்க இறைவனால் மண்ணுலகுக்கு அனுப்பப்பட்டவர் அவர் என வேதாகமம் கூறுகிறது.

அவர் தன் முதற் போதனையிலேயே இறைவனாகிய தன் தலைவனின் ஆவி தன் மேல் உள்ளதாகவும் ஒடுக்கப்பட்டோருக்கான நற்செய்தியாக உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறையிடப்பட்டோருக்கு விடுதலையை தெரிவிப்பதற்கும் கண்டுண்டோருக்கு விடிவு கிடைக்கவும் தான் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அவரின் போதனைகளும் அவரின் வாழ்வும் சடங்குகளையும் பலிகளையுமே இறைவழிபாடாகக் காட்டியவாறே, ஒடுக்குமுறை யையும் அடிமைத்தனத்தையும் நிலை நிறுத்தி மக்கள் மீது அதிகாரம் செலுத்தி வந்த யூத குருமார் யேசுவை சூனியக்காரர் எனவும் தீய வழியில் இட்டுச் செல்பவர் எனவும் அவதூறு செய்தனர். உரோம நாட்டின் யூத மத குருமாரின் அதிகாரக் கட்டமைப்பின் பிரதிநிதியான பிலாத்து மன்னனிடம் யேசு மன்னனுக்கெதிராய் மக்களைத் தூண்டி விடும் ஆபத்தான மனிதர் என அறிவித்து வந்தனர்.

இன்று உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் இறைமகனாகவும், மனிதகுல மீட்பராகவும் போற்றி வழிபடப்படும் யேசு அவர் உயிருடன் இருந்த காலத்தில் அதிகார பீடத்தினர் அவரைத் தீயவர் எனவும் சூனியக்காரன் எனவும் இறை விரோதியெனவும் அவதூறு செய்தனர்.

இவ்விடயம் பற்றி முன்னாள் சோவியத் யூனியனின் தலைவராக விளங்கிய மாமேதை லெனின் "மக்கள் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றுபவர்களை அவர்கள் வாழும் காலத்தில் கொடியவர்களெனவும் மக்களின் விரோதிகள் எனவும் சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தினர் அவர்கள் இறந்த பின்பு அவர்களைப் போற்றியும் அவதார புருஷர்கள் என வாழ்த்தியும் அவர்களின் பெயர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்" எனத் தனது "அரசும் புரட்சியும்" என்ற நூலில் தெரிவித்துள்ளார்.

யேசு தனது 30வது வயதிலேயே புனித யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றார். அதன் பின் 40 நாட்கள் பாலைவனத்தில் நோன்பிருந்து ஞானம் பெற்றார் எனவும் அவரின் நோன்பைப் பிசாசுகள் குழப்ப முயன்று தோற்றுப்போய் விட்டதாகவும் வேதாகமம் கூறுகிறது. யேசுவின் இளமைக் காலம் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் அவர் அக்காலப் பகுதியில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்களின் மீது அதிகார பீடங்களால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் காரணமாக மக்கள் படும் துன்ப துயரங்களில் தானும் பங்கு கொண்டு அனுபவித்திருக்கலாமெனவும், அதன் காரணமாக இத்தகைய கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்றே உந்துதல் அவருக்கு ஏற்பட்டிருக்கலாமெனவும் சில அறிஞர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அவரின் போதனைகளில் கூறப்படும் மக்களை நரக நெருப்பிலிருந்து மீட்பது என்பது அவர்களை அவர்கள் படும் அடிமைத்தனக் கொடுமைகளிலிருந்தும் துன்பதுயரங்களிலிருந்தும் மீட்பதும் போன்ற விடயங்களெனவே வெளிப்படுகிறது. அவர் கூறும் விண்ணரசு என்பது அப்படியான ஒடுக்குமுறைகளற்ற ஒரு சமூகக் கட்டமைப்பாகவும் இருக்கலாம்.

அவர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் நாட்களின் பின் அவரது முதலாவது போதனை நசேரத்து நகரிலுள்ள யூதர்களின் தொழுகைக்கூட்டமொன்றில் இடம்பெற்றது. அதில் அவர் முன்னைய தீர்க்கதரிசியான ஏசாவின் ஏடுகளிலிருந்து ஒரு பகுதியை வாசித்தார். அது "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது. அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார். ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும் உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும் சிறைப்பட்டேருக்கு விடுதலையைப் தெரிவிக்கவும் கட்டுண்டோருக்கு விடிவைத் தரவும் என்னை இங்கு அனுப்பியுள்ளார். ஆண்டவன் அருள் தரும் ஆண்டை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" என்பதாகும்.

இதிலிருந்து ஆண்டவனின் ராஜ்யம் என்பது வானத்துக்கப்பாலோ அல்லது எங்கோ நம்மால் அறிய முடியாத இடத்திலோ இல்லையென்பதையும் அது இந்தப் பூமியிலே உண்டாகுமெனவும் அதில் ஒடுக்குமுறைகள், வறுமை, துன்பதுயரங்கள் போன்றவை இருக்கமாட்டா என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஆட்சியதிகாரத்தைத் தமது கைவசம் வைத்திருந்த யூதகுருமாரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வு நாள், தூய்மைப்படுத்தல், பலியிடுதல் போன்ற சடங்குகளை அவர் எதிர்த்தார். சமாரியரை சாதி அடிப்படையில் ஒடுக்குவதைக் கண்டித்தார். ஏழைகள், பணம் படைத்தோர் என்ற பேதத்தின் அடிப்படையில் வசதி படைத்தோர் வறியவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது பிரசங்கங்களின்போது பகிரங்கமாகவே ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் சொர்க்கத்துக்கு போகமுடியாது எனத் தெரிவித்தார்.

சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டு அவர்கள் ஆராதனையில் பங்கெடுப்பதையோ மற்றவர்களுடன் சமனாக அமர்ந்து உணவு கொள்வதையோ அனுமதிப்பதில்லை. ஆனால் யேசு ஒரு சமேரியனை தன்னுடன் அழைத்துச் சென்று அவனை அருகில் இருந்து அவனுடன் ஒன்றாக உணவு உட்கொண்டார். மேல் தட்டு யூதர்கள் யேசு கீழானவர்களுடன் உறவாடுகிறார் எனத் தூற்றினர். அது பற்றி யேசு ஒரு உபகதை மூலம் விளக்கமளித்தார். ஒருவன் காயப்பட்டு வழியில் கிடந்தபோது அப்பாதையால் வந்த ஒரு யூத வியாபாரி காயமடைந்தவனைப் பொருட்படுத்தாமல் போய்விட்டதாகவும் ஒரு சமாரியன் காயப்பட்டவனைக் கண்டதும் அவனைத் தூக்கிச் சென்று மருந்து கட்டி, உணவு வழங்கிப் பராமரித்தான் எனவும் அவனே உயர்ந்தவன் எனவும் ஆண்டவனுக்கு நெருக்கமாக இருக்கிறான் எனவும் விளக்கினார்.

தங்களின் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களை தன்போதனைகள் மூலமும் தன் செயற்பாடுகள் மூலமும் அணி திரட்டிய யேசுவை அதிகார பீடத்தினர் வெறுத்தனர். அவரைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அவர் மக்கள் மத்தியிலேயே எப்போதும் இருந்தபடியால் அவர்களால் அது சாத்தியமாகவில்லை.

எனினும் யேசு ஒலிவ் மலையிலுள்ள கெத்துமெனித் தோட்டத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும்போது அவரின் சீடனான யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டு யூத மதத்தலைவர்களாலும் கோவில் அதிகாரிகளாலும் கைது செய்யப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட யேசு, ரோமப் பேரரசரின் அரச பிரதிநிதியான பிலாத்து முன்னிலையில் நிறுத்தப்படுகிறார். யேசு தான் தேவகுமாரன் எனச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் எனவும், துர்ப்போதனைகள் மூலம் மக்களை யூத மதக் கோட்பாடுகளை மீறும்படி தூண்டுகிறார் எனவும் சூனியங்கள் மூலம் நோய்களைக் குணமாக்குவதாகவும் இறந்தோரை மீண்டும் உயிர்ப்பிப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றுகிறார் எனவும் யூத குருமார் குற்றம் சுமத்தினர். யேசுவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

பாஸ்கா பண்டிகையை முன்னிட்டு ஒருவரை மன்னிக்கும் உரிமை பிலாத்துக்கு இருந்தது. அவன் முன் யேசுவும் பரபாஸ் என்ற கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியும் தீர்ப்புக்காக நிறுத்தப்பட்டனர். அவன் யேசு குற்றமற்றவர் என்பதை உணர்ந்து யேசுவை விடுதலை செய்யவே விரும்பினான். ஆனால் யூத குருமார் பரபாஸை மன்னிக்கும்படியும் யேசுவுக்குத் தண்டனை வழங்குமாறும் வலியுறுத்தினர். யேசு தான் தேவகுமாரன் எனக் கூறியதை மன்னிக்க முடியாதெனவும் அது தேவநிந்தனை எனவும் அதனால் யேசு தண்டிக்கப்பட வேண்டியவர் எனவும் அழுத்தம் கொடுத்தனர்.

யூத குருமாருக்குப் பயந்து பிலாத்து யேசுவுக்கு மரண தண்டனை விதித்து விட்டு அப்பாவத்தில் தனக்குப் பங்கில்லையெனக் கூறி தன் கைகளைக் கழுவிக் கொண்டான்.

யேசுவுக்கு முள்முடி சூட்டி, தோளில் சிலுவை சுமக்க வைத்து சவுக்கால் அடித்துக் கொலைக்களம் வரை நகர வீதிகளால் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

யேசு சுமந்த அதே சிலுவையிலேயே அவரை அறைந்தார்கள். மூன்று மணி நேரத்தின் பின் அவரின் உயிர் பிரிந்தது.

"நான் கெட்டவர்களை அழிக்கப் பூமிக்கு வரவில்லை. பாவிகளை மீட்கவே வந்தேன்" என்றார். ஆனால் அவர் கெட்டவர்களாலேயே அழிக்கப்பட்டார். அவரால் அழிக்கப்படாத கெட்டவர்கள் அவரையே அழித்துவிட்டனர்.

ஒடுக்குமுறைகள், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதம், வறுமை. மத அதிகாரம் மூலம் மக்கள் மீதான கொடுமைகளை இழைப்பதை நியாயப்படுத்தல் போன்றவை இல்லாத உயர்வான தேவனின் ராஜ்யத்தைக் காணத் தன்னை அர்ப்பணித்த யேசுவும், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட பரபாசும் நீதித் தீர்ப்புக்காக நிறுத்தப்பட்டபோது யூதகுருமார் பரபாசை விடுதலை செய்யவும் யேசுவைச் சிலுவையில் அறையவும் வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர். மனிதகுல விடுதலைக்காகப் பாடுபட்டவர் தீயவராகவும் பயங்கரவாதியாகவும் சமூக விரோதி நல்லவனாகவும் அவர்களால் பார்க்கப்பட்டனர்.

யேசு மரணமடைந்து சில காலத்தின் பின் யேசு கடவுளின் குமாரனாகப் போற்றப்பட்டார். அவரின் பெயரால் கிறிஸ்தவ மதம் உருவாகி உலகெங்கும் பரவியது. அவர் ஆராதிக்கப்படுபவராகவும் அவரின் போதனைகள் கிறிஸ்தவ மத குருமாரால் உபதேசிக்கப்படுபவையாகவும் உயர்ச்சி பெற்றன.

அதாவது லெனின் அவர்கள் கூறியது போன்று யேசு உயிருடன் இருக்கும் போது அவரைத் தூற்றிய அதிகார பீடத்தினர் அவர் இறந்தபின் அவரை இறைவனாக்கி அவரின் பெயரால் மதங்களை உருவாக்கி அவரின் போதனைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.

யேசு சிலுவையில் மரித்து 1400 ஆண்டுகளின் பின்பு யேசுவின் பெயரால் கட்டியமைக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தின் ஒரு பகுதியினர் யூத குருமார் எவ்வாறு தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வராமல் தடுக்க யேசுவை நயவஞ்சகமாகக் கொன்றார்களோ, அவ்வாறே பிரிட்டனின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி வெற்றிகள் பல கண்ட வீராங்கனையான யோன் ஒவ் ஆக் என்பவரை சூனியக்காரி என்றும் தீய ஆவிகளால் வழிநடத்தப்படுபவள் என்றும் குற்றம் சாட்டி உயிருடன் எரித்துக்கொன்றனர்.

1412ம் ஆண்டு பிரான்சில் வசித்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் யோன் ஒவ் ஆக். இவள் ஆறு வயதாக இருக்கும்போதே ஆண்டவர் தன் முன் தோன்றி பிரான்ஸ் நாட்டைப் பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும்படி கட்டளையிட்டதாகக் கூறிக் கொண்டாள்.

அது "நூற்றாண்டுப் போர்" என வர்ணிக்கப்பட்ட பிரான்ஸை பிரிட்டன் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்ததுடன் சாள்ஸ் மன்னன் பாரிஸ் நகரை விட்டோடி ஒலியன்ஸ் நகரில் தங்கியபோது அதுவும் பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டது.

யோன் சாள்ஸ் மன்னனிடம் போய்; ஆண்டவர் பிரான்ஸ் மக்களை விடுவிக்கும்படி மீண்டும் மீண்டும் தனக்குக் கட்டளையிடுவதாகவும் தன்னைப் படையில் சேர்க்குமாறும் தனது 16வது வயதில் கேட்டுக்கொண்டாள். முதலில் சாள்ஸ் மறுத்தாலும் அவளின் பிடிவாதம் காரணமாக அவளைப் படையில் சேர்த்துக்கொண்டான். அவள் தனது 17வது வயதில் ஒரு படையணிக்குத் தலைமை தாங்கி ஒலியன்ஸ் நகர் மீது போர் தொடுத்தாள். வெள்ளைக் குதிரையில் வெள்ளைக் கவசம் பூண்டு களத்தி;ல் அவள் நடத்திய வீரதீரச் செயல்களால் ஆங்கிலப் படை ஒலியன்ஸ் நகரை விட்டுத் தோற்றோடியது. சாள்ஸ் மன்னன் மீண்டும் பிரான்சின் மன்னனாக ஒலியன்ஸ் நகரில் முடிசூடிக் கொண்டான். அடுத்து யோன் பாரிஸ் நகரை வெற்றி கொள்ள மேற்கொண்ட போரில் வெற்றிபெற முடியவில்லை. அவள் காயமடைந்து களத்திலிருந்து திரும்பியபோது குதிரையிலிருந்து விழுந்து மேலும் படுகாயமுற்றாள். அந்த நிலையில் அவளைக் கைப்பற்றிய பஸ்கெண்டியர் என்ற இனக் குழுமத்தினர் அவளைப் 10,000 காசுகளுக்கு ஆங்கிலப் படையினரிடம் விற்றனர். எவ்வாறு யூதாஸ் 30 காசுகளுக்கு யேசுநாதரைக் காட்டிக் கொடுத்தானோ அவ்வாறு பாஸ்கெண்டியர்களும் தமது நாட்டில் விடுதலைக்காகப் போரிட்ட வீராங்கனையைப் 10,000 காசுகளுக்கு விற்றனர்.

அவளை ஒரு போர்க் குற்றவாளியாக விசாரிக்காமல் ஆங்கிலத் திருச்சபை அவளை ஒரு சூனியக்காரி எனவும் தீய ஆவிகளால் வழிநடத்தப்படுபவள் எனவும் குற்றம் சாட்டியது. அவள் சிறையிலிருக்கும்போது ஆங்கில மத குருமார் அவள் ஆண்டவனின் கட்டளைக்கமையவே போர் புரிந்தாள் என்ற கூற்றை மறுதலிக்கும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். அவள் உறுதியாக மறுத்துவிட்டாள்.

அவள் மீது 70 குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவள் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. பிரான்ஸிய மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய அந்த வீராங்கனை சிலுவையில் கட்டப்பட்டு உயிருடன் தீ மூட்டி எரித்துக்கொல்லப்பட்டாள்.

எவ்வாறு தேவனின் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதன் மூலம் மக்களின் விமோசனத்துக்காக தன்னை அர்ப்பணித்த யேசு யூத குருமாரால் கொடிய முறையில் சிலுவையில் கொல்லப்பட்டாரோ அவ்வாறே பிரான்ஸ் மக்களின் விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்த யோன் ஒவ் ஆக் யேசுவின் பேரில் இயங்கிய ஆங்கிலத் திருச்சபை மத குருமாராலேயே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாள்.

அவள் இறந்து 6 வருடங்களின் பின் கத்தோலிக்க திருச்சபை அவளுக்கு புனிதர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. 1503ல் பல நாடுகளை ஆக்கிரமித்து அடிமைப்படுத்திய பிரான்ஸ் நாட்டின் மன்னன் நெப்போலியன் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய அவளைப் பிரான்ஸின் வீராங்கனையாகப் பிரகடனம் செய்தான்.

இந்த இருவர் தொடர்பான விடயங்களிலும் மதமும், அரசியலும் ஒன்றிணைந்து அதிகார பீடங்களினதும் ஆக்கிரமிப்பாளர்களினதும் நோக்கங்களை நிறைவேற்ற மக்களின் விமோசனத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களை இழிவுபடுத்திக் கொடிய முறையில் கொலை செய்தனர். பின்பு அதே மேலாதிக்க சக்திகள் வேறு ஒரு உருவத்தில் வந்து அவர்களின் பெயரைப் பாவித்து அதே அநீதிகளை மேற்கொள்கின்றனர்.

எனினும் பலகோடி ஒடுக்கப்படும் மக்கள் தேவனின் சாம்ராஜ்யத்துக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால் அதிகார பீடத்தினரும் மீட்பர்களை அழிப்பதில் தீவிரமாகவேயுள்ளனர்.

எனவே பாலன் பிறப்பை ஆராதனைகளுடனும் கொண்டாட்டங்களுடனும் மட்டுப்படுத்தி விடாமல் கடவுளின் ராஜ்யத்தை நோக்கி பயணிப்போமாக.

எனினும் இறுதி வெற்றி மக்களுக்கே என்பதை நம்புவோமாக.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

29.12.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE